என்ன சொல்கிறது ஏகாத்ம மானவ தரிசனம்?

சுதந்திரப் போராட்ட காலத்தில் நம்முடைய அரசியலும் போராட்டங்கள் அனைத்தும் சுதந்திரம் அடைவதை மட்டுமே நோக்கமாகக் கொண்டிருந்தது.  சுதந்திரத்திற்குப் பின் நாம் எப்படிப்பட்ட கொள்கைகள் மற்றும் வழிமுறைகளை பின்பற்ற வேண்டுமென்பது பற்றிச் சிந்திக்கவில்லை.  சுதந்திரத்திற்குப் பின்பும் அன்னிய சிந்தனை மற்றும் வழிமுறைகளையே பின்பற்றுவதானால் ஏன் அன்னியர் வெளியேற்றப்பட வேண்டும் என்ற கருத்து எழுகிறது.  ஆனால் இவை பற்றி காந்திஜி ஹிந்த் ஸ்வராஜி-ல் தனது கட்டுரையிலும்,  திலகர் அவர்கள் கீதா ரகஸ்யம் என்கின்ற தனது புத்தகத்திலும் கூறியுள்ளனர்.

ஆங்கிலேயர்கள் வெளியேறியதும் அரசியல் மீது அவர்களுக்கு இருந்த தாக்கம், அவர்களது சமூக சிந்தனை, வாழ்க்கை மூல்யங்கள் சன்னம் சன்னமாக மறைந்திருக்க வேண்டும்.  ஆனால் நாம் ஆங்கிலம் பேசுவதில் பெருமை கொள்ளத் துவங்கினோம்.  அவர்களது நடை, உடை பாவனைகளை மதிக்கத் துவங்கினோம்.  அது மட்டுமல்ல, அவர்களது வாழ்க்கை நெறிகள், சமூக விஞ்ஞானம், அரசியல் சிந்தனைகளைப் பின்பற்றத் துவங்கினோம்.

வேதங்கள், உபநிடதங்கள், இதிகாச புராணங்கள், பகவத் கீதை ஆகியவற்றைப் புறந் தள்ளி மாக்ஸிசம், ஹெகல், மில்லர், ஆதம் ஸ்மித் ஆகியோர் கூறியவற்றையே எதிர் நோக்கியிருக்கத் துவங்கினோம்.  தன்னுடைய இயல்பு எண்ணம் மற்றும் பாதையைப் புறக்கணிக்கின்ற நாடு பேரிடரையே சந்திக்கும். எனவே நம் தேசிய சிந்தனை, இயல்பு ஆகியவற்றின் அடிப்படையிலேயே நமது அரசியல், பொருளாதார, சமூகக் கொள்கைகள் வகுக்கப்பட வேண்டும்.

ஏகாத்ம மானவ தர்ஷனின் மையக் கரு

மனிதன் என்பவன் வெறும் சோற்றால் அடித்த பிண்டம் அல்ல.  அவனுக்கு உடல் மட்டும் இல்லை.  அவன் உடல், மனம், அறிவு, ஆன்மா ஆகிய நான்கும் கொண்ட ஒருங்கிணைந்த அம்சம் ஆவான்.  (Man is an integral being) மனிதனின் இந்த நான்கு அம்சங்களின் முன்னேற்றம் பற்றி நாம் சிந்திக்க வேண்டும்.  அதாவது மனிதனின் உலகாயத மேம்பாட்டுடன் (Material Development) அவனது ஒழுக்கம் மற்றும் ஆன்மீக மேம்பாடும் முக்கியமானதாகும்.

எனவே தான் நமது பாரதியப் பண்பாட்டில் ஒவ்வொரு மனிதனுக்கும் நான்கு விதமான குறிக்கோள்கள் முன்வைக் கப்பட்டுள்ளன.  அவை அறம் (தர்ம), பொருள் (அர்த்த), இன்பம் (காம), வீடு (மோக்ஷ) ஆகும்.  இவை அறம், பொருள், இன்பம், வீடு என்று வரிசைப்படுத்தப் படவில்லை.  பொருளீட்டலும் இன்பம் துய்த்தலும் அறத்தின் வழியிலானதாக இருக்க வேண்டும்.  அப்பொழுது தான் தனிமனிதனுக்கு மகிழ்ச்சியும் சமுதாயத்திற்கு நன்மையும் ஏற்படும்.

எவ்வாறு ஒரு மனிதன் உடல், மனம், அறிவு, ஆன்மா ஆகிய நான்கு அம்சங்களின் ஒருங்கிணைப்போ, அதுபோல மனிதனும், சமுதாயமும் கூட ஒருங்கிணைந்ததே (Individual & Society is also Ekatma). தனி மனிதன் மற்றும் சமுதாயத்திற்கு இடையே நமது பாரதிய சிந்தனையில், மோதலோ முரண்பாடோ கொண்டதல்ல.

நமது சிந்தனையும் மேற்கத்திய சிந்தனையும்

மேற்கத்திய நாட்டு சிந்தனையில் மனிதனுக்கும், மனிதனுக்கும் இடையேயும் மனிதனுக்கும் சமுதாயத்திற்கும் இடையேயும் வேற்றுமையும் மோதலுமே உள்ளதாக நினைக்கின்றனர்.

நமது சிந்தனையில் நாம் ‘வசுதைவ குடும்பம்‘ – உலகமே ஒரு வீடு என்று கருதுகிறோம்.

ஆனால் சார்லஸ் டார்வின் வல்லவனே வாழ்வான் (Survival of the fittest) என்கிறார்.  ஆனால் நாம் உலகில் பிறந்த அனைத்திற்கும் வாழ உரிமை உண்டு என்கின்ற சிந்தனை உள்ளவர்கள்.

காரல் மார்க்ஸ் வர்க்கப் போர் மற்றும் பாட்டாளி களின் சர்வாதிகாரம் பற்றிப் பேசுகிறார்.

மேற்கத்திய நாட்டின் சிந்தனைப்படி தனிமனித னுக்கும், சமுதாயத்திற்கும் மோதல்கள் தொடர்ந்து  கொண்டே இருக்கும். தனிமனித சுதந்திரம் சமுதாயத்தின் நலனுக்கு முரணானது என்பது அவர்களது கருத்தாகும்.  சமுதாயம் என்பது தனிமனிதர்கள் ஒன்றாக் கூடி ஓர் ஒப்பந்தத்தின் மூலம் (Social Contract Theory) ஏற்பட்டது என்பது மேற்கத்திய நாட்டுச் சிந்தனை.  அதாவது உதிரி பாகங்களை இணைத்து ஒரு மோட்டார் வாகனம் உருவாக்குவது போல் சமுதாயம் உருவாக்கப் பட்டுள்ளது என்பது அவர்கள் சிந்தனை.  ஆனால் நமது பாரதிய சிந்தனை சமுதாயம் என்பது உயிரோட்டமுள்ள ஓர் அமைப்பாகும்.  அதாவது ஒரு குதிரைக்கு பல அங்கங்கள் இருந்தாலும் அது  ஓர் உயிரோட்டமுள்ள ஜீவன். இரண்டும் ஓடுகிறது.  ஆனால் அடிப்படையில் வேறுபட்டது.

மேற்கத்திய நாட்டு சிந்தனையில் அது முதலாளித்துவம் அல்லது கம்யூனிசம் (சோஷலிசம்) எதுவாக இருந்தாலும் அவை மனிதனின் உலகாயத தேவைகளைப் பூர்த்தி செய்வது பற்றி மட்டுமே சிந்திக்கிறது. எனவேதான் சுவாமி விவேகானந்தர் முதலாளித்துவம் மற்றும் கம்யூனிசம் இரண்டுமே உலகாயதவாதம் (Materialism) எனும் நாணயத்தின் இரண்டு பக்கங்கள் என்று கூறியுள்ளார்.

மனிதனுக்கு நீண்ட ஆயுள் இருந்தால் மட்டும் போதாது. வாழ்க்கை மகிழ்ச்சிகரமானதாக இருக்க வேண்டும்.  ஒருவருடைய வயது, ஆரோக்கியம், கலாச்சாரப் பின்னணி, மனம் மற்றும் அறிவின் வளர்ச்சி ஆகியவற்றைப் பொருத்து எது மகிழ்ச்சி அளிக்கக்கூடிய விஷயம் என்பது மாறுபடலாம்.

ஆனால் வாழ்க்கை தொடர்ந்து மகிழ்ச்சிகரமானதாக இருக்க வேண்டும் என்கின்ற வேட்கை ஒவ்வொருவர்க்கும் உண்டு.

மனதின் மகிழ்ச்சி (Happiness of Mind)

புலன்களின் இன்பத்திற்கு அப்பாற்பட்டு மனதின் மகிழ்ச்சியும் உள்ளது என்பதை நாம் ஒப்புக் கொள்ள வேண்டும்.  ஒரு கம்யூனிஸ்ட் தன் நண்பனிடம் அடிக்கடி மனிதனுக்கு புலன்களின் தேவைகளைப் பூர்த்தி செய்வது தான் முக்கியம் என்று கூறிக் கொண்டே இருந்தார்.  அவரது பேச்சைக் கேட்டுச் சலித்துப் போன நண்பர், ‘நான் உங்களுக்கு நல்ல உணவு மற்றும் அனைத்துத் தேவைகளுக்கும் ஏற்பாடு செய்து விடுகிறேன்.  ஆனால் பொது இடத்தில் உங்களை எனது காலணியால் தட்டுவேன்.  சம்மதமா?’ என்று கேட்கிறார்.  உடனே அந்த கம்யூனிஸ்ட், ‘அதை எப்படி ஏற்க முடியும்?’ என்று மறுக்கிறார்.

அதாவது புலன்களின் இன்பத்திற்காக மன வருத்தத்தை ஒருவரால் ஏற்றுக் கொள்ள முடியாது.  அதுபோல் மனதின் சந்தோஷத் திற்காக உடலை வருத்திக் கொள்ளவும் நாம் தயங்குவது இல்லை.  சபரிமலைக்கு நோன்பு இருப்பவர்கள், காசி, ராமேஸ்வரம் யாத்திரை மேற்கொள்பவர்கள் பல உடல் ரீதியான கஷ்டங்களை ஏற்கின்றனர்.  எனவே மனதின் மகிழ்ச்சிக்காக உடல் ரீதியான கஷ்டங்களை நாம் விலையாகத் தருகிறோம்.

அறிவின் இன்பம்

அறிவின் இன்பமும் ஓர் உயரிய இன்ப நிலை ஆகும்.  மிருகங்களுக்கு மனமும், அறிவும் வளர்வ தில்லை.  அவைகள் தங்களது உணவு, தூக்கம், அச்சம், பாலுறவு ஆகியவை நாடுகின்றன.  ஆனால் மனிதனுக்கு கடினமான பிரச்சினை களுக்கு தீர்வு காண்பதில் தான் மகிழ்ச்சி ஏற்படுகிறது.  பள்ளி மாணவனுக்கு கடினமான கணக்கிற்கு விடை காண்பதில் மிக்க மகிழ்ச்சி ஏற்படுகிறது.

மிகப்பெரிய சிந்தனையாளர்களுக்கு அவர்களு டைய கேள்விகளுக்கு விடைகிடைக்கும் போது ஏற்படுகின்ற மகிழ்ச்சி அளப்பரியது.

ஆர்க்கிமிடிஸ் அவர்கள் ஒருநாள் தண்ணீர் தொட்டியில் குளிக்க இறங்கினார். அப்போது தண்ணீர் தொட்டியில் நிரம்பி இருந்த தண்ணீர் வெளியேறியதை கண்டார்.  உடனே ‘யுரேகா’ (Eureka) என்று கூவிக்கொண்டு உடை அணியாமலேயே அரண்மனையை நோக்கி ஒடுகிறார். ஏன்?

மன்னர் அவரிடம் தன்னுடைய  கிரீடத்தின் கொள்ளளவைக் கூற முடியுமா என்று கேட்டிருந்தார்.  தான் தண்ணீர் தொட்டியில் இறங்கியதால் வெளியேறிய தண்ணீர் தன் உடலின் அளவிற்கு சமம் என்று அறிந்து கிரீடத்தின் கொள்ளளவைக் கணக்கிடும் முறையைக் கண்டு விட்டதனால் மகிழ்ச்சியில் உடலில் உடையே இல்லாமல் ஓடினார். ஆகவே அறிவின் இன்பம் புலன்களின் இன்பத்தை விட வலிமையானது.

ஆன்மாவின் மகிழ்ச்சி

பாரத நாட்டின் சிந்தனை அறிவின் மகிழ்வுடன் நின்றுவிடுவதில்லை.  ஆன்மாவின் மகிழ்வே பேரின்பமாகக் கருதப்படுகிறது.  எனவே ஒரு முழுமை பெற்ற மனிதனின் இன்பம் ஆன்ம திருப்தியே ஆகும்.  புலன்களின் உணர்வு வலிமை யானதாக இருந்தாலும் மனம், அறிவு ஆகியவை புலன்களைக் காட்டிலும் வலிமையானது.

ஆனால் அதனினும் வலிமையானது ஆன்மா வாகும். ஆனால் மேற்கத்திய நாடுகளிலும் சரி, கீழை நாடுகளிலும் சரி ஆன்மாவை நாம் தொட்டறிய முடியாது என்பதால் பலரும் ஏற்க மறுக்கின்றனர்.  மனம் மற்றும் அறிவையும் கூட நாம் தொட்டுணர முடியாது தான்.  ஆனால் நாம் அதை மறுப்ப தில்லை.  அது போலவே ஆன்மாவும் உருவம், குணம் அல்லது உலக விஷயங்களின் தொடர்பு இல்லாவிடிலும் அதை நாம் உணர முடியும். ஒருவர் உணவருந்தும் போது அவருடைய புலன்கள் மகிழ்ச்சியடைகின்றன.  அதே சமயம் நம் உணவைப் பசியுடன் இருப்பவருடன் பகிர்ந்து கொள்ளும் போது ஆத்ம திருப்தி ஏற்படுகிறது.  சுயநலச் சிந்தனையிலிருந்து விடுபட்டு உயர்ந்த எண்ணங்களை அடையும் போது ஏற்படும் பேரின்பமே ஆத்ம திருப்தியாகும்.

ஆகவே உடல், மனம், அறிவு, ஆன்மா இந்த நான்கும் ஒருங்கிணைந்தவனே மனிதன்.  இந்த 4 அம்சங்களின் மேம்பாடே மனிதனின் மேம்பாடாகும்.  இதன் மூலமாகவே சமூக நலன் பேண முடியும்.

எழுத்தாளர் – ஹெச்.ராஜா

rajaஎச். ராஜா  2001 தமிழக சட்டமன்ற தேர்தலில் காரைக்குடி சட்டமன்றத் தொகுதியின் மூலமாக தேர்ந்தெடுக்கப்பட்டார். தற்போது பாரதிய ஜனதா கட்சியின் தேசிய செயலாளராக உள்ளார்.