ஸ்ரீ குருஜி பார்வையில் சமுதாய நல்லிணக்கம்

ரமேஷ் பதங்கே


படிப்பதற்கு முன்….

ஸ்ரீ குருஜி தத்துவ சிந்தனையாளர். தேசிய வாழ்வின் எல்லா அம்சங்கள் பற்றியும் கருத்து வெளியிட்டுள்ளார். நாட்டின் அரசியல், சமுதாயம், பொருளாதாரம் ஆகியவை குறித்த தனது அடிப்படை எண்ணங்களை வெளிப்படுத்தியுள்ளார்.


ஸ்ரீ குருஜியின் எண்ணங்கள் சிறப்புக்கள்

  • அவரது எண்ணமும் சிந்தனை எப்போதுமே முழுமை வாய்ந்ததாக இருந்தது.
  • எண்ணங்களின் அடிப்படை நிலையானதாகவும், எக்காலத்திற்கும் ஏற்றதாகவும் இருந்ததால் பொய்யாமொழியாக விளங்கியது.
  • அவர் எண்ணங்கள் ஆன்மிகத்தில் வேர் கொண்டவையாக இருந்தன.
  • அவரது சிந்தனை ஹிந்து சமுதாயத்தை மையமிட்டே இருந்தாலும், பரந்து கிடக்கும் மனிதகுலம் குறித்த உலகளாவிய எண்ணங்களையும் வெளிப்படுத்தி வந்தார்.
  • சிந்தனைகளின் வெளிப்பாடு, அனுபவபூர்வமான உணர்வை அடிப்படையாக கொண்டிருந்ததால், வெறும் பேச்சு, வரட்டுவாதம், பிறரை எதிர்ப்பதில் ஏற்படும் மகிழ்ச்சி ஆகியவை அவற்றில் இடம் பெறவில்லை .
  • உண்மையை சமுதாயத்தின் முன் நிலைநாட்டும் பொழுது, அவர் ஒருபோதும் பயம் கொண்டதில்லை, பகைமை பாராட்டியதில்லை.

அவரது எந்தவொரு சிந்தனை குறித்து ஆராயும்பொழுதும், இந்த சிறப்புக்களை நினைவில் கொள்ள வேண்டும். சமுதாய நல்லிணக்கம் குறித்த ஸ்ரீகுருஜியின் சிந்தனைகளையும், அவரது பண்பையும் ஆய்கிறபோது, மேலே குறிப்பிட்ட சிறப்புக்களை நினைவில் கொள்ள வேண்டும்.

ஸ்ரீ குருஜியின் வாழ்வெனும் வேள்வி “இது ஹிந்து ராஷ்ட்ரம்” என்னும் மந்திரத்தின் விரிவாக்கமே. இது ஹிந்து ராஷ்ட்ரம் ஹிந்து சமுதாயம் அதன் புதல்வன்போல. ஹிந்து சமுதாயத்தின் எழுச்சியில்தான் தேச எழுச்சி உள்ளது. ஹிந்து சமுதாயத்தின் வீழ்ச்சி தேசத்தின் வீழ்ச்சி – இதுவே அவரது சித்தாந்தம். ஹிந்து சமுதாயத்தின் வீழ்ச்சியே ஹிந்து ராஷ்ட்ரத்தின் வீழ்ச்சிக்கு அடிகோலியது. நம்மை நாம் மறந்த நிலையே ஹிந்து சமுதாயத்தின் வீழ்ச்சிக்கு காரணம். அனைத்திலும் சுயநலம், சுயநலத்தினால் வேற்றுமைகள், வேற்றுமைகளினால் சமுதாயத்தில் பிளவு. இவ்வாறு சமுதாயம் பிளவுபட்டு ஒழுங்குகுலைந்த நிலை ஏற்பட்டது.

ஹிந்து ராஷ்ட்ரத்தின் எழுச்சிக்கு ஹிந்து சமுதாயத்தின் எழுச்சி இன்றியமையாதது. நம்மையே இழிவாக எண்ணுவதை விலக்க நாம் யார் என்பதை நினைவு படுத்த வேண்டும். சுயநலத்தை விட்டு தன்னலமற்ற உணர்வுகொள்ள வேண்டும். அனைத்து வேறுபாடுகளையும் மறந்து, ஒருமைப்பாட்டு உணர்வு, ஒரே எண்ணம், நல்லிணக்கம், கொண்ட ஹிந்து சமுதாயத்தை நிலைநிறுத்த வேண்டும். இதுவே ஸ்ரீ குருஜியின் கருத்தாக இருந்தது. இந்த உயர்ந்த குறிக்கோளை அடைவதற்காகவே ராஷ்ட்ரீய ஸ்வயம்சேவக சங்கம் தோன்றியது. இந்த குறிக்கோளை அடைவதற்கு சங்க ‘ஷாகா’ ஒரு கருவி என்பதில் அவருக்கு முழு நம்பிக்கை இருந்தது. இதை மையமாகக் கொண்டு, சமுதாயத்தை ஒருங்கிணைக்க அவர் தனது இறுதி மூச்சுவரை பாடுபட்டார். அந்த காலகட்டத்தில், முன்னுதாரனமான சமுதாயத்தின் நிலை, வர்ண முறை, ஜாதிமுறைகள், தீண்டாமை, வனவாசிகளின் நிலை, சமுதாயத்தை நிலைநாட்டுவதில் சமயத்தின் பங்கு, சமுதாயத்தை உயர்ந்த நிலைக்கு எடுத்துச்செல்வதில் சமயப் பெரியோர் பங்களிப்பு, ஜாதிவேறுபாடுகளும் அரசியலிலும், வேறுபாடுகளை களைவதற்கான வழிமுறைகள், நலிந்தோருக்குத் தொண்டு ஆகியவை குறித்த தெளிவான கருத்துக்களை ஸ்ரீ குருஜி சமுதாயத்தின் முன் வைத்தார். அதனை மீண்டும் நினைவு கூர்கிற முயற்சியே இந்த பதிவு.


முன்னுதாரனமான சமுதாயக் கட்டமைப்பு

முன்னுதாரனமான சமுதாயம் எப்படி இருக்கும் என்பதை பல தத்துவ ஞானிகளும், சமூகவியலாளர்களும், பேரறிஞர்களும், சமுதாயநலம் விரும்பிகளும் கூறியிருக்கிறார்கள். நவீன காலத்தில், கார்ல் மார்க்ஸ் என்பவர் சமத்துவத்தோடு கூடிய, சுரண்டலற்ற, அரசற்ற சமுதாயக் கனவை விவரித்தார். அஹிம்சையையும், சத்தியத்தையும் அடிப்படையாகக் கொண்டு சர்வோதய சமுதாய கனவு கண்டார் காந்தியடிகள். டாக்டர் அம்பேத்கர், சுதந்திரமான, சமத்துவத்துடன் கூடிய, சகோதரத்துவம் வாய்ந்த, நியாயத்தை அடிப்படையாகக் கொண்ட சமுதாயத்தை உருவாக்கும் கனவு கண்டார். ஸ்ரீ குருஜி, இத்தகைய எந்தவொரு சமுதாயத்தையும் கற்பனையில் தீட்டவில்லை. அவர் நமது தொன்மை வாய்ந்த வரலாற்றை கூர்ந்து நோக்கி தலைசிறந்த சமுதாயத்தை (ஒருகாலத்தில் நிஜமாகவே நிலவிய சமுதாயத்தை) உருவாக்குவதற்கான, திட்டங்களையே முன் வைத்தார்.

“நமது ஹிந்து கலாச்சாரம், சமுதாயம் குறித்து எத்தகைய சித்திரத்தை முன்வைக்கிறது? என்ற வினா குறித்து சிந்திக்கும் பொழுது, சமுதாய வாழ்க்கையின் தன்மையை வைத்தே யுகங்கள் ஏற்பட்டிருப்பது புலப்படுகிறது. ஸத்யயுகம், த்ரேதாயுகம், த்வாபரயுகம், கலியுகம் இவை ஒவ்வொன்றிலும் சமுதாயம் ஒரு குறிப்பிட்ட நிலை அடைந்திருந்தது தென்படுகிறது. ஸத்யயுகத்தில் எல்லாம் பொது. செல்வம் அனைவரது என்பதே நிலை. அனைவரும் தேவைக்கேற்ப எடுத்துக்கொண்டு சுகமான வாழ்வு வாழ்ந்தனர். தர்மம் சமுதாயத்தின் நான்கு அங்கங்களிடையே பரவி இருந்தது. சமுதாயத்தைத் தாங்குவதும் இம்மையிலும் மறுமையிலும் இன்பத்தை அளிக்க வல்லதுமாகிய சக்தியே தர்மம் என்று அழைக்கப்பட்டது. எல்லையற்று விரிந்து பரந்த பிரபஞ்சத்திற்கு, ஒருமைப்பாட்டை அடையாளம் காட்டும் தர்மத்தின் அடிப்படையில் ஒவ்வொருவரும் தனது இயல்பை உணர்ந்து, பிறரின் நலனுக்காக செயல்பட்டார்கள். ஆட்சி இல்லாதபோதும் கூட, தர்மம் நிலவியதாலேயே ஒருவர் மற்றவரை தாக்காமல் இருந்தார்கள். ஒருவருக்கொருவர் சண்டையும் இல்லை. எல்லாவற்றுடன் ஒருமைப்பாட்டுடன் செயல்பட்டதன் காரணமாக, வெளியிலிருந்து மக்களை எதுவும் கட்டுப்படுத்தாவிட்டாலும் கூட, ”நான் எவரையும் அடிக்கமாட்டேன், அடியும் வாங்கமாட்டேன்’ என்ற எண்ணத்துடன், முற்றிலும், அமைதியாக வாழ்ந்தனர். இது ஸத்யயுகத்தின் அமைப்பு. (ஸ்ரீ குருஜி சிந்தனைக் களஞ்சியம், தொகுதி-2, பக்கம்-113)

இன்றைய காலத்திற்கேற்ப கூறவேண்டுமானால், அனைவரும் சமமாக எண்ணப்பட்டனர். அனைவர் மத்தியிலும் சகோதரத்துவம் நிலவியது. ஒருவருக்கும் அநீதி இழைக்கப்படவில்லை , சமுதாயத்தில் பெண்களும், ஆண்களும் எங்கும் நல்லிணக்கம் கண்டார்கள் என்று கூறலாம். ‘சமத்துவம்’ நிலவியது என்று கூறலாம்.

மனிதகுலத்தில் பிறந்த காரணத்தினால், அனைவரும் மனிதர்களே. மனிதன் என்ற பெயர் அனைவருக்கும் பொது. ஆயினும் அனைவரும் அச்சில் வார்த்ததுபோல ஒரே மாதிரியாக இருப்பதில்லை. சிலர் பிறவியிலேயே அறிவாளியாக திகழ்கின்றனர். சிலர் அறிவுத்திறன் குறைந்தவர்களாக இருக்கின்றனர். சிலர் வெண்மை நிறம் படைத்தவர்களாக உள்ளனர். சிலர் கருமை நிறமுடையவர்களாக இருக்கின்றனர். சிலர் உயரம், சிலர் குள்ளம். விருப்பு வெறுப்பு, இயல்பு வேவ்வேறாக உள்ளது. குணம் வேவ்வேறாக உள்ளது. இதன் பொருள், இயல்பாகவே மனித சமுதாயத்தில் குணங்கள் மற்றும் தகுதிகளில் சமமின்மை காணப்படுகிறது. ஸ்ரீ குருஜி பிறவியில் அமைந்துள்ள சமமின்மையை ஏற்றத்தாழ்வாக எண்ணவில்லை. “இது ஒரே ஜீவ தத்துவத்தின் பலவகைப்பட்ட வடிவங்கள்” என்று ஸ்ரீ குருஜி கூறுகிறார். அவர் சொற்கள்: “ஆன்மாவே உண்மையில் அனைத்திற்கும் ஆதாரமாகும். ஏனெனில், ஆன்மாவே அனைத்தும். அனைத்திலும் ஒன்றேயான ஆன்மா பல வடிவங்களாக வியாபித்திருக்கிறது. அனைவரிடத்திலும் ஒரே ஜீவசக்தியே உள்ளது. எனவேதான் அன்பாக நடந்துகொள்கிறோம். ஒவ்வொரு தனிமனிதனும் பரமாத்மாவின் அம்சம் என்று அறிந்து அளவுகடந்த அன்பு செலுத்துகிறோம், உலகம் முழுவதையும் இறைவனின் வடிவமாக உணர்ந்து தூய்மையான அன்பு செலுத்துகிறோம்”. (ஸ்ரீ குருஜி சிந்தனைக் களஞ்சியம், தொகுதி-2, பக்கம்-117)

ஸ்ரீ குருஜி நல்லிணக்கம் வாய்ந்த சமுதாய வாழ்க்கையின் தத்துவ அடிப்படையொன்றை இங்கு குறிப்பிடுகிறார்.

இயல்பாகவே தோன்றும் சமமற்ற நிலையை ஏற்றத்தாழ்வு, என்று எண்ணுவது தவறு. இதை நன்கு தெளிவாக புரிந்து கொள்வதற்கு ஒரு மரத்தை எடுத்துக்காட்டாக கூறுகிறார்: “ஒரு மரத்தை எடுத்துக் கொண்டோமேயானால், அதில் பல கிளைகள், இலைகள், மலர்கள், கனிகள் ஒன்றிலிருந்து மற்றொன்று முற்றிலும் மாறுபட்டிருக்கிறது. ஆயினும், இவற்றினால் ஒவ்வொன்றும் மரத்தின் விதவித வெளிப்பாடே. பல ஆயிரம் ஆண்டுகளாக மலர்ந்திருக்கும் நமது சமுதாயவாழ்வில் காணப்படும் வேறுபாடுகளும் இத்தகையதுதான். (அகிலபாரத ஜில்லா பிரச்சாரக் வர்க, சிந்தி, விதர்ப்ப -1954)

லட்சிய சமுதாயம் எவ்வாறு ஏற்படும்?

யுக கணக்குப்படி கூறவேண்டுமானால், நாம் இப்பொழுது கலியுகத்தில் வாழ்ந்துகொண்டிருக்கிறோம். போட்டி, பொறாமை, வெறுப்பு, நம்பிக்கையின்மை, போகங்களில் இச்சை ஆகியவை கலியுகத்தில் குறிப்பிடத்தக்க அம்சங்கள். அனைத்திலும் சமமின்மை, சுரண்டுதல், அநியாயம் ஆகியவை இந்த யுகத்தின் அடையானம். “பொருளாதாரம், அரசியல், சித்தாந்தம் என அனைத்து ரீதியிலும் மக்கள் மோதலுக்குத் தயாராகி வருகிறார்கள். தன்னைப் போல் பிறரையும் கருதும் அறிவு குறைந்து வருகிறது. தர்மம் நலிந்து வருவதால், துன்பம், ஏழ்மை, அமைதியின்மை மலிந்ததாகி விட்டது வாழ்க்கை .” (ஸ்ரீ குருஜி சிந்தனைக் களஞ்சியம், தொகுதி-2, பக்கம்-113)

மீண்டும் மீண்டும் பேசுவதால் மட்டுமே முன் மாதிரியான சமுதாயம் உருவாகிவிட முடியாது. அந்த குறிக்கோளை அடைவதற்கு தொடர்ந்து பாடுபடவேண்டும்.

ஸ்ரீ குருஜி கூறிய வழிமுறைகள் பின்வருமாறு:

  • சமுதாயம் முழுவதிலும் நிலவும் ஒருமைப்பாட்டை உணர்தல்
  • தேசம் முழுவதற்கும் தொண்டு புரிதல்
  • நமது சுகதுக்கங்களை மறந்துவிட்டு பிறருக்காக அனைத்தையும் அர்ப்பணித்தல்
  • இதனால் மனித சமுதாயம் முழுவதற்கும் இன்ப துன்பம் பொதுவாக அமையும்.
  • இவை அனைத்தும் தர்மத்தின் எழுச்சியால் மட்டுமே சாத்தியமாகும்.

இத்தகைய உயர்ந்த லட்சியத்தை அடைவது குறித்து ஸ்ரீ குருஜி தனது 33 வருட சங்க வாழ்க்கையில் மீண்டும் மீண்டும் வலியுறுத்தினார். அனைவரையும் நம் போலவே ஒரே ஆத்மாவாக உணர்வதால் தன்னலமற்ற அன்பினால் சமுதாயத்தில் அனைத்து பிரிவு, உட்பிரிவு சகோதரர்களிடையேயும் ஒருமைப்பாட்டை ஏற்படுத்த அவர் எப்போதும் முயற்சி செய்தார். அவரைப் பொருத்தமட்டில் நல்லிணக்கம் என்பது வெளிப்பார்வைக்கு மட்டுமல்லாமல் வாழ்க்கையின் நடைமுறையாகவே அமைந்தது.

ஹிந்து சமுதாயத்தின் நிலை

ஹிந்து சமுதாயத்தில் நான்கு வர்ணங்கள், ஆயிரக்கணக்கான ஜாதிகள் போன்ற பிரிவுகள் உள்ளன. ஹிந்து சமுதாயத்தில் ஹிந்துவென்று தன்னை அடையாளம் காட்டுகின்றவர்கள் மிகக்குறைவு. ஜாதி பெரும்பாலும் அடையாளம் கொண்டே காட்டுகின்றனர். இன்று பிறப்பினால் ஜாதி அல்லது வர்ணம் கணக்கிடப்படுகிறது. அதன் வேர் ஏற்றத்தாழ்வு. தொழில்வாரியான ஜாதிகள் அதன் தனித்தன்மை. ஒரு ஜாதியிலிருந்து மற்றொரு ஜாதிக்கு மாறுவது பெரும்பாலும் இயலாது. ஜாதிகள் காரணமாக சமய, சமுதாய, அரசியல், பொருளாதார கல்வி உரிமைகள் பங்கீட்டில் சமமற்ற நிலை ஏற்பட்டது. சில ஜாதியில் பிறந்தவர்கள் புனிதமானவர்களல்ல என்றும், சில ஜாதியில் பிறந்தவர்களே புனிதமானவர்களாகவும் கருதப்படுகிறார்கள். வர்ணம் ஜாதி, தீண்டாமை அனைத்தும் ஹிந்து தர்மத்தின் அங்கங்கள் என்று ஆனது சமய ஆதாரம் கிடைத்தால் வர்ணம், ஜாதி, தீண்டாமை இவை மாற்றப்பட முடியாதவை என்று கருதப்பட்டது. நூற்றுக்கணக்கான ஆண்டுகளாக சமுதாயத்தில் பெரும்பகுதி அறியாமையிலும் வறுமையிலும் உழன்றது. இதனால் அனைத்து வகையிலும் பின் தங்கியநிலை சமுதாயத்தின் பல ஜாதிகளிடையே காணப்படுகின்றது.

சமுதாயத்தில் நல்லிணக்கம் கொணர்வதிலும் சமுதாயத்தில் அனைவரும் சமம் என்ற நிலை ஏற்படுத்துவதிலும், இன்று நடைமுறையில் இருக்கும் ஜாதி, வர்ண வேறுபாடுகள் என்ற நோய் பெரும் தடையாக உள்ளது.

வர்ணம், ஜாதி, தீண்டாமை ஆகியவை குறித்து ஸ்ரீ குருஜியின் கண்ணோட்டம் என்ன?

வர்ண முறை

ஸ்ரீ குருஜி ஏற்றத்தாழ்வுள்ள நான்கு வர்ண ஏற்பாட்டை ஆதரித்தவர் என்ற தவறான கருத்து வேண்டுமென்றே பரப்பப்பட்டது. மீண்டும் சமுதாயத்தில் வர்ண வேறுபாடுகளும், ஜாதி வேறுபாடுகளும் நிலவவேண்டும் என்பதே அவர் விருப்பமாக இருந்தது என்றும் வேண்டுமென்றே அவதூறு பரப்பப்பட்டது. உண்மையில் அவர் கூறியது, இதற்கு முற்றிலும் மாறானது. எனவே, உண்மை எதுவென்று புரிந்துகொள்வது இன்றியமையாதது.

சமுதாயம் என்பது உயிர்ப்புள்ள படைப்பு என்பது ஸ்ரீ குருஜியின் கருத்து. அவர் விஞ்ஞானம் பயின்றவர். “அமீபா” என்னும் ஓரணு உயிரின் வளர்ச்சியை சுட்டிக்காட்டுகிறார். ஒரு செல் கொண்ட ‘அமீபா என்னும் உயிரினம் வளர்ச்சி அடைய அடைய விதவித அங்கங்கள் முளைக்கின்றன. தன் கடமையை முழு வீச்சில் செயல்படுவதன், பொருட்டு உயிரினங்களில் பல அங்கங்கள் உண்டாகின்றன. இறுதியில் பல அங்கங்களின் ஒருங்கிணைந்த நல்ல கோர்வையாக மனித உடல் உண்டாகிறது. (அகிலபாரத ஜில்லா பிரச்சாரக் வர்க, சிந்தி, விதர்ப-1954)

மனித உடலில் பல உறுப்புகள் இருக்கின்றன. அவைகளின் உருவமும், செயல்பாடுகளும் வெவ்வேறாக இருக்கின்றன. எந்த அங்கமும் உடலுக்கு தீங்கு விளைவிக்கக் கூடிய செயல் செய்வதில்லை. ஒவ்வொரு அங்கமும் ஒன்றுக்கொன்று அனுகூலமாக செயல்படுகின்றது. பலவகை உறுப்புகள் ஒரே உடலில் ஒற்றுமையாக செயல்படுவதைப் போன்று, சமுதாயத்திலும் நல்லிணக்கம் உருவாக்க முடியும் என்பது ஸ்ரீ குருஜியின் கருத்து.

“சமுதாயம் உயிரோட்டமுள்ளது. மனித உடலின் அமைப்பு, உயிரினங்களின் பரிணாம வளர்ச்சியின் மிகச்சிறந்த வடிவமாகும். எனவே, உயிரோட்டமுள்ள ஒரு வடிவத்தை உருவாக்க அதை அனுசரித்து நடக்க வேண்டும். சமுதாயத்தையும் உயிரோட்டமுள்ள மனிதவடிவை அனுசரித்து உருவாக்கினால் இயற்கையானது என்பதால் மிகவும் உகந்ததாக இருக்கும்” என்கிறார் ஸ்ரீ குருஜி. (ஸ்ரீ குருஜி சிந்தனைக் களஞ்சியம், தொகுதி-2, பக்கம்-150)

உயிருள்ள மனிதனைப்போல் சமுதாயத்தை எவ்வாறு உருவாக்க முடியும் என்பது சிக்கலான கேள்வி. மனிதன் தனிப்பட்டவன். அவன் உயிருள்ள வடிவத்தை நாம் காணமுடியும், உணரமுடியும். சமுதாயம் என்பது மனிதர்களின் கூட்டம். சமுதாய புருஷன் என்ற பெயரில் ஒருவருடைய உயிருள்ள ஒன்றை வேறுபடுத்திக் காண்பதோ அல்லது உணருவதோ எளிதல்ல. இவ்வாறு பல பிரச்சினைகள் இருந்தபோதும், சமுதாயம் என்ற உயிர் உள்ள ஒன்றை ஏற்படுத்துவதற்கு நமது முன்னோர்கள் முயற்சி செய்தனர். இதுபற்றி ஸ்ரீ குருஜி கூறுகிறார், ”நமது முன்னோர்கள் பலவாறாக யோசித்து, ஒருமித்த பண்புகளும் ஒத்த மனப்போக்கும் கொண்டவர்கள் ஒருங்கிணைந்து, வளர்ச்சிபெற்று சமுதாயத்திற்கு மிகவும் பயனுள்ள விதத்தில் வாழ்வது சாத்தியமாகும் வகையில் சமுதாய வாழ்க்கையை உருவாக்க வேண்டும் என்று கருதினார்கள்.”

உயிருள்ள மனிதனைப் போல் சமுதாயத்தை கட்டமைக்கிற முயற்சியே நான்குவர்ணங்கள். ஸ்ரீ குருஜி இதை நமது சமுதாயக் கட்டமைப்பின் சிறப்பாக கருதினார். இன்று நான்கு வர்ணங்களை கண்டனம் பேசுபவதும், எழுதுவதும் ஒரு ஃபாஷன் ஆகிவிட்டது. ஸ்ரீகுருஜி இந்த ஜனரஞ்சக வழியை பின்பற்றவில்லை. இந்த பிரச்சினையை அறிவியல் பூர்வமாக பரிசீலிக்கையில் அவர் மன்னிப்பு கோரும் தொணியில் பேசவில்லை. நான்கு வர்ண முறையில் இன்றுள்ள ஏற்றத்தாழ்வு ஏற்படுத்தும் வடிவத்தை அவர் கடுமையாக விமர்சித்துள்ளார். “அந்த சமுதாயக் கட்டமைப்பின் மூல வடிவத்தில் பிரிவுகளிடையே பெரியது-சிறியது, உயர்ந்தது-தாழ்ந்தது என்ற எண்ணத்திற்கு இடம் கிடையாது. சமுதாயம் சர்வவல்லமை பொருந்திய பரமாத்மாவின் வடிவம்; அதை ஒவ்வொருவரும் தனது சக்தி, வழிமுறை இவற்றிற்கேற்ப பூஜிக்க வேண்டியது என்ற உணர்வு ஏற்படுத்தப்பட்டது. பிராமணர்கள் கல்வி கற்றுக் கொடுப்பதன் மூலம் உயர்ந்தோர், ஆனால் பகைவர்களை அழிப்பதன்மூலம் க்ஷத்திரியர்களும் அதே பெருமைக்குரியவர்கள். வாணிபம் செய்பவர்களும் குறைந்தவர்களல்ல. விவசாயம், வியாபாரம் மூலம் சமுதாயத்தை ஸ்திரமாக்குகிறார்கள். சூத்திரர்களும் குறைந்தவர்களல்ல. அவர்களும் தங்களது கலைத் திறமையினால் சமுதாயத்திற்கு தொண்டு செய்கிறார்கள். இவர்கள் அனைவரும் ஒருவர் மற்றொருவரை சார்ந்து, இணக்கத்துடன் வாழ பழங்காலத்தில் சமுதாயத்தின் அந்த கட்டமைப்பு உருவானது.” (ஞான கங்கை )

ஹிந்து சமுதாயத்தில் ஜாதிமுறை எவ்வாறு தோன்றியது என்பது குறித்து சிறந்த அறிஞர்கள் பல சித்தாந்தங்களை முன்வைக்கின்றனர். ஆரியர்களின் படையெடுப்பை ஏற்றுக் கொள்கின்றவர்கள், வெளியிலிருந்து இங்கு படையெடுத்துவந்த ஆரியர்கள், இங்கு வாழ்ந்த மக்களை அடிமைப்படுத்தி, அவர்களிடையே ஜாதிப் பிரிவுகளை ஏற்படுத்தினர் என்று கூறுகின்றனர். இந்த சித்தாந்தமே ஆரியர்கள் ஐரோப்பா-ரஷ்யா ஆகிய நாடுகளிலும் படையெடுத்ததாக கூறுகிறது. அப்படியானால் அங்கெல்லாம் ஜாதிப்பிரிவுகள் ஏன் ஏற்படவில்லை? இதற்கு விடையும் ஏதும் கிடைக்கவில்லை. மனுஸ்மிருதி எழுதிய மனுவினால் இத்தகைய ஜாதிவேறுபாடுகள் உருவாயின என்பது இன்றுள்ள பொதுவான கற்பனை. டாக்டர் அம்பேத்கர் அவர்களின் கூற்றுப்படி, ஜாதிப்பிரிவுகள் மனுவினால் ஏற்பட்டதல்ல. ஜாதிப்பிரிவுகள் என்பது ஒரு சிக்கலான ஏற்பாடு. ஒருவர் எத்தகைய மகானாக இருந்தபோதும் இத்தகைய சிக்கலான ஏற்பாட்டை உருவாக்குவது அவரால் முடியாது என்பார் டாக்டர் அம்பேத்கர்.

ஸ்ரீ குருஜி இதுபோல எந்த ஒரு கோட்பாடு குறித்தும் பேசுவதில்லை . ஜாதிமுறைகள் படிப்படியாக வளர்ந்தது. நமது முன்னோர்களால் மனித வாழ்க்கையை நான்கு புருஷார்த்தங்களின் அடிப்படையில் வகுத்தனர். தர்ம, அர்த்த, காம, மோக்ஷம் எனும் இந்த நான்கு புருஷார்த்தங்களில் (அறம், பொருள், இன்பம், வீடு) மனிதனால் இறுதியாக அடையப்பட வேண்டியது வீடு என்று கூறப்படுகிறது. மனிதனுடைய இறுதி குறிக்கோள் “போகம்”அல்ல. மனிதனின் வாழ்க்கை என்னும் யாத்திரையின் இறுதியான கட்டம் ”வீடு” (நிரந்தர இன்பம்) உள்ளார்ந்த சுகத்திற்காக பல விஷயங்கள் குறித்த கவலைகளிலிருந்து விடுபடவேண்டியது அவசியம். ஒவ்வொரு தனிமனிதனுக்கும் முதல் கவலை வயிற்றுப்பாடு. வாழ்க்கையை நடத்துவது முதல் பிரச்சினை. உணவு, உடை, இருப்பிடம் இம்மூன்றும் மனிதனின் அடிப்படை தேவைகள். இவை மூன்றையும் முழுமையாக அடைவதற்காக அவன் பாடுபடுகிறான். தீவிர முயற்சி செய்கிறான். தன் பாதுகாப்பு குறித்தும் ஒவ்வொருவருக்கும் கவலை. ஒரு மனிதன் 24 மணிநேரமும் இதைக் குறித்தே சிந்தித்து கொண்டிருந்தால் அவன் எப்பொழுது முழுமையான வளர்ச்சி அடைவது? மனதினாலும், அறிவினாலும், ஆத்மாவினாலும் சுகம் கிடைப்பது எவ்வாறு?

இந்தக் கேள்விகளுக்கு விடையளிக்கிறார் ஸ்ரீ குருஜி; “நமது முன்னோர்கள் மிகுந்த உலக அனுபவமுள்ளவர்கள். சாதாரண மனிதனின் நாட்டம், ஆசை இவற்றை கருத்தில்கொண்டு அவனை இறுதி லட்சியத்தை அடையச் செய்ய வேண்டும் என்ற சிந்தனை அவர்களுக்கு இருந்தது. வயிற்றுப்பாட்டை பார்த்துக் கொண்டபிறகு சாமானிய மனிதர்கள் ஆன்மீகத்தில் ஈடுபட நேரம் கிடைக்க வேண்டும் என்று அவர்கள் எண்ணினர். எனவே மனிதன் பிறந்த உடனேயே பிழைப்புக்கு உத்தரவாதம் தரும் கட்டமைப்பை உருவாக்கினார்கள். அதற்காக ஒரு தனிமனிதனை பாரம்பரிய தொழிலுக்கு தயார் செய்து, குடும்பத்தைக் காப்பாற்றச் செய்வது அவசியமாக இருந்தது. இவ்வாறு வெவ்வேறு தொழில்புரியும் மக்களை தொழில்வாரி ஒன்றிணைத்து ஜாதிகளின் வடிவத்தில் ‘அரசாங்கத்தின் தலையீடு இல்லாத தேசீய காப்பீ டு’ (National Insurance Scheme without Government Interference) என்னும்படியான அமைப்பை ஏற்படுத்தினார்கள். அவரவர் தனது பிறவியினால் வந்த தொழிலினால் குடும்பத்தை காப்பாற்றி அமைதிகரமாக ஆன்ம தத்துவத்தை சிந்தித்து வரவே, நற்பண்புகளின் களஞ்சியமாக சமுதாயம் ஆகமுடிந்தது.” (அகிலபாரத ஜில்லா பிரச்சாரக் வர்க, சிந்தி, விதர்ப-1954)

சமுதாயம் உயிரோட்டமுள்ள அமைப்பு என்ற கோட்பாட்டினால் நாம் அனைவரும் சமுதாயத்தின் அங்கங்கள். உயிரோட்டமுள்ள ஒரே சமுதாயம் என்பதால் நாம் அனைவரும் சமம், ஒருவருக்கொருவர் நிறைவு செய்து கொள்கிறோம் – என்பது ஸ்ரீ குருஜியின் கருத்து. “இந்த கருத்தை பின்பற்றி ஒருமைப்பாடு காண்போம். சேதுவிலிருந்து இமயம் வரை உள்ள முழுமையான தேசத்தை உயர்ந்த, சிறந்த தெய்வீக சைதன்ய உருவமாக கண்டு, அதன் அங்கங்களான நாம் அனைவரும் ஒன்று என்று தெளிந்து, அனைத்து அங்கங்களும் புனிதமானவை என உணர்வோம்.’ (ஸ்ரீ குருஜி சிந்தனைக் களஞ்சியம், தொகுதி-2, பக்கம்-122)

மனித சமுதாயத்தில் இயல்பாகவே ஏற்றத்தாழ்வு உண்டு. அது நம்மை பாதிக்காமல் பார்த்துக் கொள்வதே புத்திசாலிதனம். பிழைப்புக்கு உத்தரவாதம், வயிற்றுப் பாட்டுக்கு உத்தரவாதம், பரஸ்பர ஒத்துழைப்பு இவற்றின் வாயிலாக இந்த ஏற்றத்தாழ்வை நீக்கமுடியும். மனிதன், மிகச் சிறந்த இசைவு இணக்கம் வாய்ந்து வாழும் அருகதை உள்ளவனாக விளங்க வேண்டும். இது ஒரு முடவனுக்கும், பார்வையற்றவனுக்கும் இடையே உள்ள இணக்கம் போன்றது. முடவனுக்கு காலும், பார்வையற்றவனுக்கு கண்ணும் கிடைக்கிறது. ஏற்றத்தாழ்வினால் வரும் கசப்பான உணர்வை ஒத்துழைப்பு நீக்குகிறது. நமது கண்ணோட்டத்தில், தனிமனிதனுக்கும் சமுதாயத்திற்கும் இடையேயான உறவு மோதலாக இல்லாமல், இணக்கமாகவும் ஒத்துழைப்பாகவும் அமைந்திருந்தது. (ஞான கங்கை )

ஸ்ரீ குருஜி ‘வர்ண முறை’, ‘ஜாதி முறை’ ஆகிய சொற்றொடர்கள் பயன்படுத்துகிறார். இன்று வர்ண வேறுபாடு, ஜாதி வேறுபாடு என்ற சொற்கள் இன்றும் வழக்கத்தில் உள்ள சொற்கள். இன்று அதன் நிலை ‘தலைகீழாக மாறிவிட்டது’ என்று ஸ்ரீ குருஜி கருதினார். வர்ணமுறையினாலும், ஜாதிமுறையினாலும் நமது சமுதாயம் வீழ்ச்சி அடைந்து அந்நியர் பிடியில் சிக்கிவிட்டது என்பதை ஸ்ரீ குருஜி ஏற்றுக்கொள்ளவில்லை. இது வரலாற்று ரீதியில் சரியல்ல” என்கிறார். ஸ்ரீ குருஜி முன்வைக்கும் வாதம் இது:

”கடந்த ஆயிரம் ஆண்டுகளாக ஒற்றுமை இன்மையால் நமது தேசம் அந்நியர்களின் ஆதிக்கத்தில் இருந்தது. நம்மிடையே நிலவிய ஜாதிவேறுபாடுகள் அந்நியர்களின் படையெடுப்புக்கு உதவியதே அதற்கு மூல காரணம் என்று கூற இயலாது. தில்லியின் ஹிந்து அரசன் பிருதிவிராஜை முகமது கோரி வென்றதற்கு, பிருதிவிராஜின் உறவினனான ஜெயச்சந்திரனே காரணம். காட்டில் ராணா பிரதாபை துரத்தி வந்த மான்சிங்கும் அவனது ஜாதியைச் சேர்ந்தவனே, சிவாஜி மகாராஜாவுக்கும் அவரது ஜாதியினரே பகைவர்களாக இருந்தனர். ஜாதிவேறுபாடு இதற்கு ஒருபொழுதும் காரணமாக இருந்ததில்லை. (ஸ்ரீ குருஜி சிந்தனைக் களஞ்சியம், தொகுதி-11)

(இந்த எல்லா எடுத்துக்காட்டுகளும் அரசியல் சட்டத்தை நிறுவிய டாக்டர் அம்பேத்கர் 1949, நவம்பர் 25 அன்று அரசியல் நிர்ணய சபையில் ஆற்றிய நிறைவுரையில் இடம் பெற்றுள்ளன).

ஸ்ரீ குருஜி முன்வைக்கும் இன்னொரு கருத்து, “நம்மிடையே நிலவும் ஜாதிவேறுபாடுகளே நமது நலிவிற்கு காரணமென்றால், நமது சமுதாயம் ஜாதிகளே இல்லாத அந்நியர்களின் ஆக்கிரமிப்பிற்கு வெகு எளிதாக மண்டியிட்டிருக்கும். முஸ்லிம் ஆக்ரமிப்பாளர்கள், ஈரான், எகிப்து, ரோம், சீனா என்று தங்கள் வழியில் எதிர்ப்பட்ட பல நாடுகளைச் சேர்ந்தவர்களை கூட, தனது காலடியில் நசுக்கிவிட்டனர். அந்த நாடுகளில் மக்களிடையே ஜாதி உபஜாதி வேறுபாடுகள் இருந்ததில்லை . ஆயிரம் வருடங்களாக நமது மக்கள், அச்சமூட்டக்கூடிய படையெடுப்புகளால் அழியவில்லை, மாறாக தீவிரமாகவும், வீரத்துடனும் எதிர்த்து, இறுதியில் பகைவர்களின் வலிமையை முழுவதுமாக அழித்தனர். (ஸ்ரீ குருஜி சிந்தனைக் களஞ்சியம், தொகுதி 11)

அதாவது, சமுதாயத்தின் நலனுக்காக இன்றுள்ள வர்ண வேறுபாடுகளையும், ஜாதிவேறுபாடுகளையும் அப்படியே வைத்துக் கொள்வது அவசியம் என்று பொருள் கொள்வது மிகவும் தவறு. ஸ்ரீகுருஜியின் கருத்து இதுவல்ல. இன்று திரிபுதான் சமுதாயத்தில் எஞ்சியிருக்கிறது. எனவே அதை முடிவிற்கு கொண்டுவருவதே உகந்தது. “சந்தேகத்திற்கிடமின்றி இன்று ஜாதிமுறைகள் எல்லா விதங்களிலும் கெட்டுவிட்டது. புதிய வீடு கட்டும்பொழுது பழைய வீட்டை இடிக்கத்தான் வேண்டும். இன்று சீர்கெட்டுள்ள சமுதாயக் கட்டமைப்பை முழுவதுமாக தகர்த்துவிட வேண்டும், அதிலிருந்து புதிய சமுதாயத்தை உருவாக்க வேண்டும். இன்று நாம் அனைவரும் ஒன்று என்ற உணர்வுள்ள சமுதாயம் உருவாக்க நமது அப்பழுக்கற்ற தேசிய உணர்வை மனதில் நிலைநிறுத்தி, உயிர்ப்புள்ள, ஒருங்கிணைந்த சமுதாயத்தை உருவாக்கவேண்டும் என்ற எண்ணம் கொண்டவர்களை ஒருங்கிணைக்க வேண்டும்” என்பது ஸ்ரீ குருஜியின் எண்ணம்.

பல கார்யகர்த்தர்கள் ஸ்ரீ குருஜியிடம் வர்ண முறை மற்றும் ஜாதிமுறைகள் குறித்து கேள்விகளை எழுப்பினர். இதற்கு அவர் அளித்த விடைகளிலிருந்து, வர்ணமுறை, ஜாதிமுறை குறித்த ஸ்ரீகுருஜியின் கண்ணோட்டம் தெளிவாகிறது.

கேள்வி: ஹிந்து ராஷ்ட்ரம் என்ற கருத்தை எதிர்ப்பவர்கள், முன்பு நமது நாட்டில் நிலவிய வர்ண, ஜாதிமுறைகளை கொண்டுவந்து, அதன் அடிப்படையில் தீண்டாமையை வளர்த்து, பிராமணர்களின் ஆதிக்கம் ஏற்படுத்தப்படும். இவ்வாறு நேர்மாறாக அர்த்தம் செய்து கொண்டு நம்மீது குற்றம் சாட்டுகின்றனர். இந்தக் கருத்தினால் நாட்டிற்கு நெருக்கடி ஏற்படும். அது பாதகம் விளைவிக்கும் என்று பேசுகிறார்கள்.

பதில்: இந்த கலியுகத்தில் அனைத்து வர்ணங்களும் ஒழிந்து, ஒரே ஒரு வர்ணம்தான் நிலவும் என்று கூறப்பட்டுள்ளது. வர்ணமுறை, ஜாதிமுறை என்னும் சொற்களை கேட்கும் நம் மனதில் தயக்கம் ஏற்பட்டு ‘மன்னிப்பு கோரும் மனநிலை, நமக்கு ஏற்பட்டு விடுகிறது. ஒரு காலகட்டத்தில் இந்த முறைகள் சமுதாயத்தில் நிலவின என்று தெளிவாகச் சொல்வோம். அவை நன்மை பயப்பதாக இருந்தன. இன்று இந்த முறைகளால், நன்மை ஏதும் இல்லாததால், நாம் அவற்றை உடைத்துவிட்டு புதிய முறைகளை உருவாக்குவோம்.

உயிரியலில் வளர்ச்சி என்பது எளிமையாக தொடங்கி நுட்பமானதில் முடிகிறது. ஒரு சிசுவிற்கு முதல் நிலையில் கை, கால் முதலியன தோன்றுவதில்லை. மாமிசப் பிண்டமாகவே இருக்கிறது. இதன் மூலமாகவே உண்பது, அருந்துவது, வெளியேற்றுவது முதலிய செயல்கள் நடைபெறுகின்றன. அது வளரும் மற்ற செயலுறுப்புகள் தோன்றுகின்றன. இத்தகைய பரிணாம வளர்ச்சி சமுதாயத்திலும் உள்ளது. இது ஏற்படாத சமுதாயம், வளர்ச்சியடையாத சமுதாயமாகும். வெறும் ஆயுதங்களை செய்வது மட்டுமே வளர்ச்சியல்ல. நமக்கு சமுதாயத்தை கடவுளாக பாவிப்பதை தவிர வேறொன்றும் தெரியாது. சமுதாயத்தின் எந்த அங்கமும் தீண்டத்தகாததல்ல, வெறுக்கத்தக்கதல்ல. ஒவ்வொரு பிரிவும் புனிதமானது என்பதை நாம் நினைவில் கொள்ளவேண்டும். உயர்ந்தது, தாழ்ந்தது என்ற எண்ணம் சமுதாயத்தின் அங்கங்கள் குறித்து ஏற்படக்கூடாது. நாம் இதை நினைவில் கொண்டு சமுதாயத்தை உருவாக்குவோம். கடந்த காலத்தை குறித்து மன்னிப்பு கோரும் மனப்பான்மை வேண்டாம். மற்றவர்களை நோக்கி கேட்போம்: “நீங்கள் யார்? பல நூற்றாண்டு மனித சமுதாய வளர்ச்சியில் உங்கள் பங்கு என்ன? இன்றும் உங்கள் செயல்பாட்டினால் மனிதனுக்கு நன்மை விளையும் என்று உத்திரவாதம் இல்லை. இதில் எங்களுக்கு புத்திமதி சொல்ல நீங்கள் யார்? இது நமது சமுதாயம். நமது சமுதாயத்தை நாம் ஒருமித்த கருத்துடையதாக உருவாக்குவோம். அதன் பல்வேறு வீர செயல்களையும் அறிவாற்றல்களையும் வெளிப்பட செய்வோம்.”

கேள்வி: ஜாதி குறித்து தங்களது உறுதியான கண்ணோட்டம் என்ன?

பதில்: சங்கம் எந்த ஜாதியையும் ஏற்பதில்லை. சங்கத்தைப் பொருத்தவரை ஒவ்வொருவரும் ஹிந்து. ஜாதி என்பது ஒரு காலகட்டத்தில் சிறந்த அமைப்பாக விளங்கியது. ஆனால், இன்று அது பொருத்தம் அற்றதாகி விட்டது. வளைந்து கொடுக்கும் தன்மையற்றவர்கள் ஜடம் போன்று கடினமாகி விடுவார்கள். தீண்டாமையை சட்டத்தின் மூலமாக மட்டுமன்றி நிஜவாழ்க்கையிலும் ஒழிக்கவேண்டும் என்று நான் விரும்புகிறேன். சமயத் தலைவர்கள் தீண்டாமையை ஒழிப்பிற்கு சமய ரீதியாக அங்கீகாரம் அளிக்க வேண்டும் என்பதும் எனது விருப்பம். உயர்வு – தாழ்வு பாராமல் வேறுபாடில்லாமல், அதிகபட்ச திறனுடன் அவரவர் தன் கடமையாற்றுதலே, மனிதனின் உண்மையான சமயம். செய்யும் தொழிலே தெய்வம். அதை வழிபாடாகவே கருதுதல் வேண்டும். நான் ஜாதி என்பதை பழங்கால கவசமாக காண்கிறேன். ஒரு காலகட்டத்தில் அது தன் கடமையைச் செய்தது. ஆனால் இன்று அது பொருந்தாது. மற்ற பகுதிகளுடன் ஒப்பிடுகையில், மேற்கு பஞ்சாபிலும், கிழக்கு வங்காளத்திலும் ஜாதிமுறைகள் வலுவற்றதாக இருந்தது. இதன் காரணமாகத்தான், இந்த இடங்கள் இஸ்லாத்திடம் தோன்றன. ஜாதிமுறைகளே நாம் அடிபணிந்ததற்கு காரணம் என்பது, சுயநலவாதிகளால் புகுத்தப்பட்டது. இத்தகைய அர்த்தமற்ற பேச்சுகளை கண்டிக்க நான் தயாராக இல்லை. ஒரு காலத்தில் ஜாதி சிறந்த அமைப்பாக இருந்தது. மற்ற எல்லாம் கலகலத்துப் போன வேளையில் சமுதாயத்தை கட்டுக் கோப்பாக வைப்பதற்கு ஜாதிமுறை பெரிதும் உதவியது.

கேள்வி: ஹிந்து கலாசாரம் வளர்ச்சி அடையும்போது வர்ணமுறை மீண்டும் நிறுவப்படுமா?

பதில்: தேவையில்லை. நாம் சாதிமுறையின் ஆதரவாளர்களுமல்ல, எதிர்ப்பாளர்களும் அல்ல. அது குறித்து நமக்குத் தெரிவதெல்லாம், கடந்த காலத்தில் அது மிகவும் நன்மை பயக்கக்கூடிய அம்சமாக இருந்தது. இன்று சமுதாயம் அது தேவை இல்லை என்று எண்ணினால், அது தானாகவே ஒழிந்துவிடும். அதற்காக யாரும் வருந்தவே வேண்டாம்.

கேள்வி: ஹிந்து சமுதாயத்திற்கு வர்ண அமைப்பு இன்றியமையாததல்லவா?

பதில்: வர்ண அமைப்பு ஹிந்து சமுதாயத்தின் நிலைமையோ அல்லது ஆதாரமோ அல்ல. அது ஒரு ஏற்பாடு அல்லது வழிமுறையே ஆகும். அது தற்பொழுது நன்மை பயக்குமா பயக்காதா என்பதன் அடிப்படையில், வர்ண முறையை நீடித்து இருக்கவிடலாம், அல்லது ஒழிக்கலாம்.

தொடரும்…

Leave a comment