ஆர்.எஸ்.எஸ் வளர்ந்த வரலாறு 2

தொண்டு வாயிலாக சமுதாயத்தில் நல்ல மாற்றங்கள்

அதாவது நமது ஹிந்து சமுதாயத்தை உள்ளிருந்து அழிக்கும் தீங்கான பழக்க வழக்கங்கள், மனப்பான்மைகள் ஆகியவற்றை நீக்குவது, இந்த மாற்றங்களின் முக்கிய அம்சம். தீண்டாமை, சாதி வேறுபாடு, உயர்வு – தாழ்வு, ஏழை – பணக்காரன் போன்ற வேற்றுமை உணர்வுகளைப் போக்குவதற்காகப் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப் படுகின்றன. வட பாரதத்தில் துர்காஷ்டமியன்று கன்யா பூஜை செய்வார்கள். அன்று நூற்றுக்கணக்கான ஸ்வயம்சேவகர்களின் வீடுகளில் குடிசைப் பகுதிச் சிறுமிகளை அழைத்து அவர்களுக்கு முறைப்படி பூஜை செய்கிறார்கள். அது, குடும்பமே பங்கேற்கும் விழாவாகி விடுகிறது.

இதுதவிர, நாடெங்கிலும் பல்லாயிரம் ஸ்வயம் சேவகர்களின் குடும்பங்களின் பெரியோர்கள், தாய்மார்கள், சகோதரிகள் குடிசைப் பகுதிகளுக்குப் போய், அவர்களுடன் அமர்ந்து சாப்பிடுகிறார்கள். அவர்களையும் தங்கள் வீடுகளுக்கு அழைத்து அதே போல் உபசரிக்கிறார்கள்.

தேசியப் புனரமைப்பில் ஒரு மிக முக்கியமான அம்சம் கிராம வளர்ச்சி. மகாத்மா காந்தி கிராமங்களை அடிப்படையாகக் கொண்ட பொருளாதார வளர்ச்சித் திட்டங்களை நாட்டின் முன் வைத்தும் கூட அரசு அதை அடியோடு புறக்கணித்ததால் கிராமங்கள் வளர்ச்சி அடையவேயில்லை.

இந்நிலையில் இயன்றவரை மாறுதலைக் கொண்டு வருவதற்காக ஸ்வயம்சேவகர்கள் சில கிராமங்களில் ஒருங்கிணைந்த ஊரக வளர்ச்சித் திட்டம் தொடங்கியுள்ளனர். மகாராஷ்டிரத்தில் பின்தங்கிய கிராமமாகிய ராலேகாவ் ஸிந்தியை அண்ணா ஹஜாரே 10 -16 ஆண்டுகளுக்குள் ராமராஜ்யம் போல மாற்றியுள்ளார். ஸ்வயம் சேவகர்கள் அதை ஒரு எடுத்துக்காட்டாகக் கொண்டுள்ளனர்.

மத்தியப் பிரதேசத்திலுள்ள மோஹத் என்ற சிற்றூரையும் அங்குள்ள சங்க ஊழியர்கள் அதே போல் நல்ல வளமான கிராமமாக மாற்றியுள்ளனர். பயிர்த் தொழிலில் சீர்த்திருத்தம், சாண எரிவாயு, பெரிய அளவில் இயற்கை உர உற்பத்தி, பலநூறு கிராமவாசிகளுக்கு ஓரளவு சம்ஸ்கிருதம் பேசும் பயிற்சி, வீடு, சாலைகளில் சுத்தம், சாதி வேறுபாடு போன்ற தீய பழக்கங்கள் ஒழிப்பு போன்ற நல்ல மாற்றங்கள் கடந்த 10-12 ஆண்டுகளுக்குள் அங்கு ஏற்பட்டுள்ளன.

கர்நாடகத்தின் மங்களூர் மாவட்டத்தைச் சேர்ந்த 33 கிராமங்களிலுள்ள மக்கள் தங்கள் கிராமங்களை, பசிப்பிணியற்ற, நோயற்ற, எழுத்தறிவின்மையற்றதாக மாற்றும் திசையில் முன்னேறி வருகின்றனர்.

குறிப்பாக ஒரு விஷயம் உங்களுக்குச் சொல்ல விரும்புகிறேன்: ஸ்வயம் சேவகர்கள் தொண்டு செய்யும் போது சமுதாய மாற்றத்துடன் கூடவே, தன்னிடமும் மாற்றத்தை, பண்புப் பதிவுகளை பெறுகிறார்கள். ‘மக்கள் தொண்டே மகேசன் தொண்டு’ என்ற மனப்பான்மை வேண்டும் என்ற விருப்பம், அவர்களுக்கு எப்போதும் உண்டு.

ஹிந்து ஒற்றுமை என்ற புதிய தாரக மந்திரம்

ஹிந்துக்களிடையே பரஸ்பரம் மதிப்பும் மரியாதையும் சகோதர உணர்வும் நிலைபெற வேண்டும். இதில் துறவியர்களின் பங்கும் அதிகமாகி வருகிறது. பூஜ்ய சங்கராச்சாரியார், மத்வ, வைணவ, ஜைனம், பௌத்த, சீக்கிய சம்பிரதாயங்களைச் சேர்ந்த முக்கிய மடாதிபதிகள், 1966-ஆம் ஆண்டு பிரயாகையில் கும்பமேளாவின் போது நடந்த விஸ்வ ஹிந்து பரிஷத்தின் உலக ஹிந்து மாநாட்டில் “அனைத்து ஹிந்துக்களும் சகோதரர்களே (ஹிந்தவஹ ஸோதராஹா ஸர்வே) – ஹிந்துக்கள் அனைவரும் ஒரே தாயின் வயிற்றில் பிறந்தவர்கள் என்றதொரு புதிய தாரக மந்திரத்தை அளித்தனர்.

இந்த மகத்தான சமுதாய சமத்துவ மந்திரத்தை வாழ்வின் அனைத்துத் துறைகளிலும் நடைமுறைப்படுத்துவது சங்கத்தின் எண்ணம். அனைத்து ஹிந்துக்களும் அனைத்துக் கோயில்களிலும் சென்று வழிபடுவதை, சங்கம் என்றுமே ஆதரித்து வந்துள்ளது. ஆனால் சங்கத்தின் பார்வைக் கோணம் அத்துடன் நின்று விடவில்லை . நமது புனிதமான வேதங்கள், உபநிடதங்கள், யோக சாத்திரங்கள் போன்றவை சமுதாயம் முழுவதற்குமான சொத்து என்றே சங்கம் கருதுகிறது.

இந்த முழுமையான கண்ணோட்டத்தின் காரணமாக ஸ்வயம்சேவகர்கள் கேரளா, தமிழ்நாடு போன்ற பகுதிகளில், பிராமணர் அல்லாத ஹிந்து சகோதரர்களுக்கு வைதீக – பூஜை முறையில் பயிற்சியளித்து வருகின்றனர். அவர்களில் பலர் பூசாரியாகி விட்டனர் என்பதே இதில் பெருமைப்படத்தக்க விஷயம். இவ்வகையில் பளிச்சிடும் உதாரணம் ஒன்று, ஹரிஜன சகோதரர் ஸ்ரீ கமலேஸ்வர் சௌபால், அயோத்தி ஸ்ரீ ராமர் கோயிலுக்கு அடிக்கல் நாட்டியது.

உலகையே கவர்ந்திழுக்கும் யோகா, சமஸ்கிருதம்

யோகப் பயிற்சி உலகுக்கு பாரதத்தின் நன்கொடை ஆகும். அதனை பாரதம் முழுவதிலும் பரப்புவதற்கு ஷாகாக்களிலும், பிற இடங்களிலும் யோகப் பயிற்சி மையங்கள் தொடங்கியுள்ளனர். அங்கே சங்கம் மற்றும் சமிதியைச் சேர்ந்த பல்லாயிரம் இளைஞர்களும் யுவதிகளும் யோகக்கல்வி பயின்று வருகின்றனர்.

செம்மொழியான சம்ஸ்கிருத்தை ஆங்கிலேயர் இறந்த மொழி என்றனர். ஆனால் ‘சம்ஸ்கிருத பாரதி’ என்ற அமைப்பு பல்லாயிரம் சம்பாஷண சிபிரங்கள் மூலம் பத்தே நாட்களில் சம்ஸ்கிருதம் பேச முடியுமென்று செய்து காட்டியது. இது குறிப்பாக குடிசை பகுதிகளுக்குச் சென்றதனால் அவர்களுக்கும் கலாச்சாரப் பெருமிதம் ஏற்பட்டுள்ளது. இன்று சம்ஸ்கிருத சம்பாஷண சிபிரங்கள் லண்டன் வரை பரவியுள்ளன.

தாய்மதம் திரும்புவதற்கான மகாமந்திரம்

கடந்த ஓராயிரம் ஆண்டுகளாக, இஸ்லாமிய ஆக்கிரமிப்பாளர்கள் பாரதத்துக்குள் அடியெடுத்து வைத்ததிலிருந்தே இடைவிடாது இங்கிருந்த ஹிந்துக் கோயில்களைத் தரைமட்டமாக்குதல், ஹிந்துப் பெண்களை அபகரித்தல், ஹிந்து தர்மத்தைப் போதிப்பவர்களைப் படுகொலை செய்தல், பெரிய அளவில் ஹிந்துக்களை முஸ்லிம்களாக்குதல் எல்லாம் தொடங்கிவிட்டது. இவ்விதமாகக் கிடுக்கிப்பிடியில் சிக்கிக் கொண்ட ஹிந்துக்களின் எண்ணிக்கை குறைந்து கொண்டே இருந்தது.

முஸ்லிம்களாக மாறியவர்களெல்லாம் வெளியிலிருந்து வந்த ஆக்கிரமிப்பாளர்களின் கூடாரத்தில் சேர்ந்து கொண்டனர். நேற்றுவரை தனது சகோதர, சகோதரிகளாக இருந்த ஹிந்துக்களின் மீதே தாக்குதல் நடத்த ஆரம்பித்தனர்.

இதனால் ஏற்பட்ட பயங்கரமான தீய விளைவுகளைப் பற்றி நீங்கள் நன்றாக அறிந்திருப்பீர்கள். மகாபாரத காந்தாரி பிறந்த காந்தாரம் ஆப்கானிஸ்தான் ஆகிவிட்டது. சிந்து, பஞ்சாபின் மேற்குப்பகுதி, பலுசிஸ்தான், ஸர்ஹத் ஆகியவை பாரதத்திலிருந்து துண்டாடப்பட்டு, மேற்கு பாகிஸ்தான் ஆகிவிட்டது. கிழக்கு வங்காளமும் இதே போல் கிழக்குப் பாகிஸ்தான் ஆகி இப்போது வங்க தேசமாக இருக்கிறது.

ஆங்கிலேய, போர்த்துகீசிய ஆக்கிரமிப்பாளர்களுடன் அவர்களது மதப் பிரச்சாரகர்களும் வந்தார்கள். அவர்களும் ஹிந்துக்களுக்கு எதிரான செயல்களைச் செய்யத் தொடங்கினர். நமது தேசத்தின் வடகிழக்கு மாநிலங்களில் கிறிஸ்தவப் பாதிரிகள் மூலம் பிரிவினைவாதம் கோரதாண்டவமாடுகிறது. பாரதத்தைக் கூறுபோட்டு கிறிஸ்தவஸ்தான் ஆக்குவதற்காக சிறு மாநிலங்களில் ஆயுதம் தாங்கிய, தீவிர கிளர்ச்சிகள் நடைபெற்று வருகின்றன.

ஆக, இதற்கெல்லாம் பொறுப்பாளி யார்? நாம், அதாவது ஹிந்துக்கள் தான். நமது மதம் அழிவதையும், நமது சமுதாயத்தினர் பிரிந்து எதிரிகளுடன் சேர்ந்து கொள்வதையும் கண்டும் காணாதது போல் கண்களை மூடிக்கொண்டு வாளாயிருந்தோம். மதமாற்றம் ஒருவழிப்பாதை போல இப்போதும் நடைபெற்று வருகிறது. ‘ஒருமுறை ஹிந்து மதத்தை விட்டு ஒருவன் போனால் அவன் நிரந்தரமாக விலக்கப்பட்டு விட்டான், அவனை மீண்டும் ஹிந்து மதத்துக்குள் ஏற்பது மத விரோதமான செயலாகி விடும்’ என்ற தவறான கருத்துதான் காரணம். இதன் விளைவாகத் தனது தாய்மதமாகிய ஹிந்து மதத்துக்குத் திரும்ப விரும்பியவர்களையும் கூட ஏற்பது தடை செய்யப்பட்டுவிட்டது.

ஆனால், தேவல முனிவர் தொடங்கி சமீபத்திய ஆர்ய சமாஜம், மசூராஸ்ரமம், சாவர்க்கர் தலைமையிலான ஹிந்து மஹா சபா போன்ற அமைப்புகள் கூட மதம்மாறியவர்களை மீண்டும் ஹிந்துக்களாக்க முயன்று வந்தன. அகிலபாரத அளவில் ஆர்ய சமாஜத் தலைவரான, சுவாமி சிரத்தானந்தர் இப்பணி செய்ததால் முஸ்லிமால் கொல்லப்பட்டார்.

சுவாமி விவேகானந்தரும் எச்சரிக்கை விடுத்துள்ளார் – “நினைவிருக்கட்டும், ஹிந்து தர்மத்தை விட்டு விட்டுச் செல்லும் ஒவ்வொருவராலும் ஹிந்து சமுதாயத்தின் ஒரு எண்ணிக்கை குறைவது மட்டுமல்ல; எதிரிகளின் எண்ணிக்கையில் ஒன்று அதிகரிக்கும்”

இப்போது மெல்ல மெல்ல இந்த கோரமான ஆபத்து பற்றிய விழிப்புணர்வு ஏற்பட்டு வருகிறது. பாரதத்தின் தலை சிறந்த மதத்தலைவர்கள் ஹிந்து தர்மத்தையும் ஹிந்து சமுதாயத்தையும் பாதுகாக்கும் நோக்கில் ஒரு முக்கியமான வழிகாட்டுதலையும் செய்துள்ளனர். ‘ந ஹிந்து பதிதோ பவேத்’ அதாவது ஹிந்துக்களில் எவரும் ஒருபோதும் தாழ்ந்தவராகிவிட முடியாது.

அதாவது எந்தவொரு ஹிந்துவும் முஸ்லிமாகவோ, கிறிஸ்தவராகவோ மாறிவிடுவதால் மட்டுமே ஒரேயடியாக விலக்கப்பட்டவனாகிவிட மாட்டான், அவனைக் கண்டிப்பாக ஹிந்து மதத்தில் திரும்ப ஏற்றுக்கொள்ள வேண்டும் என்பதே அதன் செய்தி. ஹிந்துக்களிடையே இத்தகைய விழிப்புணர்வின் காரனமாக, ஹிந்து மதத்தை விட்டுச் சென்ற சகோதர, சகோதரிகள், என்றும் மெல்ல மெல்ல நாய்மதம் திரும்புவது தொடங்கியுள்ளது.

பேரழிவுகளின்போது நிவாரணப் பணிகள்:

இயற்கையினாலோ, மனிதர்கள் காரணமாகவோ ஏற்படும் பேரழிவுகளின் போது ஸ்வயம்சேவகர்கள் செய்த பணிகளின் சில சிறப்பியல்புகளை இனி பார்ப்போம். தமிழ்நாட்டில் திருச்சியில் வெள்ளம், அஸ்ஸாம், உத்தரகாசி மற்றும் மகாராஷ்டிரத்தின் லாட்டூர் மாவட்ட நிலநடுக்கம், ஆந்திரப் புயல், கர்நாடகா, ஒரிசா, பீகார், குஜராத், ராஜஸ்தான் போன்ற பகுதிகளில் ஏற்பட்ட வறட்சி, ஹரியாணாவின் சர்க்கீ – தாத்ரீயிலும், பீகாரின் பாட்னாவிலும் நிகழ்ந்த விமான விபத்துக்கள் ஆகியவற்றில் நிவாரணப் பணிகளுக்காக அனைவருக்கும் முன்னால் உதவி செய்தவர்கள் சங்க ஸ்வயம்சேவகர்கள்தான்.

-அங்கு, துர்நாற்றம் நிறைந்த, அழுகிவிட்ட, சடலங்களை சரியான முறையில் எரித்தல் அல்லது புதைத்தல், இறந்த விலங்குகளின் சடலங்களையும் புதைத்தல் போன்ற பணிகளைச் செய்ய ஸ்வயம் சேவகர்களைத் தவிர வேறு எவருமே முன்வரவில்லை. இதுபோன்ற நெஞ்சை நெகிழவைக்கும் எல்லா நிகழ்ச்சிகள் பற்றியும் செய்தித்தாள்களில் காண முடிகிறது. சிலர் தொலைக்காட்சியிலும் இந்தக் காட்சிகளைக் கண்டிருக்கலாம்.

ஆந்திராவின் 1977- டிசம்பரில் வீசிய புயலின் போது முழுமையாக அழிக்கப்பட்ட அவனிகட்டா கிராமத்தை ஸ்வயம்சேவகர்கள் மிகுந்த ஈடுபாட்டுடன் புனரமைத்தனர். அங்கு புதிதாகக் கட்டப்பட்ட வீடுகளை அவ்வூர் மக்களுக்கு ஒப்படைக்கும் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ஆந்திர பிரதேசத்தின் முக்கியமான சர்வோதயத் தலைவர் ஸ்ரீ பிரபாகர்ராவ், இதைக் கண்டு “R.S.S. என்றால் Ready for Selfless Service” (தன்னலமற்ற தொண்டுக்கு தயார்) என்று விளக்கம் தந்தார்.

தொடரும் …

Leave a comment