ஸ்ரீ குருஜி பார்வையில் சமுதாய நல்லிணக்கம்

ரமேஷ் பதங்கே


வனவாசி சகோதரர்கள்

சமுதாய நல்லிணக்கம் பற்றி சிந்திக்கும்பொழுது வனவாசி சகோதரர்களையும் பற்றி சிந்திக்க வேண்டும். ஆங்கிலேயர்கள் அவர்களை ‘ஆதிவாசி’ என்று கூறினார்கள். அதாவது வனவாசிகள் ஆதிவாசிகள், மற்ற அனைவரும் வெளியிலிருந்து வந்தவர்கள் என்று பொருள்படுகிறது. ”ஆதிவாசிகள் பாரதத்தின் பழங்குடிமக்கள், ஆரியர்கள் அவர்களின் மீது படையெடுத்து, காட்டுக்குத் துரத்தினார்கள். ஆதிவாசிகள் இயற்கையையும், விலங்குகளையும் வழிபடுபவர்கள். ஹிந்து சமயத்திற்கும் அவர்களுக்கும் எவ்வித தொடர்பும் இல்லை. ஹிந்து சமுதாய கட்டமைப்பில் அவர்களுக்கென்று இடமில்லை. நான்கு வர்ணங்களில் அவர்கள் இடம்பெறவில்லை” போன்ற கருத்துக்களை ஆங்கிலேய ஆட்சியாளர்களின் ஆதரவுடன் மிஷனரிகள் பரப்பி குழப்பம் ஏற்படுத்தினார்கள்.

ஆதிவாசி என்னும் சொல்லை உபயோகிப்பது அதனால் ஏற்படும் குழப்பத்தால் வரக்கூடிய ஆபத்துகளை ஸ்ரீ குருஜி அறிந்திருந்தார். மலைகளில், குகைகளில் வசிக்கும் இந்த சகோதரர்களை அவர் அந்நியர்களாக எண்ணவில்லை. அவர்களை ‘வனவாசி’ என்று குறிப்பிட்டார். நகரத்தில் வசிப்பவர்கள் நகரவாசி, கிராமத்தில் வசிப்பவர்கள் கிராமவாசி. அதுபோன்று வனத்தில் வசிப்பவர்களுக்கு வனவாசி என்று பெயர் கொடுத்தார் ஸ்ரீ குருஜி. நகரவாசி, கிராமவாசி, வனவாசி, நாம் அனைவரும் பாரதவாசிகளே. பாரதமாதாவின் நற்புத்திரர்கள். ஒரே மாபெரும் சமுதாயத்தின் அங்கம். ஒரே தேசத்தின் அங்கம் என்பது ஸ்ரீ குருஜியின் கருத்து.

வனத்தில் வசிக்கும் நமது சகோதரர்களுடன் நமக்கு நல்லிணக்கம் ஏற்படவேண்டும். அதற்கு நாம் என்ன செய்யவேண்டும் என்று விவரிக்கையில் ஸ்ரீ குருஜி, “புறக்கணிக்கப்பட்ட இந்த சகோதர்களிடையே சென்று அவர்களது வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவதற்காக முழுசக்தியுடன் பாடுபட வேண்டும். அவர்களுக்கு வாழ்க்கைக்கு தேவையான அடிப்படை வசதிகள் கிடைக்கும்படி திட்டமிட வேண்டும். இந்த சிந்தனைகளை செயல்படுத்துவதன் பொருட்டு, கல்விக்கூடம், மாணவர் விடுதி பயிற்சி மையங்கள் ஆகியவற்றை திறக்கவேண்டும். ஹிந்து சமுதாயத்தில் மற்றவர்களுக்கும் அவர்களுக்கும் நல்லிணக்கம் ஏற்படுவதன் பொருட்டு உயர்ந்தவன் தாழ்ந்தவன் என்னும் எண்ணங்களை விட்டொழித்து, சமத்துவ எண்ணத்துடன் மனப்பூர்வமாக அவர்களுடன் பழகிவரவேண்டும். (ஸ்ரீ குருஜி சிந்தனைக் களஞ்சியம், தொகுதி-11.)

வனவாசிகளின் வாழ்க்கை முறையை ஸ்ரீ குருஜி நன்கு அறிந்திருந்தார். ஓரிடத்தில் நிலையாக இல்லாமல் நாடோடிகளாகத் திரியும் அவர்களது இயல்பை நன்கு அறிந்திருந்தார். நிலையான வசிப்பிடம் இருந்தால்தான் கல்வி, பண்புப்பதிவு ஆகியவை கைகூடும். ‘மக்கள் ஓரிடத்தில் நிலையாக வாழ்வதற்கு தூண்ட மனிதாபிமானத்துடன் முயன்றால்தான் முடியும். வனங்களில் வசிக்கும் இந்த சகோதரர்களை சந்தித்தபின் அவர்கள் பல நல்ல குணங்கள் நிரம்பப் பெற்றவர்கள் என்பதை அறிய முடிகிறது. துணிவு, அறிவுகூர்மை, உழைப்பு, நேர்மை, மனப்பூர்வமான பரிவு, கலாச்சார ஆன்மிக தகுதி. சிறந்த படைவீரர்களை வனவாசி சமூகம் தந்திருந்தது.”- இது ஸ்ரீ குருஜி கூறும் விஷயம். வனவாசிகள் வசிக்குமிடத்தில், அந்நிய நாட்டு மத போதகர்கள் செயல்பட்டுக் கொண்டிருக்கின்றனர். அவர்களது செயல்பாடுகளினால் தேச ஒற்றுமைக்கு பேராபத்து என்பதை அவர் அறிவார். ஆயினும், விமர்சனம் செய்வதை அவர் விரும்பவில்லை. ”அந்நிய நாட்டு மதத்தை பிரசாரம் செய்பவர்களின் செயல்முறையை நாம் நன்கு கவனிக்கவேண்டும். அவர்களின் செயல்பாடுகளில் எத்தகைய தீவிர ஈடுபாடும், முயற்சியும் காணப்படுகிறது. அவர்கள் எவ்வளவு பெரிய துயரங்களையும் புன்முறுவலுடன் ஏற்றுக்கொள்கின்றனர். தொலைதூர நாடுகளிலிருந்து வந்து வனங்களுக்கு சென்று, அங்கு வசிக்கும் மக்களின் மத்தியில் சிறு குடிலில் வசிப்பதென்பது, சந்தேகத்திற்கிடமின்றி பாராட்டத்தக்கதும், பின்பற்றக் கூடியதுமாகும். அவர்கள் வனவாசி மக்களுடன் பழகி அவர்களது மொழியையும் கற்று, அவர்களது பழக்கவழக்கங்களுடன் இரண்டறக் கலந்து விடுகின்றனர். அவர்களின் பழகுமுறை மென்மையானது; மிகவும் அன்புடன் பழகுகிறார்கள். நாம் இந்த மிஷனரிகளிடமிருந்து சிறிதேனும் தெரிந்து கொள்ள இயலாதா? (ஸ்ரீ குருஜி சிந்தனை களஞ்சியம், தொகுதி-11)

ஹிந்து சமுதாயம் பல நூற்றாண்டுகள் வரை வனவாசிகளை கவனிக்காமல் விட்டுவிட்டதால் எண்ணாததால், அவர்கள் மற்ற ஹிந்துக்களிடமிருந்து விலகி நிற்கின்றனர். அன்பும், தொடர்பும் இல்லாது போய்விட்டது. அவர்களுக்கு கல்வி மறுக்கப்பட்டது. அவர்களுக்கு உகந்த தொழில்நுட்ப கல்வி மற்றும் பயிற்சிகள் அளிக்கப்படாததால், அவர்களது உற்பத்தித்திறன் குறைந்து, அவர்கள் ஏழைகளாகி விட்டனர்.

சமயஞானம் அவர்களை சென்றடையாததால், மூடநம்பிக்கைகள் தொடர்பான செயல்களில் சிக்கியிருக்கிறார்கள். இவை அனைத்தையும் ஸ்ரீ குருஜி நினைவுபடுத்துகிறார். எத்தனை இடர்கள் வந்தாலும், துயரங்கள் வந்தாலும், அனைத்தையும் கடந்து, நாம் வனவாசிகளின் வசிப்பிடத்திற்கு சென்று பணிபுரிய வேண்டும். மற்ற ஹிந்துக்கள் அவர்களிடையே சென்று, அவர்களுக்கு கல்வி புகட்டி, கலாசாரத் தரத்தையும் அவர்களின் வாழ்க்கை நிலையையும் உயர்த்தி இதுவரை அவர்களை மறந்திருந்ததற்கு பிராயச்சித்தம் செய்தல் வேண்டும் என்பதையும் நினைவுபடுத்துகிறார். (ஸ்ரீ குருஜி சிந்தனைக் களஞ்சியம்: தொகுதி-11,)

சுருங்கக்கூறின், நமது வனவாசி சகோதரர்கள் நம்மவர்கள் என்பது ஸ்ரீ குருஜியின் கண்ணோட்டம். ஹிந்து சமுதாயத்தைச் சேர்ந்த மற்றவர்கள் அவர்களை உதாசீனப்படுத்தியதே, அவர்களின் இன்றைய மோசமான நிலைக்கு காரணம் என்று அவர் கூறுகிறார். இதற்கு பிராயச்சித்தமாக, அவர்களுக்கு கருணை காட்டுவதாக இல்லாமல், நமது கடமை என்றெண்ணி அவர்களுக்கு தொண்டு புரியும்படி இதயத்தின் அடியாழத்திலிருந்து அவர் அறைகூவல் விடுத்தார். ஸ்ரீ குருஜியின் இந்த கண்ணோட்டத்தினால் தான் வனவாசி கல்யாண் ஆசிரமம் ஆரம்பிக்கப்பட்டு, வனவாசி சகோதரர்களுக்கு தொண்டு செய்யும் அமைப்பாக விளங்குகிறது. இன்று இந்த அமைப்பின் மூலம் இந்த உயர்ந்த பணி, நாடு முழுவதும் சிறந்த முறையில் நடைபெற்றுவருகிறது.

சேவை

சமுதாய நல்லிணக்கம் ஏற்படுவதில் தொண்டுப் பணியின் பங்களிப்பு ஈடு இணையற்றது. சமுதாயத்தில் பலவகைகளில் சேவை நடந்துகொண்டுதான் இருக்கிறது. அதற்கான தூண்டுதலும் வெவ்வேறு விதமாக உள்ளது. பல தொண்டுகள் புண்ணியம் சேர்ப்பதற்காக நடக்கின்றன. சில தொண்டுகளுக்கு கருணை தூண்டுதலாக அமைகிறது. சிலர் புகழ் பெறுவதற்காக சேவை செய்கிறார்கள். சிலர் பண்பாளர்களாவதற்கு தொண்டு புரிகிறார்கள். சிலர் சேவாகாரியங்களை, அரசியலில் நுழைவதற்கு வாயிலாக கருதுகிறார்கள். ஸ்ரீ குருஜி சேவாகார்யங்கள் பற்றி பரந்த மிக விரிவான கண்ணோட்டத்தை முன்வைத்தார்:

ஸ்ரீ குருஜியின் ஆளுமையிலும் சிந்தனைகளும் சுவாமி விவேகானந்தரின் கருத்துக்களின் ஆழ்ந்த தாக்கம் இருந்தது. சுவாமி விவேகானந்தர் தரித்திர நாராயணன்’ என்னும் சொற்றொடர் பயன்படுத்தினார். ஏழையிடம் இறைவன் வசிக்கிறான் என்று எண்ண வேண்டும்; ‘ஜீவனுக்கு சேவை சிவனுக்கு பூஜை’ என்ற உணர்வுடன் சேவை செய்ய வேண்டும். ஸ்ரீ குருஜி இந்த பாதையில் செல்லும் சாதகர். ‘ஏழ்மையில் வாடுபவர்களையும், துன்புறுபவர்களையும் காணும்போது, அவர்கள் அனைவரையும் இறைவனின் வடிவம், இறைவனே தனக்கு சேவை செய்யும் வாய்ப்பை அளித்திருக்கிறான் என்று எண்ணி, அந்த எண்ணத்துடன் அவர்களுக்கு சேவைபுரிய முனையுங்கள் ” என்று அவர் கூறுகிறார். (ஸ்ரீ குருஜி சிந்தனைக் களஞ்சியம், தொகுதி-5,)

இன்று சமுதாயத்தில் இன்னல்களும், ஏழ்மையும் கடுமையாக உள்ளன. சமுதாயத்தின் ஓரிடத்தில் சிலர் அனைத்து செல்வங்களும் நிரம்பப் பெற்றிருக்கின்றனர். மற்றோரிடத்தில் மக்கள் முற்றிலும் நலிந்து கிடக்கிறார்கள். அவர்கள் ஒருவேளை கூட வயிறார உண்ண முடியாமல் இருக்கிறார்கள். இத்தகையவர்கள் பற்றியே ஸ்ரீ குருஜி இரவும் பகலும் எண்ணிக் கொண்டிருந்தார். ஸ்ரீ குருஜியிடம் மிகவும் பிரியமுள்ள ஒரு கார்யகர்த்தா, உடல் நலத்தின் பொருட்டு தினமும் உணவில் சுத்த நெய் சேர்க்கவேண்டும் என்று எழுதி, நெய் அனுப்பியிருந்தார். அவருக்கு எழுதிய கடிதத்தில் ஸ்ரீ குருஜி, ”நமது நாட்டில் கோடிக்கணக்கான மக்கள் ஒரு வேளை உண்ண உணவு கிடைக்காமல் உள்ளனர். அப்படி இருக்கும்போது, நெய் சேர்ப்பது என்பது என்னால் இயலாது” என்று குறிப்பிட்டிருந்தார். இதே காரணத்தினால், ஸ்ரீ குருஜி ஒரு வேளை மட்டுமே உணவருந்தினார். நல்லிணக்கம் காண இதை விட சிறந்த வழிமுறை வேறென்ன இருக்க முடியும்?

பசியுடன் உடுக்க உடையின்றி தாகத்தால் வாடி, பிணியால் நொந்தவர்கள் எல்லா வீதிகளிலும் தென்படுகிறார்கள். இதை நினைவில் கொண்டு, “எவரும் பசியால் வாடும்படி விடமாட்டோம் என்று உறுதியுடன் நாம் அனைவரும் செய்லபட வேண்டும். ‘பீடிக்கப்பட்ட ஒருவர் நம் பொறுப்பில் உள்ளார்’ என்று எண்ண வேண்டும் என்றார். நமது உண்மையான சமயம் என்ன என்பதை அவ்வப்போது நினைவுபடுத்தினார். “சமுதாயத்தைப் புறக்கணிப்பது நமது சமயமல்ல. சில நேரங்களில் மனிதர்கள், ஆன்மீகவாதி என்பதன் பொருளை விந்தையாக எடுத்துக் கொள்கிறார்கள். அவர்கள் விபூதி பூசிக்கொள்கிறார்கள், சந்தனம் பூசிக்கொள்கிறார்கள், மணி அடித்து விளக்கமாக பூஜை செய்கிறார்கள். ஆனால், சமுதாயத்தைப் பற்றி எண்ணுவதில்லை. இது ஆன்மீகம் அல்ல; சமயவாதி என்ற தோற்றத்தை உருவாக்கும் வேலை இது. இந்த சமுதாயம் நம்முடையது. எனவே, சமுதாயத்தைப் பற்றி சிந்தனை செய்வதும், தன்னைத்தானே காத்துக்கொள்ள முடியும் என்ற தன்னம்பிக்கையை ஒவ்வொரு மனிதனிடமும் ஏற்படுத்துவதும் நமது சமயம்”. (ஸ்ரீ குருஜி சிந்தனைக் களஞ்சியம், தொகுதி-5,)

மனிதனை இறைவனின் வடிவமாக எண்ணி, அவனுக்கு தொண்டு புரிய வேண்டும் என்பதே ஸ்ரீ குருஜியின் வாக்கு. சேவையின் மூலம் என்ன ஏற்பட வேண்டும் என்று தெளிவாக்குகிறார். “சமுதாயத்தை தன்னம்பிக்கை உடையதாகவும், முன்னேற்றம் அடைந்ததாகவும், சுயமரியாதை உடையதாகவும் உருவாக்குதல் வேண்டும். சமுதாயத்தின் பாதுகாப்புக்காக முயற்சிக்க வேண்டும். எனவே, நமது மக்களிடையே நிலவும் வேறுபாடுகளை அகற்றி, நாம் உண்மையான, மனப்பூர்வமான, பரிவு நிறைந்த ஒருமையை ஏற்படுத்த வேண்டும். அவர்கள் நமக்கு நெருங்கியவர்கள் என்ற எண்ணம் பேச்சளவோடு – இல்லாமல் உளப்பூர்வமாக உண்மையானதாக இருக்க வேண்டும். சொல்லில் ஒன்று, மனதில் ஒன்று போன்ற வெளிவேட அனுதாபம் தேவையில்லை. சமுதாயத்திலுள்ள ஒவ்வொரு சோதரரும் நம்மைச் சேர்ந்தவர் என்ற தூய பரிவு என்ற அவசியம்” (ஸ்ரீ குருஜி சிந்தனைக் களஞ்சியம், தொகுதி-3, பக்கம்-)

சமுதாயத்தில் நல்லிணக்கம் ஏற்படுத்துவதற்கு நமது மனநிலை எவ்வாறு இருத்தல் வேண்டும் என்பதை ஸ்ரீ குருஜி வரையறுத்திருக்கிறார். சமுதாய நல்லிணக்கம் என்பது மனதின் தன்மை. பரிவு இல்லாமல் நல்லிணக்கம் ஏற்படாது. எனவே தான், ஸ்ரீகுருஜி ‘நம்மவர் என்ற பரிவு’ என்னும் உணர்வை அடிக்கடி நினைவூட்டுகிறார்.

ஹிந்து சமுதாயத்தின் அனைத்து மக்களிடையேயும், எவ்வாறு நல்லிணக்க நாட்டத்தை ஏற்படுத்த வேண்டும் என்று கூறுகிறாரோ அவ்வாறே, ‘மதசிறுபான்மையோர்’ எனப்படும் கிறிஸ்தவர்கள், முஸ்லீம்கள் ஆகியோர் சமுதாயத்துடன் எவ்வாறு இணக்கமாகிட வேண்டும் என்பதையும் ஸ்ரீ குருஜி குறிப்பிட்டுள்ளார். “பாரதத்தில் சிறுபான்மையினர் தாங்கள் தனிப்பட்டவர்கள் என்று கூறாமல், தேசிய வாழ்வுடன் ஒன்றிப்போக வேண்டும். அவர்கள் தாங்கள் தனிப்பட்டவர்கள் என்று நினைப்பார்களேயானால் பிரிவினை எண்ணம் வளரும். அவர்கள் தனிமைப்படுத்தப்பட்டதின் தூண்டுதலால் அது வளர்ந்து ஒவ்வொரு பிரதேசத்திலும் ”குட்டி பாகிஸ்தான் கோரிக்கை வலுவாகி வருகிறது. அரசியல் ஆதாயத்திற்காக ஆளும் கட்சியினரும், மற்ற அரசியல் தலைவர்களும் சிறுபான்மையினருக்கு அதிக முக்கியத்துவம் தருகின்றனர். இதனால் தனிப்படுதல் ஊக்குவிக்கப்படுகிறது. இது மிகவும் ஆபத்தானது. தேசிய வாழ்வுடன் ஒன்றிணைந்து தாங்கள் தனிப்பட்டவர்கள் என்ற பேச்சைக் கைவிட்டு, சிறுபான்மையினர் முழுமையாக தேசிய வாழ்வுடன் ஒன்றிப்போவதே இந்த பிரச்சனைக்கு தீர்வாகும். இந்த காரணத்தினால் தான் நான், ஹிந்து மதத்திற்கே மீண்டும் வந்துவிடுங்கள் என்று அறைகூவல் விடுக்கிறேன். அவர்களது முன்னோர்கள் ஹிந்துக்களே. எனவே, அவர்கள் தங்களது வேரான ஹிந்து தர்மத்திற்கு மீண்டும் வருவதன் மூலம் தேசிய வாழ்வுடன் எளிதில் இணக்கம் கொள்ளமுடியும். இன்று சுத்தி செய்வதன் மூலம் ஹிந்து தர்மத்தை ஏற்றுக்கொள்கின்றனர். ஆயினும், பாரதத்தில் ஹிந்து அல்லாதவர்களில் பெரும்பாலானவர்களின் முன்னோர்கள் ஹிந்துக்களாக இருப்பதால், ‘சுத்திகரணம்’ என்று கூறாமல், ‘சொந்த வீட்டிற்கு திரும்புதல்’ என்றே கூறுகிறேன்.

கேள்வி: அவர்கள் ஹிந்து தர்மத்தை ஏற்றுக்கொள்ளும் போது, சுத்தி சடங்கு அவசியமில்லை என்று தாங்கள் கருதுகிறீர்களா?

ஸ்ரீ குருஜி: சுத்திசடங்கு இருக்கட்டும். ஆனால், அது நாம் ஹிந்து தர்மத்திற்கு திரும்பி விட்டோம் என்ற எண்ணத்தை தோற்றுவிப்பதற்கு மட்டுமே. கடவுளை அவரவர்களின் பரம்பரையில் வந்துள்ள விதிமுறைப்படி வழிபடட்டும். இதற்கு எவ்வித ஆட்சேபணையும் இருக்கக் கூடாது. கடவுளை உண்டு என்று ஏற்றுக்கொண்டபின், கடவுளை பலவிதங்களில் வழிபடலாம் என ஹிந்து தர்மம் ஏற்கிறது. எனவே, மீண்டும் ஹிந்து தர்மத்திற்கு வருகின்றவர்களின் வழிபாட்டுமுறை முன்பு பழகிய விதமாகவே இருக்கலாம். இதற்கு எவ்வித ஆட்சேபணையும் இருக்கக்கூடாது.

ஆயினும், தேசிய வாழ்வில் நல்லிணக்கத்தையும், ஒருமைப்பாட்டையும் கொண்டுவருவதற்கு பதிலாக, பிரிவினையும் மற்றும் ஒற்றுமையின்மையும் ஊக்குவிக்கப்படுகிறது. இதற்கு காரணமாக இருப்பவர்கள் தங்களை பொறுப்புள்ளவர்கள் என்று சொல்லிக் கொள்கிறார்கள். உதாரணமாக, உருது மொழியை எடுத்துக்கொள்வோம். பாரதத்தின் தேசிய மொழியை ஏற்றுக்கொள்வதற்கு பதிலாக உருதுமொழிக்கு அங்கீகாரம் கோருகிறார்கள். இதற்கு அங்கீகாரம் அளிப்பவர்கள் அரசியல் தலைவர்களே. துருக்கி நாட்டில் துருக்கி, பாரசீகத்தில் பார்சி, அரேபியாவில் அரபுமொழி ஆகியவையே உள்ளன. சுருங்கக்கூறினால், எந்த விதத்திலும் தாங்கள் வேறுபட்டவர்கள் என்ற எண்ணம் வரக்கூடாது. பிரிவினையை வளர்ப்பது உகந்ததல்ல. உருதுமொழிக்கு அரசு அங்கீகாரம் அளிப்பது குறித்த கேள்வியும் எழாது. சிறுபான்மையினர்கள் ருஸ்தம் என்றழைக்கப்பட்ட வீரனை முன்மாதிரியாக வைத்துக்கொள்வதும் பிரிவினைதான். ருஸ்தம் நம் தேசத்தவனே அல்ல. அவன் முஸ்லீமூம் அல்ல. அவன் நமது தேசத்தின் மாமனிதனுமல்ல. எனவே தேசிய புருஷன் என்ற இடத்தை அவனுக்கு அளிக்கக்கூடாது. ருஸ்தம் என்பவனின் இடத்தில் ராமபிரானை முன்மாதிரியாக வைப்போம். எவர் நமது தேசத்திற்கான உதாரண புருஷரோ அவரையே முன்மாதிரியாக வைத்துக்கொள்ள வேண்டும். இங்கிருந்து ஆரம்பித்து தேசத்தின் ஒவ்வொரு இடத்திலும் முழுமையான சமத்துவம் எவ்வாறு உருவாகும் என்பதை உணர்த்துவதற்கு வேண்டுமென்றே இந்த உதாரணம் கூறினேன். இதிலிருந்து முழுமையான நல்லிணக்கம் என்பதன் பொருள் நன்கு விளங்கும் (ஸ்ரீ குருஜி சிந்தனைக் களஞ்சியம், தொகுதி-7,)

உலகளாவிய நெறிமுறை

சகோதரத்துவம் என்பது குறித்து எங்கும் பேசுகின்றனர். ஆனால், பரந்த மனிதர்களிடையே சகோதரத்துவத்தின் விழிப்புணர்ச்சி எவ்வாறு தோன்றும், அதற்கு அடிப்படை என்ன என்பது பற்றி ஒருமித்த கருத்து இல்லை. அனைவரும் கிறித்தவர்களானாலோ, அல்லது அனைவரும் முஸ்லிம்களானாலோ அல்லது உலகத்தில் அனைத்திடங்களிலும் புரட்சி ஏற்பட்டு பாட்டாளிகளின் ஆதிக்கம் ஏற்பட்டாலோ சகோதரத்துவம் ஏற்படும் என்று வெவ்வேறு கருத்துக்கள் நிலவுகின்றன. உலகம் முழுதும் ஹிந்துக்களாக வேண்டும் என்று ஸ்ரீ குருஜி ஒருபோதும் கூறியதில்லை . முதலில் நாம் முழுமையான மனிதனாக விளங்குவதற்கு முயலுவோம் என்று அவர் கூறினார். அறம், பொருள், இன்பம், வீடு ஆகிய நான்கு புருஷார்த்தங்கள் நம் வாழ்க்கையில் காணப்படுவதே முழுமையான மனிதனாவதற்கு ஒப்பாகும். உலகத்திற்கு இந்த நான்கு புருஷார்த்தங்களின் பழமையான உண்மையை கற்றுக்கொடுப்பதற்கு நாம் தகுதியுடையவர்களாக வேண்டும். உலக மக்களுக்கு நம் முன்னுதாரணம் மற்றும் லட்சியதால் இந்த உண்மையை அறியச் செய்ய வேண்டும். இது உலகிற்கு நன்மை பயக்கக்கூடியதுமாகும். (ஸ்ரீ குருஜி சிந்தனைக் களஞ்சியம், தொகுதி-5, பக்கம்-)

இந்த தகுதி ஜாதிகளின் பெயரால் பிளவுபட்டிருந்தால் வராது, தீண்டாமையைக் கடைப்பிடிப்பதால் வராது, உயர்ந்தவன் தாழ்ந்தவன் என்ற எண்ணத்தினால் வராது. நல்லிணக்கம் வாய்ந்த சமுதாய வாழ்வினால் மட்டுமே நமக்குள் இத்தகைய தகுதி உருவாகும். சகோதரத்துவத்தை எவ்வாறு ஏற்படுத்துவது என்பதை நாமே உலகத்தின் முன் வாழ்ந்து காட்டவேண்டும். ஸ்ரீ குருஜியின் சிந்தனை இவ்வாறாக இருந்தது. ஹிந்து சமுதாயத்தை ஒருங்கிணைப்பதே ஸ்ரீ குருஜியின் வாழ்க்கை குறிக்கோளாக இருந்தது. அனைத்து ஹிந்துக்களிடையேயும், சமத்துவம், சகோதரத்துவம், ஒருமைப்பாடு ஆகியவற்றை ஏற்படுத்துவதே ஹிந்துக்களின் ஒருங்கிணைப்பாகும். ஒருவருக்கு மற்றொருவரிடத்தில் மனப்பூர்வமான சமத்துவம் தோன்றாவிடில், சகோதரத்துவமும், ஒருமைப்பாடும் தோன்றாது. நான் அல்ல, நீயே தான்’ என்பதே அவரது வாழ்க்கையின் தாரக மந்திரமாக இருந்தது. நானும் நீயும் வேறல்ல, ஒரே பரம்பொருளின் வெவ்வேறு வடிவம். உன்னிடத்தில் நானும், என்னிடத்தில் நீயுமாக இருக்கிறோம் என்பதே அவரது உள்ளுணர்வாக இருந்தது. இதனால் அவரிடத்தில் உயர்ந்தவன் தாழ்ந்தவன், பெரியவன்-சிறியவன், மேல்ஜாதி – கீழ் ஜாதி, தீண்டத்தக்கவன்- தீண்டத்தகாதவன் போன்ற வேறுபாடுகள் இல்லை. அனைவரும் மானிடர்களே என்ற எண்ணத்தினால் அவரது உள்ளத்தில், அன்பு வெள்ளம் எப்பொழுதும் பிரவாகமெடுத்தது. அவரது தனிமனித வாழ்வில், அவர் நல்லிணக்க நாயகராகத் திகழ்ந்தார். நல்லிணக்கத்தின் உயிருள்ள, நடமாடும் முன்னோடியாக அவர் தனது வாழ்க்கையில் திகழ்ந்தார். இதுவே அவரது சிறப்பு.

பிற்சேர்க்கை

விஸ்வ ஹிந்து பரிஷத்தின் மூலம் ஏற்பாடு செய்யப்பட்ட கர்நாடக மாநில மாநாடு வெற்றிகரமாக முடிந்தபிறகு கர்நாடக கார்யகர்த்தாக்களுக்கு ஸ்ரீ குருஜி எழுதிய கடிதம்:

“விஸ்வ ஹிந்து பரிஷத்தின் கர்நாடக மாநில மாநாடு நிறைவடைந்தது. ஏற்பாடு செய்தவர்கள், கார்யகர்த்தாக்கள் எதிர்பார்த்ததை விட பலமடங்கு மிகுந்த பயனளிக்கக் கூடிய சூழ்நிலையோடு நிறைவடைந்தது. இதனால் இயல்பாகவே நமது எதிர்பார்ப்புகளும் பெருகும். அதிசயத்தக்க நிகழ்ச்சி ஏற்படும், நிலைமை மாறிவிடும் என்பது இதன் பொருளல்ல. தொடர் பணிகள் அதிகரிக்க வேண்டியது மிகவும் அவசியம். ஹிந்து சமுதாயத்தின் ஒருமைக்கும் மாற்றத்திற்கு சங்க நாதம் மாநாட்டில் முழங்கப்பட்டது ஆயினும், இந்த வெற்றியால் நாம் திருப்தி அடைந்துவிடக் கூடாது.

“ஒரு எடுத்துக்காட்டை இங்கு குறிப்பிடுகிறேன். தீண்டாமை என்னும் சாபக்கேட்டை ஒழிப்பதற்தான தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. நமது அனைத்து சம்பிரதாயங்களையும் சேர்ந்த அனைத்து ஆசார்யர்களும், சமய சான்றோர்களும், மடாதிபதிகளும் இதற்கு ஒப்புதல் அளித்து, ஆசிகளையும் தந்தனர். ஆயினும், இந்த தீர்மானத்தை நடைமுறைபடுத்த புனிதமான வார்த்தைகள் மட்டும் போதுமானதல்ல. பல நூற்றாண்டுகளாக நிலவிவரும் இந்த தீய வழக்கத்தை வார்த்தைகளினால் அல்லது நல்ல எண்ணங்களினால் மட்டுமே ஒழிக்க இயலாது. அயராத உழைப்பும், தகுந்த பிரசாரமும் செய்தல் வேண்டும். ஒவ்வொரு நகரத்திற்கும், கிராமத்திற்கும், வீட்டிற்கும் சென்று, தீண்டாமையை ஒழிக்கும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டாயிற்று என்று மக்களுக்கு எடுத்துச் சொல்லவேண்டும். இது இன்றைய நவீன காலத்தின் கட்டாயத்தினால் அல்லாமல் கடந்த காலத்தில் இழைக்கப்பட்ட தவறுகளை திருத்திக்கொள்ளவதன் பொருட்டு, ஏற்பட்ட மனப்பூர்வமான மாற்றம். இந்த மாற்றத்தை ஏற்போம். உளப்பூர்வமாகவும், தார்மிக ரீதியகாவும் நாம் நடந்து கொள்ளும் விதத்திலும் மாற்றத்தை ஏற்படுத்துவது மிகவும் அவசியம். பின்தங்கிய சமூகத்தாரின் பொருளாதார அரசியல் நிலையை சீர்படுத்தி சமுதாயத்தில் மற்றவர்களுக்கு இணையாக கொண்டுவர முயற்சிப்பது கடினமான வேலை. ஆனால், இது மட்டும் போதுமானதல்ல. ஏனெனில், இவ்வகையான ‘சமத்துவத்தில்’ தனிப்பட்டவர்கள் என்ற எண்ணம் இருக்கும். எனவே, பொருளாதார, அரசியல் சமத்துவத்தால் காரியம் கைகூடாது. உண்மையான மாறுதலையும், முழுமையான ஒருங்கிணைப்பையும் ஏற்படுத்த வேண்டும். இந்த மாறுதல் அரசாங்கம், அரசியல் கட்சிகள் ஆகியவற்றால் முடியாதது. ஒருமைப்பாடு – என்ற பெயரில் ஒட்டுப்போடும் சித்துவேலை காட்டுகின்ற அரசியல்கட்சிகளினால் செய்ய இயலாது. மனப்பூர்வமாக வேலை செய்வதும், தார்மீக ஆன்மீக நிலையிலும் இச்செயலை விரிவுபடுத்தி வருவது இன்றியமையாதது. மாநாட்டிற்கு வருகைதந்தவர்கள், ஆதரவு கொடுத்தவர்கள், உதவிசெய்தவர்கள் அனைவரும் ஒன்றிணைந்து தோளோடு தோள்கொடுத்து, இந்த பழமையான தீய வழக்கத்தை வலிமையான ஒரே அடியால் ஒழித்துக் கட்டுங்கள்”,

“இன்னொரு முக்கிய வேலை நமது சமுதாயத்திற்கு சமயத்தின் தத்துவங்களை போதிப்பது. இதில் பொதுவான சமயங்களின் தத்துவம், எல்லாவற்றையும் உள்ளடக்கிய சமய தத்துவம், அவர்கள் பிறந்த சம்பிரதாயத்தின் தத்துவம் ஆகியவையெல்லாம் அடங்கும். இந்த கல்வியை நாமே தொடங்குவது அவசியமாகும். ஏனெனில், தானும் கற்று, கற்றதை வாழ்க்கையில் கடைபிடிக்கிறவன் கூறுவதை மக்கள் ஏற்றுக்கொள்கிறார்கள். பரிபூரண பக்தி, தூய நடத்தை, தூய பேச்சு, தூய எண்ணம் மற்றும் வேலை ஆகியவைகளே ஒருவனுக்கு, மற்றொருவனுக்கு போதிக்கும் அதிகாரத்தை அளிக்கிறது. எனவே, நம்மிடத்தில் மேற்கூறிய பண்புகள் அனைத்தும் ஏற்படுத்திக் கொள்வோம்.”

“நாம் இதை போதிப்பதற்கு நாட்டின் ஒவ்வொரு மூலைக்கும் செல்லவேண்டும். வெகு தொலைவிலுள்ள கிராமங்களுக்கும், மலைகளுக்கும், அடர்ந்த காடுகளுக்கும், எங்கு மக்கள் மூடநம்பிக்கை ஒன்றையே சமயமாக நினைக்கின்றார்களோ அங்கும், எங்கு சமயத்தை கற்று அதன்வழி நடக்க வாய்ப்பில்லையோ அங்கெல்லாம் செல்வோம். நாம் இப்பணி புரிகையில், அளவில்லாத இன்னல்களையும், நெருக்கடிகளையும் பொறுத்துக் கொள்ள வேண்டும். நமக்கு யாரும் நன்றிகூட சொல்ல மாட்டார்கள். ஆயினும், ஆச்சரியகரமான செயல் அல்லது நொடியில் மாற்றம் உண்டாகும் என்று நாம் எதிர்பார்க்கவே கூடாது. இன்னல்களை ஏற்றபடி உயர்ந்த விரதம் பூண்ட ஒரு கர்மயோகியைப் போல் முன்னே செல்வோம்”.

”எல்லா குறைகளுக்கும் பிறரை சுட்டிக் காட்டுவதில் சில கார்யகர்த்தாக்கள் மகிழ்ச்சி அடைகின்றனர். சிலர் அரசியலில் உள்ள விகாரங்களை குற்றம் சொல்கின்றனர். சிலர் கிறிஸ்தவம், இஸ்லாம் அந்நிய ஆதிக்க சம்பிரதாயங்களை குறை கூறுகின்றனர். நமது கார்யகர்த்தாகள் இத்தகைய முன் முடிவு சார்ந்த எண்ணங்களிலிருந்து விடுபட்டு, நமது மக்களுக்காக, நமது மதத்திற்காக நேர்மையான உள்ளத்துடன் செயல்படவேண்டும். உதவி தேவைப்படும் மக்களுக்கு உதவி புரிந்து, அவர்களின் துயரத்தை நீக்கவேண்டும். இத்தகைய தொண்டுகளில் எவரும் பாகுபாடு பார்க்கக்கூடாது. நாம் அனைவருக்கும் தொண்டு செய்வோம், உதவி புரிவோம். அவர்கள் கிறித்தவர்களாகட்டும் முஸ்லீம்களாகட்டும் அல்லது வேறு எந்த சமயத்தை சேர்ந்தவர்களாகட்டும். ஏனெனில், இன்னல்கள் அனைவருக்கும் ஏற்படுகின்றன. துன்புறுபவனுக்கு ஆறுதலளிப்பதற் காகவோ அல்லது அனுதாபத்தின் அடிப்படையிலோ உதவி புரிதல் கூடாது. எங்கும், அனைத்து ஆன்மாக்களிடத்திலும் நீக்கமற நிறைந்த இறைவனுக்கு தொண்டு புரிவதாக எண்ணி உதவிபுரிதல் வேண்டும். அனைத்தையும் அந்த உயர்ந்த தொண்டுக்கு அர்ப்பணித்தல் வேண்டும்; அனைவரும் நமது தாய், தந்தை, உறவினர் நண்பர்கள் எல்லாம். இதுவே நமது சமயத்தின் உண்மையான உணர்வாகும்”

”நமது இத்தகைய சேவை பணிகள், நமது ஸனாதன தர்மத்தின் அனைத்து மகிமைகளையும், பெருமைகளையும் உலகம் முழுதும் பரப்பட்டும்”,

மா. ஸ. கோல்வல்கர்
மகர ஸங்க்ராந்தி, சக 1898
தேதி 14.1.1970


திரு. ரமேஷ் பதங்கே …

மும்பை புறநகர் பகுதியில் தாழ்த்தப்பட்டவர்கள் என்றழைக்கப்படும் ஏழ்மையான குடும்பத்தில் பிறந்தவர். மும்பை பல்கலைகழகத்தில் பொருளாதாரம், அரசியல் துறைகளில் எம்.ஏ பட்டம் பெற்றவர்.

சிறுவயதிலிருந்து அவர் ஆர்.எஸ்.எஸ் ஸ்வயம்சேவகர் ஆர்.எஸ்.எஸ்ஸில் பல்வேறு பொறுப்புகளில் பணியாற்றிய இவர் 1981-1986 வரை மும்பை மாநகரின் இணைச் செயலாளராகவும் இருந்தார். நெருக்கடி நிலையை (எமர்ஜென்சி) எதிர்த்து போராடி சிறை சென்றவர். 1985லிருந்து ஸ்ரீகுருஜியின் கணவான சமூகங்களிடையே ஒற்றுமையை ஏற்படுத்தும் ‘சாமாஜிக் சமரஸதா மஞ்ச்’ன் மகாராஷ்ட்ர மாநிலச் செயலாளராக செயல்படுகிறார்.

“சமரஸதா மஞ்ச் பத்ரிகா’ மற்றும் ‘விவேக்’ மராட்டி வார இதழின் ஆசிரியரான இவர் ‘மனுவாதமும் ஆர்.எஸ்.எஸ்ஸும்’ என்ற நூல் வாயிலாக தமிழ்வாசகர்களுக்கு ஏற்கனவே அறிமுகமானவர்.

ஸ்ரீ குருஜி பார்வையில் சமுதாய நல்லிணக்கம்

ரமேஷ் பதங்கே


தீண்டாமை

ஜாதி அமைப்பின் மிக பயங்கரமான விளைவு தீண்டாமை. ஹிந்து தர்மம் அனைத்து உயிரினங்களிலும் உயிர்ப்புள்ள ஒரே ஆத்ம தத்துவம் உள்ளதைக் காணும்படி கூறுகிறது. அனைத்து மனிதர்களையும் இறைவனின் உறைவிடமாக காணும்படி கூறுகிறது. பகவான் ஸ்ரீ கிருஷ்ணன், கீதையில், “ஸர்வஸ்ய சாஹம் ஹ்ருதி ஸன்னிவிஷ்டோ ” (அனைத்து உயிர்களின் இதயமும் எனது உறைவிடம்) என்று கூறுகிறார். இத்தனை சிறந்த தத்துவம் இருந்த போதிலும் நமது சமுதாயத்தில் கோடிக்கணக்கானவர்களை ‘தீண்டத்தகாதவர்கள்’ என்று சொல்லி அவர்களை கிராமங்களின் வெளியில் வைக்கின்றனர். அவர்களை தொடுவதோ அல்லது அவர்களின் நிழல்படுவதோ கூட புனிதமற்றதாக எண்ணினார். அவர்கள் சமூகமே அடிமைகள் என்ற நிலை தினிக்கப்பட்டது. அவர்கள் என்ன தொழில்புரிய வேண்டும், எத்தகைய உடை அணியவேண்டும், எங்கு வசிக்க வேண்டும், எத்தகைய உணவை உண்ண வேண்டும் ஆகியவை குறித்து கடுமையான விதிமுறைகள் வகுக்கப்பட்டன. அவைகள் ஈவிரக்கமில்லாமலும் செயல்படுத்தப்பட்டன. ‘தீண்டத்தகாத’ சோதரர்களின் நிலை விலங்குகளின் நிலையை காட்டிலும் மோசமானதாக்கப் பட்டது. அனைத்தையும் விட கொடுமையானது, தீண்டாமைதான் நமது மதம் என்று கருதப்பட்டது. தீண்டாமையை பின்பற்றாதவர்கள் மத விரோதிகள் என்ற எண்ணம் மக்களின் மனதிலும் எண்ணத்திலும் ஆழமாக வேரூன்றிவிட்டது.

தீண்டாமை என்னும் மூடப்பழக்கம் குறித்து ஸ்ரீ குருஜிக்கு ஆழ்ந்த வருத்தம் உண்டு. இத்தகைய தீய பழக்கத்தை நமது சமுதாயத்திலிருந்து எவ்வாறு வேருடன் களைவது என்ற சிந்தனை அவரது உள்ளத்தில் எப்பொழுதும் இருந்து வந்தது. தீண்டாமையை அவர் மூன்று விதமாக பிரித்தார். முதலாவது, சிலரை ‘தீண்டத்தகாதவர்கள்’ என்று கூறும் சமுதாயத்தின் ‘மேல் ஜாதி’யினர். இரண்டாவது, சமுதாயத்தில் தீண்டத்தகாதவர்கள் என்று கருதப்படுகிறவர்கள், தாங்களே தங்களை தீண்டத்தகாதவர்கள் என்று நம்புவது, மூன்றாவது, தீண்டைமைக்கு மத அங்கீகாரம் அளிக்கும் மதத்தலைவர்கள் ஸ்ரீ குருஜி மேற்கூறப்பட்ட மூன்று முனைகளிலும் அபாரமான தன் செயல்பாட்டினால் சமுதாயத்தில் நல்லிணக்கத்தை நிலைநாட்ட தீவிர முயற்சி மேற்கொண்டார்.

தீண்டாமை குறித்து ஸ்ரீ குருஜி விளக்கமளிக்கையில், ‘மேல்ஜாதி’யினரின் அற்ப புத்தியே தீண்டாமை” என்று கூறுகிறார். தீண்டாமை என்பது மனதின் விகாரம் என்றும் கூறலாம். மனதை சீர்த்திருத்துவதென்பது, பண்புப் பதிவு மூலமே இயலும். ஒருமைப்பாடு, நல்லிணக்கம், சகோதர உணர்வு, தொண்டு ஆகிய பண்புகள் சதா பதியச் செய்ய வேண்டும். இதில் ஷாகா செயல்முறை மிகச் சிறந்த முறையில வெற்றிபெற்றுள்ளது. வார்தாவில் நடைபெற்ற சங்க முகாமில் பங்கேற்ற அனைவரும் சமமாக மதிக்கப்பட்டனர் என்பதை அங்கு வருகை தந்த காந்தியடிகள் உணர்ந்தார். தீண்டத்தக்கவர், தீண்டத்தகாதவர் போன்ற வேறுபாடுகள் காணப்படவில்லை. புனேயில் நடைபெற்ற சங்க சிக்ஷா வர்கவில் மதிப்பிற்குரிய டாக்டர் அம்பேத்கரும் அவ்வாறே உணர்ந்தார். சங்க ஷாகாவில் பங்கேற்ற ஹிந்து, தன்னை ஹிந்துவாக மட்டுமே உணர்கிறார். அவர் பிறந்த ஜாதியை மறந்து விடுகிறார். சங்கத்திற்கு வராதவர்களுக்கு, சங்கத்திற்கு வெளியே பரந்து கிடக்கும் ஹிந்து சமுதாயத்தை எவ்வாறு தூய்மைப்படுத்துவது என்பது பெரிய பிரச்சினை. ஸ்ரீ குருஜியினது கருத்து இவ்வாறு இருந்தது:

“சராசரி மக்களிடையே தவறான ஒரு நம்பிக்கை நிலவுகிறது. தீண்டாமை என்பது சமயத்தின் ஒரு பகுதி, அதனைக் கைவிடுவது மகாபாவம் என்று அவர்கள் நம்புகிறார்கள். தீண்டாமையின் ஆணிவேராக இருப்பது இந்த நம்பிக்கைதான். சமயத் துறையில் பல மகான்களும் சமய சீர்திருத்தவாதிகளும் பற்பல நூற்றாண்டுகளாக சமர்ப்பண உணர்வுடன் பாடுட்ட போதிலும் இந்த நாசகரமான பழக்கம் சராசரி மக்கள் மனதில் இன்னும் ஒட்டிக்கொண்டிருப்பதற்கு மூல காரணமே இந்த மதரீதியான முரண்பாடுதான்.”

மக்களின் மனதில் குடிகொண்டிருக்கும் இத்தகைய கொடிய பழக்கத்தை நீக்குவது சமயச் சான்றோர் கடமை. விஸ்வ ஹிந்து பரிஷத்தின் வாயிலாக ஸ்ரீ குருஜி தீண்டாமை என்றும் களங்கத்தை அழிப்பதற்கு முயற்சி செய்தார். இது தொடர்பாக பிரயாகை (1966) உடுப்பி (1969) ஆகிய இடங்களில் நடைபெற்ற மாநாடுகள் முக்கியத்துவம் வாய்ந்தவை. பிரயாகையில் நடந்த மாநாட்டில் வேற்று மதங்களுக்குப் போன ஹிந்துக்கள் தாய்மதம் திரும்புவதற்கான வழிமுறை குறித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. ”ஹிந்து வீழ்ச்சியடைவதில்லை” என்று அறிவிக்கப்பட்டது. உடுப்பியில் நடந்தேறிய மாநாடு “தீண்டாமைக்கு சமயத்தில் இடமில்லை; அனைத்து ஹிந்துக்களும் சகோதரர்களே” என்று பிரகடனம் செய்து புகழ்பெற்றது.

வரலாற்றுப் புகழ்வாய்ந்த உடுப்பி மாநாடு குறித்து ஸ்ரீ குருஜி “1969-ம் ஆண்டு உடுப்பியில் நடைபெற்ற விஸ்வ ஹிந்து பரிஷத் மாநாட்டில் மகத்தான தொடக்கம் ஏற்பட்டது. இதில் சைவ, வீரசைவ, மத்வ, வைஷ்ணவ, ஜைன, புத்த ஆகிய அனைத்து ஹிந்து சம்பிரதாயங்களின் பிரதிநிதிகள் பங்கேற்றனர். வணக்கத்திற்குரிய மடாதிபதிகள், தர்மாச்சாரியர்கள் ஆகியோர் வெளியிட்டுள்ள அருளாணைப்படி, ஹிந்துக்கள் சமய, சமுதாய நடைமுறைகள் எல்லாவற்றிலும் தீண்டாமையை அறவே அழித்தொழிக்க வேண்டும் என்ற தீர்மானம் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது’ என்று கூறினார்.

வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த அந்த அருளாணை இதுவே: “பிரிக்கப்படமுடியாத ஒருமைப்பாட்டுணர்வை மையமாகக் கொண்டு ஹிந்து சமுதாயம் ஒருங்கிணைக்கப்பட வேண்டும். ‘தீண்டத்தக்கவன்’, ‘தீண்டத்தகாதவன்’ என்ற உளுத்துபோன உணர்வுகளினால் ஹிந்து சமுதாயம் சிதறிவிடக் கூடாது என்ற உயர்ந்த நோக்கம் நிறைவேற வேண்டுமானால் உலகம் முழுவதிலும் உள்ள ஹிந்துக்கள் தாங்கள் பரஸ்பரம் பழகும்போது ஒருமைப்பாட்டு உணர்வையும் சமத்துவ உணர்வையும் கடைப்பிடித்து வரவேண்டும்’ இந்த தீர்மானத்தின் சிறப்பை எடுத்துக் கூறுகையில் ஸ்ரீ குருஜி, “இந்த தீர்மானம் நிறைவற்றப்பட்டது, ஹிந்து சமுதாய வரலாற்றில் முழுமாற்றத்தை ஏற்படுத்துவதற்கு, புரட்சிகரமான முயற்சி என்று கருதலாம். இது விகாரப்பட்ட மரபை உண்மையான சமய சிந்தனை வெற்றி கொண்ட பொன்னான நேரம்” என்று கூறினார். (ஸ்ரீ குருஜி சிந்தனைக் களஞ்சியம், தொகுதி-11, பக்கம் 454-455)

தீண்டாமையை விரட்டுவதற்கு டாக்டர். அம்பேத்கர் மாபெரும் போராட்டம் நடத்தினார். மஹாட் சத்தியாகிரகம், நாஸிக் காலாராம் ஆலய சத்யாக்கிரகம் இவற்றில், தீண்டாமை சமயத்தில் இடமில்லை என்று கருதினார். இதை ஹிந்து தர்மாசாரியர்களை வெளிப்படையாக கூற வேண்டும் என்று கூறினார். அவ்வாறு நடைபெறவில்லை என்பது சோகம். பாதியில் நின்ற டாக்டர் அம்பேத்கர் பணியை ஸ்ரீ குருஜி உடுப்பியில் நிறைவு செய்தார்.

உடுப்பி மாநாட்டின் ஒரு நிகழ்ச்சி வரலாற்றுச் சிறப்பு வாய்ந்தது. அந்த மாநாட்டிற்கு ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ் அதிகாரியும் கர்நாடக அரசுப் பணித் தேர்வணைய உறுப்பினருமான ஸ்ரீ ஆர். பரணையா வந்திருந்தார். அவர் தீண்டத்தகாதவர் என்று சொல்லப்படும் சமூகத்தை சேர்ந்தவர். அவரது தலைமையில் நடந்த அமர்வில் ”ஹிந்துக்கள் அனைவரும் சகோதரர்கள்” என்ற தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அது குறித்து சொற்பொழிவுகள் நடந்தன. அனைத்து சமய சான்றோர்களும் தங்களது கருத்துகளை வெளிப்படுத்தினர். இறுதியில் மேடையிலிருந்து இறங்கும்பொழுது திரு. பரணையா ஸ்ரீ குருஜியை இறுகத் தழுவிக்கொண்டார். அவரது கண்கள் பனித்தன. தழுதழுத்த குரலில், “தாங்கள் எங்களுக்கு உதவ ஓடோடி வந்துள்ளீர்கள். இத்தகைய உயர்ந்த பணியை தாங்கள் கையிலெடுத்துக்கொண்டது, தாங்கள் எங்களுக்கு உதவ முன்வந்தது – இவை தங்களது உயர்ந்த எண்ணத்தை வெளிப்படுத்துகின்றன’ என்று கூறினார்.

காந்தியடிகள் தீண்டத்தகாதவர்களைக் குறிப்பிட “ஹரிஜன்” என்னும் சொல்லை பயன்படுத்தினர். இதற்கு டாக்டர். அம்பேத்கர் கடும் எதிர்ப்புத் தெரிவித்தார். அலாதியாக ஒரு சொல்லை பயன்படுத்துவதால் பிரிவினை வளரும் மனம் மாறாது என்பது அவரது கருத்து. ஸ்ரீ குருஜியும் ஹரிஜன் என்னும் சொல்லை பயன்படுத்துவதற்கு ஆட்சேபம் தெரிவித்தார். ”ஒருமுறை நான் காந்திஜியை சந்தித்தபொழுது, ‘ஹரிஜன் என்னும் சொல், எவ்வளவு புனிதமானதாக இருந்தாலும் கூட, இந்த புதிய சொல், தனித்தன்மையயை ஏற்படுத்தி சமுதாய ஒருமைப்பாட்டிற்கு தீங்குவிளைவிக்கின்ற அரசியல் சுயநல குழுக்களை தோற்றுவிக்கும்’ என்ற கவலையை தெரிவித்தேன். ஆனால், காந்தியடிகள் அப்படி எதுவும் நடக்காது என்று கருதினார். துரதிருஷ்டவசமாக, ஒழிக்கவேண்டிய பிரிவினை இன்றுவரை, -மேன்மேலும் வளர்ந்துகொண்டே போகிறது. (ஸ்ரீ குருஜி சிந்தனைக் களஞ்சியம், தொகுதி 11, பக்கம் 455-456)

தீண்டாமையை ஒழிப்பதற்கு சில வழிமுறைகள் பற்றி ஸ்ரீ குருஜி கலந்துரையாடல்களில் கருத்து தெரிவித்திருக்கிறார்.

கேள்வி: தீண்டாமை என்னும் பிரச்சினை எவ்வாறு தீர்க்கப்படும்?

ஸ்ரீ குருஜி: தீண்டாமை பிரச்சனை என்பது மிகவும் சிக்கலாகி விட்டது. ஆயினும் அது தானாகவே அழியும் நிலையில் உள்ளது. எவ்வளவு விரைவில் அழிகிறதோ அந்த அளவிற்கு நல்லது. ஆயினும், “தீண்டாமை ஒழிப்பு இயக்கம்’ என்று தீண்டாமையை ஒழிப்பதாக தம்பட்டமடித்து முயற்சி தொடங்கினால் ‘தீர்வு’க்கு பதில் ‘மோதல்’தான் லாபம். பிடிவாதம் தலைதூக்கி குறிக்கோளை அடைவதற்கு பதிலாக பிரச்சினை மேலும் சிக்கலாகிவிடுகிறது.

எனவே, தீண்டத்தகாதவர்கள் என்று கருதப்படுகிறவர்களை தூய்மையாக்குவதற்கு மிகவும் எளிய விதிமுறை ஒன்று இயற்றப்பட வேண்டும். சமய சான்றோர் அங்கீகாரமும் அளிக்கப்பட்டால் அந்த விதிமுறைக்கு சமயமே ஆதரவாக நிற்கும், எதிர்ப்பவர்களின் எதிர்ப்பு தளர்ந்து விடும்.

கேள்வி: இந்த விதிமுறை அவ்வளவு எளிதாக இருக்கும் என்று தாங்கள் எண்ணுகிறீர்களா?

பதில்: கழுத்தில் மாலை அணிந்து கொண்டபின், வணங்கி நாம ஜெபம் செய்தாலே போதும்.

ஸ்ரீ குருஜியின் மூலம் தெரிவிக்கப்பட்ட இந்த எளிதான விதிமுறைக்கு புனேயைச் சேர்ந்த மதிப்பிற்குரிய திரு. சிரூபாவு லிமயே என்பவர் ஆட்சேபம் தெரிவித்து கேள்வியும் எழுப்பினார்.

லிமயே: தீண்டாமையை ஒழிக்க ஒரு எளிய முறை கூறுகிறீர்கள். ஆனால், தீண்டத்தகாதவர்கள் யார்? தீண்டத்தகாதவர்களை தூய்மைபடுத்த இந்த சமயசான்றோர்களுக்கு அதிகாரம் யார் கொடுத்தது? இவர்களை சமய சான்றோர் என நான் கருதவில்லை.

ஸ்ரீ குருஜி: சில விஷயங்களை நாம் உன்னிப்பாக கவனிக்க வேண்டும். தீண்டாமை, ‘தீண்டப்படாதவர்களுடைய பிரச்சினை மட்டும் அல்ல. எவர் எங்கு பிறக்கிறார்கள் என்பது அவரவர் வசமில்லை. நான் இந்த குலத்தில் தான் பிறப்பேன் என்று எவரும் கூற இயலாது. எனவே, தீண்டாமை என்பது மேல் ஜாதியினரின் அற்ப புத்திக்கு மறு பெயர். எனவேதான், தீண்டாமையை ஒழிப்பது, அற்ப புத்தியை ஒழிப்பதுமாகும். நீங்களோ அல்லது நானோ சமய சான்றோர்களை ஏற்றுக்கொள்கின்றோமா இல்லையா என்பது விசயமல்ல. தீண்டாமையை ஏற்றுக்கள்பவர்கள், சான்றோர்களை ஏற்றுக் கொள்கிறார்கள் சமய சான்றோர்களின் தலையீட்டால் இந்த பிரச்சினைக்கு எளிதில் தீர்வு காண முடியும். கடந்த பல ஆண்டுகளாக எனக்கு பல சமய சான்றோர்களுடனும், சங்கராசாரியர்களுடனும் தொடர்பு உள்ளது. எனவே தான் சமய சான்றோர்கள் இதை கட்டாயமாக நிறைவேற்றுவார்கள் என்று என்னால் கூற இயலும். அதாவது, பலர் தீண்டாமையை ஒழிக்க முயற்சி செய்தனர். மகாத்மா காந்தி இதில் மகத்தான பங்களிப்பு செய்தார். தீண்டாமை ஒழிப்பில் எனக்கும் ஒரு பங்குண்டு.

நமது தேசம் இங்கிலாந்து, அமெரிக்கா போன்று அரசியல் சாஸனத்தை மட்டுமே கடைப்பிடிக்காது, சமயத்தையும் பின்பற்றி நடப்பது என்பதை நாம் நினைவில் கொள்ளவேண்டும். பூமிபூஜை, வாஸ்துசாந்தி, புதுமனை புகுதல் ஆகிய சந்தர்ப்பங்களில் சமய சடங்குகள் செய்வதை நாம் பார்க்கிறோமே?

இவ்வாறு சமய சடங்குகள் மூலம் தடைகளையும், கெடுதல்களையும் தவிர்க்கமுடியும் என்ற நம்பிக்கை நிலவுகிறது. திருமணங்கள் முதலானவைகளிலும் நாம் இதைக் காண்கிறோம். குடும்பம் நடத்தவும், சந்ததிகள் ஏற்படவும் ஒரு ஆணும் பெண்ணும் ஒன்றுபட்டாலே போதுமானது. ஆனால், சமுதாயம் இதை ஏற்றுக் கொள்வதில்லை. சமுதாயத்திற்கு தெரிந்து அவர்களுடைய திருமணம் சமயசடங்குகளுடன் நடந்தேறினால், சமுதாயம் அவர்களை எளிதாக ஏற்றுக்கொள்கிறது. நமது மாநிலத்திலும் சோஷலிஸ்ட் முதலமைச்சர் கொய்னா அணை கட்டுவதற்கு முன்பு கொய்னா நதியின் நடுப்பகுதிக்குப் படகின் மூலம் சென்று எல்லா நற்பேறுகளும் ஏற்பட மங்கலப் பொருள்களால் முறைப்படி அர்ச்சனை செய்தார். இதற்கு என்ன விளக்கம்? எந்தவொரு முக்கியமான செயலுக்கும் சமுதாய ஒப்புதல் கிடைக்கிறதோ, அது சந்தேகத்திற்கு அப்பாற்பட்டது; சாமானிய மக்களுக்கு சமய அங்கீகாரத்தால் மனநிறைவு ஏற்படுகிறது.

மேலும் நான் ‘தீண்டப்படாதவர்களை ராமநாமத்தை உச்சரிக்கும்படி செய்து சமய சான்றோர்கள் அவர்களுக்கு மாலை அணிவிக்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளேன். அரசியல் சாஸன வாயிலாக, தீண்டாமை முடிவிற்கு வந்துவிட்டது என்பதை நாம் ஏற்றாலும்கூட, சமய சான்றோர்களின் இந்த சடங்கால் சமய அங்கீகாரம் என்ற கேடயம் உள்ளது என்ற நம்பிக்கை தீண்டப்படாத சமூகத்தார் மனதில் ஏற்படுகிறது. ஓரிருவர் சந்தேகப்பட்டால், அது குறித்து நாம் கவலைப்படத் தேவையில்லை.

ஸ்ரீ குருஜி, எதைக் கூறுகிறாரோ அதை செயலிலும் பின்பற்றுவார் – இதுதான் அவரது வாழ்க்கையில் மிகவும் சிறந்த அம்சம் , மேடையில் ஜாதிபேதங்களையும், தீண்டாமையையும் கண்டித்து விட்டு, நிஜவாழ்க்கையில் அவற்றை கடைபிடிப்பது என்பது அவர் வாழ்நாளில் கிடையாது. இதற்கு எடுத்துக்காட்டுகளாக இரண்டு சம்பவங்களை கூறலாம்.

ஸ்ரீ குருஜி பீஹாரில் பின்தங்கிய பகுதிக்கு சென்றார். அங்குள்ள மக்கள் அவரை வரவேற்றனர். அவர் சிறிது நேரம் உரையாடிவிட்டு, தேநீர் அருந்திவிட்டு வண்டியில் திரும்பி வந்து கொண்டிருந்தார். சிறிது நேரத்திற்கு பின்பு, அந்த வண்டியின் ஓட்டுனருக்கு வாந்தி எடுக்க வேண்டும் என்று தோன்றியது. வாந்தியும் எடுத்தார். சிறிது நேரத்திற்கு பிறகு ஒவ்வொருவராக அவருடன் சென்ற நால்வரும் வாந்தி எடுத்தனர். அனைவரும் ஸ்ரீ குருஜியும் வாந்தி எடுப்பார் என்று எண்ணி அங்கு அருந்திய தேநீரைக் குறித்து பேசினர். இந்த விஷயம் ஸ்ரீ குருஜியை பாதிக்கவில்லை. அவர் வாந்தியும் எடுக்கவில்லை. அவருடன் வந்தவர்கள் அவரது ஜீரணசக்தி குறித்து வினவினர். அப்பொழுது ஸ்ரீ குருஜி, “நீங்கள் அனைவரும் அவர்கள் தெருவின் நாற்றத்தையும் அழுக்கையும் எண்ணினீர்கள். அந்த மக்களது விருந்தோம்பலையும், சகஜமான அன்பையும் எண்ணி யிருந்தீர்களானால் அவர்கள் அளித்த தேநீர் ஜீரணமாகியிருக்கும். உங்களுக்கு அங்கிருந்த அழுக்கு உள்ளே போயிருக்கிறது. எனக்கோ அவர்களது அன்பும், பாசமும் உள்ளேபோனது. அந்த அமிர்தத்தினால் தான் நான் வாழ்கிறேன். அதுவே எனக்கு ஊட்டம் என்னும்பொழுது, குமட்டுமா என்ன?’ என்று வினவினார்.

1950-ல் புனேயில் சங்க சிக்ஷா வர்க நடைபெற்றது. ஏறக்குறைய 1300 ஸ்வயம்சேவகர்கள் இருந்தனர். உணவின்போது ஜிலேபியும் பரிமாறப்பட்டது. அனைவருக்கும் இனிப்பு வழங்குவதை அதிகாரிகள் பார்வையிட ஏற்பாடு இருந்தது. ஸ்ரீ மோரோபந்த் பிங்களே, ஸ்ரீ சீதாராமபந்த் அப்யங்கர் முதலான அதிகாரிகள் பார்வையிட்டனர். ஸ்ரீ குருஜியும் அவர்களை பின்தொடர்ந்தார். பல ஸ்வயம்சேவகர்களை பெயர் சொல்லி அழைத்து அவர்களுக்கு இனிப்பு வழங்கும்படி செய்து உற்சாகமூட்டினார்.

இரண்டாவது பந்தியில் அதிகாரிகள் உணவருந்த அமர்ந்தார்கள் எட்டு அல்லது ஒன்பது ஸ்வயம்சேவகர்கள் இனிப்பு வழங்கும்படி பணிக்கப்பட்டனர். ஒருவர் மட்டும் பரிமாற செல்லாமல் அமர்ந்திருந்தார். ஸ்ரீ குருஜியின் பார்வை அவரிடத்தில் சென்றது. உணவருந்த தொடங்குவதற்கு முன்னமே ஸ்ரீ குருஜி அவரருகில் சென்று, “நீ ஏன் உட்கார்ந்திருக்கிறாய்? நீயும் இனிப்பு வழங்கு” என்றார்.

நாராயண் என்னும் அந்த ஸ்வயம்சேவகர் கூச்சத்துடன் ஒதுங்கினார். அவர் செருப்பு தைப்பவர். அவர் இதை ஸ்ரீ குருஜியிடம் கூறினார். ஸ்ரீ குருஜிக்கும் மிகுந்த வருத்தம் ஏற்பட்டது. ஸ்ரீ குருஜி அவரது கையைப் பிடித்து அவரிடத்தில் ஜிலேபி பாத்திரத்தை கொடுத்தார். முதலில் தனது தட்டில் பரிமாறிவிட்டு பின்பு அனைத்து ஸ்வயம்சேவகர்களுக்கும் வழங்கும்படி கூறினார்.

ஒரு கடினமான பிரச்சினைக்கு மிகவும் எளிய முறையில் தீர்வு கிடைக்கும்படியான இந்த சம்பவம் சிறியதாக இருந்தாலும் வாழ்நாள் முழுவதும் நினைவில் நிற்கும்.

தீண்டாமைக்குள்ளாகிறவர்கள் தங்களை தீண்டத்தகாதவர்கள் என்றும் தாழ்ந்தவர்கள் என்றும் எண்ணக்கூடாது என்பது ஸ்ரீ குருஜியின் கருத்து. ஒரு ஸ்வயம்சேவகர், “நான் பிற்படுத்தப்பட்ட ஜாதியைச் சேர்ந்தவன். சங்கத்தில் மேல்ஜாதியினரே காணப்படுகின்றனர். தாழ்த்தப்பட்ட பழங்குடிப் பிரிவைச் சேர்ந்த மக்களை போதிய எண்ணிக்கையில் காணமுடியவில்லை. ஏன் இந்த ஏற்றத்தாழ்வு?” எனக் கேட்டார்.

ஸ்ரீ குருஜியின் பதில்: “சங்கத்தில் தாழ்த்தப்பட்ட ஜாதியினர் – மேல் ஜாதியினர் என்று பிரித்துப் பார்க்கும் அனுபவம் ஒருபோதும் எனக்கு ஏற்பட்டதில்லை. தாழ்த்தப்பட்ட ஜாதியினரும் பழங்குடி பிரிவினரும் தங்களை தாழ்த்தப்பட்டவர்கள் என்றும், பழங்குடியினர் என்றும் ஏன் கூறிக்கொள்கிறார்கள் என்பதை புரிந்துகொள்வது கடினம். தங்களது ஜாதி அல்லது பிரிவை மட்டுமே சிந்தித்து அந்த நினைவிலேயே இருப்பது சரியல்ல. மனதிலும், நினைவிலும் இந்த சிந்தனை தொடர்வது ஏன்? சிலர் இதில் லாபமடிக்கப் பார்க்கிறார்கள். அரசியல் பண்ணும் பிரமுகர்கள் இதை ஊக்குவிக்கின்றனர். எனவேதான் இப்படி.

”இந்த விகாரமான எண்ணம் சங்கத்தில் கிடையாது. ஜாதி, மொழி அல்லது வேறு பேதங்கள் எனப்படுகிறவற்றிலிருந்து விலகி நமது ஹிந்து சமுதாயத்தை ஒருங்கிணைக்க சங்கம் விரும்புகிறது. அனைவரையும் உடன்பிறப்பாக எண்ணி அன்பை வளர்ப்பதே எல்லா ஊர்களிலும் சங்கப் பணியின் அடிப்படை. எந்தவொரு ஜாதியை அல்ல, முழு சமுதாயத்தையும் ஒருங்கிணைக்க நாம் முயன்று வருகிறோம்.”

தீண்டாமையை ஒழிப்பதற்கு போராட்டம் நடத்த வேண்டும், கிளர்ச்சி செய்ய வேண்டும், திட்டவட்டமான நடவடிக்கை எடுக்கவேண்டும் என்பது பலர் கருத்து. போராட்டத்தாலோ, கிளர்ச்சியாலோ தீண்டாமை ஒழியும் என்பதில் ஸ்ரீ குருஜிக்கு நம்பிக்கையில்லை. கிளர்ச்சி, போராட்டம் இவற்றால் பிரிவினைப் போக்குதான் வளரும்; ஒருமைப்பாடு, நல்லிணக்கம் உருவாகாது என்பது ஸ்ரீ குருஜியின் உறுதியான நம்பிக்கை. இதுகுறித்து ஸ்ரீ குருஜியின் சிந்தனை கீழ்க்கண்டவாறு இருந்தது.

1972-ல் டாணேயில் அகில பாரதிய வர்கவில் இடம்பெற்ற கேள்வி-பதில் நிகழ்ச்சியின் ஒரு பகுதி வருமாறு:

கேள்வி: சங்கத்தில் தீண்டாமை இல்லை. ஆனால், சமுதாயத்தில் அதை ஒழிக்க ஏதேனும் திட்டம் வகுப்பது குறித்து நாம் சிந்திக்க இயலுமா?

பதில்: அதற்கென்று திட்டங்களை வகுப்பதன் மூலம் காரியம் கை கூடுமா? காந்திஜி தீண்டாமை ஒழிப்பை காங்கிரஸின் செயல் திட்டத்தில் சேர்த்தார். அதற்காகப் பெருமுயற்சி செய்தார். அதன் விளைவு, ஹரிஜன மக்கள் மேலும் விலகி சென்றுவிட்டனர். தனியாக ஒரு பெயரைச் சூட்டியதால், தனிப்படிருக்கும் எண்ணமே வளர்ந்தது. முந்தைய பெயரால் அழைத்தால் மனதில் ஏற்படும் எண்ணம் புது பெயரிட்டு அழைத்தால் மறைந்துவிடும் என்றெண்ணி, “ஹரிஜன்’ என்ற பெயர் சூட்டப்பட்டது. அவரது சிந்தனை நன்றாகவே இருந்தது. ஆனால் அந்த எண்ணம் மோகவில்லை.

ஒரு ஹரிஜனத் தலைவருடன் டாக்டர் ஹெட்கேவருக்கும் எனக்கும் தொடர்பு இருந்தது. அவர் ”சங்க செயல்பாடுகள் மிகவும் நன்றாக இருக்கின்றன. எனினும், சங்கம் எங்களது உண்மையான விரோதி. ஏனெனில், மற்ற அனைவரும் எங்கள் தனித்தன்மையை ஏற்றுக் கொள்கின்றனர். எங்களது தனிச்சலுகைகள் குறித்து பேசுகின்றனர். ஆனால், சங்கத்திற்கு வந்தால் எங்களது தனித்தன்மையை நாங்கள் இழந்துவிடுகிறோம். நாங்கள் ஹிந்துவாக மட்டுமே இருப்போம். பின் எங்களுக்கு தனிச்சலுகைகள் கிடைப்பது எப்படி?” என்று கூறுவார். தாங்கள் தனிப்பட்டவர்கள் என்ற எண்ணம் அவர்கள் மனதில் கசப்பை விதைத்து விட்டது. இதே கசப்பாலும் தனிப்பட்ட எண்ணத்தாலும்தான், ‘ஹிந்து சமுதாயத்தில் கலந்து விட்டால் நமது நிலை என்ன ஆகும்?” என்ற எண்ணம் ஏற்பட்டது.

1941-ல் ஒரு மஹார் சிறுவன் என்னை சந்திக்க வந்தான். அவன், “நான் சங்கத்திற்கு வருவதால் என்ன லாபம்?’, என்று வினவினான். “நீ உன்னை தனிபட்டவனாகக் கருதுகிறாய். பிறரை தனிப்பட்டவராக எண்ணுகிறாய். சங்கத்திற்கு வருவதால், இந்த தனிபட்ட தன்மை என்னும் சுவர் உடைகிறது. இது லாபமா இல்லையா?” என்று வினவினேன்.

தனிப்பட்ட எண்ணம் ஊக்குவிக்கப்படாமல் வேறேதேனும் வழியில் அவர்களது இன்னல்கள் தீர்க்கப்பட வழிவகை தேடி சிந்திக்க வேண்டும். அவ்வாறில்லை என்றால் பிரச்சினைகள் இருந்துகொண்டே இருக்கும்.

தீண்டாமை எண்ணம் வெகு ஆழமாக வேர்விட்டிருக்கிறது. பிராமணர்களிலும் கூட, உயர்ந்த, தாழ்ந்த ஜாதிகள் உள்ளன. ஒரு ஜாதியினர் மற்ற ஒரு ஜாதியினரிடம் தண்ணீர் வாங்கி அருந்தமாட்டார். இப்போது அதெல்லாம் ஒழிந்துவிட்டது. ஹரிஜனங்களிலும் கூட, பிறர் நிழலை கூட சகிக்கமுடியாதவர்கள் உள்ளனர். பிரச்சனை மிகவும் பெரியது. தீண்டாமையை பிராமணர்கள் போன்றவர்களே கடைப்பிடிக்கிறார்கள் என்று கூறுவது முற்றிலும் சரியல்ல. நிலைமை சரியாக மிகவும் உழைக்கவேண்டும். மிகுந்த பயிற்சி அளிக்கவேண்டும். பழைய பதிவுகளை கழுவிக் களைய வேண்டும். புதிய பண்புப் பதிவு ஏற்படுத்த வேண்டும். பலவருடங்களாக வேரூன்றிவிட்ட இத்தகைய எண்ணங்களை வலுக்கட்டாயத்தால் பறித்து எறிவதால் காரியம் கைகூடாது. இதனால் தனிப்படும் என்ற எண்ணமே வளரும். இது குறித்து நன்கு சிந்திக்க வேண்டும்.

தீண்டத்தகாதவர்கள் என்று குறிப்பிடப்படுகிறார்களை ஸ்ரீ குருஜி துளியளவும் மதிப்புக் குறைவாக நடத்தவில்லை . தனது அந்த சோதரர்கள் குறித்து மதிப்புடன் கூறுவார், ”தீண்டதகாதவர்கள் என்று கூறப்படும் ஜாதிகள், மனம், அறிவுசார் தன்மைகளில் பரம்பரையாகவே திறனற்றவை என்றும், நீண்டகாலம் வரை சமுதாயத்தின் பிற பகுதியினர் தரத்தை அடையமுடியாது என்றும் பேசுவது அவர்களை அவமானம் செய்வது மட்டுமல்ல, உண்மையை கேலி செய்வதாகும். கடந்த ஆயிரம் ஆண்டுக்கால தேச விடுதலைப் போராட்டத்தில், தீண்டத்தகாதவர்களாக கருதப்படுகிறவர்கள் பலரும் முன்னிலையில் இருந்தனர் என்பது சரித்திரம். மகாராணா பிரதாப், குரு கோவிந்தசிங், சத்ரபதி சிவாஜி ஆகியோரின் சேனைகளில் மிகந்த வல்லமையுடன் ஆவேசமாக போரிட்டவர்கள் இவர்கள். தில்லி, பீஜப்பூரின் கலகக்காரர்களை எதிர்த்து நடந்த சிவாஜியின் முக்கியமான பல போர்களில், இந்த மாவீரர்கள் ஆள்பலம் அளித்து தலைமையும் தாங்கினார்கள். (ஸ்ரீ குருஜி சிந்தனைக் களஞ்சியம், தொகுதி-11,)

நமது ஆன்மீக உலகத்திலும் இவர்களது பங்கு மிகவும் சிறந்தது. வடக்கில் ரவிதாஸ், மகாராஷ்டிரத்தில் சோக்காமேலா, இது மட்டுமல்ல, ராமாயணம், மகாபாரதம் ஆகியவற்றை இயற்றியவர்களும் கூட மேல் ஜாதியைச் சேர்ந்தவர்களல்ல. இத்தகைய சிறந்த மனிதர்களை உருவாக்கிய ஜாதிகளை அலட்சியப்படுத்துவது பாவம். “இந்த ஜாதிகளில் எண்ணிடலங்காத சாதுக்களும், சந்நியாசிகளும் அவதரித்தனர். அவர்களிடம் நமது அனைத்து வகுப்பைச் சேர்ந்தவர்களும் அளவிலா பக்தியுடன் மரியாதை செய்தார்கள், இந்த சகோதரர்களிடம் நமது தர்மம் குறித்து சிரத்தையும் நம்பிக்கையும் சமூகநலன் குறித்த சிந்தனைகளும் சமுதாயத்தின் எல்லா பிரிவினர்களுக்கும் ஊக்கமளிக்கும் வகையில் சிறப்பாக சமயத்தின் பேரால் சமுதாயத்தின் பிர பகுதியினரால் இவர்களுக்கு ஏற்பட்ட அவமானம், இன்னல்கள் ஆகியவற்றை பொறுத்துக்கொண்டு, மதமாறும்படி ஆசைகாட்டப்பட்டபோது அதை உறுதியாக எதிர்த்தார்கள். தேசப்பிரிவினையின் போது வங்காளத்தில் நாமசூத்திரர்கள் என்றும் தீண்டத்தகாதவர்கள் என்று கருதப்பட்ட லட்சக்கணக்கான மக்கள் இஸ்லாமைத் தழுவி உயிரைக்காத்துக் கொள்வதற்கு பதிலாக ஹிந்து தர்மத்தை கடைப்பிடித்து துன்பங்களை அனுபவிப்பதேமேல் என்று எண்ணினர். பிறகு இந்திய எல்லைக்குள் அவர்கள் ஹிந்து அகதிகளாக நேர்ந்தது” என்பார் ஸ்ரீ குருஜி. (ஸ்ரீ குருஜி சிந்தனைக் களஞ்சியம், தொகுதி-11, பக்கம்-349)

இன்றைய காலகட்டத்தில் காணப்படும் நான்கு வர்ணங்கள், ஜாதி வேறுபாடுகள், தீண்டாமை ஆகியவை சமுதாய நல்லிணக்கத்திற்கு பெரும் பாதகமாக இருக்கின்றன. ஸ்ரீ குருஜி இந்த மிகப்பெரிய சமுதாய நோயை வேரோடு களைய விரும்பினார். இது குறித்து அவரது சிந்தனை மேலெழுந்தவாரியாக இல்லை. ‘அறுவை சிகிச்சை வெற்றிகரமாக முடிந்தது. ஆனால், நோயாளி பிழைக்கவில்லை’ என்பது போன்ற தீர்வை அவர் விரும்பவில்லை. எனவேதான், நான்கு வர்ணங்கள் என்பது என்ன, ஜாதி ஏற்பாடு என்பது என்ன என்பன குறித்து அவர் சாஸ்திர முறைப்படி ஆய்வு செய்தார். இன்றைய காலகட்டத்திற்கு வர்ணங்களும் ஜாதிகளும் பொருந்தாது என்று தெளிவுபடுத்தினார். இன்றைய காலகட்டத்தில் சமுதாயம் ஒன்று என்ற உணர்வு ஏற்படுத்துவது மிகவும் இன்றியமையாதது. அதன்மூலம் சமுதாயத்தில் நல்லிணக்கம் ஏற்படும் என்று அவர் நம்பினார். ஸ்ரீ குருஜியின் பாதை மற்றவர்களின் பாதைகளிலிருந்து வேறுபட்டது. சமுதாயப் போராட்டம் நடத்துபவர்களோ ஹரிஜன மேம்பாட்டுப் பாதையில் செல்பவர்களோ, ஸ்ரீ குருஜியை புரிந்து கொள்ளவில்லை, அல்லது வேண்டுமென்றே அவர் பற்றி தவறான எண்ணங்களை ஏற்படுத்தினர். இதனால் ஸ்ரீ குருஜி என்ற தனிமனிதருக்கு தீங்கு எதுவும் ஏற்படவில்லை . ஆனால், சமுதாயத்தில் பிரச்சினை மேலும் தீவிரமடைந்தது. ஜாதிகளை ஒழிப்பது குறித்து நடுநிலை நின்று சரித்திரம் எழுதப்படும்போது ஸ்ரீ குருஜியின் பங்களிப்பு, சமுதாயம் முழுவதற்கும், என்றென்றும் நன்மை பயப்பது என்பது ஏற்கப்பட்டே தீரும்.

தொடரும்…

ஸ்ரீ குருஜி பார்வையில் சமுதாய நல்லிணக்கம்

ரமேஷ் பதங்கே


படிப்பதற்கு முன்….

ஸ்ரீ குருஜி தத்துவ சிந்தனையாளர். தேசிய வாழ்வின் எல்லா அம்சங்கள் பற்றியும் கருத்து வெளியிட்டுள்ளார். நாட்டின் அரசியல், சமுதாயம், பொருளாதாரம் ஆகியவை குறித்த தனது அடிப்படை எண்ணங்களை வெளிப்படுத்தியுள்ளார்.


ஸ்ரீ குருஜியின் எண்ணங்கள் சிறப்புக்கள்

  • அவரது எண்ணமும் சிந்தனை எப்போதுமே முழுமை வாய்ந்ததாக இருந்தது.
  • எண்ணங்களின் அடிப்படை நிலையானதாகவும், எக்காலத்திற்கும் ஏற்றதாகவும் இருந்ததால் பொய்யாமொழியாக விளங்கியது.
  • அவர் எண்ணங்கள் ஆன்மிகத்தில் வேர் கொண்டவையாக இருந்தன.
  • அவரது சிந்தனை ஹிந்து சமுதாயத்தை மையமிட்டே இருந்தாலும், பரந்து கிடக்கும் மனிதகுலம் குறித்த உலகளாவிய எண்ணங்களையும் வெளிப்படுத்தி வந்தார்.
  • சிந்தனைகளின் வெளிப்பாடு, அனுபவபூர்வமான உணர்வை அடிப்படையாக கொண்டிருந்ததால், வெறும் பேச்சு, வரட்டுவாதம், பிறரை எதிர்ப்பதில் ஏற்படும் மகிழ்ச்சி ஆகியவை அவற்றில் இடம் பெறவில்லை .
  • உண்மையை சமுதாயத்தின் முன் நிலைநாட்டும் பொழுது, அவர் ஒருபோதும் பயம் கொண்டதில்லை, பகைமை பாராட்டியதில்லை.

அவரது எந்தவொரு சிந்தனை குறித்து ஆராயும்பொழுதும், இந்த சிறப்புக்களை நினைவில் கொள்ள வேண்டும். சமுதாய நல்லிணக்கம் குறித்த ஸ்ரீகுருஜியின் சிந்தனைகளையும், அவரது பண்பையும் ஆய்கிறபோது, மேலே குறிப்பிட்ட சிறப்புக்களை நினைவில் கொள்ள வேண்டும்.

ஸ்ரீ குருஜியின் வாழ்வெனும் வேள்வி “இது ஹிந்து ராஷ்ட்ரம்” என்னும் மந்திரத்தின் விரிவாக்கமே. இது ஹிந்து ராஷ்ட்ரம் ஹிந்து சமுதாயம் அதன் புதல்வன்போல. ஹிந்து சமுதாயத்தின் எழுச்சியில்தான் தேச எழுச்சி உள்ளது. ஹிந்து சமுதாயத்தின் வீழ்ச்சி தேசத்தின் வீழ்ச்சி – இதுவே அவரது சித்தாந்தம். ஹிந்து சமுதாயத்தின் வீழ்ச்சியே ஹிந்து ராஷ்ட்ரத்தின் வீழ்ச்சிக்கு அடிகோலியது. நம்மை நாம் மறந்த நிலையே ஹிந்து சமுதாயத்தின் வீழ்ச்சிக்கு காரணம். அனைத்திலும் சுயநலம், சுயநலத்தினால் வேற்றுமைகள், வேற்றுமைகளினால் சமுதாயத்தில் பிளவு. இவ்வாறு சமுதாயம் பிளவுபட்டு ஒழுங்குகுலைந்த நிலை ஏற்பட்டது.

ஹிந்து ராஷ்ட்ரத்தின் எழுச்சிக்கு ஹிந்து சமுதாயத்தின் எழுச்சி இன்றியமையாதது. நம்மையே இழிவாக எண்ணுவதை விலக்க நாம் யார் என்பதை நினைவு படுத்த வேண்டும். சுயநலத்தை விட்டு தன்னலமற்ற உணர்வுகொள்ள வேண்டும். அனைத்து வேறுபாடுகளையும் மறந்து, ஒருமைப்பாட்டு உணர்வு, ஒரே எண்ணம், நல்லிணக்கம், கொண்ட ஹிந்து சமுதாயத்தை நிலைநிறுத்த வேண்டும். இதுவே ஸ்ரீ குருஜியின் கருத்தாக இருந்தது. இந்த உயர்ந்த குறிக்கோளை அடைவதற்காகவே ராஷ்ட்ரீய ஸ்வயம்சேவக சங்கம் தோன்றியது. இந்த குறிக்கோளை அடைவதற்கு சங்க ‘ஷாகா’ ஒரு கருவி என்பதில் அவருக்கு முழு நம்பிக்கை இருந்தது. இதை மையமாகக் கொண்டு, சமுதாயத்தை ஒருங்கிணைக்க அவர் தனது இறுதி மூச்சுவரை பாடுபட்டார். அந்த காலகட்டத்தில், முன்னுதாரனமான சமுதாயத்தின் நிலை, வர்ண முறை, ஜாதிமுறைகள், தீண்டாமை, வனவாசிகளின் நிலை, சமுதாயத்தை நிலைநாட்டுவதில் சமயத்தின் பங்கு, சமுதாயத்தை உயர்ந்த நிலைக்கு எடுத்துச்செல்வதில் சமயப் பெரியோர் பங்களிப்பு, ஜாதிவேறுபாடுகளும் அரசியலிலும், வேறுபாடுகளை களைவதற்கான வழிமுறைகள், நலிந்தோருக்குத் தொண்டு ஆகியவை குறித்த தெளிவான கருத்துக்களை ஸ்ரீ குருஜி சமுதாயத்தின் முன் வைத்தார். அதனை மீண்டும் நினைவு கூர்கிற முயற்சியே இந்த பதிவு.


முன்னுதாரனமான சமுதாயக் கட்டமைப்பு

முன்னுதாரனமான சமுதாயம் எப்படி இருக்கும் என்பதை பல தத்துவ ஞானிகளும், சமூகவியலாளர்களும், பேரறிஞர்களும், சமுதாயநலம் விரும்பிகளும் கூறியிருக்கிறார்கள். நவீன காலத்தில், கார்ல் மார்க்ஸ் என்பவர் சமத்துவத்தோடு கூடிய, சுரண்டலற்ற, அரசற்ற சமுதாயக் கனவை விவரித்தார். அஹிம்சையையும், சத்தியத்தையும் அடிப்படையாகக் கொண்டு சர்வோதய சமுதாய கனவு கண்டார் காந்தியடிகள். டாக்டர் அம்பேத்கர், சுதந்திரமான, சமத்துவத்துடன் கூடிய, சகோதரத்துவம் வாய்ந்த, நியாயத்தை அடிப்படையாகக் கொண்ட சமுதாயத்தை உருவாக்கும் கனவு கண்டார். ஸ்ரீ குருஜி, இத்தகைய எந்தவொரு சமுதாயத்தையும் கற்பனையில் தீட்டவில்லை. அவர் நமது தொன்மை வாய்ந்த வரலாற்றை கூர்ந்து நோக்கி தலைசிறந்த சமுதாயத்தை (ஒருகாலத்தில் நிஜமாகவே நிலவிய சமுதாயத்தை) உருவாக்குவதற்கான, திட்டங்களையே முன் வைத்தார்.

“நமது ஹிந்து கலாச்சாரம், சமுதாயம் குறித்து எத்தகைய சித்திரத்தை முன்வைக்கிறது? என்ற வினா குறித்து சிந்திக்கும் பொழுது, சமுதாய வாழ்க்கையின் தன்மையை வைத்தே யுகங்கள் ஏற்பட்டிருப்பது புலப்படுகிறது. ஸத்யயுகம், த்ரேதாயுகம், த்வாபரயுகம், கலியுகம் இவை ஒவ்வொன்றிலும் சமுதாயம் ஒரு குறிப்பிட்ட நிலை அடைந்திருந்தது தென்படுகிறது. ஸத்யயுகத்தில் எல்லாம் பொது. செல்வம் அனைவரது என்பதே நிலை. அனைவரும் தேவைக்கேற்ப எடுத்துக்கொண்டு சுகமான வாழ்வு வாழ்ந்தனர். தர்மம் சமுதாயத்தின் நான்கு அங்கங்களிடையே பரவி இருந்தது. சமுதாயத்தைத் தாங்குவதும் இம்மையிலும் மறுமையிலும் இன்பத்தை அளிக்க வல்லதுமாகிய சக்தியே தர்மம் என்று அழைக்கப்பட்டது. எல்லையற்று விரிந்து பரந்த பிரபஞ்சத்திற்கு, ஒருமைப்பாட்டை அடையாளம் காட்டும் தர்மத்தின் அடிப்படையில் ஒவ்வொருவரும் தனது இயல்பை உணர்ந்து, பிறரின் நலனுக்காக செயல்பட்டார்கள். ஆட்சி இல்லாதபோதும் கூட, தர்மம் நிலவியதாலேயே ஒருவர் மற்றவரை தாக்காமல் இருந்தார்கள். ஒருவருக்கொருவர் சண்டையும் இல்லை. எல்லாவற்றுடன் ஒருமைப்பாட்டுடன் செயல்பட்டதன் காரணமாக, வெளியிலிருந்து மக்களை எதுவும் கட்டுப்படுத்தாவிட்டாலும் கூட, ”நான் எவரையும் அடிக்கமாட்டேன், அடியும் வாங்கமாட்டேன்’ என்ற எண்ணத்துடன், முற்றிலும், அமைதியாக வாழ்ந்தனர். இது ஸத்யயுகத்தின் அமைப்பு. (ஸ்ரீ குருஜி சிந்தனைக் களஞ்சியம், தொகுதி-2, பக்கம்-113)

இன்றைய காலத்திற்கேற்ப கூறவேண்டுமானால், அனைவரும் சமமாக எண்ணப்பட்டனர். அனைவர் மத்தியிலும் சகோதரத்துவம் நிலவியது. ஒருவருக்கும் அநீதி இழைக்கப்படவில்லை , சமுதாயத்தில் பெண்களும், ஆண்களும் எங்கும் நல்லிணக்கம் கண்டார்கள் என்று கூறலாம். ‘சமத்துவம்’ நிலவியது என்று கூறலாம்.

மனிதகுலத்தில் பிறந்த காரணத்தினால், அனைவரும் மனிதர்களே. மனிதன் என்ற பெயர் அனைவருக்கும் பொது. ஆயினும் அனைவரும் அச்சில் வார்த்ததுபோல ஒரே மாதிரியாக இருப்பதில்லை. சிலர் பிறவியிலேயே அறிவாளியாக திகழ்கின்றனர். சிலர் அறிவுத்திறன் குறைந்தவர்களாக இருக்கின்றனர். சிலர் வெண்மை நிறம் படைத்தவர்களாக உள்ளனர். சிலர் கருமை நிறமுடையவர்களாக இருக்கின்றனர். சிலர் உயரம், சிலர் குள்ளம். விருப்பு வெறுப்பு, இயல்பு வேவ்வேறாக உள்ளது. குணம் வேவ்வேறாக உள்ளது. இதன் பொருள், இயல்பாகவே மனித சமுதாயத்தில் குணங்கள் மற்றும் தகுதிகளில் சமமின்மை காணப்படுகிறது. ஸ்ரீ குருஜி பிறவியில் அமைந்துள்ள சமமின்மையை ஏற்றத்தாழ்வாக எண்ணவில்லை. “இது ஒரே ஜீவ தத்துவத்தின் பலவகைப்பட்ட வடிவங்கள்” என்று ஸ்ரீ குருஜி கூறுகிறார். அவர் சொற்கள்: “ஆன்மாவே உண்மையில் அனைத்திற்கும் ஆதாரமாகும். ஏனெனில், ஆன்மாவே அனைத்தும். அனைத்திலும் ஒன்றேயான ஆன்மா பல வடிவங்களாக வியாபித்திருக்கிறது. அனைவரிடத்திலும் ஒரே ஜீவசக்தியே உள்ளது. எனவேதான் அன்பாக நடந்துகொள்கிறோம். ஒவ்வொரு தனிமனிதனும் பரமாத்மாவின் அம்சம் என்று அறிந்து அளவுகடந்த அன்பு செலுத்துகிறோம், உலகம் முழுவதையும் இறைவனின் வடிவமாக உணர்ந்து தூய்மையான அன்பு செலுத்துகிறோம்”. (ஸ்ரீ குருஜி சிந்தனைக் களஞ்சியம், தொகுதி-2, பக்கம்-117)

ஸ்ரீ குருஜி நல்லிணக்கம் வாய்ந்த சமுதாய வாழ்க்கையின் தத்துவ அடிப்படையொன்றை இங்கு குறிப்பிடுகிறார்.

இயல்பாகவே தோன்றும் சமமற்ற நிலையை ஏற்றத்தாழ்வு, என்று எண்ணுவது தவறு. இதை நன்கு தெளிவாக புரிந்து கொள்வதற்கு ஒரு மரத்தை எடுத்துக்காட்டாக கூறுகிறார்: “ஒரு மரத்தை எடுத்துக் கொண்டோமேயானால், அதில் பல கிளைகள், இலைகள், மலர்கள், கனிகள் ஒன்றிலிருந்து மற்றொன்று முற்றிலும் மாறுபட்டிருக்கிறது. ஆயினும், இவற்றினால் ஒவ்வொன்றும் மரத்தின் விதவித வெளிப்பாடே. பல ஆயிரம் ஆண்டுகளாக மலர்ந்திருக்கும் நமது சமுதாயவாழ்வில் காணப்படும் வேறுபாடுகளும் இத்தகையதுதான். (அகிலபாரத ஜில்லா பிரச்சாரக் வர்க, சிந்தி, விதர்ப்ப -1954)

லட்சிய சமுதாயம் எவ்வாறு ஏற்படும்?

யுக கணக்குப்படி கூறவேண்டுமானால், நாம் இப்பொழுது கலியுகத்தில் வாழ்ந்துகொண்டிருக்கிறோம். போட்டி, பொறாமை, வெறுப்பு, நம்பிக்கையின்மை, போகங்களில் இச்சை ஆகியவை கலியுகத்தில் குறிப்பிடத்தக்க அம்சங்கள். அனைத்திலும் சமமின்மை, சுரண்டுதல், அநியாயம் ஆகியவை இந்த யுகத்தின் அடையானம். “பொருளாதாரம், அரசியல், சித்தாந்தம் என அனைத்து ரீதியிலும் மக்கள் மோதலுக்குத் தயாராகி வருகிறார்கள். தன்னைப் போல் பிறரையும் கருதும் அறிவு குறைந்து வருகிறது. தர்மம் நலிந்து வருவதால், துன்பம், ஏழ்மை, அமைதியின்மை மலிந்ததாகி விட்டது வாழ்க்கை .” (ஸ்ரீ குருஜி சிந்தனைக் களஞ்சியம், தொகுதி-2, பக்கம்-113)

மீண்டும் மீண்டும் பேசுவதால் மட்டுமே முன் மாதிரியான சமுதாயம் உருவாகிவிட முடியாது. அந்த குறிக்கோளை அடைவதற்கு தொடர்ந்து பாடுபடவேண்டும்.

ஸ்ரீ குருஜி கூறிய வழிமுறைகள் பின்வருமாறு:

  • சமுதாயம் முழுவதிலும் நிலவும் ஒருமைப்பாட்டை உணர்தல்
  • தேசம் முழுவதற்கும் தொண்டு புரிதல்
  • நமது சுகதுக்கங்களை மறந்துவிட்டு பிறருக்காக அனைத்தையும் அர்ப்பணித்தல்
  • இதனால் மனித சமுதாயம் முழுவதற்கும் இன்ப துன்பம் பொதுவாக அமையும்.
  • இவை அனைத்தும் தர்மத்தின் எழுச்சியால் மட்டுமே சாத்தியமாகும்.

இத்தகைய உயர்ந்த லட்சியத்தை அடைவது குறித்து ஸ்ரீ குருஜி தனது 33 வருட சங்க வாழ்க்கையில் மீண்டும் மீண்டும் வலியுறுத்தினார். அனைவரையும் நம் போலவே ஒரே ஆத்மாவாக உணர்வதால் தன்னலமற்ற அன்பினால் சமுதாயத்தில் அனைத்து பிரிவு, உட்பிரிவு சகோதரர்களிடையேயும் ஒருமைப்பாட்டை ஏற்படுத்த அவர் எப்போதும் முயற்சி செய்தார். அவரைப் பொருத்தமட்டில் நல்லிணக்கம் என்பது வெளிப்பார்வைக்கு மட்டுமல்லாமல் வாழ்க்கையின் நடைமுறையாகவே அமைந்தது.

ஹிந்து சமுதாயத்தின் நிலை

ஹிந்து சமுதாயத்தில் நான்கு வர்ணங்கள், ஆயிரக்கணக்கான ஜாதிகள் போன்ற பிரிவுகள் உள்ளன. ஹிந்து சமுதாயத்தில் ஹிந்துவென்று தன்னை அடையாளம் காட்டுகின்றவர்கள் மிகக்குறைவு. ஜாதி பெரும்பாலும் அடையாளம் கொண்டே காட்டுகின்றனர். இன்று பிறப்பினால் ஜாதி அல்லது வர்ணம் கணக்கிடப்படுகிறது. அதன் வேர் ஏற்றத்தாழ்வு. தொழில்வாரியான ஜாதிகள் அதன் தனித்தன்மை. ஒரு ஜாதியிலிருந்து மற்றொரு ஜாதிக்கு மாறுவது பெரும்பாலும் இயலாது. ஜாதிகள் காரணமாக சமய, சமுதாய, அரசியல், பொருளாதார கல்வி உரிமைகள் பங்கீட்டில் சமமற்ற நிலை ஏற்பட்டது. சில ஜாதியில் பிறந்தவர்கள் புனிதமானவர்களல்ல என்றும், சில ஜாதியில் பிறந்தவர்களே புனிதமானவர்களாகவும் கருதப்படுகிறார்கள். வர்ணம் ஜாதி, தீண்டாமை அனைத்தும் ஹிந்து தர்மத்தின் அங்கங்கள் என்று ஆனது சமய ஆதாரம் கிடைத்தால் வர்ணம், ஜாதி, தீண்டாமை இவை மாற்றப்பட முடியாதவை என்று கருதப்பட்டது. நூற்றுக்கணக்கான ஆண்டுகளாக சமுதாயத்தில் பெரும்பகுதி அறியாமையிலும் வறுமையிலும் உழன்றது. இதனால் அனைத்து வகையிலும் பின் தங்கியநிலை சமுதாயத்தின் பல ஜாதிகளிடையே காணப்படுகின்றது.

சமுதாயத்தில் நல்லிணக்கம் கொணர்வதிலும் சமுதாயத்தில் அனைவரும் சமம் என்ற நிலை ஏற்படுத்துவதிலும், இன்று நடைமுறையில் இருக்கும் ஜாதி, வர்ண வேறுபாடுகள் என்ற நோய் பெரும் தடையாக உள்ளது.

வர்ணம், ஜாதி, தீண்டாமை ஆகியவை குறித்து ஸ்ரீ குருஜியின் கண்ணோட்டம் என்ன?

வர்ண முறை

ஸ்ரீ குருஜி ஏற்றத்தாழ்வுள்ள நான்கு வர்ண ஏற்பாட்டை ஆதரித்தவர் என்ற தவறான கருத்து வேண்டுமென்றே பரப்பப்பட்டது. மீண்டும் சமுதாயத்தில் வர்ண வேறுபாடுகளும், ஜாதி வேறுபாடுகளும் நிலவவேண்டும் என்பதே அவர் விருப்பமாக இருந்தது என்றும் வேண்டுமென்றே அவதூறு பரப்பப்பட்டது. உண்மையில் அவர் கூறியது, இதற்கு முற்றிலும் மாறானது. எனவே, உண்மை எதுவென்று புரிந்துகொள்வது இன்றியமையாதது.

சமுதாயம் என்பது உயிர்ப்புள்ள படைப்பு என்பது ஸ்ரீ குருஜியின் கருத்து. அவர் விஞ்ஞானம் பயின்றவர். “அமீபா” என்னும் ஓரணு உயிரின் வளர்ச்சியை சுட்டிக்காட்டுகிறார். ஒரு செல் கொண்ட ‘அமீபா என்னும் உயிரினம் வளர்ச்சி அடைய அடைய விதவித அங்கங்கள் முளைக்கின்றன. தன் கடமையை முழு வீச்சில் செயல்படுவதன், பொருட்டு உயிரினங்களில் பல அங்கங்கள் உண்டாகின்றன. இறுதியில் பல அங்கங்களின் ஒருங்கிணைந்த நல்ல கோர்வையாக மனித உடல் உண்டாகிறது. (அகிலபாரத ஜில்லா பிரச்சாரக் வர்க, சிந்தி, விதர்ப-1954)

மனித உடலில் பல உறுப்புகள் இருக்கின்றன. அவைகளின் உருவமும், செயல்பாடுகளும் வெவ்வேறாக இருக்கின்றன. எந்த அங்கமும் உடலுக்கு தீங்கு விளைவிக்கக் கூடிய செயல் செய்வதில்லை. ஒவ்வொரு அங்கமும் ஒன்றுக்கொன்று அனுகூலமாக செயல்படுகின்றது. பலவகை உறுப்புகள் ஒரே உடலில் ஒற்றுமையாக செயல்படுவதைப் போன்று, சமுதாயத்திலும் நல்லிணக்கம் உருவாக்க முடியும் என்பது ஸ்ரீ குருஜியின் கருத்து.

“சமுதாயம் உயிரோட்டமுள்ளது. மனித உடலின் அமைப்பு, உயிரினங்களின் பரிணாம வளர்ச்சியின் மிகச்சிறந்த வடிவமாகும். எனவே, உயிரோட்டமுள்ள ஒரு வடிவத்தை உருவாக்க அதை அனுசரித்து நடக்க வேண்டும். சமுதாயத்தையும் உயிரோட்டமுள்ள மனிதவடிவை அனுசரித்து உருவாக்கினால் இயற்கையானது என்பதால் மிகவும் உகந்ததாக இருக்கும்” என்கிறார் ஸ்ரீ குருஜி. (ஸ்ரீ குருஜி சிந்தனைக் களஞ்சியம், தொகுதி-2, பக்கம்-150)

உயிருள்ள மனிதனைப்போல் சமுதாயத்தை எவ்வாறு உருவாக்க முடியும் என்பது சிக்கலான கேள்வி. மனிதன் தனிப்பட்டவன். அவன் உயிருள்ள வடிவத்தை நாம் காணமுடியும், உணரமுடியும். சமுதாயம் என்பது மனிதர்களின் கூட்டம். சமுதாய புருஷன் என்ற பெயரில் ஒருவருடைய உயிருள்ள ஒன்றை வேறுபடுத்திக் காண்பதோ அல்லது உணருவதோ எளிதல்ல. இவ்வாறு பல பிரச்சினைகள் இருந்தபோதும், சமுதாயம் என்ற உயிர் உள்ள ஒன்றை ஏற்படுத்துவதற்கு நமது முன்னோர்கள் முயற்சி செய்தனர். இதுபற்றி ஸ்ரீ குருஜி கூறுகிறார், ”நமது முன்னோர்கள் பலவாறாக யோசித்து, ஒருமித்த பண்புகளும் ஒத்த மனப்போக்கும் கொண்டவர்கள் ஒருங்கிணைந்து, வளர்ச்சிபெற்று சமுதாயத்திற்கு மிகவும் பயனுள்ள விதத்தில் வாழ்வது சாத்தியமாகும் வகையில் சமுதாய வாழ்க்கையை உருவாக்க வேண்டும் என்று கருதினார்கள்.”

உயிருள்ள மனிதனைப் போல் சமுதாயத்தை கட்டமைக்கிற முயற்சியே நான்குவர்ணங்கள். ஸ்ரீ குருஜி இதை நமது சமுதாயக் கட்டமைப்பின் சிறப்பாக கருதினார். இன்று நான்கு வர்ணங்களை கண்டனம் பேசுபவதும், எழுதுவதும் ஒரு ஃபாஷன் ஆகிவிட்டது. ஸ்ரீகுருஜி இந்த ஜனரஞ்சக வழியை பின்பற்றவில்லை. இந்த பிரச்சினையை அறிவியல் பூர்வமாக பரிசீலிக்கையில் அவர் மன்னிப்பு கோரும் தொணியில் பேசவில்லை. நான்கு வர்ண முறையில் இன்றுள்ள ஏற்றத்தாழ்வு ஏற்படுத்தும் வடிவத்தை அவர் கடுமையாக விமர்சித்துள்ளார். “அந்த சமுதாயக் கட்டமைப்பின் மூல வடிவத்தில் பிரிவுகளிடையே பெரியது-சிறியது, உயர்ந்தது-தாழ்ந்தது என்ற எண்ணத்திற்கு இடம் கிடையாது. சமுதாயம் சர்வவல்லமை பொருந்திய பரமாத்மாவின் வடிவம்; அதை ஒவ்வொருவரும் தனது சக்தி, வழிமுறை இவற்றிற்கேற்ப பூஜிக்க வேண்டியது என்ற உணர்வு ஏற்படுத்தப்பட்டது. பிராமணர்கள் கல்வி கற்றுக் கொடுப்பதன் மூலம் உயர்ந்தோர், ஆனால் பகைவர்களை அழிப்பதன்மூலம் க்ஷத்திரியர்களும் அதே பெருமைக்குரியவர்கள். வாணிபம் செய்பவர்களும் குறைந்தவர்களல்ல. விவசாயம், வியாபாரம் மூலம் சமுதாயத்தை ஸ்திரமாக்குகிறார்கள். சூத்திரர்களும் குறைந்தவர்களல்ல. அவர்களும் தங்களது கலைத் திறமையினால் சமுதாயத்திற்கு தொண்டு செய்கிறார்கள். இவர்கள் அனைவரும் ஒருவர் மற்றொருவரை சார்ந்து, இணக்கத்துடன் வாழ பழங்காலத்தில் சமுதாயத்தின் அந்த கட்டமைப்பு உருவானது.” (ஞான கங்கை )

ஹிந்து சமுதாயத்தில் ஜாதிமுறை எவ்வாறு தோன்றியது என்பது குறித்து சிறந்த அறிஞர்கள் பல சித்தாந்தங்களை முன்வைக்கின்றனர். ஆரியர்களின் படையெடுப்பை ஏற்றுக் கொள்கின்றவர்கள், வெளியிலிருந்து இங்கு படையெடுத்துவந்த ஆரியர்கள், இங்கு வாழ்ந்த மக்களை அடிமைப்படுத்தி, அவர்களிடையே ஜாதிப் பிரிவுகளை ஏற்படுத்தினர் என்று கூறுகின்றனர். இந்த சித்தாந்தமே ஆரியர்கள் ஐரோப்பா-ரஷ்யா ஆகிய நாடுகளிலும் படையெடுத்ததாக கூறுகிறது. அப்படியானால் அங்கெல்லாம் ஜாதிப்பிரிவுகள் ஏன் ஏற்படவில்லை? இதற்கு விடையும் ஏதும் கிடைக்கவில்லை. மனுஸ்மிருதி எழுதிய மனுவினால் இத்தகைய ஜாதிவேறுபாடுகள் உருவாயின என்பது இன்றுள்ள பொதுவான கற்பனை. டாக்டர் அம்பேத்கர் அவர்களின் கூற்றுப்படி, ஜாதிப்பிரிவுகள் மனுவினால் ஏற்பட்டதல்ல. ஜாதிப்பிரிவுகள் என்பது ஒரு சிக்கலான ஏற்பாடு. ஒருவர் எத்தகைய மகானாக இருந்தபோதும் இத்தகைய சிக்கலான ஏற்பாட்டை உருவாக்குவது அவரால் முடியாது என்பார் டாக்டர் அம்பேத்கர்.

ஸ்ரீ குருஜி இதுபோல எந்த ஒரு கோட்பாடு குறித்தும் பேசுவதில்லை . ஜாதிமுறைகள் படிப்படியாக வளர்ந்தது. நமது முன்னோர்களால் மனித வாழ்க்கையை நான்கு புருஷார்த்தங்களின் அடிப்படையில் வகுத்தனர். தர்ம, அர்த்த, காம, மோக்ஷம் எனும் இந்த நான்கு புருஷார்த்தங்களில் (அறம், பொருள், இன்பம், வீடு) மனிதனால் இறுதியாக அடையப்பட வேண்டியது வீடு என்று கூறப்படுகிறது. மனிதனுடைய இறுதி குறிக்கோள் “போகம்”அல்ல. மனிதனின் வாழ்க்கை என்னும் யாத்திரையின் இறுதியான கட்டம் ”வீடு” (நிரந்தர இன்பம்) உள்ளார்ந்த சுகத்திற்காக பல விஷயங்கள் குறித்த கவலைகளிலிருந்து விடுபடவேண்டியது அவசியம். ஒவ்வொரு தனிமனிதனுக்கும் முதல் கவலை வயிற்றுப்பாடு. வாழ்க்கையை நடத்துவது முதல் பிரச்சினை. உணவு, உடை, இருப்பிடம் இம்மூன்றும் மனிதனின் அடிப்படை தேவைகள். இவை மூன்றையும் முழுமையாக அடைவதற்காக அவன் பாடுபடுகிறான். தீவிர முயற்சி செய்கிறான். தன் பாதுகாப்பு குறித்தும் ஒவ்வொருவருக்கும் கவலை. ஒரு மனிதன் 24 மணிநேரமும் இதைக் குறித்தே சிந்தித்து கொண்டிருந்தால் அவன் எப்பொழுது முழுமையான வளர்ச்சி அடைவது? மனதினாலும், அறிவினாலும், ஆத்மாவினாலும் சுகம் கிடைப்பது எவ்வாறு?

இந்தக் கேள்விகளுக்கு விடையளிக்கிறார் ஸ்ரீ குருஜி; “நமது முன்னோர்கள் மிகுந்த உலக அனுபவமுள்ளவர்கள். சாதாரண மனிதனின் நாட்டம், ஆசை இவற்றை கருத்தில்கொண்டு அவனை இறுதி லட்சியத்தை அடையச் செய்ய வேண்டும் என்ற சிந்தனை அவர்களுக்கு இருந்தது. வயிற்றுப்பாட்டை பார்த்துக் கொண்டபிறகு சாமானிய மனிதர்கள் ஆன்மீகத்தில் ஈடுபட நேரம் கிடைக்க வேண்டும் என்று அவர்கள் எண்ணினர். எனவே மனிதன் பிறந்த உடனேயே பிழைப்புக்கு உத்தரவாதம் தரும் கட்டமைப்பை உருவாக்கினார்கள். அதற்காக ஒரு தனிமனிதனை பாரம்பரிய தொழிலுக்கு தயார் செய்து, குடும்பத்தைக் காப்பாற்றச் செய்வது அவசியமாக இருந்தது. இவ்வாறு வெவ்வேறு தொழில்புரியும் மக்களை தொழில்வாரி ஒன்றிணைத்து ஜாதிகளின் வடிவத்தில் ‘அரசாங்கத்தின் தலையீடு இல்லாத தேசீய காப்பீ டு’ (National Insurance Scheme without Government Interference) என்னும்படியான அமைப்பை ஏற்படுத்தினார்கள். அவரவர் தனது பிறவியினால் வந்த தொழிலினால் குடும்பத்தை காப்பாற்றி அமைதிகரமாக ஆன்ம தத்துவத்தை சிந்தித்து வரவே, நற்பண்புகளின் களஞ்சியமாக சமுதாயம் ஆகமுடிந்தது.” (அகிலபாரத ஜில்லா பிரச்சாரக் வர்க, சிந்தி, விதர்ப-1954)

சமுதாயம் உயிரோட்டமுள்ள அமைப்பு என்ற கோட்பாட்டினால் நாம் அனைவரும் சமுதாயத்தின் அங்கங்கள். உயிரோட்டமுள்ள ஒரே சமுதாயம் என்பதால் நாம் அனைவரும் சமம், ஒருவருக்கொருவர் நிறைவு செய்து கொள்கிறோம் – என்பது ஸ்ரீ குருஜியின் கருத்து. “இந்த கருத்தை பின்பற்றி ஒருமைப்பாடு காண்போம். சேதுவிலிருந்து இமயம் வரை உள்ள முழுமையான தேசத்தை உயர்ந்த, சிறந்த தெய்வீக சைதன்ய உருவமாக கண்டு, அதன் அங்கங்களான நாம் அனைவரும் ஒன்று என்று தெளிந்து, அனைத்து அங்கங்களும் புனிதமானவை என உணர்வோம்.’ (ஸ்ரீ குருஜி சிந்தனைக் களஞ்சியம், தொகுதி-2, பக்கம்-122)

மனித சமுதாயத்தில் இயல்பாகவே ஏற்றத்தாழ்வு உண்டு. அது நம்மை பாதிக்காமல் பார்த்துக் கொள்வதே புத்திசாலிதனம். பிழைப்புக்கு உத்தரவாதம், வயிற்றுப் பாட்டுக்கு உத்தரவாதம், பரஸ்பர ஒத்துழைப்பு இவற்றின் வாயிலாக இந்த ஏற்றத்தாழ்வை நீக்கமுடியும். மனிதன், மிகச் சிறந்த இசைவு இணக்கம் வாய்ந்து வாழும் அருகதை உள்ளவனாக விளங்க வேண்டும். இது ஒரு முடவனுக்கும், பார்வையற்றவனுக்கும் இடையே உள்ள இணக்கம் போன்றது. முடவனுக்கு காலும், பார்வையற்றவனுக்கு கண்ணும் கிடைக்கிறது. ஏற்றத்தாழ்வினால் வரும் கசப்பான உணர்வை ஒத்துழைப்பு நீக்குகிறது. நமது கண்ணோட்டத்தில், தனிமனிதனுக்கும் சமுதாயத்திற்கும் இடையேயான உறவு மோதலாக இல்லாமல், இணக்கமாகவும் ஒத்துழைப்பாகவும் அமைந்திருந்தது. (ஞான கங்கை )

ஸ்ரீ குருஜி ‘வர்ண முறை’, ‘ஜாதி முறை’ ஆகிய சொற்றொடர்கள் பயன்படுத்துகிறார். இன்று வர்ண வேறுபாடு, ஜாதி வேறுபாடு என்ற சொற்கள் இன்றும் வழக்கத்தில் உள்ள சொற்கள். இன்று அதன் நிலை ‘தலைகீழாக மாறிவிட்டது’ என்று ஸ்ரீ குருஜி கருதினார். வர்ணமுறையினாலும், ஜாதிமுறையினாலும் நமது சமுதாயம் வீழ்ச்சி அடைந்து அந்நியர் பிடியில் சிக்கிவிட்டது என்பதை ஸ்ரீ குருஜி ஏற்றுக்கொள்ளவில்லை. இது வரலாற்று ரீதியில் சரியல்ல” என்கிறார். ஸ்ரீ குருஜி முன்வைக்கும் வாதம் இது:

”கடந்த ஆயிரம் ஆண்டுகளாக ஒற்றுமை இன்மையால் நமது தேசம் அந்நியர்களின் ஆதிக்கத்தில் இருந்தது. நம்மிடையே நிலவிய ஜாதிவேறுபாடுகள் அந்நியர்களின் படையெடுப்புக்கு உதவியதே அதற்கு மூல காரணம் என்று கூற இயலாது. தில்லியின் ஹிந்து அரசன் பிருதிவிராஜை முகமது கோரி வென்றதற்கு, பிருதிவிராஜின் உறவினனான ஜெயச்சந்திரனே காரணம். காட்டில் ராணா பிரதாபை துரத்தி வந்த மான்சிங்கும் அவனது ஜாதியைச் சேர்ந்தவனே, சிவாஜி மகாராஜாவுக்கும் அவரது ஜாதியினரே பகைவர்களாக இருந்தனர். ஜாதிவேறுபாடு இதற்கு ஒருபொழுதும் காரணமாக இருந்ததில்லை. (ஸ்ரீ குருஜி சிந்தனைக் களஞ்சியம், தொகுதி-11)

(இந்த எல்லா எடுத்துக்காட்டுகளும் அரசியல் சட்டத்தை நிறுவிய டாக்டர் அம்பேத்கர் 1949, நவம்பர் 25 அன்று அரசியல் நிர்ணய சபையில் ஆற்றிய நிறைவுரையில் இடம் பெற்றுள்ளன).

ஸ்ரீ குருஜி முன்வைக்கும் இன்னொரு கருத்து, “நம்மிடையே நிலவும் ஜாதிவேறுபாடுகளே நமது நலிவிற்கு காரணமென்றால், நமது சமுதாயம் ஜாதிகளே இல்லாத அந்நியர்களின் ஆக்கிரமிப்பிற்கு வெகு எளிதாக மண்டியிட்டிருக்கும். முஸ்லிம் ஆக்ரமிப்பாளர்கள், ஈரான், எகிப்து, ரோம், சீனா என்று தங்கள் வழியில் எதிர்ப்பட்ட பல நாடுகளைச் சேர்ந்தவர்களை கூட, தனது காலடியில் நசுக்கிவிட்டனர். அந்த நாடுகளில் மக்களிடையே ஜாதி உபஜாதி வேறுபாடுகள் இருந்ததில்லை . ஆயிரம் வருடங்களாக நமது மக்கள், அச்சமூட்டக்கூடிய படையெடுப்புகளால் அழியவில்லை, மாறாக தீவிரமாகவும், வீரத்துடனும் எதிர்த்து, இறுதியில் பகைவர்களின் வலிமையை முழுவதுமாக அழித்தனர். (ஸ்ரீ குருஜி சிந்தனைக் களஞ்சியம், தொகுதி 11)

அதாவது, சமுதாயத்தின் நலனுக்காக இன்றுள்ள வர்ண வேறுபாடுகளையும், ஜாதிவேறுபாடுகளையும் அப்படியே வைத்துக் கொள்வது அவசியம் என்று பொருள் கொள்வது மிகவும் தவறு. ஸ்ரீகுருஜியின் கருத்து இதுவல்ல. இன்று திரிபுதான் சமுதாயத்தில் எஞ்சியிருக்கிறது. எனவே அதை முடிவிற்கு கொண்டுவருவதே உகந்தது. “சந்தேகத்திற்கிடமின்றி இன்று ஜாதிமுறைகள் எல்லா விதங்களிலும் கெட்டுவிட்டது. புதிய வீடு கட்டும்பொழுது பழைய வீட்டை இடிக்கத்தான் வேண்டும். இன்று சீர்கெட்டுள்ள சமுதாயக் கட்டமைப்பை முழுவதுமாக தகர்த்துவிட வேண்டும், அதிலிருந்து புதிய சமுதாயத்தை உருவாக்க வேண்டும். இன்று நாம் அனைவரும் ஒன்று என்ற உணர்வுள்ள சமுதாயம் உருவாக்க நமது அப்பழுக்கற்ற தேசிய உணர்வை மனதில் நிலைநிறுத்தி, உயிர்ப்புள்ள, ஒருங்கிணைந்த சமுதாயத்தை உருவாக்கவேண்டும் என்ற எண்ணம் கொண்டவர்களை ஒருங்கிணைக்க வேண்டும்” என்பது ஸ்ரீ குருஜியின் எண்ணம்.

பல கார்யகர்த்தர்கள் ஸ்ரீ குருஜியிடம் வர்ண முறை மற்றும் ஜாதிமுறைகள் குறித்து கேள்விகளை எழுப்பினர். இதற்கு அவர் அளித்த விடைகளிலிருந்து, வர்ணமுறை, ஜாதிமுறை குறித்த ஸ்ரீகுருஜியின் கண்ணோட்டம் தெளிவாகிறது.

கேள்வி: ஹிந்து ராஷ்ட்ரம் என்ற கருத்தை எதிர்ப்பவர்கள், முன்பு நமது நாட்டில் நிலவிய வர்ண, ஜாதிமுறைகளை கொண்டுவந்து, அதன் அடிப்படையில் தீண்டாமையை வளர்த்து, பிராமணர்களின் ஆதிக்கம் ஏற்படுத்தப்படும். இவ்வாறு நேர்மாறாக அர்த்தம் செய்து கொண்டு நம்மீது குற்றம் சாட்டுகின்றனர். இந்தக் கருத்தினால் நாட்டிற்கு நெருக்கடி ஏற்படும். அது பாதகம் விளைவிக்கும் என்று பேசுகிறார்கள்.

பதில்: இந்த கலியுகத்தில் அனைத்து வர்ணங்களும் ஒழிந்து, ஒரே ஒரு வர்ணம்தான் நிலவும் என்று கூறப்பட்டுள்ளது. வர்ணமுறை, ஜாதிமுறை என்னும் சொற்களை கேட்கும் நம் மனதில் தயக்கம் ஏற்பட்டு ‘மன்னிப்பு கோரும் மனநிலை, நமக்கு ஏற்பட்டு விடுகிறது. ஒரு காலகட்டத்தில் இந்த முறைகள் சமுதாயத்தில் நிலவின என்று தெளிவாகச் சொல்வோம். அவை நன்மை பயப்பதாக இருந்தன. இன்று இந்த முறைகளால், நன்மை ஏதும் இல்லாததால், நாம் அவற்றை உடைத்துவிட்டு புதிய முறைகளை உருவாக்குவோம்.

உயிரியலில் வளர்ச்சி என்பது எளிமையாக தொடங்கி நுட்பமானதில் முடிகிறது. ஒரு சிசுவிற்கு முதல் நிலையில் கை, கால் முதலியன தோன்றுவதில்லை. மாமிசப் பிண்டமாகவே இருக்கிறது. இதன் மூலமாகவே உண்பது, அருந்துவது, வெளியேற்றுவது முதலிய செயல்கள் நடைபெறுகின்றன. அது வளரும் மற்ற செயலுறுப்புகள் தோன்றுகின்றன. இத்தகைய பரிணாம வளர்ச்சி சமுதாயத்திலும் உள்ளது. இது ஏற்படாத சமுதாயம், வளர்ச்சியடையாத சமுதாயமாகும். வெறும் ஆயுதங்களை செய்வது மட்டுமே வளர்ச்சியல்ல. நமக்கு சமுதாயத்தை கடவுளாக பாவிப்பதை தவிர வேறொன்றும் தெரியாது. சமுதாயத்தின் எந்த அங்கமும் தீண்டத்தகாததல்ல, வெறுக்கத்தக்கதல்ல. ஒவ்வொரு பிரிவும் புனிதமானது என்பதை நாம் நினைவில் கொள்ளவேண்டும். உயர்ந்தது, தாழ்ந்தது என்ற எண்ணம் சமுதாயத்தின் அங்கங்கள் குறித்து ஏற்படக்கூடாது. நாம் இதை நினைவில் கொண்டு சமுதாயத்தை உருவாக்குவோம். கடந்த காலத்தை குறித்து மன்னிப்பு கோரும் மனப்பான்மை வேண்டாம். மற்றவர்களை நோக்கி கேட்போம்: “நீங்கள் யார்? பல நூற்றாண்டு மனித சமுதாய வளர்ச்சியில் உங்கள் பங்கு என்ன? இன்றும் உங்கள் செயல்பாட்டினால் மனிதனுக்கு நன்மை விளையும் என்று உத்திரவாதம் இல்லை. இதில் எங்களுக்கு புத்திமதி சொல்ல நீங்கள் யார்? இது நமது சமுதாயம். நமது சமுதாயத்தை நாம் ஒருமித்த கருத்துடையதாக உருவாக்குவோம். அதன் பல்வேறு வீர செயல்களையும் அறிவாற்றல்களையும் வெளிப்பட செய்வோம்.”

கேள்வி: ஜாதி குறித்து தங்களது உறுதியான கண்ணோட்டம் என்ன?

பதில்: சங்கம் எந்த ஜாதியையும் ஏற்பதில்லை. சங்கத்தைப் பொருத்தவரை ஒவ்வொருவரும் ஹிந்து. ஜாதி என்பது ஒரு காலகட்டத்தில் சிறந்த அமைப்பாக விளங்கியது. ஆனால், இன்று அது பொருத்தம் அற்றதாகி விட்டது. வளைந்து கொடுக்கும் தன்மையற்றவர்கள் ஜடம் போன்று கடினமாகி விடுவார்கள். தீண்டாமையை சட்டத்தின் மூலமாக மட்டுமன்றி நிஜவாழ்க்கையிலும் ஒழிக்கவேண்டும் என்று நான் விரும்புகிறேன். சமயத் தலைவர்கள் தீண்டாமையை ஒழிப்பிற்கு சமய ரீதியாக அங்கீகாரம் அளிக்க வேண்டும் என்பதும் எனது விருப்பம். உயர்வு – தாழ்வு பாராமல் வேறுபாடில்லாமல், அதிகபட்ச திறனுடன் அவரவர் தன் கடமையாற்றுதலே, மனிதனின் உண்மையான சமயம். செய்யும் தொழிலே தெய்வம். அதை வழிபாடாகவே கருதுதல் வேண்டும். நான் ஜாதி என்பதை பழங்கால கவசமாக காண்கிறேன். ஒரு காலகட்டத்தில் அது தன் கடமையைச் செய்தது. ஆனால் இன்று அது பொருந்தாது. மற்ற பகுதிகளுடன் ஒப்பிடுகையில், மேற்கு பஞ்சாபிலும், கிழக்கு வங்காளத்திலும் ஜாதிமுறைகள் வலுவற்றதாக இருந்தது. இதன் காரணமாகத்தான், இந்த இடங்கள் இஸ்லாத்திடம் தோன்றன. ஜாதிமுறைகளே நாம் அடிபணிந்ததற்கு காரணம் என்பது, சுயநலவாதிகளால் புகுத்தப்பட்டது. இத்தகைய அர்த்தமற்ற பேச்சுகளை கண்டிக்க நான் தயாராக இல்லை. ஒரு காலத்தில் ஜாதி சிறந்த அமைப்பாக இருந்தது. மற்ற எல்லாம் கலகலத்துப் போன வேளையில் சமுதாயத்தை கட்டுக் கோப்பாக வைப்பதற்கு ஜாதிமுறை பெரிதும் உதவியது.

கேள்வி: ஹிந்து கலாசாரம் வளர்ச்சி அடையும்போது வர்ணமுறை மீண்டும் நிறுவப்படுமா?

பதில்: தேவையில்லை. நாம் சாதிமுறையின் ஆதரவாளர்களுமல்ல, எதிர்ப்பாளர்களும் அல்ல. அது குறித்து நமக்குத் தெரிவதெல்லாம், கடந்த காலத்தில் அது மிகவும் நன்மை பயக்கக்கூடிய அம்சமாக இருந்தது. இன்று சமுதாயம் அது தேவை இல்லை என்று எண்ணினால், அது தானாகவே ஒழிந்துவிடும். அதற்காக யாரும் வருந்தவே வேண்டாம்.

கேள்வி: ஹிந்து சமுதாயத்திற்கு வர்ண அமைப்பு இன்றியமையாததல்லவா?

பதில்: வர்ண அமைப்பு ஹிந்து சமுதாயத்தின் நிலைமையோ அல்லது ஆதாரமோ அல்ல. அது ஒரு ஏற்பாடு அல்லது வழிமுறையே ஆகும். அது தற்பொழுது நன்மை பயக்குமா பயக்காதா என்பதன் அடிப்படையில், வர்ண முறையை நீடித்து இருக்கவிடலாம், அல்லது ஒழிக்கலாம்.

தொடரும்…

ஆர்.எஸ்.எஸ் வளர்ந்த வரலாறு 6

எதிர்ப்புகளுக்கிடையேயும் வளர்ச்சி

இயற்கையாக உங்கள் மனதில் எழக்கூடிய இன்னொரு கேள்வி: சங்கத்தின் சிந்தனைகள் – செயல்களை யாருமே எதிர்க்கவில்லையா?

உண்மையில் சங்கம் பிறந்தது முதலே பலவகையான பொய்ப் பிரச்சாரங்களுக்கும், பயங்கர எதிர்ப்புகளுக்கும் இலக்காகி வந்துள்ளது. டாக்டர்ஜி எத்தனை தீவிரமான தேசபக்தர் என்பதை இக்கதையின் தொடக்கத்திலேயே உங்களுக்குக் கூறியிருக்கிறேன் அல்லவா?

எனவே அச்சமயத்தில் ஆங்கிலேய ஆட்சியாளர்களின் கழுகுப் பார்வை எப்போதும் சங்கத்தின் மீதே இருந்தது. மூன்றுமுறை சங்கத்துக்கு தடை விதிக்கவும் ஆங்கிலேய அரசு முயற்சி செய்தது. ஆனால் டாக்டர்ஜி மற்றும் ஸ்ரீ குருஜியின் திறமையினாலும், மக்கள் ஆதரவினாலும் அம்முயற்சிகள் தோல்வியடைந்தன.

பாரதம் விடுதலை அடைந்த பின்பும் எதிர்ப்புகள் குறையவில்லை. 1948-இல் காந்திஜி கொலை செய்யப்பட்ட பிறகும், 1975-77இல் நெருக்கடிக் காலத்திலும் தடை விதிக்கப்பட்டது. அண்மையில் 1992-இல் அயோத்தி கரசேவைக்குப் பிறகும் கூட, தடை விதிக்கப்பட்டது. ஆனால் ஒவ்வொரு முறையும் அரசே நிபந்தனையின்றித் தடையை விலக்கிக் கொள்ள வேண்டியிருந்தது. (1992ன் தடை, நீதிமன்றத் தீர்ப்பின்படி விலகியது) ஒவ்வொரு முறையும் சங்கம் புடம் போட்ட தங்கம்போல அதிக ஒளியுடன், வலிமையுடன், மக்களின் ஆதரவுடன் வெளிவந்துள்ளது.

தடை விதித்தவர்கள் யார்?

சங்கத்துக்கெதிராக இப்போதும் இடைவிடாது பொய் பிரச்சாரத் தாக்குதல் நடைபெற்று வருகிறது. ஷாகாக்களின் விஸ்தரிப்புடன் கூட தேசிய வாழ்வின் – அரசியல் உள்ளிட்ட – அனைத்துத் துறைகளிலும் சங்கத்தின் செல்வாக்கு வளர்ந்துள்ளதையடுத்து, சங்கத்தைப் பற்றிப் பல விதமான எதிர்ப்புப் பிரச்சாரங்களும் வளர்வது இயற்கையே. ஆனால், சங்கம் மற்றும் அதனுடன் தொடர்புள்ள அமைப்புகளின் மீது பழி சுமத்துபவர்கள் எப்படிப்பட்டவர்கள்?

உங்களுக்கும் இந்த விஷயம் விளங்கியிருக்கும் – இவர்கள் சில அரசியல் மற்றும் மதத் தலைவர்களும், குறிப்பாக ஆங்கிலப் பத்திரிகைகள், கம்யூனிஸ்டுகள், கிறிஸ்தவப் பாதிரிகளும்தான். ஹிட்லரிடம், கோயபெல்ஸ் என்ற பிரச்சார மந்திரி ஒருவன் இருந்தான். அவன் ‘பொய்யையே நூறு முறை திரும்பத் திரும்பக் கூறினால் அது மெய்போலத் தோன்றத் தொடங்கிவிடும்’ என்பான். இந்தக் குற்றம் சாட்டுபவர்கள் எல்லாம் அவனது நேர் சீடர்கள் போலும்!

காந்திஜி கொலை தொடர்பான பழி ஆதாரமற்றது

உதாரணமாகப் பாருங்கள்…. காந்திஜியைக் கொன்றது சங்கம்தான் என்ற குற்றச்சாட்டு குறித்து 27.2.1948-இல் நேருவுக்கு சர்தார் படேல் கடிதம் எழுதினார். ‘காந்திஜியின் கொலையில் சங்கத்தின் உறுப்பினர் எவருக்கும் தொடர்பில்லை’ என்பதை அக்கடிதத்தில் குறிப்பிட்டு இருந்தார். பிறகு நீதிபதி ஆத்ம சரணின் தனி நீதிமன்றத்தில் அரசு தாக்கல் செய்த குற்றப்பத்திரிகையில் சங்கத்தின் பெயரோ எந்தவொரு ஸ்வயம்சேவகரின் பெயரோ குறிப்பிடப்படவில்லை. அதன்பிறகு, 1965-இல் பிரத்யேகமாக நியமிக்கப்பட்ட கபூர் கமிஷனின் அறிக்கையும் சங்கத்தை நிரபராதி என்றே கூறியது. 1977-இல் அன்றைய பிரதமர் ஸ்ரீ மொரார்ஜி தேசாய் நாடாளுமன்றத்தில் இதே விஷயத்தை கூறினார்.

உண்மை இப்படி இருக்க, காந்தி கொலைப் பழியை சங்கத்தின் மீது மீண்டும் மீண்டும் சுமத்திவருபவர்கள் கோயபெல்சின் சீடர்களா இல்லையா, நீங்களே சொல்லுங்கள்.

சங்கம் மதவாத அமைப்பு; முஸ்லிம்களுக்கும், கிறிஸ்தவர்களுக்கும் எதிரானது என்பதும் இதேபோன்று மற்றொரு அடிப்படையற்ற குற்றச்சாட்டு. இதுவரை நாடெங்கிலும் எத்தனையோ மதக்கலவரங்கள் நடந்துள்ளன. அவை தொடர்பாக நியமிக்கப்பட்ட விசாரணைக் கமிஷன் ஒவ்வொன்றுமே சங்கத்தை நிரபராதி என்றே நிறுவியுள்ளன. கன்னியாகுமரி – மண்டைக்காடு கலவரம் பற்றி நீதிபதி வேணுகோபால் கமிஷன் கூறியுள்ளது என்ன? “கிறிஸ்தவ மதமாற்ற முயற்சிகளுக்கு ஹிந்துக்களின் பதிலடிதான் அது; மதமாற்றத்தைத் தடை செய்ய வேண்டும்” என்றுதான் அந்தக் கமிஷன் அரசுக்கு அறிவுறுத்தியது.

பிரமுகர்களின் கருத்து என்ன?

டாக்டர் ஜாகிர் ஹுசைன் (பாரதத்தின் முன்னாள் குடியரசுத் தலைவர்) 1949 நவம்பர் 20 அன்று பீகாரில் நடந்த மிலாது விழாவில்: “சங்கத்தைச் சேர்ந்தவர்கள் முஸ்லிம்களை வெறுக்கின்றனர், அவர்களைத் தாக்குகின்றனர் என்பது போன்ற குற்றச்சாட்டு முற்றிலும் பொய்யானது. சங்கத்திடமிருந்து பரஸ்பர அன்பு, ஒத்துழைப்பு, ஒருங்கிணைக்கும் திறமை இவற்றை முஸ்லிம்கள் கற்றுக் கொள்ள வேண்டும்”.

ஸ்ரீ கோகா சுப்பாராவ்ஜி பாரதத்தின் முன்னாள் தலைமை நீதிபதி – பெங்களூரில் 25 ஆகஸ்டு 1968-ல் சங்க குருதக்ஷிணா விழாவில்) “ராஷ்ட்ரீய ஸ்வயம்சேவக சங்கம் தேசிய விழிப்புணர்வை ஏற்படுத்தும் மாபெரும் பணியில் ஈடுபட்டுள்ளது. இது தேசத்தின் ஒற்றுமையையும் ஒருமைப்பாட்டையும் காப்பதில் ஒரு வலிமை வாய்ந்த கருவியாக வளரும். சங்கம் மதசார்பின்மைக்கு எதிராகப் பிரச்சாரம் செய்கிறது என விமர்சிப்பது முற்றிலும் அபத்தமானது”.

இருப்பினும் சில அரசியல்வாதிகள் சங்கத்தை மதசார்பின்மைக்கு விரோதி என ஏன் குற்றம் சாட்டுகிறார்கள்? இதற்குக் காரணம் மிக எளிது. ஹிந்துக்கள் இப்போது விழிப்படைந்து வருகின்றனர். அரசியல் கட்சித் தலைவர்கள் ஒவ்வொரு வகையிலும் தங்களைப் புறக்கணிப்பதையும் கிண்டல் செய்வதையும் கண்டு ஹிந்துக்களது மனதில் கோபம் எழுகிறது. ஹிந்துக்களல்லாதவர்களின் ஓட்டு வங்கியைக் கருத்தில் கொண்டு ஹிந்துக்களை விட அவர்களுக்கு மிக அதிகமான உரிமைகளையும் சலுகைகளையும் வழங்கி வரும் அந்த அரசியல்வாதிகளின் தேர்தல் விளையாட்டுக்களும், ஹிந்துக்களின் கவனத்துக்கு வருகின்றன. அவர்களுக்கெதிராக தேர்தல் பாஷையில் எதிர்ப்பையும் ஹிந்துக்கள் வெளிப்படுத்தத் தொடங்கியுள்ளனர். அவர்களது உண்மையான முகத்தை ஹிந்துக்கள் இனங்கண்டு கொண்டு விட்டனர்.

சங்கம் வேறு, அரசியல் பணி வேறு

சிலர் சங்கம் மற்றும் பா.ஜ.கவின் பரஸ்பர உறவு பற்றியும் விதவிதமான கேள்விகளைக் கேட்டுக் கொண்டேயிருக்கின்றனர். இக்கதையின் தொடக்கத்திலேயே கூறியுள்ளேன், ஸ்வயம் சேவகர்கள் தேசிய வாழ்வின் எல்லாத் துறைகளிலும் ஹிந்துத்வக் கருத்தினைக் கொண்டு சென்று சங்கத்தில் பெற்ற பண்புப்பதிவுகளைக் கொண்டு அந்தத் துறைகளில் தாக்கம் ஏற்படுத்தி வருகின்றனர். அவைகளில் அரசியல்துறையும் ஒன்று. அந்த அமைப்புக்கள் அனைத்துக்கு மிடையில் உள்ள ஒரே உறவு, அனைவரும் ஸ்வயம் சேவகர்கள் என்பதே. பல்வேறு துறைகளில் நடைபெற்றுவரும் அமைப்புகளைப் போன்றே பா.ஜ.கவும் சுதந்திரமாகச் செயல்பட்டு வருகிறது. பா.ஜ.க ஆட்சி நடக்கும் மத்தியிலோ, மாநிலங்களிலோ கொள்கை வகுப்பதில் சங்கத்தின் தலையீடு ஏதுமில்லை.

இப்படிப்பட்ட எதிர்ப்புக்கள் அனைத்துக்கும் ஒரே காரணம் சங்கத்தின் வளர்ந்து வரும் செல்வாக்கால் அவர்கள் மனத்தில் தோன்றியுள்ள அச்சமே. சுவாமி விவேகானந்தரின் இந்தக் கருத்துரை ஸ்வயம்சேவகர்களுக்கு மிக நன்றாகத் தெரியும்: “ஒவ்வொரு அரும்பணியும் நான்கு நிலைகளைக் கடக்க வேண்டியுள்ளது – புறக்கணிப்பு, கேலி, எதிர்ப்பு, இறுதியில் வெற்றி” எனவே இறுதி வெற்றியில் தளராத நம்பிக்கை கொண்டு, ஸ்வயம் சேவகர்கள் செயலில் இறங்கியுள்ளனர்.

ஹிந்து என்ற முறையில் உங்களிடம் அன்பான வேண்டுகோள்

மிகச் சுருக்கமாக சங்கத்தின் கதையை இதுவரை கூறினேன். இதைக் கேட்ட பிறகு உங்களுக்கு நிச்சயமாகத் தோன்றக்கூடிய கருத்து – சங்கப்பணி விரைவாக முன்னேறாவிட்டால் நாட்டுக்கு இன்னும் பல கோரமான பேரழிவுகள் ஏற்படலாம். எனவே இப்பணியை விரைவாக முன்னேற்ற வேண்டி உங்களைப் போன்ற, புதிய புதிய பல்லாயிரம் பேர் இப்புனிதப் பணியில் தோள்கொடுக்க வேண்டியிருக்கும். எனவே இயன்ற வரையில் – ராமாயண அணிலைப் போல – நமது ஹிந்து தேசத்துக்காக நேரம் கொடுப்பது ஒவ்வொரு ஹிந்துவின் முதல் கடமை என்று உங்களுக்குத் தோன்றியிருக்கும். எனவே, இப்போது நீங்கள் இக்கதையைப் படிப்பவராகவும் கேட்பவராகவும் மட்டும் இருந்து விடாமல், இக்கதை, தொடரச் செய்வதில் பங்கெடுத்துக் கொள்ள ‘நான் தகுதியுள்ளவன் என உணர்ந்து செயல்படுங்கள்; சங்கத்துடன் தொடர்பு கொள்ளுங்கள்’ என ஓர் ஹிந்து சகோதரன் என்ற முறையில் நான் உங்களிடம் அன்பான வேண்டுகோள் விடுக்கிறேன்.

கங்கா மாதா போன்றது இந்தக் கதை

நீங்களும், நாங்களும், அனைவரும் பங்கு கொள்ளும் கதை இது. நாமனைவரும் சேர்ந்து உருவாகும் சமுதாயம் புத்தெழுச்சி பெற்றுயர மேற்கொள்ளும் மாபெரும் முயற்சிகளின் கதை இது. அதாவது நமது ஹிந்து சமுதாயத்தை விழிப்படையச் செய்து ஒருங்கிணைத்து நமது அன்புக்குரிய தாய்நாடாகிய பாரதமாதாவை சிறப்பின் மிக உயர்ந்த சிகரத்தில் ஏற்றும் வகையில் மெல்ல மெல்ல முன்னேற்றுவதுதான் இந்தக் கதை.

1925-இல் டாக்டர் ஹெட்கேவார் கண்ட வரலாற்றுச் சிறப்புமிக்க அந்தக் கனவின் நடைமுறைச் செயல்வடிவத்தின் கதை இது. எல்லா கதைகளுக்கும் முடிவு ஏதாவதொரு கட்டத்தில் உண்டு. ஆனால் இது ஒரு தொடர் கதை.

இந்தப் புனித நீரோட்டம், கடல் போன்ற ஹிந்து சமுதாயத்தைத் தனது மடியில் உட்காரவைத்துக் கொண்டு, அதனை மிகத் தூய்மையாகவும், ஒளி பொருந்தியதாகவும், வெற்றித்திருவுடையதாகவும் செய்து கொண்டு, உலகமனைத்தையும் சுகமளித்து வாழ வைப்பதாக ஆக்கிக் கொண்டு, வாழையடி வாழையாக முன்னேறிக் கொண்டிருக்கும்.

ஆர்.எஸ்.எஸ் வளர்ந்த வரலாறு 5

மக்களாதரவு பெருகினாலும் அதே பார்வை

இதே போன்ற வேறொரு நிகழ்ச்சியும் உண்டு. 1948 – பிப்ரவரி தொடக்கத்தில் சங்கத்தின் மீது தடை விதிக்கப்பட்டது. 1949-ல் தடை நீக்கப்பட்ட பிறகு ஸ்ரீ குருஜி நாடெங்கிலும் சுற்றுப்பயணம் செய்தார். இதையொட்டி ஆங்காங்கே அவருக்கு மக்கள் அளித்த பாராட்டு விழாக்களில் மாபெரும் எண்ணிக்கையில் மக்கள் திரண்டனர். டில்லி விழாவில் குழுமியிருந்த கடல்போல் பரந்த மக்கள் கூட்டத்தைக் கண்டு லண்டன் பி.பி.சி. விமர்சித்தது: “இன்று பாரதத்தில் இரண்டே இரண்டு பேருடைய பேச்சைக் கேட்பதற்குத்தான் மக்கள் பெரும் எண்ணிக்கையில் கூடுகின்றனர். ஒருவர் பிரதமர் நேரு. மற்றொருவர் ஆர்.எஸ்.எஸ் ஸின் ஸ்ரீ கோல்வல்கர்”.

பெருமளவு மக்கள் ஆதரவும் உற்சாகமும் கிடைத்தும் கூட சிலநாட்கள் முன்தான் தன்மீதும், பல்லாயிரம் ஸ்வயம் சேவகர்கள் மீதும் கோரமான அட்டூழியம் கட்டவிழ்த்து விடப்பட்டிருந்தும் துளியளவு காழ்ப்புணர்வும் அவர் மனதில் தோன்றவில்லை. ஸ்வயம் சேவகர்களுக்கு தெளிவுபடுத்திச் சொன்னார்: “உணவருந்தும் போது தவறுதலாக நாக்கைக் கடித்துக் கொண்டோமானால் அதற்காக நாம் பற்களைப் பிடுங்கியெறிந்து விடுகிறோமா என்ன? அதே போல் இன்று நமது நாட்டின் தலைவர்களும் நம்மவரே என்பதை நினைவில் கொள்வோம்”.

சங்கம் இந்திராவின் திட்டத்தை ஏன் நிராகரித்தது?

1975-77-ன் நெருக்கடிக் காலத்தின் இறுதி நாட்களில் நிகழ்ந்த ஒரு நிகழ்ச்சி இது. ஸ்வயம்சேவகர்களால் நடத்தப்பட்ட நாடு தழுவிய வலுவான தலைமறைவு இயக்கத்தினால் தனது ஆட்சிபீடம் ஆட்டம் கண்டுவிட்டது என்பதை இந்திரா காந்தி உணர்ந்தார். அவர் சங்கப் பிரமுகர்களிடம் தனது உளவுத் துறையின் முக்கியஸ்தர் ஒருவரை தூது அனுப்பினார். சங்கம் இந்த இயக்கத்திலிருந்து விலகிக் கொண்டால், சங்கத்தின் மீது விதிக்கப்பட்டிருக்கும் தடையை விலக்கிக் கொள்ளத் தயார் – என்று செய்தி அனுப்பினார். சங்கப் பிரமுகர்கள் அதற்கு “எந்தச் சூழ்நிலையிலும் தன்னைக் காப்பாற்றிக் கொள்வதற்காக நாட்டைக் கைவிட, சங்கம் தயாரில்லை – என்று தெள்ளத்தெளிவாக பதிலளித்தார்கள்.

அரசியலிலிருந்து ஏன் விலகியிருக்கின்றனர்?

நமது சமுதாயத்தைப் பிளவு படுத்தும் மற்றொரு விஷயம் சுதந்திரத்துக்குப் பின் தீவிரமடைந்து வருகிறது; அதுதான் அரசியல் கருத்து வேறுபாடு, பதவி மோகம், சுயநலம். சமுதாயத்தில் சாதி – மத – இன வேறுபாடுகளை விரோதங்களாக அரசியல் கட்சித் தலைவர்கள் திரித்துக் கூறிவருகின்றனர். ஹிந்துக்களின் ஒற்றுமையைக் கொளுத்தி அந்த நெருப்பில் தேர்தல் குளிர் காய்கின்றனர். டாக்டர்ஜி, அரசியலில் தான் இருந்ததன் காரணமாக, சமுதாயத்துக்கு ஏற்படக்கூடிய தீங்கினை மிக நன்றாக அறிந்திருந்தார். எனவே மஹாராஷ்ட்ரத்தில் புகழ்பெற்ற, செல்வாக்குள்ள அரசியல் தலைவராக இருந்தபோதிலும், சங்கத்தை நிறுவிய பின் எல்லாவகையான அரசியல் ஆரவாரங்களில் இருந்தும் அவர் விடுபட்டார், சங்கத்தையும் சுதந்திரமாக வைத்துக் கொண்டார். இன்றும் சங்கம், இதே கொள்கையைக் கவனமாகக் கடைப்பிடித்து வருகிறது.

ஆட்சி மற்றும் அரசியலிலிருந்து எப்போதும் விலகியிருத்தல்

பாரதம் விடுதலையான பின்னரோ அரசியலும் தேர்தலும் மட்டுமே தேசியவாழ்வின் மையப் புள்ளி என்பது போல ஆகிவிட்டது. இதனால் அநேக ஹிந்துத்வ ஆதரவாளர்கள் ‘சங்கம் போன்ற செல்வாக்குமிக்க அமைப்பு அரசியல் களத்தில் இறங்கினால் ஹிந்து சமுதாயத்துக்கு மிகுந்த நன்மை ஏற்படும்’ என்று எண்ணுகிறார்கள். ஆனால் சங்கம் தொடக்கத்தில் இருந்தே தனது கொள்கையில் உறுதியாக இருக்கத் தீர்மானித்து, அரசியலிலிருந்து விலகியே உள்ளது.

1948-49இல் சங்கத்தின் மீது தடை விதிக்கப்பட்டிருந்த போது, அப்போதைய மத்திய உள்துறை அமைச்சர் சர்தார் வல்லபாய் படேல் ஸ்ரீ குருஜிக்கு எழுதிய கடிதத்தில், சங்கம் காங்கிரஸில் இணைந்து விடுமாறு வலியுறுத்தியிருந்தார். அப்போது சங்கத்தின் மீது விதிக்கப்பட்டிருந்த தடை விலகும் என்ற நம்பிக்கை இல்லை. ஆனால் அப்படிப்பட்ட சங்கடமான சூழ்நிலையில்கூட ஸ்ரீ குருஜி பணிவுடன் படேலின் பரிந்துரையை ஏற்க மறுத்து “சங்கம் முன்போலவே, கலாச்சாரத்துறையில் பணிபுரிய விரும்புகிறது” என்று பதில் எழுதினார்.

1975-77-இன் நெருக்கடி நிலை நீக்கப்பட்டதும் சங்கத்தின் முன் வேறு ஒருவகையான அரசியல் வாய்ப்பு வந்து நின்றது. நெருக்கடி நிலையை எதிர்த்து மக்களை விழிப்படையவும் அணிதிரளவும் செய்ததில் சங்க ஸ்வயம் சேவகர்கள்தான் முக்கிய பங்கு வகித்தனர் – என்பதை அப்போதைய எதிர்க்கட்சி தலைவர்கள் அனைவருமே நன்கு அறிந்து இருந்தனர். பயத்தில் ஒடுங்கிய மக்களிடம் துணிவை எழுப்பி, தேர்தலில் இந்திராகாந்திக்கு எதிராக வாக்களிக்கத் தூண்டியவர்களும் ஸ்வயம்சேவகர்களே. இதன் விளைவாகத்தான் ஜனதா கட்சி அமோக வெற்றி அடைந்து, நெருக்கடிக் கால கொடுங்கோலாட்சி முடிவுற்றது,

இந்தப் பின்னணியில், சங்கத்தின் பிரதிநிதிகள் சிலரும் மத்திய அரசிலும் பல்வேறு மாநில அமைச்சரவைகளிலும் இடம் பெறுவார்கள் என்பதே பலரின் விருப்பம். ஆனால் நெருக்கடி நிலை முடிவுற்று சங்கத்தின் மீது தடை விலகியவுடனேயே, மறுநாளிலிருந்தே ஸ்வயம்சேவகர்கள், தங்கள் தினசரி ஷாகா பணியில் முன்போலவே ஈடுபட்டனர்; அரசியல், ஆட்சி அதிகாரம் போன்ற விஷயங்கள் குறித்துப் பேசக்கூட இல்லை.

இத்தனை ஊழியர்கள் எவ்வாறு உருவாகின்றனர்?

இப்போது, ஒரு விஷயம்பற்றி நீங்களும் யோசித்துக் கொண்டிருப்பீர்கள். – நாடெங்கிலும் இத்தனை ஆயிரம் இடங்களில் ஷாகாக்களையும், இத்தனை விதமான பெரிய அமைப்புகளையும், பரவலான திட்டங்களையும், இயக்கங்கள் போன்றவைகளையும் நடத்துவதற்கு, சங்கத்தின் எத்தனை லட்சம் ஊழியர்கள் செயல்பட்டு வருவார்கள்?

சங்கம் நிறுவப்பட்டு 75 ஆண்டுகளாகின்றன. அதாவது ஊழியர்களின் புதிய புதிய தலைமுறைகளும் உருவாகி வருகின்றனர். ஷாகாக்களில் இத்தனை பெரிய எண்ணிக்கையில் புதிய புதிய தலைமுறைகள் எப்படி உருவாகின்றனர்?

டாக்டர்ஜி முன்னரே இதுபற்றி ஆழ்ந்து சிந்தித்து வைத்திருந்தார். அந்த நோக்கில்தான் ஷாகா நிகழ்ச்சிகளில், சிறியனவாகத் தோன்றினாலும் அதிமுக்கியமான விஷயங்களை இணைத்திருந்தார். எடுத்துக்காட்டாக – சங்கம் வேறு – சமுதாயம் வேறு என்று கருதக்கூடிய வாய்ப்பளிக்கும் எந்தவொரு அடையாளமோ, வடிவமோ சங்கத்துக்கு இருக்கக் கூடாது என்ற வகையில் மிக எச்சரிக்கையாக இருந்தார்.

காவிக்கொடி – இதன் கீழ்தான் ஷாகா நடைபெறுகிறது – இது ஹிந்து சமுதாயம் முழுவதும் ஏற்று மதிக்கத்தக்க அடையாளம். ஸ்வயம் சேவகரும் சமுதாயத்துக்குள் நடமாடும்போது எந்தவொரு தனித்தன்மை காட்டும் அடையாளத்தை அணிவதில்லை, பழக்கங்களும் சாதாரண மக்களைப் போலவே. உடைகள், பேச்சுகூட. இப்படிப்பட்ட எச்சரிக்கைகளின் பயனாக, சங்கம் ஒரு தனி மதமாக அப்படியே மாறி, சமுதாயத்தில் மற்றொரு சம்பிரதாயமாக மட்டும் ஆகிவிடுவதிலிருந்து காப்பாற்றப்பட்டு வருகிறது.

குறிப்பிட்ட ஒரு சிலர்தான் சமுதாயப் பணி செய்ய முடியும் என்ற மனநிலையை மாற்றி சாதாரண மக்களும் சமுதாயப் பணிகளில் சுறுசுறுப்பாக ஈடுபட ஏற்றவாறு ஷாகா நிகழ்ச்சிகளை உருவாக்கினார்.

பிரச்சாரகர்களும் உள்ளூர் ஊழியர்களும்

ஷாகாவின் போதும், அதற்குப் பிறகும் கூட, ஸ்வயம் சேவகர்கள் இடையே மிக நெருக்கமான, அன்பான குடும்பச் சூழ்நிலை நிலவுகிறது. ஸ்வயம் சேவகர்களின் குடும்பத்தைச் சேர்ந்த சிறியவர் – பெரியவர் அனைவருடனும் சங்க ஊழியர்கள் மிகவும் பரிவுடன் பழகுகின்றனர்.

‘சமுதாயப் பணி ஒரு சுமை’ என்ற சாதாரண மக்களின் கருத்திலிருந்து ஸ்வயம் சேவகர் விடுபட்டு, நாளடைவில் ஷாகாவின் குறிக்கோளில் ஒன்றிவிட்ட ஊழியர்களின் முன்னுதாரணத்தைக் கண்டு, சங்கப் பணிக்காக அதிக நேரம் கொடுக்கவும் தொடங்கிவிடுகிறார். கூடவே அவரது திறமைக்கு ஏற்ப அவரிடம் சிறு சிறு பொறுப்புகள் ஒப்படைக்கப்படுகின்றன. அந்தப் பொறுப்புகளை திறமையாக வகிப்பதற்குத் தேவையான பயிற்சியும் அவருக்கு அளிக்கப்படுகிறது. இந்த நடைமுறை வாழையடி வாழையாகத் தொடர்கிறது.

அவர்களிலேயே சிலர் தங்கள் கல்விப் பயிற்சி நிறைவடைந்தவுடன் சங்கத்துக்காகத் தங்கள் முழுநேரத்தை அளிக்கவும் தயாராகி விடுகின்றனர். பணிகளுக்கு எந்த இடத்தில், எந்த வகையான தேவை ஏற்படுகிறதோ அதற்கேற்ப அவர்கள் அனுப்பப்படுகிறார்கள். இப்படிப்பட்ட ஊழியர்களை ‘பிரச்சாரக்’ என்கிறோம்.

பிரச்சாரகர்கள் தங்களது சிந்தனை வளர்ச்சிக்கும், செயல்திறனுக்கும் ஏற்ப குறைந்த அல்லது அதிகக் காலம் பணியாற்றுகின்றனர். அவர்களுக்குச் சில சிறப்பான பயிற்சிகள் அளிக்கப்படுகின்றன. பெரும்பான்மையான ஊழியர்கள், குடும்பங்களிலுள்ளவர்களே – மாணவர்கள், தொழிலாளர்கள், உழவர்கள், ஆசிரியர்கள் போன்றவர்களே.

அவர்கள் சுமார் 8-10 வயதுச் சிறுவர்களாகத் தொடங்கி, முதுமையிலும் தனது உடலும் மனமும் தளராத வரையில் பணி செய்கின்றனர். இப்படிப்பட்டவர்கள் தங்கள் தங்கள் இடங்களிலும் சில சமயங்களில் வெளியூர் சென்றும் சங்கப் பணியை வலுவாக்கவும் பரவச் செய்யவும் கூட தங்கள் தினசரி வாழ்வில் நேரம் ஒதுக்குகின்றனர்.

அவர்களில் சிலர் 50-60 வயதைத் தாண்டியவர்கள் – வானப் பிரஸ்த முறைப்படி, தங்கள் குடும்பப் பொறுப்பிலிருந்து விடுபட்டு, முழுநேரமும் சங்கத்தின் திட்டப்படி பணிபுரிய முன்வருகின்றனர்.

ஷாகாக்களின் மூலமாக சாதாரண மக்களிலிருந்தே, சமுதாயத்துக்காக நேரம் கொடுத்து, கடுமையாக உழைத்துப் பணிபுரிபவர்களை உருவாக்க டாக்டர்ஜி தீட்டிய திட்டம் பெரிய அளவில் வெற்றியடைந்து வருகிறது என்பதைப் புரிந்து கொண்டிருப்பீர்கள்.

இந்த எல்லாவகையான ஊழியர்களுக்கும் பெருஞ்சிறப்பொன்று உண்டு – இவர்கள் தங்கள் 2.ழைப்புக்காக – பணம், செல்வாக்கு, பதவி, கௌரவம் எதையுமே எதிர்பார்ப்பதில்லை. தனது பெயர் பரவவேண்டுமென்றுகூட விரும்புவதில்லை. தன்னுடன் பணியாற்றும் ஊழியர்களின் பண்புகள் சிறப்படையவும், தன்னிலும் அதிகச் செயல் திறன் கொண்டவர்களாக அவர்கள் முன்னேறவும் இடைவிடாது முயன்று வருகின்றனர்.

குருதக்ஷிணா முறையின் சிறப்பு

புதிய புதிய ஊழியர்களை உருவாக்குவதுடன் கூடவே, ஷாகாக்களில் புதிதாக வரும் ஸ்வயம் சேவகர்களிடம் சங்கத்துக்குத் தேவையான குணங்களையும் சரியான முறையில் வளர்த்துக் கொண்டே இருக்க வேண்டும் என்ற நோக்கில் டாக்டர்ஜி ஷாகா நடைமுறையில் சில அடிப்படை அம்சங்களை இணைத்தார். எடுத்துக்காட்டாக, எந்தவொரு அமைப்பும் சிறந்த முறையில், நல்லொழுக்கம் மற்றும் கட்டுப்பாட்டுடன் நடந்து கொண்டிருப்பதற்கு அதன் உறுப்பினர்கள் இடையே பணவிஷயத்தில் தூய்மையான எண்ணம் இருப்பது இன்றியமையாதது. எனவே டாக்டர்ஜி சங்கத்தில், கட்டணம் அல்லது நன்கொடை என்ற கருத்துக்குப் பதிலாக சமர்ப்பண மனப்பான்மையை முன்வைத்தார்.

இதே நோக்கில்தான் ஸ்ரீ குருதக்ஷிணா முறையைத் தொடங்கினார். காவிக் கொடியையே தனது குருவாகக் கருதி, ஸ்வயம்சேவகர்கள் வியாஸ பூர்ணிமா (ஆடிமாதப் பௌர்ணமி) நன்னாளில், அதன் முன்னே தனது சக்திக்கு ஏற்றவாறு தக்ஷிணை சமர்ப்பிக்கின்றனர். அதை வைத்துத்தான் சங்கம் தனது பணிகள் அனைத்தையும் நடத்துகிறது. இம்முறையினால் ஸ்வயம்சேவகர்களுக்குள் சுயசார்புப் பண்பும் வளர்கிறது. –

தனிமனிதன் மீது அல்ல; லட்சியத்தின் மீதே ஈடுபாடு

இப்படிப்பட்ட வித்தியாசமான குரு பூஜை முறையின் மூலம் தனிமனிதனிடம் பற்றுக் கொள்வதற்கு பதிலாக, லட்சியத்தின்மீது பற்றுக் கொள்ளும் பண்புப்பதிவை ஏற்படுத்துவதில் டாக்டர்ஜி வெற்றி கண்டார். இதற்கு ஏற்ற வகையில் அவர் ஸ்வயம் சேவகர்கள் முன்னே தனது வாழ்வையே எடுத்துக்காட்டாக வைத்தார். சங்கம் தொடர்பான முடிவு எதுவாயினும், உடன் பணியாற்றுபவர்களுடன் கலந்து ஆலோசித்த பின்னரே தீர்மானிப்பார். எல்லா ஸ்வயம் சேவகர்களிடமும் எதிர் பார்க்கப்படும் ஒவ்வொரு விதிமுறையையும், தானும் மிக உறுதியாக அவர் கடைப்பிடித்து வந்தார்.

தொடரும் …

ஆர்.எஸ்.எஸ் வளர்ந்த வரலாறு 4

பல்வேறு அமைப்புகளின் பங்களிப்பு

‘ஷாகாவில் பண்புப் பதிவு பெற்ற ஸ்வயம் சேவகர்கள் மூலம் நமது தேசத்தின் எல்லாத் துறைகளிலும் மேம்பாட்டுக்கான பணி நடைபெறும்’ என டாக்டர்ஜி கூறியதில் தொண்டு தவிர வேறு ஒரு அம்சமும் உண்டு. அதுதான், மாணவர்கள், ஆசிரியர்கள், தொழிலாளர்கள், விவசாயிகள், போன்ற துறைகளுடன் கூடவே தர்மம், கலை, சுதேசி, அரசியல் போன்ற பல்வேறு துறைகளிலும் கூட தனித்தனியாக மகத்தான செல்வாக்குடைய அமைப்புகளை ஸ்வயம் சேவகர்கள் உருவாக்கியுள்ளனர். இதுவும் தவிர, பிரத்யேகமாக பெண்கள் மத்தியிலும் அமைப்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த அமைப்புகள் எல்லாமே, அந்தந்தத் துறைகளில் தேசத்தில் மற்ற அமைப்புகளை விட சிறந்தனவாகவும், செல்வாக்குடையனவாகவும் விளங்குகின்றன.

விஸ்வ ஹிந்து பரிஷத்: ஸ்ரீ குருஜி அவர்களின் முயற்சியால். சுவாமி சின்மயானந்தர் உள்ளிட்ட துறவிகள் முன்னிலையில் 1964-இல் மும்பையில் தொடங்கப்பட்டது. குத்துவிளக்கு பூஜை போன்ற ஆன்மிக நிகழ்ச்சிகள் மூலம் ஹிந்துக்களை இணைக்கிறது. ஸ்ரீராம ஜென்ம பூமி இயக்கத்தில் பெரும்பங்கு வகித்து வருகிறது. உலகின் பல நாடுகளில் பரவியுள்ள அமைப்பு இது. தமிழகத்தில், விசேஷமாக கிராமக்கோயில் பூஜாரிகளுக்கு முறையான பூஜைப் பயிற்சி முகாம்களை நடத்தி வருகிறது. இதில் பல்லாயிரக்கணக்கானோர் பயிற்சி பெற்றுள்ளனர்.

அகில பாரதீய வித்யார்த்தி பரிஷத் நாடு முழுவதும் எட்டு லட்சத்துக்கும் அதிகமான மாணவர்களைக் கொண்டு செயல்பட்டு வரும் ஒரே அமைப்பு. மாணவர்களிடையே தேசபக்தியையும், கட்டுப்பாட்டையும் வளர்க்கும் அமைப்பு. தமிழகத்தில், அம்பேத்கர் சட்ட பல்கலைக்கழகம் அமைப்பதில் பெரும் பங்காற்றியது. செப்டம்பர் 5-ஆம் தேதி ஆசிரியர் தினத்தன்று கல்லூரிப் பேராசிரியர்களுக்கு மாணவர்கள் மலர்ச்செண்டு அளித்து ஆசி பெறும் நிகழ்ச்சி பரவி வருகிரது. ஏ.பி.வி.பி உள்ள கல்லூரிகளில் ராகிங் கொடுமை குறைந்துள்ளது.

பாரதீய மஸ்தூர் சங்கம்: ஹிந்துத்வ சிந்தனையில் தொழிலாளர்களை ஒன்றுபடுத்தும் அமைப்பு. தொழிலாளி என்றாலே கம்யூனிஸ்டு தான் என்ற மனப்பான்மையை உடைத்து 31 லட்சம் உறுப்பினர்களுடன் பாரதத்தின் முதன்மை சங்கமாக பீடுநடை போட்டு வருகிறது.

பாரதீய கிசான் சங்கம்: 15 லட்சம் உறுப்பினர்களைக் கொண்ட மிகப்பெரிய விவசாயிகளுக்கான அமைப்பு.

ராஷ்ட்ர சேவிகா சமிதி: பாரதீய கலாச்சாரத்தை நிலைநிறுத்துவதில் முக்கியப் பங்கு வகிக்கும் மாதர்களுக்கான அமைப்பு. நாடு முழுவதும் 5000-த்துக்கும் மேற்பட்ட கிளைகள் உள்ளன.

வித்யா பாரதி: நாடு முழுவதும் நகரங்களிலும், கிராமங்களிலும் மலைவாழ்மக்கள் மத்தியிலும் 16,000-த்துக்கும் மேற்பட்ட பள்ளிகளை நடத்திவரும் மிகப்பெரிய தன்னார்வ அமைப்பு.

இந்து முன்னணி: ஆன்மிக பூமியான தமிழகத்தில் 50 ஆண்டுகளாக நாத்திகம் என்ற போர்வையில் பரப்பப்பட்டு வந்த நச்சுக் கருத்துகளை முறியடித்ததில் முன்னணியில் உள்ள இயக்கம். விநாயகர் சதுர்த்தி விழா மூலம் தமிழகத்தில் பெரும் எழுச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நமது தேசியவாழ்வு ஒரு போதும் அரசியலை, ஆட்சி அதிகாரத்தை மையமாகக் கொண்டிருந்ததில்லை. இதே சிறப்பினை மீண்டும் நிலைநிறுத்தும் நோக்குடன் இந்த அமைப்புகளில் எதுவுமே அரசின் தயவை சார்ந்திருக்கவில்லை. மக்கள் ஒத்துழைப்பின் பலத்தில்தான் இவை நடைபெறுகின்றன; வளர்ந்து வருகின்றன.

வரலாற்றிலிருந்து பாடம்…

இப்போது உங்கள் மனத்தில் ஒரு கேள்வி எழக்கூடும் – இப்படிப்பட்ட அமைப்புகளை உருவாக்குவதாலும், தொண்டுப் பணிகள் செய்வதாலும் மட்டுமே, நாட்டின் அனைத்துமுக மேம்பாடு ஏற்பட முடியுமா? நாட்டின் முன்னே எத்தனையோ விதமான பிரச்சினைகள் உள்ளன. இவற்றுக்கு எல்லாம் தீர்வு ஏற்பட்டு விடுமா? சங்க ஸ்தாபகர் இதுபற்றியும் சிந்தித்திருப்பாரா? உங்களது இந்த சந்தேகம் முற்றிலும் சரியானதே,

டாக்டர்ஜி அடிப்படையான விஷயங்களை ஊன்றிக் கவனித்த சிந்தனையாளர். சுதந்திரப் போராட்டத்தில் பல்வேறு தேசிய விழிப்புணர்வுத் திட்டங்களில் பங்கெடுத்துக் கொள்வதால் மட்டும் திருப்தியடைபவரல்ல. தனது கூர்மையான மருத்துவ அறிவினால் அந்த முயற்சிகளனைத்தின் நிறை – குறைகளையும் கூட அவர் நாடிபிடித்துப் பார்த்து அறிந்திருந்தார். கூடவே நமது தேசத்தின் முந்தைய வரலாற்றையும் ஆழ்ந்து பரிசீலித்திருந்தார். இவ்வாறு உள்நோக்கிச் சிந்திக்கும் வேளையில் அவர் முன் முதலாவதாக எழுந்த கேள்வி – இன்றைய நமது கோரமான ஏழ்மையில், அடிமைத்தனத்தில் நாம் தள்ளப்பட்டது ஏன்? எப்போதுமே நமது தேசம் இதுபோலத் தாழ்ந்த நிலையில்தான் இருந்ததா? இதற்கான பதிலை வரலாறு தெளிவாகக் கூறுகிறது.

நமது தேசத்தின் வீழ்ச்சி குறிப்பாக கடந்த ஆயிரம் ஆண்டுகளாகத்தான் படிப்படியாக ஏற்பட்டு வந்துள்ளது. அதற்குமுன், பல்லாயிரம் ஆண்டுகளாக நமது தேசம், மற்ற நாடுகளைவிட கல்வி, விஞ்ஞானம், கலாச்சாரத்தில் மேம்பட்ட நிலையில் இருந்தது. இருந்தும் ஏன் அடிமைகள் ஆனோம்?

இஸ்லாமிய மற்றும் கிறிஸ்தவ ஆக்கிரமிப்பாளர்கள் நம்மைப் போலவே சகிப்புத்தன்மை, பெருந்தன்மை கொண்டவர்களாக இருப்பார்கள்; இறைவழிபாட்டு முறைகளில் மட்டுமே வேறுபாடு உள்ளது என்ற நினைப்பில் நாம் வாழ்ந்து கொண்டிருந்தோம்.

ஒற்றுமையின்மைதான் சாபக்கேடு

ஆனால் இந்த எல்லா காரணங்களையும் விட முக்கியமான காரணம் நமது சமுதாயத்தின் ஒருமைப்பாடற்ற நிலையே. இது நமது தர்ம பூமி, கர்ம பூமி, புண்ணிய பூமி, மோட்ச பூமி என்ற உணர்வு மக்கள் மனத்தில் நிரம்பியிருந்தது. நாட்டின் ஒரு மூலையிலிருந்து மற்றொரு மூலை வரை நான்கு திசைகளிலும் தீர்த்த யாத்திரைகள் நடைபெற்று வந்தன. கும்ப மேளா போன்ற நிகழ்ச்சிகளில் மிகப்பெரிய எண்ணிக்கையில், வனவாசிகள் உட்பட நாடெங்கிலுமிருந்து பக்தர்கள் ஒன்று திரண்டனர்.

ஆனால் ‘நமது இந்த பூமியே நமது தேசிய வாழ்வுக்கு ஆதாரம், இதன் ஒற்றுமையைக் கட்டிக்காப்பது நமது முதல் கடமை’ என்ற கடமையுணர்வு மக்கள் மனதிலிருந்து மறைந்து விட்டிருந்தது. ஆங்கிலேயர்கள் வந்த பிறகு அவர்களது வஞ்சகப் பிரச்சாரத்தின் விளைவாக, கல்வி கற்ற நம்மவர் வேறு ஒரு வகையான சுயமறதியில் சிக்கினர். நாம் யார், நமது தேசத்தின் பெயர் என்ன, நமக்கு தேசியம் என்பது எது போன்ற அடிப்படை விஷயங்கள் எல்லாவற்றையும் பற்றி அறிந்து கொள்ள விரும்பாத எண்ணங்கள் நம்மவர் மனத்தில் ஆதிக்கம் செலுத்தின.

டாக்டர்ஜி எடுத்த சரியான முடிவு

எனவே, நமது தேசம் வீழ்ச்சியடைய மூலகாரணமான இந்தக் குறைபாட்டிலிருந்து நமது சமுதாயம் விடுபடாத வரை, நமது நாடு ஒரு போதும் இன்னல்களிலிருந்து விடுபடாது என்ற முடிவுக்கு வந்தார் டாக்டர்ஜி.

அந்நாளில், ஆங்கிலேயரின் பிடியிலிருந்து நாட்டை விடுவிப்பது எப்படி என்பதுதான் எல்லா இயக்கங்களின் மையக்கருத்தாக இருந்தது. அச்சமயம் நடைபெற்று வந்த விடுதலைப் போராட்டத்தில், முஸ்லிம்களை நம்முடன் சேர்த்துக்கொள்ள வழி என்ன என்பதே எல்லாத் தலைவர்களுக்கும் பெரிய தலைவலியாகியிருந்தது.

ஆனால், நமது தேசத்தின் வீழ்ச்சிக்குக் காரணமான ஒற்றுமையின்மை, உண்மையான தேசம் எது என்பதில் மறதி போன்ற அடிப்படைக் குறைபாடுகளை விலக்குவதற்காக வரிந்து கட்டிக்கொண்டு செயல்பட டாக்டர்ஜி உறுதிபூண்டார்.

ஹிந்து சமுதாயம் முழுவதையும் ஒருங்கிணைக்க வேண்டும்

ஹிந்து தேசிய அடிப்படையில் ஹிந்து சமுதாயத்தை ஒருங்கிணைக்கும் நோக்கத்துடன் டாக்டர்ஜி சங்கத்தை நிறுவினார். ஹிந்து சமுதாய ஒருங்கிணைப்பு என்றால் என்ன? ஹிந்து ஒற்றுமையின் வடிவம் என்ன? ஸ்வயம்சேவகர்களுக்கு எப்படிப்பட்ட மனப்பான்மை வேண்டும்? இவ்வாறு பல்வேறு விஷயங்களைப் பற்றியும் ஸ்வயம் சேவகர்களுக்கு விளக்கி வந்தார். பொதுவாக, அமைப்பு என்பது சமுதாயத்திற்குள்ளேயே அதன் உறுப்பினர்களில் சிலரைக் கொண்டு அமையும் ஒரு நிறுவனம் என்ற கருத்து நிலவி வருகிறது. ஆனால் சங்கம், சமுதாயத்திற்குள்ளே ஒரு தனி அமைப்பல்ல, அதாவது ஹிந்து சமுதாயம் முழுமைக்குமே கட்டுக்கோப்பானதொரு அமைப்புவடிவம் கொடுப்பதற்கான முயற்சி இது.

சோதனைக் காலத்திலும்கூட ஹிந்து ஒற்றுமையில் உறுதி

டாக்டர்ஜி காலத்திலிருந்து இன்றுவரை சங்கத்தில் நிலவி வரும் கண்ணோட்டம் இதுதான். டாக்டர்ஜிக்குப் பின் ஸ்ரீ குருஜி காலத்தைய உதாரணம் ஒன்று – காந்திஜி கொலை செய்யப்பட்ட போது சங்கத்தின் மீது அபாண்டமாக பழி சுமத்தி, காங்கிரஸாரும், சோஷலிஸ்டுகளும், கம்யூனிஸ்டுகளும் சங்கத்தை அழித்துவிட முயன்றனர். குறிப்பாக மகாராஷ்டிரத்திலும், கர்நாடகாவின் சில பகுதிகளிலும் சங்க ஸ்வயம் சேவகர்களையும் அவர்களது வீடுகளையும் பயங்கரமாகத் தாக்கினார்கள்.

அச்சமயம் சங்க சக்தியும் குறைந்ததல்ல. தாக்கிய அனைவருக்கும் தக்க விதத்தில் பதிலளிக்கக்கூடிய ஆற்றல் அவர்களிடம் இருந்தது. எனினும் எந்தவொரு சூழ்நிலையிலும் அமைதி காக்கும்படி சங்க பொதுச்செயலர் ஸ்வயம் சேவகர்களைப் பணித்தார். நாகபுரியில் ஸ்ரீ குருஜி இருந்த கார்யாலயத்தை கும்பல் சூழ்ந்து கொண்டபோது கூட பதிலடி கொடுக்கவிடாமல் ஸ்வயம் சேவகர்களை தடுத்துவிட்டார் குருஜி. “எந்த சமுதாயத் தொண்டுக்காக, ஒற்றுமைக்காக, நாம் சமர்ப்பணமாகி உள்ளோமோ. அந்த சமுதாயத்தின் ஒரே ஒரு நபரின் ஒரு சொட்டு ரத்தம் கூட எனக்காக சிந்துவதை நான் விரும்பவில்லை” என்றார்.

தொடரும் …

ஆர்.எஸ்.எஸ் வளர்ந்த வரலாறு 3

சேவைப்பணிகளில் சாதி, சமய வேறுபாடில்லை

‘நீங்கள் ஹிந்துக்களுக்காகப் பணி புரிபவர்கள். எனவே தொண்டுப் பணிகளும் ஹிந்துக்களுக்கு மட்டும் தானா?’ என்று மக்கள் ஸ்வயம் சேவகர்களிடம் கேட்பதுண்டு. இல்லை, ஒருபோதும் இல்லை. ஹிந்துக்களின் இயல்பிலேயே இந்தக் கண்ணோட்டம் இல்லை. துன்பப்படுபவர்கள், யாரானாலும் நிவாரணம் கிடைக்கும். ஹரியாணாவில் சர்க்கீ – தாத்ரீ விமான விபத்து இதை எடுத்துக்காட்டுகிறது.

விபத்தில் இறந்த பயணிகள் அனைவரும் முஸ்லிம்கள். அங்கிருந்த மௌல்விகளை வரவழைத்து, தொடக்கம் முதல் இறுதிவரை அனைத்துப் பணிகளையும் நிறைவேற்றியவர்கள் ஸ்வயம்சேவகர்களே. சவூதி அரேபியா செய்தித்தாள் அல்-ரியாத், “ஆர்.எஸ்.எஸ் முஸ்லிம்களுக்கெதிரான அமைப்பு என இதுவரை எண்ணியிருந்தோம். அது முற்றிலும் தவறான கருத்து என இப்போது நமக்குத் தெரியவருகிறது” என எழுதியது.

சென்னையில் நாள்தோறும் இருதய அறுவை சிகிச்சை நடைபெற்று வருகிறது. ஒரு முறை ஈரோட்டுக்கு அருகே உள்ள பவானியிலிருந்து சென்னை பொது மருத்துவமனைக்கு தனது 10 வயது மகளின் இருதய அறுவை சிகிச்சைக்காக வந்த ஒரு முஸ்லிம், தனது உறவினர்களிடம் இருந்து ரத்தம் பெறமுடியாமல் தவித்தார்.

அவரோ ஏழை. தன்னுடைய பரிதாப நிலையை டாக்டரிடம் சொல்லி முறையிட்டார். உடனே கிறிஸ்தவராகிய அந்த டாக்டர், ஆர்.எஸ்.எஸ் அலுவலகத்துக்குச் சென்றால் ரத்தம் கிடைக்கும் என்றார். அந்த முஸ்லிமோ தயங்கினார். அவரது தயக்கத்தைப் போக்கி டாக்டர் அவரை ஆர்.எஸ்.எஸ் அலுவலகத்துக்கு அனுப்பி வைத்தார். அறுவை சிகிச்சைக்குப் பிறகு ஊர் திரும்பிய பின், “நீங்கள்தான் என் மகளுக்கு உயிர்ப்பிச்சை அளித்தீர்கள். ஆர்.எஸ்.எஸ் ஓங்கி வளர அல்லா அருள் புரிவானாக” என்று சங்க கார்யாலயத்துக்குக் கடிதம் எழுதினார், அவர்.

போர் நேரங்களில்…….

1962-இல் பாரதத்தின் வடகிழக்கு எல்லையை திடீரென்று ஆக்கிரமித்தது சீனா. அச்சமயத்தில் ஸ்வயம் சேவகர்கள் அரசுக்கு மிகுந்த ஒத்துழைப்பு அளித்தனர். அப்போதைய பிரதமர் நேரு இதுகண்டு வியப்பும் மகிழ்ச்சியும் அடைந்தார்.

1963-இல் குடியரசு தின அணிவகுப்பில் பங்கு கொள்ள அவர் சங்கத்துக்கும் அழைப்பு விடுத்தார். மூன்று நாள் முன்புதான் அறிவிக்கப்பட்டபோதிலும் சீருடையணிந்த 3,000 ஸ்வயம்சேவகர்களின் கம்பீரமான அணிவகுப்பு அந்நிகழ்ச்சியின் மிகக் கவர்ச்சிகரமானதொரு அங்கமாக விளங்கியது.

1965-இல் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பின்போது அப்போதைய பிரதமர் லால்பகதூர் சாஸ்திரியின் அழைப்பின் பேரில் ஸ்ரீ குருஜி டில்லி சென்றார்.

அங்கு போர்க் கொள்கையைத் தீர்மானிக்கும் பொருட்டு அழைக்கப்பட்டிருந்த பிரமுகர்களின் கூட்டத்தில் ஸ்ரீ குருஜியின் பங்கு சிறந்த வழிகாட்டுதலாக இருந்தது. சரித்திரத்தில் பதிவாகியுள்ள நிகழ்வு இது.

பாரதத்தின் எல்லை காக்கும் பணி

1947 அக்டோபரில் பாகிஸ்தான் படையெடுத்தபோது ஜம்மு-காஷ்மீரைக் காக்கும் பொருட்டு நமது போர் விமானங்கள் ஸ்ரீநகர் விமான தளத்தில் தக்க சமயத்தில் இறங்க முடிந்ததன் காரணம், அங்குள்ள 500 ஸ்வயம்சேவகர்கள் விமானதளத்தில் படிந்திருந்த உறைபனியை 48 மணி நேரத்துக்குள் இரவு பகலாக கடுமையாக உழைத்து சுத்தம் செய்து வைத்திருந்ததுதான்.

தாத்ரா-நகர் ஹவேலி விடுவிப்பு

பாரதத்திலிருந்து ஆங்கிலேயர் ஆட்சி போனபிறகும் கூட தாத்ரா – நகர் ஹவேலியில் பிரெஞ்சுக்காரர்களின் ஆட்சியும், கோவாவில் போர்த்துகீசியரின் ஆட்சியும் நீடித்தன. அப்போது ஸ்வயம் சேவகர்கள் அவைகளை விடுவிக்க முடிவெடுத்தனர். 1954 ஆகஸ்டு – 2 அன்று ஆயுதம் தாங்கிய நூறு ஸ்வயம் சேவகர்கள் தாத்ரா- நகர் ஹவேலியை முற்றுகையிட்டபோது, அங்கிருந்த அந்நிய ஆட்சியாளர்கள் பயந்து நடுங்கி விட்டனர் . எதிர்க்கும் துணிவை இழந்து விட்டனர். இதன் விளைவாக துளி ரத்தம் சிந்தாமல் வெற்றி கிடைத்தது. பிறகு அந்த ஸ்வயம் சேவகர்கள் அங்கு மூவர்ணக்கொடி (தேசியக்கொடி) ஏற்றி பாரதத்தின் உயர் அதிகாரிகளிடம் அப்பகுதி ஆட்சியை ஒப்படைத்தனர்.

கோவாவில் விடுதலைக்காகப் பலிதானம்

ஆனால் கோவா விடுதலைக்காக 1961 வரை பெருமளவில் பரவலான போராட்டம் நடத்த வேண்டியிருந்தது. நாடெங்கிலும் இருந்து நூற்றுக்கணக்கானவர்கள் கோவா எல்லைக்குள் நுழைந்தனர். உஜ்ஜயினியிலிருந்து ராஜாபாவு மஹாகால் என்ற ஸ்வயம் சேவகர் போர்ச்சுக்கீசியத் துப்பாக்கிகளுக்கெதிரில் ஒரு கையில் பாரதத்தின் மூவர்ணக் கொடியை ஏந்தியபடியே முன்னேறிச் சென்று குண்டுகளால் துளைக்கப்பட்டுத் தன்னையே பலிகொடுத்தார். இவ்வாறு நாடு முழுவதிலும் கோவா விடுதலைப் போராட்டத்தின் சூழ்நிலை சூடேறிய போது, மத்திய அரசு முன்வந்து கோவா விடுதலைக்காக ராணுவ நடவடிக்கை எடுக்க வேண்டி வந்தது. ஸ்வயம்சேவகர்களைத் தவிர இந்த இயக்கத்தில் பாரதீய ஜனசங்கம் மற்றும் சோஷலிஸ்டு கட்சி ஊழியர்களும் பங்கு கொண்டனர்.

பலிதானங்களின் சங்கிலித் தொடர்

தேசப் பிரிவினையின் போது (1947-48) மேற்குப் பாகிஸ்தான் பகுதியில் வசித்துவந்த ஆதரவற்ற நமது ஹிந்து சகோதரர்களை பாதுகாப்பான முறையில் பாரதத்துக்குக் கொண்டு வருவதில் ஸ்வயம் சேவகர்களின் பங்களிப்பு, வீரம், உயிர்த்தியாகம் ஆகியவை அழியாத வரலாறு ஆகிவிட்டது.

1947-ல் பாகிஸ்தானின் இடைவிடாத பீரங்கித் தாக்குதலுக்கிடையில், ஜம்முவின் எல்லைப் பகுதியிலுள்ள ரஜௌரி நகரத்தைக் கடைசி நிமிடம் வரையில் பாதுகாத்துக்கொண்டே அவ்விடத்தின் சங்க கார்யவாஹ் (பொறுப்பாளர்) பலிதானமானார். 1962-ல் சீனப்படை யெடுப்பின் போது அஸ்ஸாமில் தேஜ்பூரின் ஜில்லா அதிகாரி உள்ளிட்ட அனைத்து அரசு ஊழியர்களும் அங்கிருந்த மக்களைப் பாதுகாப்பான இடத்துக்குச் செல்லும்படிக் கூறிவிட்டு அரசுக் கருவூலத்திலிருந்த பணத்தை குளத்தில் வீசி விட்டு ஓடிவிட்டனர். ஆனால், தேசபக்தியுள்ள குடிமக்களுடன் இணைந்து ஸ்வயம் சேவகர்கள் அந்தப் பணத்தைக் காத்தார்கள். தேஜ்பூரைப் பாதுகாக்கும் ஏற்பாடுகளில் இரவு பகலாக ஈடுபட்டார்கள்.

1971-ல் வங்கதேச விடுதலைப் போரிலும் வங்கதேச எல்லையில் உள்ள நமது பாரதத்தின், மேற்கு தினாஜ்பூர் மாவட்டத்தில் சக்ரம் கிராம ஷாகாவின் முக்ய சிக்ஷக்காயிருந்த சுர்க்கா முரமு, தனது உடலைக் கயிற்றால் கட்டிக் கொண்டு எதிரிகளின் குண்டுவீச்சுக்கிடையில் தரையில் ஊர்ந்து கொண்டு, குளத்தில் விழுந்திருந்த பாரதத்தின் ஆயுதப் பெட்டிகளை பத்திரமாக நமது ராணுவ வீரர்களிடம் சேர்ப்பித்து விட்டு வீர மரணமடைந்தார்.

சிறப்பான பயிற்சியாமே! அது என்ன?

-நாடு துண்டாடப்பட்ட போதும், அதையடுத்து 1947 அக்டோபரில் ஜம்மு – காஷ்மீர் மீது திடீரென பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு செய்தபோதும், ஸ்வயம் சேவகர்களின் இணையற்ற துணிச்சலையும், பலிதானத்தையும், பாரதப்படையின் உயர் அதிகாரி ஒருவர் நன்கு அறிந்திருந்தார். ஸ்ரீ குருஜி 1950-ல் பஞ்சாபில் சுற்றுப்பயணம் செய்கையில், அந்த அதிகாரி, ‘போர்க்களத்தில் இவ்வளவு தீரம் காட்டும் உங்களது ஸ்வயம் சேவகர்களுக்கு நீங்கள் அளித்த விசேஷப் பயிற்சி என்ன?’ என ஸ்ரீ குருஜியிடம் கேட்டார். ஸ்ரீ குருஜி சிரித்துக் கொண்டே பதில் சொன்னார்: “கபடி, கோகோ போன்ற விளையாட்டுகள், உடற்பயிற்சிகளின் மூலம் ஷாகாவில் தேசபக்தி, சமுதாயப்பற்று, கட்டுப்பாடு போன்ற பண்புப்பதிவுகள் ஏற்படுகின்றன. வேறு எந்த வகையான படைப் பயிற்சியும் சங்கத்தில் அளிக்கப்படுவது இல்லை” என்று கூறி விளக்கினார்.

பசுப் பாதுகாப்பு இயக்கம்

விடுதலைப் போராட்டத்தில் வெகு காலமாகவே, இடைவிடாது பசுப் பாதுகாப்பும் ஒரு முக்கியப் பிரச்சினையாக இருந்து வந்துள்ளது. இஸ்லாமிய அல்லது கிறிஸ்தவ ஆக்கிரமிப்பாளர்கள் இங்குள்ள மக்களை அவமானப்படுத்துவதற்காக பசுவதையைத் தொடங்கினர். “நாட்டின் விடுதலையை விட, பசுப்பாதுகாப்பு அதிக முக்கியத்துவம் வாய்ந்ததாக நான் கருதுகிறேன்” என்றார் காந்திஜி. ஆனால் பாரத மண்ணிலிருந்து ஆங்கிலேயர்கள் வெளியேறிய பின்பும் பசுவதை நடப்பதுடன் அதிகரிக்கவும் செய்தது. எனவே பசுவதையைத் தடை செய்யக் கோரி 1000-இல் ஸ்ரீ குருஜியின் வழிகாட்டுதலில் நாடெங்கிலும் ஸ்வயம் சேவகர்கள் கிட்டத்தட்ட ஒருகோடியே எழுபத்தைந்து லட்சம் பேரிடம் கையெழுத்து வாங்கி அன்றைய குடியரசுத் தலைவர் டாக்டர் ராஜேந்திர பிரசாத்திடம் அளித்தனர். அது சமயம் பல்லாயிரம் முஸ்லிம்களும் கிறிஸ்தவர்களும் கூட கையெழுத்திட்டது மகிழ்ச்சி தரும் அனுபவம். என்ன துரதிர்ஷ்டமோ, அந்த தேசியக் கோரிக்கையை அரசு அலட்சியப் படுத்திவிட்டது.

கடந்த சில ஆண்டுகளில் பெரிய பெரிய இயந்திரக் கொலைக் கூடங்களும் தொடங்கிவிட்டன. அவற்றில், விடுதலைக்கு முன் நடந்ததை விட நூறு மடங்கு அதிகமாக பசுவதை நடைபெறுகிறது. ஆகையால் அதைத் தடுக்கவும், இந்த கோரமான அபாயத்திலிருந்து நாட்டைக் காக்கவும் இப்போதும் பசுப்பாதுகாப்புக்காக நாடெங்கிலும் பல்வேறு முயற்சிகள் நடைபெற்று வருகின்றன. காஞ்சி சங்கராச்சாரியார் பூஜ்ய ஸ்ரீ ஜெயேந்திரர் இவ்விஷயத்தை எடுத்துக்கொண்டதால் இப்போது இந்த இயக்கம் சூடுபிடித்து வருகிறது.

விவேகானந்தர் பாறை நினைவுச் சின்னம் அமைப்பு

1962 – இல் சீனாவுடன் நடந்த போரில் ஏற்பட்ட தோல்வியினால் மக்களின் மனம் மிகவும் புண்பட்டு இருந்தது. அந்தவேளையில் மக்களுக்குத் தன்னம்பிக்கை ஏற்படச் செய்வது அதிமுக்கியமாக இருந்தது. அந்த நோக்கில் மக்கள் தொடர்பு இயக்கம் நடத்துவது பற்றி பரிசீலிக்கப்பட்டது. இதனை இறைவன் திருவுள்ளம் என்றுதான் கூற வேண்டும். 1963-இல் சுவாமி விவேகானந்தரின் பிறந்தநாள் நூற்றாண்டு விழாவும் வரவே இயக்கத்துக்குத் தூண்டுதலான விஷயம் கிடைத்தது.

சுவாமி விவேகானந்தர் அமெரிக்கா செல்வதற்கு முன் மூன்று நாட்கள் வரை கன்யாகுமரிக் கடற்கரையருகே, கடலில் உள்ள ஒரு பெரிய பாறை மேல் அமர்ந்து பாரதத்தின் எதிர்காலம் பற்றி தியானித்திருந்தார். அதே இடத்தில் அவர் தனது எதிர்காலப் பணிகளையும் தீர்மானித்தார். எனவே அந்தப் புனிதமான தேசிய முக்கியத்துவம் வாய்ந்த பாறையின் மீது சுவாமி விவேகானந்தருக்கு ஓர் அழகிய நினைவாலயம் எழுப்ப முடிவு செய்யப்பட்டது.

இப்பணியின் சிறப்பினை கவனத்தில் கொண்டு, அச்சமயம் சங்கத்தின் பொதுச் செயலர் பொறுப்பில் இருந்த ஸ்ரீ ஏகநாத் ரானடேயிடம் இப்பணி ஒப்படைக்கப்பட்டது. கிறிஸ்தவர்கள் பல வகைகளிலும் இதற்கு முட்டுக்கட்டை போட முயன்று வந்தனர். ஆனால் எல்லா இடையூறுகளையும் தனது இணையற்ற திறமையினாலும், இடைவிடாத முயற்சியினாலும் விலக்கிக் கொண்டு, ஏகநாத்ஜி, விவேகானந்தர் பாறை நினைவுச்சின்னப் பணிகளைத் தொடங்கினார். அப்பணிக்குத் தேவையான பணம் திரட்டுவதற்காக நாடெங்கிலும் ஸ்வயம் சேவகர்கள் விரிவான அளவில் மக்கள் தொடர்பு இயக்கம் நடத்தினர்.

பொருள்திரட்டுவதுடன் கூடவே விவேகானந்தரின், தேச விழிப்புணர்வுச் செய்தியை பல்லாயிரம் பள்ளிகளுக்கும் கல்லூரிகளுக்கும் கொண்டு சென்றனர். கூடவே, சுவாமிஜியின் உத்வேகமூட்டும் கருத்துக்கள் அடங்கிய சிறு நூல்களும் எல்லா மொழிகளிலும் வெளியிடப்பட்டன. இறுதியில், இயக்கத்தை இனிதே நிறைவு செய்ய, 1970-இல் அந்த விவேகானந்தர் பாறையின் மேல் தேசிய உணர்வுக்கு ஒரு கலங்கரை விளக்கம் போல் மிக அழகாக விவேகானந்தர் நினைவுச் சின்னம் எழுந்தது.

ஒருமைப்பாட்டு யாத்திரைகள்

பாரத மாதாவும் கங்கையன்னையும் பாரதத்தின் கோடிக்கணக்கான மக்களின் கலாச்சார ஒருமைப்பாட்டுக்கும் புனிதத்தன்மைக்கும் மாபெரும் பக்திமையங்கள். கங்கையின் புனித நீரை, பாரதத்தின் பட்டி தொட்டிதோறும் மக்களிடம் கொண்டு செல்வதற்காக 1983 நவம்பர் மாதத்தில் மாபெரும் திட்டம் ஒன்றினை விஸ்வ ஹிந்து பரிஷத் தயாரித்தது.

பாரதமாதாவின் உருவச்சிலையும் கங்கை நீர் நிரம்பிய கலசமும் கொண்ட இரண்டாயிரத்துக்கும் அதிகமான ரத யாத்திரைகள், நாட்டின் வெவ்வேறு பாகங்களிலிருந்தும் புறப்பட்ட மூன்று முக்கிய யாத்திரைகளுடன் சேர்ந்து நாடெங்கிலும் 50,000 கிலோ மீட்டர் பயணித்தது. கிட்டத்தட்ட மூன்று லட்சம் கிராமங்களில் பத்து கோடி பேர் பாரதமாதாவையும், கங்கை அன்னையையும் தரிசித்தனர்.

அயோத்தி ராமர் கோயில் இயக்கம்

ராமர் செங்கல் பூஜை (ராம சிலா பூஜன்), ராமர் ஜோதி யாத்திரைகளில் பல லட்சம் கிராமங்களைச் சேர்ந்த மக்கள் பங்கெடுத்துக் கொண்டனர். அயோத்தியில் ராம ஜென்ம பூமியில் அடிக்கல் நாட்டும் நிகழ்ச்சி, அதன்பிறகு ராமர் கோயில் கட்டும் வரலாற்றுச் சிறப்பு மிக்க கரசேவை, அதில் அநேக ராம பக்தர்களின் பலிதானம் இவற்றின் சிலிர்க்கவைக்கும் வர்ணனைகள், பாரதத்தின் சமீபகால தேசிய வாழ்வின் பொன்னேடுகள்.

இந்த மாபெரும் திட்டங்கள் அனைத்தையும் வெற்றியடையச் செய்வதில் ஸ்வயம் சேவகர்கள் முழு மனதுடன் விஸ்வ ஹிந்து பரிஷத்துக்கு ஒத்துழைப்பு அளித்தனர்.

டாக்டர்ஜியின் நூற்றாண்டு விழா 1989-இல் சங்க ஸ்தாபகர் டாக்டர்ஜியின் நூற்றாண்டு விழா நல்லதொரு வாய்ப்பாக அமைந்தது. மக்களே கொண்டாடிய விழா இது. இந்த மக்கள் தொடர்பு இயக்கத்தின்போது 1.5 கோடி குடும்பங்களை சங்க ஊழியர்கள் தொடர்பு கொண்டனர். சமீபத்தில் டாக்டர் ஹெட்கேவாரது பெருமையை உணர்ந்து அரசும் தபால்தலை வெளியிட்டுச் சிறப்பித்தது.

தொடரும் …

ஆர்.எஸ்.எஸ் வளர்ந்த வரலாறு 2

தொண்டு வாயிலாக சமுதாயத்தில் நல்ல மாற்றங்கள்

அதாவது நமது ஹிந்து சமுதாயத்தை உள்ளிருந்து அழிக்கும் தீங்கான பழக்க வழக்கங்கள், மனப்பான்மைகள் ஆகியவற்றை நீக்குவது, இந்த மாற்றங்களின் முக்கிய அம்சம். தீண்டாமை, சாதி வேறுபாடு, உயர்வு – தாழ்வு, ஏழை – பணக்காரன் போன்ற வேற்றுமை உணர்வுகளைப் போக்குவதற்காகப் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப் படுகின்றன. வட பாரதத்தில் துர்காஷ்டமியன்று கன்யா பூஜை செய்வார்கள். அன்று நூற்றுக்கணக்கான ஸ்வயம்சேவகர்களின் வீடுகளில் குடிசைப் பகுதிச் சிறுமிகளை அழைத்து அவர்களுக்கு முறைப்படி பூஜை செய்கிறார்கள். அது, குடும்பமே பங்கேற்கும் விழாவாகி விடுகிறது.

இதுதவிர, நாடெங்கிலும் பல்லாயிரம் ஸ்வயம் சேவகர்களின் குடும்பங்களின் பெரியோர்கள், தாய்மார்கள், சகோதரிகள் குடிசைப் பகுதிகளுக்குப் போய், அவர்களுடன் அமர்ந்து சாப்பிடுகிறார்கள். அவர்களையும் தங்கள் வீடுகளுக்கு அழைத்து அதே போல் உபசரிக்கிறார்கள்.

தேசியப் புனரமைப்பில் ஒரு மிக முக்கியமான அம்சம் கிராம வளர்ச்சி. மகாத்மா காந்தி கிராமங்களை அடிப்படையாகக் கொண்ட பொருளாதார வளர்ச்சித் திட்டங்களை நாட்டின் முன் வைத்தும் கூட அரசு அதை அடியோடு புறக்கணித்ததால் கிராமங்கள் வளர்ச்சி அடையவேயில்லை.

இந்நிலையில் இயன்றவரை மாறுதலைக் கொண்டு வருவதற்காக ஸ்வயம்சேவகர்கள் சில கிராமங்களில் ஒருங்கிணைந்த ஊரக வளர்ச்சித் திட்டம் தொடங்கியுள்ளனர். மகாராஷ்டிரத்தில் பின்தங்கிய கிராமமாகிய ராலேகாவ் ஸிந்தியை அண்ணா ஹஜாரே 10 -16 ஆண்டுகளுக்குள் ராமராஜ்யம் போல மாற்றியுள்ளார். ஸ்வயம் சேவகர்கள் அதை ஒரு எடுத்துக்காட்டாகக் கொண்டுள்ளனர்.

மத்தியப் பிரதேசத்திலுள்ள மோஹத் என்ற சிற்றூரையும் அங்குள்ள சங்க ஊழியர்கள் அதே போல் நல்ல வளமான கிராமமாக மாற்றியுள்ளனர். பயிர்த் தொழிலில் சீர்த்திருத்தம், சாண எரிவாயு, பெரிய அளவில் இயற்கை உர உற்பத்தி, பலநூறு கிராமவாசிகளுக்கு ஓரளவு சம்ஸ்கிருதம் பேசும் பயிற்சி, வீடு, சாலைகளில் சுத்தம், சாதி வேறுபாடு போன்ற தீய பழக்கங்கள் ஒழிப்பு போன்ற நல்ல மாற்றங்கள் கடந்த 10-12 ஆண்டுகளுக்குள் அங்கு ஏற்பட்டுள்ளன.

கர்நாடகத்தின் மங்களூர் மாவட்டத்தைச் சேர்ந்த 33 கிராமங்களிலுள்ள மக்கள் தங்கள் கிராமங்களை, பசிப்பிணியற்ற, நோயற்ற, எழுத்தறிவின்மையற்றதாக மாற்றும் திசையில் முன்னேறி வருகின்றனர்.

குறிப்பாக ஒரு விஷயம் உங்களுக்குச் சொல்ல விரும்புகிறேன்: ஸ்வயம் சேவகர்கள் தொண்டு செய்யும் போது சமுதாய மாற்றத்துடன் கூடவே, தன்னிடமும் மாற்றத்தை, பண்புப் பதிவுகளை பெறுகிறார்கள். ‘மக்கள் தொண்டே மகேசன் தொண்டு’ என்ற மனப்பான்மை வேண்டும் என்ற விருப்பம், அவர்களுக்கு எப்போதும் உண்டு.

ஹிந்து ஒற்றுமை என்ற புதிய தாரக மந்திரம்

ஹிந்துக்களிடையே பரஸ்பரம் மதிப்பும் மரியாதையும் சகோதர உணர்வும் நிலைபெற வேண்டும். இதில் துறவியர்களின் பங்கும் அதிகமாகி வருகிறது. பூஜ்ய சங்கராச்சாரியார், மத்வ, வைணவ, ஜைனம், பௌத்த, சீக்கிய சம்பிரதாயங்களைச் சேர்ந்த முக்கிய மடாதிபதிகள், 1966-ஆம் ஆண்டு பிரயாகையில் கும்பமேளாவின் போது நடந்த விஸ்வ ஹிந்து பரிஷத்தின் உலக ஹிந்து மாநாட்டில் “அனைத்து ஹிந்துக்களும் சகோதரர்களே (ஹிந்தவஹ ஸோதராஹா ஸர்வே) – ஹிந்துக்கள் அனைவரும் ஒரே தாயின் வயிற்றில் பிறந்தவர்கள் என்றதொரு புதிய தாரக மந்திரத்தை அளித்தனர்.

இந்த மகத்தான சமுதாய சமத்துவ மந்திரத்தை வாழ்வின் அனைத்துத் துறைகளிலும் நடைமுறைப்படுத்துவது சங்கத்தின் எண்ணம். அனைத்து ஹிந்துக்களும் அனைத்துக் கோயில்களிலும் சென்று வழிபடுவதை, சங்கம் என்றுமே ஆதரித்து வந்துள்ளது. ஆனால் சங்கத்தின் பார்வைக் கோணம் அத்துடன் நின்று விடவில்லை . நமது புனிதமான வேதங்கள், உபநிடதங்கள், யோக சாத்திரங்கள் போன்றவை சமுதாயம் முழுவதற்குமான சொத்து என்றே சங்கம் கருதுகிறது.

இந்த முழுமையான கண்ணோட்டத்தின் காரணமாக ஸ்வயம்சேவகர்கள் கேரளா, தமிழ்நாடு போன்ற பகுதிகளில், பிராமணர் அல்லாத ஹிந்து சகோதரர்களுக்கு வைதீக – பூஜை முறையில் பயிற்சியளித்து வருகின்றனர். அவர்களில் பலர் பூசாரியாகி விட்டனர் என்பதே இதில் பெருமைப்படத்தக்க விஷயம். இவ்வகையில் பளிச்சிடும் உதாரணம் ஒன்று, ஹரிஜன சகோதரர் ஸ்ரீ கமலேஸ்வர் சௌபால், அயோத்தி ஸ்ரீ ராமர் கோயிலுக்கு அடிக்கல் நாட்டியது.

உலகையே கவர்ந்திழுக்கும் யோகா, சமஸ்கிருதம்

யோகப் பயிற்சி உலகுக்கு பாரதத்தின் நன்கொடை ஆகும். அதனை பாரதம் முழுவதிலும் பரப்புவதற்கு ஷாகாக்களிலும், பிற இடங்களிலும் யோகப் பயிற்சி மையங்கள் தொடங்கியுள்ளனர். அங்கே சங்கம் மற்றும் சமிதியைச் சேர்ந்த பல்லாயிரம் இளைஞர்களும் யுவதிகளும் யோகக்கல்வி பயின்று வருகின்றனர்.

செம்மொழியான சம்ஸ்கிருத்தை ஆங்கிலேயர் இறந்த மொழி என்றனர். ஆனால் ‘சம்ஸ்கிருத பாரதி’ என்ற அமைப்பு பல்லாயிரம் சம்பாஷண சிபிரங்கள் மூலம் பத்தே நாட்களில் சம்ஸ்கிருதம் பேச முடியுமென்று செய்து காட்டியது. இது குறிப்பாக குடிசை பகுதிகளுக்குச் சென்றதனால் அவர்களுக்கும் கலாச்சாரப் பெருமிதம் ஏற்பட்டுள்ளது. இன்று சம்ஸ்கிருத சம்பாஷண சிபிரங்கள் லண்டன் வரை பரவியுள்ளன.

தாய்மதம் திரும்புவதற்கான மகாமந்திரம்

கடந்த ஓராயிரம் ஆண்டுகளாக, இஸ்லாமிய ஆக்கிரமிப்பாளர்கள் பாரதத்துக்குள் அடியெடுத்து வைத்ததிலிருந்தே இடைவிடாது இங்கிருந்த ஹிந்துக் கோயில்களைத் தரைமட்டமாக்குதல், ஹிந்துப் பெண்களை அபகரித்தல், ஹிந்து தர்மத்தைப் போதிப்பவர்களைப் படுகொலை செய்தல், பெரிய அளவில் ஹிந்துக்களை முஸ்லிம்களாக்குதல் எல்லாம் தொடங்கிவிட்டது. இவ்விதமாகக் கிடுக்கிப்பிடியில் சிக்கிக் கொண்ட ஹிந்துக்களின் எண்ணிக்கை குறைந்து கொண்டே இருந்தது.

முஸ்லிம்களாக மாறியவர்களெல்லாம் வெளியிலிருந்து வந்த ஆக்கிரமிப்பாளர்களின் கூடாரத்தில் சேர்ந்து கொண்டனர். நேற்றுவரை தனது சகோதர, சகோதரிகளாக இருந்த ஹிந்துக்களின் மீதே தாக்குதல் நடத்த ஆரம்பித்தனர்.

இதனால் ஏற்பட்ட பயங்கரமான தீய விளைவுகளைப் பற்றி நீங்கள் நன்றாக அறிந்திருப்பீர்கள். மகாபாரத காந்தாரி பிறந்த காந்தாரம் ஆப்கானிஸ்தான் ஆகிவிட்டது. சிந்து, பஞ்சாபின் மேற்குப்பகுதி, பலுசிஸ்தான், ஸர்ஹத் ஆகியவை பாரதத்திலிருந்து துண்டாடப்பட்டு, மேற்கு பாகிஸ்தான் ஆகிவிட்டது. கிழக்கு வங்காளமும் இதே போல் கிழக்குப் பாகிஸ்தான் ஆகி இப்போது வங்க தேசமாக இருக்கிறது.

ஆங்கிலேய, போர்த்துகீசிய ஆக்கிரமிப்பாளர்களுடன் அவர்களது மதப் பிரச்சாரகர்களும் வந்தார்கள். அவர்களும் ஹிந்துக்களுக்கு எதிரான செயல்களைச் செய்யத் தொடங்கினர். நமது தேசத்தின் வடகிழக்கு மாநிலங்களில் கிறிஸ்தவப் பாதிரிகள் மூலம் பிரிவினைவாதம் கோரதாண்டவமாடுகிறது. பாரதத்தைக் கூறுபோட்டு கிறிஸ்தவஸ்தான் ஆக்குவதற்காக சிறு மாநிலங்களில் ஆயுதம் தாங்கிய, தீவிர கிளர்ச்சிகள் நடைபெற்று வருகின்றன.

ஆக, இதற்கெல்லாம் பொறுப்பாளி யார்? நாம், அதாவது ஹிந்துக்கள் தான். நமது மதம் அழிவதையும், நமது சமுதாயத்தினர் பிரிந்து எதிரிகளுடன் சேர்ந்து கொள்வதையும் கண்டும் காணாதது போல் கண்களை மூடிக்கொண்டு வாளாயிருந்தோம். மதமாற்றம் ஒருவழிப்பாதை போல இப்போதும் நடைபெற்று வருகிறது. ‘ஒருமுறை ஹிந்து மதத்தை விட்டு ஒருவன் போனால் அவன் நிரந்தரமாக விலக்கப்பட்டு விட்டான், அவனை மீண்டும் ஹிந்து மதத்துக்குள் ஏற்பது மத விரோதமான செயலாகி விடும்’ என்ற தவறான கருத்துதான் காரணம். இதன் விளைவாகத் தனது தாய்மதமாகிய ஹிந்து மதத்துக்குத் திரும்ப விரும்பியவர்களையும் கூட ஏற்பது தடை செய்யப்பட்டுவிட்டது.

ஆனால், தேவல முனிவர் தொடங்கி சமீபத்திய ஆர்ய சமாஜம், மசூராஸ்ரமம், சாவர்க்கர் தலைமையிலான ஹிந்து மஹா சபா போன்ற அமைப்புகள் கூட மதம்மாறியவர்களை மீண்டும் ஹிந்துக்களாக்க முயன்று வந்தன. அகிலபாரத அளவில் ஆர்ய சமாஜத் தலைவரான, சுவாமி சிரத்தானந்தர் இப்பணி செய்ததால் முஸ்லிமால் கொல்லப்பட்டார்.

சுவாமி விவேகானந்தரும் எச்சரிக்கை விடுத்துள்ளார் – “நினைவிருக்கட்டும், ஹிந்து தர்மத்தை விட்டு விட்டுச் செல்லும் ஒவ்வொருவராலும் ஹிந்து சமுதாயத்தின் ஒரு எண்ணிக்கை குறைவது மட்டுமல்ல; எதிரிகளின் எண்ணிக்கையில் ஒன்று அதிகரிக்கும்”

இப்போது மெல்ல மெல்ல இந்த கோரமான ஆபத்து பற்றிய விழிப்புணர்வு ஏற்பட்டு வருகிறது. பாரதத்தின் தலை சிறந்த மதத்தலைவர்கள் ஹிந்து தர்மத்தையும் ஹிந்து சமுதாயத்தையும் பாதுகாக்கும் நோக்கில் ஒரு முக்கியமான வழிகாட்டுதலையும் செய்துள்ளனர். ‘ந ஹிந்து பதிதோ பவேத்’ அதாவது ஹிந்துக்களில் எவரும் ஒருபோதும் தாழ்ந்தவராகிவிட முடியாது.

அதாவது எந்தவொரு ஹிந்துவும் முஸ்லிமாகவோ, கிறிஸ்தவராகவோ மாறிவிடுவதால் மட்டுமே ஒரேயடியாக விலக்கப்பட்டவனாகிவிட மாட்டான், அவனைக் கண்டிப்பாக ஹிந்து மதத்தில் திரும்ப ஏற்றுக்கொள்ள வேண்டும் என்பதே அதன் செய்தி. ஹிந்துக்களிடையே இத்தகைய விழிப்புணர்வின் காரனமாக, ஹிந்து மதத்தை விட்டுச் சென்ற சகோதர, சகோதரிகள், என்றும் மெல்ல மெல்ல நாய்மதம் திரும்புவது தொடங்கியுள்ளது.

பேரழிவுகளின்போது நிவாரணப் பணிகள்:

இயற்கையினாலோ, மனிதர்கள் காரணமாகவோ ஏற்படும் பேரழிவுகளின் போது ஸ்வயம்சேவகர்கள் செய்த பணிகளின் சில சிறப்பியல்புகளை இனி பார்ப்போம். தமிழ்நாட்டில் திருச்சியில் வெள்ளம், அஸ்ஸாம், உத்தரகாசி மற்றும் மகாராஷ்டிரத்தின் லாட்டூர் மாவட்ட நிலநடுக்கம், ஆந்திரப் புயல், கர்நாடகா, ஒரிசா, பீகார், குஜராத், ராஜஸ்தான் போன்ற பகுதிகளில் ஏற்பட்ட வறட்சி, ஹரியாணாவின் சர்க்கீ – தாத்ரீயிலும், பீகாரின் பாட்னாவிலும் நிகழ்ந்த விமான விபத்துக்கள் ஆகியவற்றில் நிவாரணப் பணிகளுக்காக அனைவருக்கும் முன்னால் உதவி செய்தவர்கள் சங்க ஸ்வயம்சேவகர்கள்தான்.

-அங்கு, துர்நாற்றம் நிறைந்த, அழுகிவிட்ட, சடலங்களை சரியான முறையில் எரித்தல் அல்லது புதைத்தல், இறந்த விலங்குகளின் சடலங்களையும் புதைத்தல் போன்ற பணிகளைச் செய்ய ஸ்வயம் சேவகர்களைத் தவிர வேறு எவருமே முன்வரவில்லை. இதுபோன்ற நெஞ்சை நெகிழவைக்கும் எல்லா நிகழ்ச்சிகள் பற்றியும் செய்தித்தாள்களில் காண முடிகிறது. சிலர் தொலைக்காட்சியிலும் இந்தக் காட்சிகளைக் கண்டிருக்கலாம்.

ஆந்திராவின் 1977- டிசம்பரில் வீசிய புயலின் போது முழுமையாக அழிக்கப்பட்ட அவனிகட்டா கிராமத்தை ஸ்வயம்சேவகர்கள் மிகுந்த ஈடுபாட்டுடன் புனரமைத்தனர். அங்கு புதிதாகக் கட்டப்பட்ட வீடுகளை அவ்வூர் மக்களுக்கு ஒப்படைக்கும் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ஆந்திர பிரதேசத்தின் முக்கியமான சர்வோதயத் தலைவர் ஸ்ரீ பிரபாகர்ராவ், இதைக் கண்டு “R.S.S. என்றால் Ready for Selfless Service” (தன்னலமற்ற தொண்டுக்கு தயார்) என்று விளக்கம் தந்தார்.

தொடரும் …

ஆர்.எஸ்.எஸ் வளர்ந்த வரலாறு 1

உங்களுக்கு சங்கத்தின் கதை சொல்லப் போகிறேன். இந்தக் கதை நிச்சயமாக உங்களுக்கு மிகவும் பிடிக்கும். ஏனெனில், நம் அனைவருடனும் தொடர்பு உள்ளது இந்தக் கதை.

ராஷ்ட்ரீய ஸ்வயம் சேவக சங்கம், உங்களுக்கு ஆர்.எஸ்.எஸ் என்றே அறிமுகம் ஆகியுள்ளது. 1925-ஆம் ஆண்டு விஜயதசமி நன்னாளில் நாகபுரியில் ஆரம்பிக்கப்பட்டது. ராஷ்ட்ரீய ஸ்வயம்சேவக சங்கம், இந்த மூன்று சொற்களின் பொருள் என்ன? புரிந்து கொள்வது மிக எளிது. நமது தேசத்துக்காக சுயநலமற்ற உணர்வுடன் தொண்டு செய்வதற்காகத் தானாக முன்வருபவர்கள் ஸ்வயம் சேவகர்கள். அவர்களது அமைப்பே சங்க ம்.

இதன் ஸ்தாபகர், டாக்டர் கேசவ பலிராம் ஹெட்கேவார். அவர் ‘டாக்டர்ஜி’ என்று எல்லோராலும் மரியாதையுடன் அழைக்கப்பட்டார். நாகபுரியில் 1889-இல் யுகாதித் திருநாளில் ஒரு நடுத்தரக் குடும்பத்தில் பிறந்தார். சிறுவனாக இருக்கும் போதே அவரது பெற்றோர் இருவரும், ஒரே நாளில் பிளேக் நோய்க்கு இரையானார்கள்.

விளையும் பயிர் முளையிலேயே…

அவர் முதல் வகுப்பில் படித்து வந்தபோது நடந்த நிகழ்ச்சி: 1897-இல் இங்கிலாந்து அரசி விக்டோரியா மகாராணி அரியணையேறி அறுபது ஆண்டுகள் நிறைந்ததையொட்டி பள்ளியில் வழங்கப்பட்ட இனிப்பைத் தூக்கியெறிந்தார். தாய்ப்பாலுடன் கூடவே அவர் தேசபக்தி அமுதத்தையும் அருந்தியிருப்பார் என்றே தோன்றுகிறது.

நடுநிலைப் பள்ளியில் சேர்ந்த பிறகு கேசவன் மற்ற மாணவர்கள் மத்தியிலும் சுதந்திர ஜோதியை ஒளிரச் செய்யும் வேலையைத் தொடங்கி விட்டார். 1905-இல் ‘வந்தே மாதரம்’ இயக்கத்தின் போது தனது பள்ளியிலும் இந்த வீர முழக்கம் ஒலிக்கக் காரணமாக இருந்தார். இதன் காரணமாக பள்ளியிலிருந்து நீக்கப்பட்டார்.

பிறகு நாகபுரிக்கு வெளியில் ஒரு பள்ளியில் சேர்ந்து மெட்ரிக் படிப்பை முடித்தார். தேசபக்தர்கள் சிலரது உதவி கிடைத்ததும் மருத்துவம் (டாக்டர் படிப்பு படிக்க அவர் கல்கத்தா சென்றார். படிப்பதற்காக கேசவன் அவ்வளவு தூரம் சென்றது ஏன்? அன்றையதினம் கல்கத்தா, தேசத்தின் விடுதலைக்காகப் போராடிய புரட்சியாளர்களின் முக்கிய பாசறையாக விளங்கியது. அதற்காகவே அவர் கல்கத்தா சென்றார்.

டாக்டர் படிப்பை முடித்துவிட்டு, அவர் 1916-இல் நாகபுரி திரும்பினாலும் டாக்டர் தொழிலைத் தொடங்கவில்லை. திருமணமும் செய்து கொள்ளவில்லை. பலரும் கேட்டார்கள் “உன் குடும்பம் ஏழ்மையில் வாடுகிற போது, இப்படி ஏன் செய்கிறாய்?” டாக்டர் ஹெட்கேவார் பதிலளித்தார்: “அதற்கெல்லாம் எனக்கு நேரமில்லை”. தேசத்தின் விடுதலைக்காக முழுமூச்சுடன் அவர் பாடுபட்டு வந்தார்.

நாகபுரியில் இருந்து கொண்டே மஹாராஷ்டிரம் முழுவதிலும் விதவிதமான மக்கள் விழிப்புணர்வுப் பணிகளை அவர் தொடங்கினார். 1920-லும் 1931-லும் காந்திஜியின் தலைமையில் நடந்த சத்தியாக்கிரகத்தில் ஈடுபட்டு சிறை சென்றார். பத்திரிகைகள் நடத்துவது, போராட்டங்களில் பங்கு கொள்வது போன்றவற்றில் ஈடுபட்டு வந்தார்.

சங்கம் நிறுவப்பட்டது ஏன்?

‘இத்தனை வகை தேசப் பணிகளில் மூழ்கியிருந்த டாக்டர் ஹெட்கேவாருக்கு ராஷ்ட்ரீய ஸ்வயம்சேவக சங்கம் என்ற வேறொரு அமைப்பைத் தொடங்கும் எண்ணம் ஏன் ஏற்பட்டது?’ என்று நீங்கள் கேட்கக்கூடும். வார்தாவில் டாக்டர்ஜியைச் சந்தித்த போது காந்திஜிகூட அவரிடம் கேட்டார்: “காங்கிரசிலேயே இதைப் போன்ற அமைப்பை உருவாக்கலாமே?”

அதற்கு, ‘ஸ்வயம்சேவகர்கள் பற்றிய எனது கருத்து வித்தியாசமானது. தானாக முன்வந்து, தன்னலத்தைக் கைவிட்டு, தாய் நாட்டுப்பணி செய்பவர்களை உருவாக்க நான் விரும்புகிறேன். ஆனால், அரசியல் கட்சியின் அங்கமாக இருந்து கொண்டு இதைச் செய்வது சாத்தியமில்லை. இப்படி சமர்ப்பண உணர்வுள்ள ஊழியர்களின் மூலம்தான் அனைத்துத் துறைகளிலும் தேசத்தின் முன்னேற்றம் ஏற்படமுடியும் என்பது எனது நம்பிக்கை’ என்று பதிலளித்தார் டாக்டர்ஜி.

சங்கம் நிறுவப்பட்ட பிறகு கிட்டத்தட்ட 15 ஆண்டுகள் டாக்டர்ஜி கிராமம் கிராமமாக சென்றார். சந்தனக்கட்டை தேய்ந்து நறுமணத்தைப் பரப்புவது போல சங்கத்தின் நறுமணத்தை எல்லா இடங்களிலும் பரப்புவதற்கு, தன்னையே வருத்திக் கொண்டு, இரவு பகல் பாராது நாடு முழுவதும் சுற்றுப் பயணம் செய்தார். தேசப் பணியாகிய வேள்வித் தீயில் தன்னையே அர்ப்பணித்த அவர் 1940-இல் காலமானார்.

ஷாகா ஸ்வயம்சேவகர்களை உருவாக்கும் மையம்

‘தனது இந்த புதுமையான கருத்தின்படி, ஸ்வயம்சேவககர்களை உருவாக்க டாக்டர்ஜி கையாண்ட முறை எது?’ என்று தெரிந்துக்கொள்ள உங்களுக்கு ஆவல் ஏற்படுகிறது அல்லவா? அதன் பெயர்தான் ஷாகா. உங்களில் பலர் அதைப் பார்த்து இருக்கக் கூடும். காவிக் கொடியின் முன்னே, சிறுவர்கள், இளைஞர்கள், பெரியவர்கள் கூடுகிறார்கள்.பலவிதமான நமது நாட்டு விளையாட்டுகளை விளையாடுகின்றனர். சூரிய நமஸ்காரம், யோகாசனம், பலவிதமான உடற்பயிற்சிகளை செய்கிறார்கள்.

தேசபக்திப் பாடல்கள் பாடுகிறார்கள். பெரியோர்களின் வாழ்க்கை வரலாறு, மகான்களின் கருத்துக்கள், சொற்பொழிவாக, கலந்துரையாடலாக அவர்களுக்கு சொல்லப்படுகிறது. முடிவில் கொடிக்கு முன்னால் வரிசையாக நின்று, ஸ்வயம்சேவகர்கள் பிரார்த்தனை செய்கிறார்கள். பிரார்த்தனையில் பாரதமாதாவை வணங்குகிறார்கள், பாரத அன்னைக்குத் தொண்டு புரிவதற்காக ஆற்றல், நல்லொழுக்கம், அறிவு ஆகிய நற்குணங்களை இறைவனிடம் வேண்டுகிறார்கள்.

இந்நிகழ்ச்சி தினமும் குறிப்பிட்ட நேரத்தில், குறிப்பிட்ட இடத்தில் நடைபெறுகிறது. பங்கு கொள்பவர்களின் வசதிக்கேற்ப காலை, மாலை அல்லது இரவில் ஷாகா நடைபெறும். ஷாகாவைப் பார்க்கும் எவரும் அங்கு நிலவும் கட்டுப்பாடு கண்டு மகிழ்வர். ஷாகா முடிந்தபிறகு ஸ்வயம் சேவகர்கள் தங்களுக்குள் ஒருவருக்கொருவர் அன்புடன் பேசிக் கொண்டே புதியவர்களைச் சந்திக்கச் செல்கிறார்கள்.

பாரதநாடு மட்டுமல்லாமல் அமெரிக்கா, இங்கிலாந்து, ஜெர்மனி, ஆஸ்திரேலியா, தென்னாப்பிரிக்கா உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்ட நாடுகளில் ஷாகா பரவியுள்ளது.

சங்கத்தின் ஆரம்பகாலத்தில் ஷாகாக்களில் சிறுவர் – இளைஞர் – மாணவர்கள் மட்டுமே வருவது வழக்கம். “இப்படிப்பட்ட நிகழ்ச்சிகள் நடத்துவதனால் நாட்டுப்பணி நிறைவேறுமா?” என்று பலரும் கேட்பார்கள். சிலர் கேலி செய்வதும் உண்டு. ஆனால் இன்று ‘ஷாகா’வின் மகிமை என்ன, அதில் பண்புப்பயிற்சி பெறும் ஸ்வயம் சேவகர்கள் எப்படிப்பட்டவர்கள், அவர்கள் எந்ததெந்த விதத்தில் எல்லாம் தேசப்பணி செய்துவருகிறார்கள் என்பது நன்றாக விளங்கி வருகிறது.

பல இடங்களில் நீங்களும் கூடப் பார்த்திருக்கலாம் – சங்க ஸ்வயம் சேவகர்கள், குடிசைப் பகுதிகளில் உள்ள குழந்தைகளுக்கு எழுத்தறிவும், உடலைத் தூய்மையாக வைத்திருக்கவும் கற்பிக்கின்றார்கள், வீட்டிலுள்ள பெரியவர்களை வணங்குவது, அவர்களுக்குப் பணிவிடை செய்வது, உண்மை பேசுவது, மரங்கள் – விலங்குகளை நேசிப்பது ஆகியவற்றைச் சொல்லிச் சொல்லி மனதில் பதிய வைக்கிறார்கள், அங்குள்ள சகோதரிகளுக்கு தையல் கற்றுத் தர ஏற்பாடு செய்கிறார்கள்,

சில இடங்களில் பெரிய அளவில் மருத்துவமனை நடத்தி வருகிறார்கள். தொலை தூர வனவாசி கிராமங்களில் 6000 ஓராசிரியர் பள்ளிகள் நடத்துகிறார்கள். மாணவர் விடுதிகளும் நடத்துகிறார்கள். நாடெங்கிலும் இதுபோன்ற 29,000 சேவைப்பணிகளை நடத்தி வருகிறார்கள்.

‘இது ஆத்ம சுத்திக்கான ஆன்மிக முயற்சி எனக் கருதிப் பணி செய்வோம்’ என்பார் ஸ்ரீ குருஜி கோல்வல்கர். இவர் டாக்டர்ஜிக்குப் பிறகு அகில பாரதத் தலைவராக ஆனவர். அவருக்குப் பிறகு தலைவரான ஸ்ரீ தேவரஸ், “தீண்டாமை ஒரு பாவம் இல்லையென்றால், உலகில் வேறு எதுவுமே பாவம் இல்லை ” என்று அறைகூவல் விடுத்தார்.

சேவைப் பணிகளின் சிறப்பு:

இந்த சேவைப் பணிகளின் சிறப்புதான் என்ன என்று நீங்கள் கேட்க விரும்புவீர்கள். ஆம். நிச்சயம் இவை வித்தியாசமானவை. முதலில் உங்கள் மனதில் எழக்கூடிய கேள்வி – இவ்வளவு பெரிய அளவில் நடைபெற்று வரும் சேவைப் பணிகளுக்காக கோடிக்கணக்கான ரூபாய் செலவாகுமே என்பதுதான். சங்க நலன் விரும்பும் செல்வந்தர்களிடம் இருந்தும், அரசிடம் இருந்தும்கூட ஓரளவு உதவி கிடைக்கிறது. ஆனால் இவை மொத்த செலவில் 5 சதவீதத்துக்கும் குறைவே. அப்படியென்றால் மீதி? சமுதாயத்திலுள்ள லட்சக்கணக்கான சாமானிய மக்களிடமிருந்தே இந்த செலவுக்கான பணம் முழுதும் கிடைக்கிறது. இப்போது ஒரு கேள்வி எழுகிறது. இந்தச் சேவைப்பணிகளை ஆதரிப்பது தங்கள் கடமை என்று சாமானியர்கள் ஏன் நினைக்கிறார்கள்?

முதல் விஷயம் இதுதான். ஸ்வயம் சேவகர்கள் “பாருங்க, நமது சொந்தக் குடும்பம் போலவே நமது சமுதாயமும் ஒரு பெரிய குடும்பம், ஏனெனில் நம் அனைவருக்கும் ஒரே தாய் – பாரத அன்னை. நாம் நமது குடும்பத்தில் உள்ள ஒவ்வொருவரையும் பற்றி அக்கறை கொள்வது போலவே நமது சமுதாயத்திலுள்ளவர்களைப் பற்றியும் கவலைப்படுவது நமது கடமை” என்று எடுத்துக்கூறி விளங்க வைக்கிறார்கள்.

மற்றொரு முக்கியமான விஷயம், ஸ்வயம்சேவகர்களின் நேர்மையில் மக்களுக்கு முழு நம்பிக்கை. இவர்கள் ஒவ்வொரு பைசாவையும் சரியான முறையில் தான் செலவிடுகின்றனர். அதற்குக் கணக்கும் வைத்திருக்கின்றனர். இதனால், சங்கத்தின் மீது சாமானிய மக்களுக்கு மட்டுமல்ல, பல்வேறு அமைப்புகளுக்கும் முழு நம்பிக்கை உண்டு.

சென்ற ஆண்டு கடும் புயல், ஒரிசாவின் கடற்கரை மாவட்டங்களை சின்னாபின்னம் ஆக்கியது. இதற்கு இரண்டு மூன்று ஆண்டுகள் முன்புதான் அங்கு பயங்கரமான பஞ்சம் நிலவியது. இவ்விரு சந்தர்ப்பங்களிலும் குஜராத் மாநிலத்தின் ‘பன்ஸாலி சேவா டிரஸ்ட்’ அங்கு நிவாரணம் மற்றும் புனரமைப்புப் பணிகளுக்காகப் பலகோடி ரூபாய் திட்டம் தயாரித்து அதனைச் செயல்படுத்தும் பொறுப்பினை ஸ்வயம் சேவகர்களிடம் ஒப்படைத்தது.

ஜெயப்பிரகாஷ் நாராயணன் மாறியது எப்படி?

இவ்விஷயமாக ஜெயப்பிரகாஷ் நாராயணன் அவர்களின் அனுபவம் சுவையானது. அவர் தீவிர சோஷலிஸ்ட். சங்கத்தைக் கடுமையாக எதிர்த்த வர். 1965-66 இல் பீகாரில் பஞ்சம் ஏற்பட்டது. நிவாரணப்பணி முழுமைக்கும் ஜெயப் பிரகாஷ் நாராயண்தான் தலைவர். சங்கத்துக் காரர்களை சேர்த்துக் கொள்ள அவருக்கு விருப்பம் இல்லை. ஆனால் சமய சிந்தனையாளர் அமரர் ஹனுமான் பிரஸாத் போத்தார் வற்புறுத்தியதால் ஒரு மாவட்டத்தில் மட்டும் பொறுப்பை சங்கத்திடம் ஒப்படைத்தார்.

ஒருமுறை மற்ற மாவட்டங்களில் நிவாரணப் பணிகளைப் பார்வையிடும் போது சங்க ஊழியர்களையும் அழைத்தார். அவர்களிடம் நிவாரணப்பணிகளுக்காக ஒப்படைக்கப்பட்ட பணத்துக்குக் கணக்குக் காட்டும்படி கூறினார். ஊழியர்கள் உடனே அதற்கு முதல் நாள் வரையிலான செலவுக் கணக்கை அவர் முன் வைத்தனர். அதைப்பார்த்து விட்டு அவர் சந்தேகத்துடன் கேட்டார் – மற்றதெல்லாம் சரியாகத்தான் இருக்கிறது, ஆனால் ஒன்று மட்டும் இதில் இல்லை. ஊழியர்கள் வியப்படைந்து, “அது என்ன?” என்று கேட்டனர். ஜெயப்பிரகாஷ் சொன்னார் – “உங்கள் சொந்தச் செலவுக்காகக் கொடுக்கப்பட்ட பணத்துக்கான செலவுக்கணக்கு எந்த இடத்திலும் குறிப்பிடப்படவில்லையே, ஏன்?”

ஊழியர்கள் சிரித்துக்கொண்டே சொன்னார்கள்: “சங்கத்தில் நாங்கள் கற்றது இதுதான் – வீட்டில் உணவருந்திவிட்டு நாட்டுக்கு சேவைசெய் – பாதிக்கப்பட்ட மக்களுக்காக சேர்க்கப்பட்ட பணத்திலிருந்து ஒரு பைசாகூட வேறெதற்கும் பயன்படுத்துவது பெரிய பாவம் என்று நாங்கள் கருதுகிறோம்”. இதைக் கேட்டு ஜெயப்பிரகாஷ் அடைந்த வியப்புக்கு எல்லையே இல்லை. இந்நிகழ்ச்சி, அவருக்கு சங்கத்தை சரிவரப் புரிந்து கொள்வதற்கு முதல் வாய்ப்பாக அமைந்தது.

ஸ்வயம்சேவகர்கள் மூலம் நடைபெறும் நலப்பணிகளுக்கு மேலும் பல சிறப்புகள் உண்டு. அவர்களது பார்வையில், சேவை என்பது உதவி செய்வது மாத்திரமல்ல. சேவையின் மூலம் பயனடைபவர்கள் தனது வாழ்க்கையைத் தன் சொந்த முயற்சியினாலேயே சீரமைத்துக் கொள்ளும் திறமை வளர வேண்டும். குடிப்பழக்கம், சூதாட்டம், சண்டை சச்சரவுகளிலிருந்து அவர்கள் விடுபட வேண்டும். தான் ஹிந்துவாக இருப்பது குறித்துப் பெருமிதம் அடைய வேண்டும்.

தன் பகுதியிலுள்ள கோயில்களை, பசுக்களை, பெண்களை அவர்கள் பாதுகாக்க வேண்டும். பிற ஹிந்துக்களிடம் சமத்துவ உணர்வு கொள்ள வேண்டும். இப்படிப்பட்ட பல்வேறு நல்ல மாற்றங்கள் அங்கே ஏற்பட வேண்டும் – என்பதுதான் தொண்டில் ஈடுபடும் சங்க ஊழியர்களின் முக்கிய குறிக்கோள். நாடு முழுவதிலும் பல்லாயிரம் குடிசைப் பகுதிகளில் குறைந்த அளவிலோ, அதிக அளவிலோ இந்த மாற்றங்கள் காணக் கிடைக்கின்றன.

தொடரும் …

ஆர்.எஸ்.எஸ் பற்றி…..

சுவாமி சித்பவானந்தர்: (1981, திருவேடகம் சங்க முகாமில்)

இளைஞர்களே! நீங்கள் பாக்யவான்கள். உடல், மனம், அறிவு ஆகிய மூன்று துறைகளிலும் பயிற்சி பெறுகிறீர்கள். எனவே இது மனிதர்களை உருவாக்கும் திட்டம். விவேகானந்தர் கண்ட கனவை நீங்கள்தான் நனவாக்குகின்றீர்கள். சங்கம் விவேகானந்தர் கொள்கையை நடைமுறைப் படுத்துகின்றது.