ஆர்.எஸ்.எஸ் வளர்ந்த வரலாறு 6

எதிர்ப்புகளுக்கிடையேயும் வளர்ச்சி

இயற்கையாக உங்கள் மனதில் எழக்கூடிய இன்னொரு கேள்வி: சங்கத்தின் சிந்தனைகள் – செயல்களை யாருமே எதிர்க்கவில்லையா?

உண்மையில் சங்கம் பிறந்தது முதலே பலவகையான பொய்ப் பிரச்சாரங்களுக்கும், பயங்கர எதிர்ப்புகளுக்கும் இலக்காகி வந்துள்ளது. டாக்டர்ஜி எத்தனை தீவிரமான தேசபக்தர் என்பதை இக்கதையின் தொடக்கத்திலேயே உங்களுக்குக் கூறியிருக்கிறேன் அல்லவா?

எனவே அச்சமயத்தில் ஆங்கிலேய ஆட்சியாளர்களின் கழுகுப் பார்வை எப்போதும் சங்கத்தின் மீதே இருந்தது. மூன்றுமுறை சங்கத்துக்கு தடை விதிக்கவும் ஆங்கிலேய அரசு முயற்சி செய்தது. ஆனால் டாக்டர்ஜி மற்றும் ஸ்ரீ குருஜியின் திறமையினாலும், மக்கள் ஆதரவினாலும் அம்முயற்சிகள் தோல்வியடைந்தன.

பாரதம் விடுதலை அடைந்த பின்பும் எதிர்ப்புகள் குறையவில்லை. 1948-இல் காந்திஜி கொலை செய்யப்பட்ட பிறகும், 1975-77இல் நெருக்கடிக் காலத்திலும் தடை விதிக்கப்பட்டது. அண்மையில் 1992-இல் அயோத்தி கரசேவைக்குப் பிறகும் கூட, தடை விதிக்கப்பட்டது. ஆனால் ஒவ்வொரு முறையும் அரசே நிபந்தனையின்றித் தடையை விலக்கிக் கொள்ள வேண்டியிருந்தது. (1992ன் தடை, நீதிமன்றத் தீர்ப்பின்படி விலகியது) ஒவ்வொரு முறையும் சங்கம் புடம் போட்ட தங்கம்போல அதிக ஒளியுடன், வலிமையுடன், மக்களின் ஆதரவுடன் வெளிவந்துள்ளது.

தடை விதித்தவர்கள் யார்?

சங்கத்துக்கெதிராக இப்போதும் இடைவிடாது பொய் பிரச்சாரத் தாக்குதல் நடைபெற்று வருகிறது. ஷாகாக்களின் விஸ்தரிப்புடன் கூட தேசிய வாழ்வின் – அரசியல் உள்ளிட்ட – அனைத்துத் துறைகளிலும் சங்கத்தின் செல்வாக்கு வளர்ந்துள்ளதையடுத்து, சங்கத்தைப் பற்றிப் பல விதமான எதிர்ப்புப் பிரச்சாரங்களும் வளர்வது இயற்கையே. ஆனால், சங்கம் மற்றும் அதனுடன் தொடர்புள்ள அமைப்புகளின் மீது பழி சுமத்துபவர்கள் எப்படிப்பட்டவர்கள்?

உங்களுக்கும் இந்த விஷயம் விளங்கியிருக்கும் – இவர்கள் சில அரசியல் மற்றும் மதத் தலைவர்களும், குறிப்பாக ஆங்கிலப் பத்திரிகைகள், கம்யூனிஸ்டுகள், கிறிஸ்தவப் பாதிரிகளும்தான். ஹிட்லரிடம், கோயபெல்ஸ் என்ற பிரச்சார மந்திரி ஒருவன் இருந்தான். அவன் ‘பொய்யையே நூறு முறை திரும்பத் திரும்பக் கூறினால் அது மெய்போலத் தோன்றத் தொடங்கிவிடும்’ என்பான். இந்தக் குற்றம் சாட்டுபவர்கள் எல்லாம் அவனது நேர் சீடர்கள் போலும்!

காந்திஜி கொலை தொடர்பான பழி ஆதாரமற்றது

உதாரணமாகப் பாருங்கள்…. காந்திஜியைக் கொன்றது சங்கம்தான் என்ற குற்றச்சாட்டு குறித்து 27.2.1948-இல் நேருவுக்கு சர்தார் படேல் கடிதம் எழுதினார். ‘காந்திஜியின் கொலையில் சங்கத்தின் உறுப்பினர் எவருக்கும் தொடர்பில்லை’ என்பதை அக்கடிதத்தில் குறிப்பிட்டு இருந்தார். பிறகு நீதிபதி ஆத்ம சரணின் தனி நீதிமன்றத்தில் அரசு தாக்கல் செய்த குற்றப்பத்திரிகையில் சங்கத்தின் பெயரோ எந்தவொரு ஸ்வயம்சேவகரின் பெயரோ குறிப்பிடப்படவில்லை. அதன்பிறகு, 1965-இல் பிரத்யேகமாக நியமிக்கப்பட்ட கபூர் கமிஷனின் அறிக்கையும் சங்கத்தை நிரபராதி என்றே கூறியது. 1977-இல் அன்றைய பிரதமர் ஸ்ரீ மொரார்ஜி தேசாய் நாடாளுமன்றத்தில் இதே விஷயத்தை கூறினார்.

உண்மை இப்படி இருக்க, காந்தி கொலைப் பழியை சங்கத்தின் மீது மீண்டும் மீண்டும் சுமத்திவருபவர்கள் கோயபெல்சின் சீடர்களா இல்லையா, நீங்களே சொல்லுங்கள்.

சங்கம் மதவாத அமைப்பு; முஸ்லிம்களுக்கும், கிறிஸ்தவர்களுக்கும் எதிரானது என்பதும் இதேபோன்று மற்றொரு அடிப்படையற்ற குற்றச்சாட்டு. இதுவரை நாடெங்கிலும் எத்தனையோ மதக்கலவரங்கள் நடந்துள்ளன. அவை தொடர்பாக நியமிக்கப்பட்ட விசாரணைக் கமிஷன் ஒவ்வொன்றுமே சங்கத்தை நிரபராதி என்றே நிறுவியுள்ளன. கன்னியாகுமரி – மண்டைக்காடு கலவரம் பற்றி நீதிபதி வேணுகோபால் கமிஷன் கூறியுள்ளது என்ன? “கிறிஸ்தவ மதமாற்ற முயற்சிகளுக்கு ஹிந்துக்களின் பதிலடிதான் அது; மதமாற்றத்தைத் தடை செய்ய வேண்டும்” என்றுதான் அந்தக் கமிஷன் அரசுக்கு அறிவுறுத்தியது.

பிரமுகர்களின் கருத்து என்ன?

டாக்டர் ஜாகிர் ஹுசைன் (பாரதத்தின் முன்னாள் குடியரசுத் தலைவர்) 1949 நவம்பர் 20 அன்று பீகாரில் நடந்த மிலாது விழாவில்: “சங்கத்தைச் சேர்ந்தவர்கள் முஸ்லிம்களை வெறுக்கின்றனர், அவர்களைத் தாக்குகின்றனர் என்பது போன்ற குற்றச்சாட்டு முற்றிலும் பொய்யானது. சங்கத்திடமிருந்து பரஸ்பர அன்பு, ஒத்துழைப்பு, ஒருங்கிணைக்கும் திறமை இவற்றை முஸ்லிம்கள் கற்றுக் கொள்ள வேண்டும்”.

ஸ்ரீ கோகா சுப்பாராவ்ஜி பாரதத்தின் முன்னாள் தலைமை நீதிபதி – பெங்களூரில் 25 ஆகஸ்டு 1968-ல் சங்க குருதக்ஷிணா விழாவில்) “ராஷ்ட்ரீய ஸ்வயம்சேவக சங்கம் தேசிய விழிப்புணர்வை ஏற்படுத்தும் மாபெரும் பணியில் ஈடுபட்டுள்ளது. இது தேசத்தின் ஒற்றுமையையும் ஒருமைப்பாட்டையும் காப்பதில் ஒரு வலிமை வாய்ந்த கருவியாக வளரும். சங்கம் மதசார்பின்மைக்கு எதிராகப் பிரச்சாரம் செய்கிறது என விமர்சிப்பது முற்றிலும் அபத்தமானது”.

இருப்பினும் சில அரசியல்வாதிகள் சங்கத்தை மதசார்பின்மைக்கு விரோதி என ஏன் குற்றம் சாட்டுகிறார்கள்? இதற்குக் காரணம் மிக எளிது. ஹிந்துக்கள் இப்போது விழிப்படைந்து வருகின்றனர். அரசியல் கட்சித் தலைவர்கள் ஒவ்வொரு வகையிலும் தங்களைப் புறக்கணிப்பதையும் கிண்டல் செய்வதையும் கண்டு ஹிந்துக்களது மனதில் கோபம் எழுகிறது. ஹிந்துக்களல்லாதவர்களின் ஓட்டு வங்கியைக் கருத்தில் கொண்டு ஹிந்துக்களை விட அவர்களுக்கு மிக அதிகமான உரிமைகளையும் சலுகைகளையும் வழங்கி வரும் அந்த அரசியல்வாதிகளின் தேர்தல் விளையாட்டுக்களும், ஹிந்துக்களின் கவனத்துக்கு வருகின்றன. அவர்களுக்கெதிராக தேர்தல் பாஷையில் எதிர்ப்பையும் ஹிந்துக்கள் வெளிப்படுத்தத் தொடங்கியுள்ளனர். அவர்களது உண்மையான முகத்தை ஹிந்துக்கள் இனங்கண்டு கொண்டு விட்டனர்.

சங்கம் வேறு, அரசியல் பணி வேறு

சிலர் சங்கம் மற்றும் பா.ஜ.கவின் பரஸ்பர உறவு பற்றியும் விதவிதமான கேள்விகளைக் கேட்டுக் கொண்டேயிருக்கின்றனர். இக்கதையின் தொடக்கத்திலேயே கூறியுள்ளேன், ஸ்வயம் சேவகர்கள் தேசிய வாழ்வின் எல்லாத் துறைகளிலும் ஹிந்துத்வக் கருத்தினைக் கொண்டு சென்று சங்கத்தில் பெற்ற பண்புப்பதிவுகளைக் கொண்டு அந்தத் துறைகளில் தாக்கம் ஏற்படுத்தி வருகின்றனர். அவைகளில் அரசியல்துறையும் ஒன்று. அந்த அமைப்புக்கள் அனைத்துக்கு மிடையில் உள்ள ஒரே உறவு, அனைவரும் ஸ்வயம் சேவகர்கள் என்பதே. பல்வேறு துறைகளில் நடைபெற்றுவரும் அமைப்புகளைப் போன்றே பா.ஜ.கவும் சுதந்திரமாகச் செயல்பட்டு வருகிறது. பா.ஜ.க ஆட்சி நடக்கும் மத்தியிலோ, மாநிலங்களிலோ கொள்கை வகுப்பதில் சங்கத்தின் தலையீடு ஏதுமில்லை.

இப்படிப்பட்ட எதிர்ப்புக்கள் அனைத்துக்கும் ஒரே காரணம் சங்கத்தின் வளர்ந்து வரும் செல்வாக்கால் அவர்கள் மனத்தில் தோன்றியுள்ள அச்சமே. சுவாமி விவேகானந்தரின் இந்தக் கருத்துரை ஸ்வயம்சேவகர்களுக்கு மிக நன்றாகத் தெரியும்: “ஒவ்வொரு அரும்பணியும் நான்கு நிலைகளைக் கடக்க வேண்டியுள்ளது – புறக்கணிப்பு, கேலி, எதிர்ப்பு, இறுதியில் வெற்றி” எனவே இறுதி வெற்றியில் தளராத நம்பிக்கை கொண்டு, ஸ்வயம் சேவகர்கள் செயலில் இறங்கியுள்ளனர்.

ஹிந்து என்ற முறையில் உங்களிடம் அன்பான வேண்டுகோள்

மிகச் சுருக்கமாக சங்கத்தின் கதையை இதுவரை கூறினேன். இதைக் கேட்ட பிறகு உங்களுக்கு நிச்சயமாகத் தோன்றக்கூடிய கருத்து – சங்கப்பணி விரைவாக முன்னேறாவிட்டால் நாட்டுக்கு இன்னும் பல கோரமான பேரழிவுகள் ஏற்படலாம். எனவே இப்பணியை விரைவாக முன்னேற்ற வேண்டி உங்களைப் போன்ற, புதிய புதிய பல்லாயிரம் பேர் இப்புனிதப் பணியில் தோள்கொடுக்க வேண்டியிருக்கும். எனவே இயன்ற வரையில் – ராமாயண அணிலைப் போல – நமது ஹிந்து தேசத்துக்காக நேரம் கொடுப்பது ஒவ்வொரு ஹிந்துவின் முதல் கடமை என்று உங்களுக்குத் தோன்றியிருக்கும். எனவே, இப்போது நீங்கள் இக்கதையைப் படிப்பவராகவும் கேட்பவராகவும் மட்டும் இருந்து விடாமல், இக்கதை, தொடரச் செய்வதில் பங்கெடுத்துக் கொள்ள ‘நான் தகுதியுள்ளவன் என உணர்ந்து செயல்படுங்கள்; சங்கத்துடன் தொடர்பு கொள்ளுங்கள்’ என ஓர் ஹிந்து சகோதரன் என்ற முறையில் நான் உங்களிடம் அன்பான வேண்டுகோள் விடுக்கிறேன்.

கங்கா மாதா போன்றது இந்தக் கதை

நீங்களும், நாங்களும், அனைவரும் பங்கு கொள்ளும் கதை இது. நாமனைவரும் சேர்ந்து உருவாகும் சமுதாயம் புத்தெழுச்சி பெற்றுயர மேற்கொள்ளும் மாபெரும் முயற்சிகளின் கதை இது. அதாவது நமது ஹிந்து சமுதாயத்தை விழிப்படையச் செய்து ஒருங்கிணைத்து நமது அன்புக்குரிய தாய்நாடாகிய பாரதமாதாவை சிறப்பின் மிக உயர்ந்த சிகரத்தில் ஏற்றும் வகையில் மெல்ல மெல்ல முன்னேற்றுவதுதான் இந்தக் கதை.

1925-இல் டாக்டர் ஹெட்கேவார் கண்ட வரலாற்றுச் சிறப்புமிக்க அந்தக் கனவின் நடைமுறைச் செயல்வடிவத்தின் கதை இது. எல்லா கதைகளுக்கும் முடிவு ஏதாவதொரு கட்டத்தில் உண்டு. ஆனால் இது ஒரு தொடர் கதை.

இந்தப் புனித நீரோட்டம், கடல் போன்ற ஹிந்து சமுதாயத்தைத் தனது மடியில் உட்காரவைத்துக் கொண்டு, அதனை மிகத் தூய்மையாகவும், ஒளி பொருந்தியதாகவும், வெற்றித்திருவுடையதாகவும் செய்து கொண்டு, உலகமனைத்தையும் சுகமளித்து வாழ வைப்பதாக ஆக்கிக் கொண்டு, வாழையடி வாழையாக முன்னேறிக் கொண்டிருக்கும்.

ஆர்.எஸ்.எஸ் வளர்ந்த வரலாறு 5

மக்களாதரவு பெருகினாலும் அதே பார்வை

இதே போன்ற வேறொரு நிகழ்ச்சியும் உண்டு. 1948 – பிப்ரவரி தொடக்கத்தில் சங்கத்தின் மீது தடை விதிக்கப்பட்டது. 1949-ல் தடை நீக்கப்பட்ட பிறகு ஸ்ரீ குருஜி நாடெங்கிலும் சுற்றுப்பயணம் செய்தார். இதையொட்டி ஆங்காங்கே அவருக்கு மக்கள் அளித்த பாராட்டு விழாக்களில் மாபெரும் எண்ணிக்கையில் மக்கள் திரண்டனர். டில்லி விழாவில் குழுமியிருந்த கடல்போல் பரந்த மக்கள் கூட்டத்தைக் கண்டு லண்டன் பி.பி.சி. விமர்சித்தது: “இன்று பாரதத்தில் இரண்டே இரண்டு பேருடைய பேச்சைக் கேட்பதற்குத்தான் மக்கள் பெரும் எண்ணிக்கையில் கூடுகின்றனர். ஒருவர் பிரதமர் நேரு. மற்றொருவர் ஆர்.எஸ்.எஸ் ஸின் ஸ்ரீ கோல்வல்கர்”.

பெருமளவு மக்கள் ஆதரவும் உற்சாகமும் கிடைத்தும் கூட சிலநாட்கள் முன்தான் தன்மீதும், பல்லாயிரம் ஸ்வயம் சேவகர்கள் மீதும் கோரமான அட்டூழியம் கட்டவிழ்த்து விடப்பட்டிருந்தும் துளியளவு காழ்ப்புணர்வும் அவர் மனதில் தோன்றவில்லை. ஸ்வயம் சேவகர்களுக்கு தெளிவுபடுத்திச் சொன்னார்: “உணவருந்தும் போது தவறுதலாக நாக்கைக் கடித்துக் கொண்டோமானால் அதற்காக நாம் பற்களைப் பிடுங்கியெறிந்து விடுகிறோமா என்ன? அதே போல் இன்று நமது நாட்டின் தலைவர்களும் நம்மவரே என்பதை நினைவில் கொள்வோம்”.

சங்கம் இந்திராவின் திட்டத்தை ஏன் நிராகரித்தது?

1975-77-ன் நெருக்கடிக் காலத்தின் இறுதி நாட்களில் நிகழ்ந்த ஒரு நிகழ்ச்சி இது. ஸ்வயம்சேவகர்களால் நடத்தப்பட்ட நாடு தழுவிய வலுவான தலைமறைவு இயக்கத்தினால் தனது ஆட்சிபீடம் ஆட்டம் கண்டுவிட்டது என்பதை இந்திரா காந்தி உணர்ந்தார். அவர் சங்கப் பிரமுகர்களிடம் தனது உளவுத் துறையின் முக்கியஸ்தர் ஒருவரை தூது அனுப்பினார். சங்கம் இந்த இயக்கத்திலிருந்து விலகிக் கொண்டால், சங்கத்தின் மீது விதிக்கப்பட்டிருக்கும் தடையை விலக்கிக் கொள்ளத் தயார் – என்று செய்தி அனுப்பினார். சங்கப் பிரமுகர்கள் அதற்கு “எந்தச் சூழ்நிலையிலும் தன்னைக் காப்பாற்றிக் கொள்வதற்காக நாட்டைக் கைவிட, சங்கம் தயாரில்லை – என்று தெள்ளத்தெளிவாக பதிலளித்தார்கள்.

அரசியலிலிருந்து ஏன் விலகியிருக்கின்றனர்?

நமது சமுதாயத்தைப் பிளவு படுத்தும் மற்றொரு விஷயம் சுதந்திரத்துக்குப் பின் தீவிரமடைந்து வருகிறது; அதுதான் அரசியல் கருத்து வேறுபாடு, பதவி மோகம், சுயநலம். சமுதாயத்தில் சாதி – மத – இன வேறுபாடுகளை விரோதங்களாக அரசியல் கட்சித் தலைவர்கள் திரித்துக் கூறிவருகின்றனர். ஹிந்துக்களின் ஒற்றுமையைக் கொளுத்தி அந்த நெருப்பில் தேர்தல் குளிர் காய்கின்றனர். டாக்டர்ஜி, அரசியலில் தான் இருந்ததன் காரணமாக, சமுதாயத்துக்கு ஏற்படக்கூடிய தீங்கினை மிக நன்றாக அறிந்திருந்தார். எனவே மஹாராஷ்ட்ரத்தில் புகழ்பெற்ற, செல்வாக்குள்ள அரசியல் தலைவராக இருந்தபோதிலும், சங்கத்தை நிறுவிய பின் எல்லாவகையான அரசியல் ஆரவாரங்களில் இருந்தும் அவர் விடுபட்டார், சங்கத்தையும் சுதந்திரமாக வைத்துக் கொண்டார். இன்றும் சங்கம், இதே கொள்கையைக் கவனமாகக் கடைப்பிடித்து வருகிறது.

ஆட்சி மற்றும் அரசியலிலிருந்து எப்போதும் விலகியிருத்தல்

பாரதம் விடுதலையான பின்னரோ அரசியலும் தேர்தலும் மட்டுமே தேசியவாழ்வின் மையப் புள்ளி என்பது போல ஆகிவிட்டது. இதனால் அநேக ஹிந்துத்வ ஆதரவாளர்கள் ‘சங்கம் போன்ற செல்வாக்குமிக்க அமைப்பு அரசியல் களத்தில் இறங்கினால் ஹிந்து சமுதாயத்துக்கு மிகுந்த நன்மை ஏற்படும்’ என்று எண்ணுகிறார்கள். ஆனால் சங்கம் தொடக்கத்தில் இருந்தே தனது கொள்கையில் உறுதியாக இருக்கத் தீர்மானித்து, அரசியலிலிருந்து விலகியே உள்ளது.

1948-49இல் சங்கத்தின் மீது தடை விதிக்கப்பட்டிருந்த போது, அப்போதைய மத்திய உள்துறை அமைச்சர் சர்தார் வல்லபாய் படேல் ஸ்ரீ குருஜிக்கு எழுதிய கடிதத்தில், சங்கம் காங்கிரஸில் இணைந்து விடுமாறு வலியுறுத்தியிருந்தார். அப்போது சங்கத்தின் மீது விதிக்கப்பட்டிருந்த தடை விலகும் என்ற நம்பிக்கை இல்லை. ஆனால் அப்படிப்பட்ட சங்கடமான சூழ்நிலையில்கூட ஸ்ரீ குருஜி பணிவுடன் படேலின் பரிந்துரையை ஏற்க மறுத்து “சங்கம் முன்போலவே, கலாச்சாரத்துறையில் பணிபுரிய விரும்புகிறது” என்று பதில் எழுதினார்.

1975-77-இன் நெருக்கடி நிலை நீக்கப்பட்டதும் சங்கத்தின் முன் வேறு ஒருவகையான அரசியல் வாய்ப்பு வந்து நின்றது. நெருக்கடி நிலையை எதிர்த்து மக்களை விழிப்படையவும் அணிதிரளவும் செய்ததில் சங்க ஸ்வயம் சேவகர்கள்தான் முக்கிய பங்கு வகித்தனர் – என்பதை அப்போதைய எதிர்க்கட்சி தலைவர்கள் அனைவருமே நன்கு அறிந்து இருந்தனர். பயத்தில் ஒடுங்கிய மக்களிடம் துணிவை எழுப்பி, தேர்தலில் இந்திராகாந்திக்கு எதிராக வாக்களிக்கத் தூண்டியவர்களும் ஸ்வயம்சேவகர்களே. இதன் விளைவாகத்தான் ஜனதா கட்சி அமோக வெற்றி அடைந்து, நெருக்கடிக் கால கொடுங்கோலாட்சி முடிவுற்றது,

இந்தப் பின்னணியில், சங்கத்தின் பிரதிநிதிகள் சிலரும் மத்திய அரசிலும் பல்வேறு மாநில அமைச்சரவைகளிலும் இடம் பெறுவார்கள் என்பதே பலரின் விருப்பம். ஆனால் நெருக்கடி நிலை முடிவுற்று சங்கத்தின் மீது தடை விலகியவுடனேயே, மறுநாளிலிருந்தே ஸ்வயம்சேவகர்கள், தங்கள் தினசரி ஷாகா பணியில் முன்போலவே ஈடுபட்டனர்; அரசியல், ஆட்சி அதிகாரம் போன்ற விஷயங்கள் குறித்துப் பேசக்கூட இல்லை.

இத்தனை ஊழியர்கள் எவ்வாறு உருவாகின்றனர்?

இப்போது, ஒரு விஷயம்பற்றி நீங்களும் யோசித்துக் கொண்டிருப்பீர்கள். – நாடெங்கிலும் இத்தனை ஆயிரம் இடங்களில் ஷாகாக்களையும், இத்தனை விதமான பெரிய அமைப்புகளையும், பரவலான திட்டங்களையும், இயக்கங்கள் போன்றவைகளையும் நடத்துவதற்கு, சங்கத்தின் எத்தனை லட்சம் ஊழியர்கள் செயல்பட்டு வருவார்கள்?

சங்கம் நிறுவப்பட்டு 75 ஆண்டுகளாகின்றன. அதாவது ஊழியர்களின் புதிய புதிய தலைமுறைகளும் உருவாகி வருகின்றனர். ஷாகாக்களில் இத்தனை பெரிய எண்ணிக்கையில் புதிய புதிய தலைமுறைகள் எப்படி உருவாகின்றனர்?

டாக்டர்ஜி முன்னரே இதுபற்றி ஆழ்ந்து சிந்தித்து வைத்திருந்தார். அந்த நோக்கில்தான் ஷாகா நிகழ்ச்சிகளில், சிறியனவாகத் தோன்றினாலும் அதிமுக்கியமான விஷயங்களை இணைத்திருந்தார். எடுத்துக்காட்டாக – சங்கம் வேறு – சமுதாயம் வேறு என்று கருதக்கூடிய வாய்ப்பளிக்கும் எந்தவொரு அடையாளமோ, வடிவமோ சங்கத்துக்கு இருக்கக் கூடாது என்ற வகையில் மிக எச்சரிக்கையாக இருந்தார்.

காவிக்கொடி – இதன் கீழ்தான் ஷாகா நடைபெறுகிறது – இது ஹிந்து சமுதாயம் முழுவதும் ஏற்று மதிக்கத்தக்க அடையாளம். ஸ்வயம் சேவகரும் சமுதாயத்துக்குள் நடமாடும்போது எந்தவொரு தனித்தன்மை காட்டும் அடையாளத்தை அணிவதில்லை, பழக்கங்களும் சாதாரண மக்களைப் போலவே. உடைகள், பேச்சுகூட. இப்படிப்பட்ட எச்சரிக்கைகளின் பயனாக, சங்கம் ஒரு தனி மதமாக அப்படியே மாறி, சமுதாயத்தில் மற்றொரு சம்பிரதாயமாக மட்டும் ஆகிவிடுவதிலிருந்து காப்பாற்றப்பட்டு வருகிறது.

குறிப்பிட்ட ஒரு சிலர்தான் சமுதாயப் பணி செய்ய முடியும் என்ற மனநிலையை மாற்றி சாதாரண மக்களும் சமுதாயப் பணிகளில் சுறுசுறுப்பாக ஈடுபட ஏற்றவாறு ஷாகா நிகழ்ச்சிகளை உருவாக்கினார்.

பிரச்சாரகர்களும் உள்ளூர் ஊழியர்களும்

ஷாகாவின் போதும், அதற்குப் பிறகும் கூட, ஸ்வயம் சேவகர்கள் இடையே மிக நெருக்கமான, அன்பான குடும்பச் சூழ்நிலை நிலவுகிறது. ஸ்வயம் சேவகர்களின் குடும்பத்தைச் சேர்ந்த சிறியவர் – பெரியவர் அனைவருடனும் சங்க ஊழியர்கள் மிகவும் பரிவுடன் பழகுகின்றனர்.

‘சமுதாயப் பணி ஒரு சுமை’ என்ற சாதாரண மக்களின் கருத்திலிருந்து ஸ்வயம் சேவகர் விடுபட்டு, நாளடைவில் ஷாகாவின் குறிக்கோளில் ஒன்றிவிட்ட ஊழியர்களின் முன்னுதாரணத்தைக் கண்டு, சங்கப் பணிக்காக அதிக நேரம் கொடுக்கவும் தொடங்கிவிடுகிறார். கூடவே அவரது திறமைக்கு ஏற்ப அவரிடம் சிறு சிறு பொறுப்புகள் ஒப்படைக்கப்படுகின்றன. அந்தப் பொறுப்புகளை திறமையாக வகிப்பதற்குத் தேவையான பயிற்சியும் அவருக்கு அளிக்கப்படுகிறது. இந்த நடைமுறை வாழையடி வாழையாகத் தொடர்கிறது.

அவர்களிலேயே சிலர் தங்கள் கல்விப் பயிற்சி நிறைவடைந்தவுடன் சங்கத்துக்காகத் தங்கள் முழுநேரத்தை அளிக்கவும் தயாராகி விடுகின்றனர். பணிகளுக்கு எந்த இடத்தில், எந்த வகையான தேவை ஏற்படுகிறதோ அதற்கேற்ப அவர்கள் அனுப்பப்படுகிறார்கள். இப்படிப்பட்ட ஊழியர்களை ‘பிரச்சாரக்’ என்கிறோம்.

பிரச்சாரகர்கள் தங்களது சிந்தனை வளர்ச்சிக்கும், செயல்திறனுக்கும் ஏற்ப குறைந்த அல்லது அதிகக் காலம் பணியாற்றுகின்றனர். அவர்களுக்குச் சில சிறப்பான பயிற்சிகள் அளிக்கப்படுகின்றன. பெரும்பான்மையான ஊழியர்கள், குடும்பங்களிலுள்ளவர்களே – மாணவர்கள், தொழிலாளர்கள், உழவர்கள், ஆசிரியர்கள் போன்றவர்களே.

அவர்கள் சுமார் 8-10 வயதுச் சிறுவர்களாகத் தொடங்கி, முதுமையிலும் தனது உடலும் மனமும் தளராத வரையில் பணி செய்கின்றனர். இப்படிப்பட்டவர்கள் தங்கள் தங்கள் இடங்களிலும் சில சமயங்களில் வெளியூர் சென்றும் சங்கப் பணியை வலுவாக்கவும் பரவச் செய்யவும் கூட தங்கள் தினசரி வாழ்வில் நேரம் ஒதுக்குகின்றனர்.

அவர்களில் சிலர் 50-60 வயதைத் தாண்டியவர்கள் – வானப் பிரஸ்த முறைப்படி, தங்கள் குடும்பப் பொறுப்பிலிருந்து விடுபட்டு, முழுநேரமும் சங்கத்தின் திட்டப்படி பணிபுரிய முன்வருகின்றனர்.

ஷாகாக்களின் மூலமாக சாதாரண மக்களிலிருந்தே, சமுதாயத்துக்காக நேரம் கொடுத்து, கடுமையாக உழைத்துப் பணிபுரிபவர்களை உருவாக்க டாக்டர்ஜி தீட்டிய திட்டம் பெரிய அளவில் வெற்றியடைந்து வருகிறது என்பதைப் புரிந்து கொண்டிருப்பீர்கள்.

இந்த எல்லாவகையான ஊழியர்களுக்கும் பெருஞ்சிறப்பொன்று உண்டு – இவர்கள் தங்கள் 2.ழைப்புக்காக – பணம், செல்வாக்கு, பதவி, கௌரவம் எதையுமே எதிர்பார்ப்பதில்லை. தனது பெயர் பரவவேண்டுமென்றுகூட விரும்புவதில்லை. தன்னுடன் பணியாற்றும் ஊழியர்களின் பண்புகள் சிறப்படையவும், தன்னிலும் அதிகச் செயல் திறன் கொண்டவர்களாக அவர்கள் முன்னேறவும் இடைவிடாது முயன்று வருகின்றனர்.

குருதக்ஷிணா முறையின் சிறப்பு

புதிய புதிய ஊழியர்களை உருவாக்குவதுடன் கூடவே, ஷாகாக்களில் புதிதாக வரும் ஸ்வயம் சேவகர்களிடம் சங்கத்துக்குத் தேவையான குணங்களையும் சரியான முறையில் வளர்த்துக் கொண்டே இருக்க வேண்டும் என்ற நோக்கில் டாக்டர்ஜி ஷாகா நடைமுறையில் சில அடிப்படை அம்சங்களை இணைத்தார். எடுத்துக்காட்டாக, எந்தவொரு அமைப்பும் சிறந்த முறையில், நல்லொழுக்கம் மற்றும் கட்டுப்பாட்டுடன் நடந்து கொண்டிருப்பதற்கு அதன் உறுப்பினர்கள் இடையே பணவிஷயத்தில் தூய்மையான எண்ணம் இருப்பது இன்றியமையாதது. எனவே டாக்டர்ஜி சங்கத்தில், கட்டணம் அல்லது நன்கொடை என்ற கருத்துக்குப் பதிலாக சமர்ப்பண மனப்பான்மையை முன்வைத்தார்.

இதே நோக்கில்தான் ஸ்ரீ குருதக்ஷிணா முறையைத் தொடங்கினார். காவிக் கொடியையே தனது குருவாகக் கருதி, ஸ்வயம்சேவகர்கள் வியாஸ பூர்ணிமா (ஆடிமாதப் பௌர்ணமி) நன்னாளில், அதன் முன்னே தனது சக்திக்கு ஏற்றவாறு தக்ஷிணை சமர்ப்பிக்கின்றனர். அதை வைத்துத்தான் சங்கம் தனது பணிகள் அனைத்தையும் நடத்துகிறது. இம்முறையினால் ஸ்வயம்சேவகர்களுக்குள் சுயசார்புப் பண்பும் வளர்கிறது. –

தனிமனிதன் மீது அல்ல; லட்சியத்தின் மீதே ஈடுபாடு

இப்படிப்பட்ட வித்தியாசமான குரு பூஜை முறையின் மூலம் தனிமனிதனிடம் பற்றுக் கொள்வதற்கு பதிலாக, லட்சியத்தின்மீது பற்றுக் கொள்ளும் பண்புப்பதிவை ஏற்படுத்துவதில் டாக்டர்ஜி வெற்றி கண்டார். இதற்கு ஏற்ற வகையில் அவர் ஸ்வயம் சேவகர்கள் முன்னே தனது வாழ்வையே எடுத்துக்காட்டாக வைத்தார். சங்கம் தொடர்பான முடிவு எதுவாயினும், உடன் பணியாற்றுபவர்களுடன் கலந்து ஆலோசித்த பின்னரே தீர்மானிப்பார். எல்லா ஸ்வயம் சேவகர்களிடமும் எதிர் பார்க்கப்படும் ஒவ்வொரு விதிமுறையையும், தானும் மிக உறுதியாக அவர் கடைப்பிடித்து வந்தார்.

தொடரும் …

ஆர்.எஸ்.எஸ் வளர்ந்த வரலாறு 4

பல்வேறு அமைப்புகளின் பங்களிப்பு

‘ஷாகாவில் பண்புப் பதிவு பெற்ற ஸ்வயம் சேவகர்கள் மூலம் நமது தேசத்தின் எல்லாத் துறைகளிலும் மேம்பாட்டுக்கான பணி நடைபெறும்’ என டாக்டர்ஜி கூறியதில் தொண்டு தவிர வேறு ஒரு அம்சமும் உண்டு. அதுதான், மாணவர்கள், ஆசிரியர்கள், தொழிலாளர்கள், விவசாயிகள், போன்ற துறைகளுடன் கூடவே தர்மம், கலை, சுதேசி, அரசியல் போன்ற பல்வேறு துறைகளிலும் கூட தனித்தனியாக மகத்தான செல்வாக்குடைய அமைப்புகளை ஸ்வயம் சேவகர்கள் உருவாக்கியுள்ளனர். இதுவும் தவிர, பிரத்யேகமாக பெண்கள் மத்தியிலும் அமைப்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த அமைப்புகள் எல்லாமே, அந்தந்தத் துறைகளில் தேசத்தில் மற்ற அமைப்புகளை விட சிறந்தனவாகவும், செல்வாக்குடையனவாகவும் விளங்குகின்றன.

விஸ்வ ஹிந்து பரிஷத்: ஸ்ரீ குருஜி அவர்களின் முயற்சியால். சுவாமி சின்மயானந்தர் உள்ளிட்ட துறவிகள் முன்னிலையில் 1964-இல் மும்பையில் தொடங்கப்பட்டது. குத்துவிளக்கு பூஜை போன்ற ஆன்மிக நிகழ்ச்சிகள் மூலம் ஹிந்துக்களை இணைக்கிறது. ஸ்ரீராம ஜென்ம பூமி இயக்கத்தில் பெரும்பங்கு வகித்து வருகிறது. உலகின் பல நாடுகளில் பரவியுள்ள அமைப்பு இது. தமிழகத்தில், விசேஷமாக கிராமக்கோயில் பூஜாரிகளுக்கு முறையான பூஜைப் பயிற்சி முகாம்களை நடத்தி வருகிறது. இதில் பல்லாயிரக்கணக்கானோர் பயிற்சி பெற்றுள்ளனர்.

அகில பாரதீய வித்யார்த்தி பரிஷத் நாடு முழுவதும் எட்டு லட்சத்துக்கும் அதிகமான மாணவர்களைக் கொண்டு செயல்பட்டு வரும் ஒரே அமைப்பு. மாணவர்களிடையே தேசபக்தியையும், கட்டுப்பாட்டையும் வளர்க்கும் அமைப்பு. தமிழகத்தில், அம்பேத்கர் சட்ட பல்கலைக்கழகம் அமைப்பதில் பெரும் பங்காற்றியது. செப்டம்பர் 5-ஆம் தேதி ஆசிரியர் தினத்தன்று கல்லூரிப் பேராசிரியர்களுக்கு மாணவர்கள் மலர்ச்செண்டு அளித்து ஆசி பெறும் நிகழ்ச்சி பரவி வருகிரது. ஏ.பி.வி.பி உள்ள கல்லூரிகளில் ராகிங் கொடுமை குறைந்துள்ளது.

பாரதீய மஸ்தூர் சங்கம்: ஹிந்துத்வ சிந்தனையில் தொழிலாளர்களை ஒன்றுபடுத்தும் அமைப்பு. தொழிலாளி என்றாலே கம்யூனிஸ்டு தான் என்ற மனப்பான்மையை உடைத்து 31 லட்சம் உறுப்பினர்களுடன் பாரதத்தின் முதன்மை சங்கமாக பீடுநடை போட்டு வருகிறது.

பாரதீய கிசான் சங்கம்: 15 லட்சம் உறுப்பினர்களைக் கொண்ட மிகப்பெரிய விவசாயிகளுக்கான அமைப்பு.

ராஷ்ட்ர சேவிகா சமிதி: பாரதீய கலாச்சாரத்தை நிலைநிறுத்துவதில் முக்கியப் பங்கு வகிக்கும் மாதர்களுக்கான அமைப்பு. நாடு முழுவதும் 5000-த்துக்கும் மேற்பட்ட கிளைகள் உள்ளன.

வித்யா பாரதி: நாடு முழுவதும் நகரங்களிலும், கிராமங்களிலும் மலைவாழ்மக்கள் மத்தியிலும் 16,000-த்துக்கும் மேற்பட்ட பள்ளிகளை நடத்திவரும் மிகப்பெரிய தன்னார்வ அமைப்பு.

இந்து முன்னணி: ஆன்மிக பூமியான தமிழகத்தில் 50 ஆண்டுகளாக நாத்திகம் என்ற போர்வையில் பரப்பப்பட்டு வந்த நச்சுக் கருத்துகளை முறியடித்ததில் முன்னணியில் உள்ள இயக்கம். விநாயகர் சதுர்த்தி விழா மூலம் தமிழகத்தில் பெரும் எழுச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நமது தேசியவாழ்வு ஒரு போதும் அரசியலை, ஆட்சி அதிகாரத்தை மையமாகக் கொண்டிருந்ததில்லை. இதே சிறப்பினை மீண்டும் நிலைநிறுத்தும் நோக்குடன் இந்த அமைப்புகளில் எதுவுமே அரசின் தயவை சார்ந்திருக்கவில்லை. மக்கள் ஒத்துழைப்பின் பலத்தில்தான் இவை நடைபெறுகின்றன; வளர்ந்து வருகின்றன.

வரலாற்றிலிருந்து பாடம்…

இப்போது உங்கள் மனத்தில் ஒரு கேள்வி எழக்கூடும் – இப்படிப்பட்ட அமைப்புகளை உருவாக்குவதாலும், தொண்டுப் பணிகள் செய்வதாலும் மட்டுமே, நாட்டின் அனைத்துமுக மேம்பாடு ஏற்பட முடியுமா? நாட்டின் முன்னே எத்தனையோ விதமான பிரச்சினைகள் உள்ளன. இவற்றுக்கு எல்லாம் தீர்வு ஏற்பட்டு விடுமா? சங்க ஸ்தாபகர் இதுபற்றியும் சிந்தித்திருப்பாரா? உங்களது இந்த சந்தேகம் முற்றிலும் சரியானதே,

டாக்டர்ஜி அடிப்படையான விஷயங்களை ஊன்றிக் கவனித்த சிந்தனையாளர். சுதந்திரப் போராட்டத்தில் பல்வேறு தேசிய விழிப்புணர்வுத் திட்டங்களில் பங்கெடுத்துக் கொள்வதால் மட்டும் திருப்தியடைபவரல்ல. தனது கூர்மையான மருத்துவ அறிவினால் அந்த முயற்சிகளனைத்தின் நிறை – குறைகளையும் கூட அவர் நாடிபிடித்துப் பார்த்து அறிந்திருந்தார். கூடவே நமது தேசத்தின் முந்தைய வரலாற்றையும் ஆழ்ந்து பரிசீலித்திருந்தார். இவ்வாறு உள்நோக்கிச் சிந்திக்கும் வேளையில் அவர் முன் முதலாவதாக எழுந்த கேள்வி – இன்றைய நமது கோரமான ஏழ்மையில், அடிமைத்தனத்தில் நாம் தள்ளப்பட்டது ஏன்? எப்போதுமே நமது தேசம் இதுபோலத் தாழ்ந்த நிலையில்தான் இருந்ததா? இதற்கான பதிலை வரலாறு தெளிவாகக் கூறுகிறது.

நமது தேசத்தின் வீழ்ச்சி குறிப்பாக கடந்த ஆயிரம் ஆண்டுகளாகத்தான் படிப்படியாக ஏற்பட்டு வந்துள்ளது. அதற்குமுன், பல்லாயிரம் ஆண்டுகளாக நமது தேசம், மற்ற நாடுகளைவிட கல்வி, விஞ்ஞானம், கலாச்சாரத்தில் மேம்பட்ட நிலையில் இருந்தது. இருந்தும் ஏன் அடிமைகள் ஆனோம்?

இஸ்லாமிய மற்றும் கிறிஸ்தவ ஆக்கிரமிப்பாளர்கள் நம்மைப் போலவே சகிப்புத்தன்மை, பெருந்தன்மை கொண்டவர்களாக இருப்பார்கள்; இறைவழிபாட்டு முறைகளில் மட்டுமே வேறுபாடு உள்ளது என்ற நினைப்பில் நாம் வாழ்ந்து கொண்டிருந்தோம்.

ஒற்றுமையின்மைதான் சாபக்கேடு

ஆனால் இந்த எல்லா காரணங்களையும் விட முக்கியமான காரணம் நமது சமுதாயத்தின் ஒருமைப்பாடற்ற நிலையே. இது நமது தர்ம பூமி, கர்ம பூமி, புண்ணிய பூமி, மோட்ச பூமி என்ற உணர்வு மக்கள் மனத்தில் நிரம்பியிருந்தது. நாட்டின் ஒரு மூலையிலிருந்து மற்றொரு மூலை வரை நான்கு திசைகளிலும் தீர்த்த யாத்திரைகள் நடைபெற்று வந்தன. கும்ப மேளா போன்ற நிகழ்ச்சிகளில் மிகப்பெரிய எண்ணிக்கையில், வனவாசிகள் உட்பட நாடெங்கிலுமிருந்து பக்தர்கள் ஒன்று திரண்டனர்.

ஆனால் ‘நமது இந்த பூமியே நமது தேசிய வாழ்வுக்கு ஆதாரம், இதன் ஒற்றுமையைக் கட்டிக்காப்பது நமது முதல் கடமை’ என்ற கடமையுணர்வு மக்கள் மனதிலிருந்து மறைந்து விட்டிருந்தது. ஆங்கிலேயர்கள் வந்த பிறகு அவர்களது வஞ்சகப் பிரச்சாரத்தின் விளைவாக, கல்வி கற்ற நம்மவர் வேறு ஒரு வகையான சுயமறதியில் சிக்கினர். நாம் யார், நமது தேசத்தின் பெயர் என்ன, நமக்கு தேசியம் என்பது எது போன்ற அடிப்படை விஷயங்கள் எல்லாவற்றையும் பற்றி அறிந்து கொள்ள விரும்பாத எண்ணங்கள் நம்மவர் மனத்தில் ஆதிக்கம் செலுத்தின.

டாக்டர்ஜி எடுத்த சரியான முடிவு

எனவே, நமது தேசம் வீழ்ச்சியடைய மூலகாரணமான இந்தக் குறைபாட்டிலிருந்து நமது சமுதாயம் விடுபடாத வரை, நமது நாடு ஒரு போதும் இன்னல்களிலிருந்து விடுபடாது என்ற முடிவுக்கு வந்தார் டாக்டர்ஜி.

அந்நாளில், ஆங்கிலேயரின் பிடியிலிருந்து நாட்டை விடுவிப்பது எப்படி என்பதுதான் எல்லா இயக்கங்களின் மையக்கருத்தாக இருந்தது. அச்சமயம் நடைபெற்று வந்த விடுதலைப் போராட்டத்தில், முஸ்லிம்களை நம்முடன் சேர்த்துக்கொள்ள வழி என்ன என்பதே எல்லாத் தலைவர்களுக்கும் பெரிய தலைவலியாகியிருந்தது.

ஆனால், நமது தேசத்தின் வீழ்ச்சிக்குக் காரணமான ஒற்றுமையின்மை, உண்மையான தேசம் எது என்பதில் மறதி போன்ற அடிப்படைக் குறைபாடுகளை விலக்குவதற்காக வரிந்து கட்டிக்கொண்டு செயல்பட டாக்டர்ஜி உறுதிபூண்டார்.

ஹிந்து சமுதாயம் முழுவதையும் ஒருங்கிணைக்க வேண்டும்

ஹிந்து தேசிய அடிப்படையில் ஹிந்து சமுதாயத்தை ஒருங்கிணைக்கும் நோக்கத்துடன் டாக்டர்ஜி சங்கத்தை நிறுவினார். ஹிந்து சமுதாய ஒருங்கிணைப்பு என்றால் என்ன? ஹிந்து ஒற்றுமையின் வடிவம் என்ன? ஸ்வயம்சேவகர்களுக்கு எப்படிப்பட்ட மனப்பான்மை வேண்டும்? இவ்வாறு பல்வேறு விஷயங்களைப் பற்றியும் ஸ்வயம் சேவகர்களுக்கு விளக்கி வந்தார். பொதுவாக, அமைப்பு என்பது சமுதாயத்திற்குள்ளேயே அதன் உறுப்பினர்களில் சிலரைக் கொண்டு அமையும் ஒரு நிறுவனம் என்ற கருத்து நிலவி வருகிறது. ஆனால் சங்கம், சமுதாயத்திற்குள்ளே ஒரு தனி அமைப்பல்ல, அதாவது ஹிந்து சமுதாயம் முழுமைக்குமே கட்டுக்கோப்பானதொரு அமைப்புவடிவம் கொடுப்பதற்கான முயற்சி இது.

சோதனைக் காலத்திலும்கூட ஹிந்து ஒற்றுமையில் உறுதி

டாக்டர்ஜி காலத்திலிருந்து இன்றுவரை சங்கத்தில் நிலவி வரும் கண்ணோட்டம் இதுதான். டாக்டர்ஜிக்குப் பின் ஸ்ரீ குருஜி காலத்தைய உதாரணம் ஒன்று – காந்திஜி கொலை செய்யப்பட்ட போது சங்கத்தின் மீது அபாண்டமாக பழி சுமத்தி, காங்கிரஸாரும், சோஷலிஸ்டுகளும், கம்யூனிஸ்டுகளும் சங்கத்தை அழித்துவிட முயன்றனர். குறிப்பாக மகாராஷ்டிரத்திலும், கர்நாடகாவின் சில பகுதிகளிலும் சங்க ஸ்வயம் சேவகர்களையும் அவர்களது வீடுகளையும் பயங்கரமாகத் தாக்கினார்கள்.

அச்சமயம் சங்க சக்தியும் குறைந்ததல்ல. தாக்கிய அனைவருக்கும் தக்க விதத்தில் பதிலளிக்கக்கூடிய ஆற்றல் அவர்களிடம் இருந்தது. எனினும் எந்தவொரு சூழ்நிலையிலும் அமைதி காக்கும்படி சங்க பொதுச்செயலர் ஸ்வயம் சேவகர்களைப் பணித்தார். நாகபுரியில் ஸ்ரீ குருஜி இருந்த கார்யாலயத்தை கும்பல் சூழ்ந்து கொண்டபோது கூட பதிலடி கொடுக்கவிடாமல் ஸ்வயம் சேவகர்களை தடுத்துவிட்டார் குருஜி. “எந்த சமுதாயத் தொண்டுக்காக, ஒற்றுமைக்காக, நாம் சமர்ப்பணமாகி உள்ளோமோ. அந்த சமுதாயத்தின் ஒரே ஒரு நபரின் ஒரு சொட்டு ரத்தம் கூட எனக்காக சிந்துவதை நான் விரும்பவில்லை” என்றார்.

தொடரும் …

ஆர்.எஸ்.எஸ் வளர்ந்த வரலாறு 3

சேவைப்பணிகளில் சாதி, சமய வேறுபாடில்லை

‘நீங்கள் ஹிந்துக்களுக்காகப் பணி புரிபவர்கள். எனவே தொண்டுப் பணிகளும் ஹிந்துக்களுக்கு மட்டும் தானா?’ என்று மக்கள் ஸ்வயம் சேவகர்களிடம் கேட்பதுண்டு. இல்லை, ஒருபோதும் இல்லை. ஹிந்துக்களின் இயல்பிலேயே இந்தக் கண்ணோட்டம் இல்லை. துன்பப்படுபவர்கள், யாரானாலும் நிவாரணம் கிடைக்கும். ஹரியாணாவில் சர்க்கீ – தாத்ரீ விமான விபத்து இதை எடுத்துக்காட்டுகிறது.

விபத்தில் இறந்த பயணிகள் அனைவரும் முஸ்லிம்கள். அங்கிருந்த மௌல்விகளை வரவழைத்து, தொடக்கம் முதல் இறுதிவரை அனைத்துப் பணிகளையும் நிறைவேற்றியவர்கள் ஸ்வயம்சேவகர்களே. சவூதி அரேபியா செய்தித்தாள் அல்-ரியாத், “ஆர்.எஸ்.எஸ் முஸ்லிம்களுக்கெதிரான அமைப்பு என இதுவரை எண்ணியிருந்தோம். அது முற்றிலும் தவறான கருத்து என இப்போது நமக்குத் தெரியவருகிறது” என எழுதியது.

சென்னையில் நாள்தோறும் இருதய அறுவை சிகிச்சை நடைபெற்று வருகிறது. ஒரு முறை ஈரோட்டுக்கு அருகே உள்ள பவானியிலிருந்து சென்னை பொது மருத்துவமனைக்கு தனது 10 வயது மகளின் இருதய அறுவை சிகிச்சைக்காக வந்த ஒரு முஸ்லிம், தனது உறவினர்களிடம் இருந்து ரத்தம் பெறமுடியாமல் தவித்தார்.

அவரோ ஏழை. தன்னுடைய பரிதாப நிலையை டாக்டரிடம் சொல்லி முறையிட்டார். உடனே கிறிஸ்தவராகிய அந்த டாக்டர், ஆர்.எஸ்.எஸ் அலுவலகத்துக்குச் சென்றால் ரத்தம் கிடைக்கும் என்றார். அந்த முஸ்லிமோ தயங்கினார். அவரது தயக்கத்தைப் போக்கி டாக்டர் அவரை ஆர்.எஸ்.எஸ் அலுவலகத்துக்கு அனுப்பி வைத்தார். அறுவை சிகிச்சைக்குப் பிறகு ஊர் திரும்பிய பின், “நீங்கள்தான் என் மகளுக்கு உயிர்ப்பிச்சை அளித்தீர்கள். ஆர்.எஸ்.எஸ் ஓங்கி வளர அல்லா அருள் புரிவானாக” என்று சங்க கார்யாலயத்துக்குக் கடிதம் எழுதினார், அவர்.

போர் நேரங்களில்…….

1962-இல் பாரதத்தின் வடகிழக்கு எல்லையை திடீரென்று ஆக்கிரமித்தது சீனா. அச்சமயத்தில் ஸ்வயம் சேவகர்கள் அரசுக்கு மிகுந்த ஒத்துழைப்பு அளித்தனர். அப்போதைய பிரதமர் நேரு இதுகண்டு வியப்பும் மகிழ்ச்சியும் அடைந்தார்.

1963-இல் குடியரசு தின அணிவகுப்பில் பங்கு கொள்ள அவர் சங்கத்துக்கும் அழைப்பு விடுத்தார். மூன்று நாள் முன்புதான் அறிவிக்கப்பட்டபோதிலும் சீருடையணிந்த 3,000 ஸ்வயம்சேவகர்களின் கம்பீரமான அணிவகுப்பு அந்நிகழ்ச்சியின் மிகக் கவர்ச்சிகரமானதொரு அங்கமாக விளங்கியது.

1965-இல் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பின்போது அப்போதைய பிரதமர் லால்பகதூர் சாஸ்திரியின் அழைப்பின் பேரில் ஸ்ரீ குருஜி டில்லி சென்றார்.

அங்கு போர்க் கொள்கையைத் தீர்மானிக்கும் பொருட்டு அழைக்கப்பட்டிருந்த பிரமுகர்களின் கூட்டத்தில் ஸ்ரீ குருஜியின் பங்கு சிறந்த வழிகாட்டுதலாக இருந்தது. சரித்திரத்தில் பதிவாகியுள்ள நிகழ்வு இது.

பாரதத்தின் எல்லை காக்கும் பணி

1947 அக்டோபரில் பாகிஸ்தான் படையெடுத்தபோது ஜம்மு-காஷ்மீரைக் காக்கும் பொருட்டு நமது போர் விமானங்கள் ஸ்ரீநகர் விமான தளத்தில் தக்க சமயத்தில் இறங்க முடிந்ததன் காரணம், அங்குள்ள 500 ஸ்வயம்சேவகர்கள் விமானதளத்தில் படிந்திருந்த உறைபனியை 48 மணி நேரத்துக்குள் இரவு பகலாக கடுமையாக உழைத்து சுத்தம் செய்து வைத்திருந்ததுதான்.

தாத்ரா-நகர் ஹவேலி விடுவிப்பு

பாரதத்திலிருந்து ஆங்கிலேயர் ஆட்சி போனபிறகும் கூட தாத்ரா – நகர் ஹவேலியில் பிரெஞ்சுக்காரர்களின் ஆட்சியும், கோவாவில் போர்த்துகீசியரின் ஆட்சியும் நீடித்தன. அப்போது ஸ்வயம் சேவகர்கள் அவைகளை விடுவிக்க முடிவெடுத்தனர். 1954 ஆகஸ்டு – 2 அன்று ஆயுதம் தாங்கிய நூறு ஸ்வயம் சேவகர்கள் தாத்ரா- நகர் ஹவேலியை முற்றுகையிட்டபோது, அங்கிருந்த அந்நிய ஆட்சியாளர்கள் பயந்து நடுங்கி விட்டனர் . எதிர்க்கும் துணிவை இழந்து விட்டனர். இதன் விளைவாக துளி ரத்தம் சிந்தாமல் வெற்றி கிடைத்தது. பிறகு அந்த ஸ்வயம் சேவகர்கள் அங்கு மூவர்ணக்கொடி (தேசியக்கொடி) ஏற்றி பாரதத்தின் உயர் அதிகாரிகளிடம் அப்பகுதி ஆட்சியை ஒப்படைத்தனர்.

கோவாவில் விடுதலைக்காகப் பலிதானம்

ஆனால் கோவா விடுதலைக்காக 1961 வரை பெருமளவில் பரவலான போராட்டம் நடத்த வேண்டியிருந்தது. நாடெங்கிலும் இருந்து நூற்றுக்கணக்கானவர்கள் கோவா எல்லைக்குள் நுழைந்தனர். உஜ்ஜயினியிலிருந்து ராஜாபாவு மஹாகால் என்ற ஸ்வயம் சேவகர் போர்ச்சுக்கீசியத் துப்பாக்கிகளுக்கெதிரில் ஒரு கையில் பாரதத்தின் மூவர்ணக் கொடியை ஏந்தியபடியே முன்னேறிச் சென்று குண்டுகளால் துளைக்கப்பட்டுத் தன்னையே பலிகொடுத்தார். இவ்வாறு நாடு முழுவதிலும் கோவா விடுதலைப் போராட்டத்தின் சூழ்நிலை சூடேறிய போது, மத்திய அரசு முன்வந்து கோவா விடுதலைக்காக ராணுவ நடவடிக்கை எடுக்க வேண்டி வந்தது. ஸ்வயம்சேவகர்களைத் தவிர இந்த இயக்கத்தில் பாரதீய ஜனசங்கம் மற்றும் சோஷலிஸ்டு கட்சி ஊழியர்களும் பங்கு கொண்டனர்.

பலிதானங்களின் சங்கிலித் தொடர்

தேசப் பிரிவினையின் போது (1947-48) மேற்குப் பாகிஸ்தான் பகுதியில் வசித்துவந்த ஆதரவற்ற நமது ஹிந்து சகோதரர்களை பாதுகாப்பான முறையில் பாரதத்துக்குக் கொண்டு வருவதில் ஸ்வயம் சேவகர்களின் பங்களிப்பு, வீரம், உயிர்த்தியாகம் ஆகியவை அழியாத வரலாறு ஆகிவிட்டது.

1947-ல் பாகிஸ்தானின் இடைவிடாத பீரங்கித் தாக்குதலுக்கிடையில், ஜம்முவின் எல்லைப் பகுதியிலுள்ள ரஜௌரி நகரத்தைக் கடைசி நிமிடம் வரையில் பாதுகாத்துக்கொண்டே அவ்விடத்தின் சங்க கார்யவாஹ் (பொறுப்பாளர்) பலிதானமானார். 1962-ல் சீனப்படை யெடுப்பின் போது அஸ்ஸாமில் தேஜ்பூரின் ஜில்லா அதிகாரி உள்ளிட்ட அனைத்து அரசு ஊழியர்களும் அங்கிருந்த மக்களைப் பாதுகாப்பான இடத்துக்குச் செல்லும்படிக் கூறிவிட்டு அரசுக் கருவூலத்திலிருந்த பணத்தை குளத்தில் வீசி விட்டு ஓடிவிட்டனர். ஆனால், தேசபக்தியுள்ள குடிமக்களுடன் இணைந்து ஸ்வயம் சேவகர்கள் அந்தப் பணத்தைக் காத்தார்கள். தேஜ்பூரைப் பாதுகாக்கும் ஏற்பாடுகளில் இரவு பகலாக ஈடுபட்டார்கள்.

1971-ல் வங்கதேச விடுதலைப் போரிலும் வங்கதேச எல்லையில் உள்ள நமது பாரதத்தின், மேற்கு தினாஜ்பூர் மாவட்டத்தில் சக்ரம் கிராம ஷாகாவின் முக்ய சிக்ஷக்காயிருந்த சுர்க்கா முரமு, தனது உடலைக் கயிற்றால் கட்டிக் கொண்டு எதிரிகளின் குண்டுவீச்சுக்கிடையில் தரையில் ஊர்ந்து கொண்டு, குளத்தில் விழுந்திருந்த பாரதத்தின் ஆயுதப் பெட்டிகளை பத்திரமாக நமது ராணுவ வீரர்களிடம் சேர்ப்பித்து விட்டு வீர மரணமடைந்தார்.

சிறப்பான பயிற்சியாமே! அது என்ன?

-நாடு துண்டாடப்பட்ட போதும், அதையடுத்து 1947 அக்டோபரில் ஜம்மு – காஷ்மீர் மீது திடீரென பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு செய்தபோதும், ஸ்வயம் சேவகர்களின் இணையற்ற துணிச்சலையும், பலிதானத்தையும், பாரதப்படையின் உயர் அதிகாரி ஒருவர் நன்கு அறிந்திருந்தார். ஸ்ரீ குருஜி 1950-ல் பஞ்சாபில் சுற்றுப்பயணம் செய்கையில், அந்த அதிகாரி, ‘போர்க்களத்தில் இவ்வளவு தீரம் காட்டும் உங்களது ஸ்வயம் சேவகர்களுக்கு நீங்கள் அளித்த விசேஷப் பயிற்சி என்ன?’ என ஸ்ரீ குருஜியிடம் கேட்டார். ஸ்ரீ குருஜி சிரித்துக் கொண்டே பதில் சொன்னார்: “கபடி, கோகோ போன்ற விளையாட்டுகள், உடற்பயிற்சிகளின் மூலம் ஷாகாவில் தேசபக்தி, சமுதாயப்பற்று, கட்டுப்பாடு போன்ற பண்புப்பதிவுகள் ஏற்படுகின்றன. வேறு எந்த வகையான படைப் பயிற்சியும் சங்கத்தில் அளிக்கப்படுவது இல்லை” என்று கூறி விளக்கினார்.

பசுப் பாதுகாப்பு இயக்கம்

விடுதலைப் போராட்டத்தில் வெகு காலமாகவே, இடைவிடாது பசுப் பாதுகாப்பும் ஒரு முக்கியப் பிரச்சினையாக இருந்து வந்துள்ளது. இஸ்லாமிய அல்லது கிறிஸ்தவ ஆக்கிரமிப்பாளர்கள் இங்குள்ள மக்களை அவமானப்படுத்துவதற்காக பசுவதையைத் தொடங்கினர். “நாட்டின் விடுதலையை விட, பசுப்பாதுகாப்பு அதிக முக்கியத்துவம் வாய்ந்ததாக நான் கருதுகிறேன்” என்றார் காந்திஜி. ஆனால் பாரத மண்ணிலிருந்து ஆங்கிலேயர்கள் வெளியேறிய பின்பும் பசுவதை நடப்பதுடன் அதிகரிக்கவும் செய்தது. எனவே பசுவதையைத் தடை செய்யக் கோரி 1000-இல் ஸ்ரீ குருஜியின் வழிகாட்டுதலில் நாடெங்கிலும் ஸ்வயம் சேவகர்கள் கிட்டத்தட்ட ஒருகோடியே எழுபத்தைந்து லட்சம் பேரிடம் கையெழுத்து வாங்கி அன்றைய குடியரசுத் தலைவர் டாக்டர் ராஜேந்திர பிரசாத்திடம் அளித்தனர். அது சமயம் பல்லாயிரம் முஸ்லிம்களும் கிறிஸ்தவர்களும் கூட கையெழுத்திட்டது மகிழ்ச்சி தரும் அனுபவம். என்ன துரதிர்ஷ்டமோ, அந்த தேசியக் கோரிக்கையை அரசு அலட்சியப் படுத்திவிட்டது.

கடந்த சில ஆண்டுகளில் பெரிய பெரிய இயந்திரக் கொலைக் கூடங்களும் தொடங்கிவிட்டன. அவற்றில், விடுதலைக்கு முன் நடந்ததை விட நூறு மடங்கு அதிகமாக பசுவதை நடைபெறுகிறது. ஆகையால் அதைத் தடுக்கவும், இந்த கோரமான அபாயத்திலிருந்து நாட்டைக் காக்கவும் இப்போதும் பசுப்பாதுகாப்புக்காக நாடெங்கிலும் பல்வேறு முயற்சிகள் நடைபெற்று வருகின்றன. காஞ்சி சங்கராச்சாரியார் பூஜ்ய ஸ்ரீ ஜெயேந்திரர் இவ்விஷயத்தை எடுத்துக்கொண்டதால் இப்போது இந்த இயக்கம் சூடுபிடித்து வருகிறது.

விவேகானந்தர் பாறை நினைவுச் சின்னம் அமைப்பு

1962 – இல் சீனாவுடன் நடந்த போரில் ஏற்பட்ட தோல்வியினால் மக்களின் மனம் மிகவும் புண்பட்டு இருந்தது. அந்தவேளையில் மக்களுக்குத் தன்னம்பிக்கை ஏற்படச் செய்வது அதிமுக்கியமாக இருந்தது. அந்த நோக்கில் மக்கள் தொடர்பு இயக்கம் நடத்துவது பற்றி பரிசீலிக்கப்பட்டது. இதனை இறைவன் திருவுள்ளம் என்றுதான் கூற வேண்டும். 1963-இல் சுவாமி விவேகானந்தரின் பிறந்தநாள் நூற்றாண்டு விழாவும் வரவே இயக்கத்துக்குத் தூண்டுதலான விஷயம் கிடைத்தது.

சுவாமி விவேகானந்தர் அமெரிக்கா செல்வதற்கு முன் மூன்று நாட்கள் வரை கன்யாகுமரிக் கடற்கரையருகே, கடலில் உள்ள ஒரு பெரிய பாறை மேல் அமர்ந்து பாரதத்தின் எதிர்காலம் பற்றி தியானித்திருந்தார். அதே இடத்தில் அவர் தனது எதிர்காலப் பணிகளையும் தீர்மானித்தார். எனவே அந்தப் புனிதமான தேசிய முக்கியத்துவம் வாய்ந்த பாறையின் மீது சுவாமி விவேகானந்தருக்கு ஓர் அழகிய நினைவாலயம் எழுப்ப முடிவு செய்யப்பட்டது.

இப்பணியின் சிறப்பினை கவனத்தில் கொண்டு, அச்சமயம் சங்கத்தின் பொதுச் செயலர் பொறுப்பில் இருந்த ஸ்ரீ ஏகநாத் ரானடேயிடம் இப்பணி ஒப்படைக்கப்பட்டது. கிறிஸ்தவர்கள் பல வகைகளிலும் இதற்கு முட்டுக்கட்டை போட முயன்று வந்தனர். ஆனால் எல்லா இடையூறுகளையும் தனது இணையற்ற திறமையினாலும், இடைவிடாத முயற்சியினாலும் விலக்கிக் கொண்டு, ஏகநாத்ஜி, விவேகானந்தர் பாறை நினைவுச்சின்னப் பணிகளைத் தொடங்கினார். அப்பணிக்குத் தேவையான பணம் திரட்டுவதற்காக நாடெங்கிலும் ஸ்வயம் சேவகர்கள் விரிவான அளவில் மக்கள் தொடர்பு இயக்கம் நடத்தினர்.

பொருள்திரட்டுவதுடன் கூடவே விவேகானந்தரின், தேச விழிப்புணர்வுச் செய்தியை பல்லாயிரம் பள்ளிகளுக்கும் கல்லூரிகளுக்கும் கொண்டு சென்றனர். கூடவே, சுவாமிஜியின் உத்வேகமூட்டும் கருத்துக்கள் அடங்கிய சிறு நூல்களும் எல்லா மொழிகளிலும் வெளியிடப்பட்டன. இறுதியில், இயக்கத்தை இனிதே நிறைவு செய்ய, 1970-இல் அந்த விவேகானந்தர் பாறையின் மேல் தேசிய உணர்வுக்கு ஒரு கலங்கரை விளக்கம் போல் மிக அழகாக விவேகானந்தர் நினைவுச் சின்னம் எழுந்தது.

ஒருமைப்பாட்டு யாத்திரைகள்

பாரத மாதாவும் கங்கையன்னையும் பாரதத்தின் கோடிக்கணக்கான மக்களின் கலாச்சார ஒருமைப்பாட்டுக்கும் புனிதத்தன்மைக்கும் மாபெரும் பக்திமையங்கள். கங்கையின் புனித நீரை, பாரதத்தின் பட்டி தொட்டிதோறும் மக்களிடம் கொண்டு செல்வதற்காக 1983 நவம்பர் மாதத்தில் மாபெரும் திட்டம் ஒன்றினை விஸ்வ ஹிந்து பரிஷத் தயாரித்தது.

பாரதமாதாவின் உருவச்சிலையும் கங்கை நீர் நிரம்பிய கலசமும் கொண்ட இரண்டாயிரத்துக்கும் அதிகமான ரத யாத்திரைகள், நாட்டின் வெவ்வேறு பாகங்களிலிருந்தும் புறப்பட்ட மூன்று முக்கிய யாத்திரைகளுடன் சேர்ந்து நாடெங்கிலும் 50,000 கிலோ மீட்டர் பயணித்தது. கிட்டத்தட்ட மூன்று லட்சம் கிராமங்களில் பத்து கோடி பேர் பாரதமாதாவையும், கங்கை அன்னையையும் தரிசித்தனர்.

அயோத்தி ராமர் கோயில் இயக்கம்

ராமர் செங்கல் பூஜை (ராம சிலா பூஜன்), ராமர் ஜோதி யாத்திரைகளில் பல லட்சம் கிராமங்களைச் சேர்ந்த மக்கள் பங்கெடுத்துக் கொண்டனர். அயோத்தியில் ராம ஜென்ம பூமியில் அடிக்கல் நாட்டும் நிகழ்ச்சி, அதன்பிறகு ராமர் கோயில் கட்டும் வரலாற்றுச் சிறப்பு மிக்க கரசேவை, அதில் அநேக ராம பக்தர்களின் பலிதானம் இவற்றின் சிலிர்க்கவைக்கும் வர்ணனைகள், பாரதத்தின் சமீபகால தேசிய வாழ்வின் பொன்னேடுகள்.

இந்த மாபெரும் திட்டங்கள் அனைத்தையும் வெற்றியடையச் செய்வதில் ஸ்வயம் சேவகர்கள் முழு மனதுடன் விஸ்வ ஹிந்து பரிஷத்துக்கு ஒத்துழைப்பு அளித்தனர்.

டாக்டர்ஜியின் நூற்றாண்டு விழா 1989-இல் சங்க ஸ்தாபகர் டாக்டர்ஜியின் நூற்றாண்டு விழா நல்லதொரு வாய்ப்பாக அமைந்தது. மக்களே கொண்டாடிய விழா இது. இந்த மக்கள் தொடர்பு இயக்கத்தின்போது 1.5 கோடி குடும்பங்களை சங்க ஊழியர்கள் தொடர்பு கொண்டனர். சமீபத்தில் டாக்டர் ஹெட்கேவாரது பெருமையை உணர்ந்து அரசும் தபால்தலை வெளியிட்டுச் சிறப்பித்தது.

தொடரும் …

ஆர்.எஸ்.எஸ் வளர்ந்த வரலாறு 2

தொண்டு வாயிலாக சமுதாயத்தில் நல்ல மாற்றங்கள்

அதாவது நமது ஹிந்து சமுதாயத்தை உள்ளிருந்து அழிக்கும் தீங்கான பழக்க வழக்கங்கள், மனப்பான்மைகள் ஆகியவற்றை நீக்குவது, இந்த மாற்றங்களின் முக்கிய அம்சம். தீண்டாமை, சாதி வேறுபாடு, உயர்வு – தாழ்வு, ஏழை – பணக்காரன் போன்ற வேற்றுமை உணர்வுகளைப் போக்குவதற்காகப் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப் படுகின்றன. வட பாரதத்தில் துர்காஷ்டமியன்று கன்யா பூஜை செய்வார்கள். அன்று நூற்றுக்கணக்கான ஸ்வயம்சேவகர்களின் வீடுகளில் குடிசைப் பகுதிச் சிறுமிகளை அழைத்து அவர்களுக்கு முறைப்படி பூஜை செய்கிறார்கள். அது, குடும்பமே பங்கேற்கும் விழாவாகி விடுகிறது.

இதுதவிர, நாடெங்கிலும் பல்லாயிரம் ஸ்வயம் சேவகர்களின் குடும்பங்களின் பெரியோர்கள், தாய்மார்கள், சகோதரிகள் குடிசைப் பகுதிகளுக்குப் போய், அவர்களுடன் அமர்ந்து சாப்பிடுகிறார்கள். அவர்களையும் தங்கள் வீடுகளுக்கு அழைத்து அதே போல் உபசரிக்கிறார்கள்.

தேசியப் புனரமைப்பில் ஒரு மிக முக்கியமான அம்சம் கிராம வளர்ச்சி. மகாத்மா காந்தி கிராமங்களை அடிப்படையாகக் கொண்ட பொருளாதார வளர்ச்சித் திட்டங்களை நாட்டின் முன் வைத்தும் கூட அரசு அதை அடியோடு புறக்கணித்ததால் கிராமங்கள் வளர்ச்சி அடையவேயில்லை.

இந்நிலையில் இயன்றவரை மாறுதலைக் கொண்டு வருவதற்காக ஸ்வயம்சேவகர்கள் சில கிராமங்களில் ஒருங்கிணைந்த ஊரக வளர்ச்சித் திட்டம் தொடங்கியுள்ளனர். மகாராஷ்டிரத்தில் பின்தங்கிய கிராமமாகிய ராலேகாவ் ஸிந்தியை அண்ணா ஹஜாரே 10 -16 ஆண்டுகளுக்குள் ராமராஜ்யம் போல மாற்றியுள்ளார். ஸ்வயம் சேவகர்கள் அதை ஒரு எடுத்துக்காட்டாகக் கொண்டுள்ளனர்.

மத்தியப் பிரதேசத்திலுள்ள மோஹத் என்ற சிற்றூரையும் அங்குள்ள சங்க ஊழியர்கள் அதே போல் நல்ல வளமான கிராமமாக மாற்றியுள்ளனர். பயிர்த் தொழிலில் சீர்த்திருத்தம், சாண எரிவாயு, பெரிய அளவில் இயற்கை உர உற்பத்தி, பலநூறு கிராமவாசிகளுக்கு ஓரளவு சம்ஸ்கிருதம் பேசும் பயிற்சி, வீடு, சாலைகளில் சுத்தம், சாதி வேறுபாடு போன்ற தீய பழக்கங்கள் ஒழிப்பு போன்ற நல்ல மாற்றங்கள் கடந்த 10-12 ஆண்டுகளுக்குள் அங்கு ஏற்பட்டுள்ளன.

கர்நாடகத்தின் மங்களூர் மாவட்டத்தைச் சேர்ந்த 33 கிராமங்களிலுள்ள மக்கள் தங்கள் கிராமங்களை, பசிப்பிணியற்ற, நோயற்ற, எழுத்தறிவின்மையற்றதாக மாற்றும் திசையில் முன்னேறி வருகின்றனர்.

குறிப்பாக ஒரு விஷயம் உங்களுக்குச் சொல்ல விரும்புகிறேன்: ஸ்வயம் சேவகர்கள் தொண்டு செய்யும் போது சமுதாய மாற்றத்துடன் கூடவே, தன்னிடமும் மாற்றத்தை, பண்புப் பதிவுகளை பெறுகிறார்கள். ‘மக்கள் தொண்டே மகேசன் தொண்டு’ என்ற மனப்பான்மை வேண்டும் என்ற விருப்பம், அவர்களுக்கு எப்போதும் உண்டு.

ஹிந்து ஒற்றுமை என்ற புதிய தாரக மந்திரம்

ஹிந்துக்களிடையே பரஸ்பரம் மதிப்பும் மரியாதையும் சகோதர உணர்வும் நிலைபெற வேண்டும். இதில் துறவியர்களின் பங்கும் அதிகமாகி வருகிறது. பூஜ்ய சங்கராச்சாரியார், மத்வ, வைணவ, ஜைனம், பௌத்த, சீக்கிய சம்பிரதாயங்களைச் சேர்ந்த முக்கிய மடாதிபதிகள், 1966-ஆம் ஆண்டு பிரயாகையில் கும்பமேளாவின் போது நடந்த விஸ்வ ஹிந்து பரிஷத்தின் உலக ஹிந்து மாநாட்டில் “அனைத்து ஹிந்துக்களும் சகோதரர்களே (ஹிந்தவஹ ஸோதராஹா ஸர்வே) – ஹிந்துக்கள் அனைவரும் ஒரே தாயின் வயிற்றில் பிறந்தவர்கள் என்றதொரு புதிய தாரக மந்திரத்தை அளித்தனர்.

இந்த மகத்தான சமுதாய சமத்துவ மந்திரத்தை வாழ்வின் அனைத்துத் துறைகளிலும் நடைமுறைப்படுத்துவது சங்கத்தின் எண்ணம். அனைத்து ஹிந்துக்களும் அனைத்துக் கோயில்களிலும் சென்று வழிபடுவதை, சங்கம் என்றுமே ஆதரித்து வந்துள்ளது. ஆனால் சங்கத்தின் பார்வைக் கோணம் அத்துடன் நின்று விடவில்லை . நமது புனிதமான வேதங்கள், உபநிடதங்கள், யோக சாத்திரங்கள் போன்றவை சமுதாயம் முழுவதற்குமான சொத்து என்றே சங்கம் கருதுகிறது.

இந்த முழுமையான கண்ணோட்டத்தின் காரணமாக ஸ்வயம்சேவகர்கள் கேரளா, தமிழ்நாடு போன்ற பகுதிகளில், பிராமணர் அல்லாத ஹிந்து சகோதரர்களுக்கு வைதீக – பூஜை முறையில் பயிற்சியளித்து வருகின்றனர். அவர்களில் பலர் பூசாரியாகி விட்டனர் என்பதே இதில் பெருமைப்படத்தக்க விஷயம். இவ்வகையில் பளிச்சிடும் உதாரணம் ஒன்று, ஹரிஜன சகோதரர் ஸ்ரீ கமலேஸ்வர் சௌபால், அயோத்தி ஸ்ரீ ராமர் கோயிலுக்கு அடிக்கல் நாட்டியது.

உலகையே கவர்ந்திழுக்கும் யோகா, சமஸ்கிருதம்

யோகப் பயிற்சி உலகுக்கு பாரதத்தின் நன்கொடை ஆகும். அதனை பாரதம் முழுவதிலும் பரப்புவதற்கு ஷாகாக்களிலும், பிற இடங்களிலும் யோகப் பயிற்சி மையங்கள் தொடங்கியுள்ளனர். அங்கே சங்கம் மற்றும் சமிதியைச் சேர்ந்த பல்லாயிரம் இளைஞர்களும் யுவதிகளும் யோகக்கல்வி பயின்று வருகின்றனர்.

செம்மொழியான சம்ஸ்கிருத்தை ஆங்கிலேயர் இறந்த மொழி என்றனர். ஆனால் ‘சம்ஸ்கிருத பாரதி’ என்ற அமைப்பு பல்லாயிரம் சம்பாஷண சிபிரங்கள் மூலம் பத்தே நாட்களில் சம்ஸ்கிருதம் பேச முடியுமென்று செய்து காட்டியது. இது குறிப்பாக குடிசை பகுதிகளுக்குச் சென்றதனால் அவர்களுக்கும் கலாச்சாரப் பெருமிதம் ஏற்பட்டுள்ளது. இன்று சம்ஸ்கிருத சம்பாஷண சிபிரங்கள் லண்டன் வரை பரவியுள்ளன.

தாய்மதம் திரும்புவதற்கான மகாமந்திரம்

கடந்த ஓராயிரம் ஆண்டுகளாக, இஸ்லாமிய ஆக்கிரமிப்பாளர்கள் பாரதத்துக்குள் அடியெடுத்து வைத்ததிலிருந்தே இடைவிடாது இங்கிருந்த ஹிந்துக் கோயில்களைத் தரைமட்டமாக்குதல், ஹிந்துப் பெண்களை அபகரித்தல், ஹிந்து தர்மத்தைப் போதிப்பவர்களைப் படுகொலை செய்தல், பெரிய அளவில் ஹிந்துக்களை முஸ்லிம்களாக்குதல் எல்லாம் தொடங்கிவிட்டது. இவ்விதமாகக் கிடுக்கிப்பிடியில் சிக்கிக் கொண்ட ஹிந்துக்களின் எண்ணிக்கை குறைந்து கொண்டே இருந்தது.

முஸ்லிம்களாக மாறியவர்களெல்லாம் வெளியிலிருந்து வந்த ஆக்கிரமிப்பாளர்களின் கூடாரத்தில் சேர்ந்து கொண்டனர். நேற்றுவரை தனது சகோதர, சகோதரிகளாக இருந்த ஹிந்துக்களின் மீதே தாக்குதல் நடத்த ஆரம்பித்தனர்.

இதனால் ஏற்பட்ட பயங்கரமான தீய விளைவுகளைப் பற்றி நீங்கள் நன்றாக அறிந்திருப்பீர்கள். மகாபாரத காந்தாரி பிறந்த காந்தாரம் ஆப்கானிஸ்தான் ஆகிவிட்டது. சிந்து, பஞ்சாபின் மேற்குப்பகுதி, பலுசிஸ்தான், ஸர்ஹத் ஆகியவை பாரதத்திலிருந்து துண்டாடப்பட்டு, மேற்கு பாகிஸ்தான் ஆகிவிட்டது. கிழக்கு வங்காளமும் இதே போல் கிழக்குப் பாகிஸ்தான் ஆகி இப்போது வங்க தேசமாக இருக்கிறது.

ஆங்கிலேய, போர்த்துகீசிய ஆக்கிரமிப்பாளர்களுடன் அவர்களது மதப் பிரச்சாரகர்களும் வந்தார்கள். அவர்களும் ஹிந்துக்களுக்கு எதிரான செயல்களைச் செய்யத் தொடங்கினர். நமது தேசத்தின் வடகிழக்கு மாநிலங்களில் கிறிஸ்தவப் பாதிரிகள் மூலம் பிரிவினைவாதம் கோரதாண்டவமாடுகிறது. பாரதத்தைக் கூறுபோட்டு கிறிஸ்தவஸ்தான் ஆக்குவதற்காக சிறு மாநிலங்களில் ஆயுதம் தாங்கிய, தீவிர கிளர்ச்சிகள் நடைபெற்று வருகின்றன.

ஆக, இதற்கெல்லாம் பொறுப்பாளி யார்? நாம், அதாவது ஹிந்துக்கள் தான். நமது மதம் அழிவதையும், நமது சமுதாயத்தினர் பிரிந்து எதிரிகளுடன் சேர்ந்து கொள்வதையும் கண்டும் காணாதது போல் கண்களை மூடிக்கொண்டு வாளாயிருந்தோம். மதமாற்றம் ஒருவழிப்பாதை போல இப்போதும் நடைபெற்று வருகிறது. ‘ஒருமுறை ஹிந்து மதத்தை விட்டு ஒருவன் போனால் அவன் நிரந்தரமாக விலக்கப்பட்டு விட்டான், அவனை மீண்டும் ஹிந்து மதத்துக்குள் ஏற்பது மத விரோதமான செயலாகி விடும்’ என்ற தவறான கருத்துதான் காரணம். இதன் விளைவாகத் தனது தாய்மதமாகிய ஹிந்து மதத்துக்குத் திரும்ப விரும்பியவர்களையும் கூட ஏற்பது தடை செய்யப்பட்டுவிட்டது.

ஆனால், தேவல முனிவர் தொடங்கி சமீபத்திய ஆர்ய சமாஜம், மசூராஸ்ரமம், சாவர்க்கர் தலைமையிலான ஹிந்து மஹா சபா போன்ற அமைப்புகள் கூட மதம்மாறியவர்களை மீண்டும் ஹிந்துக்களாக்க முயன்று வந்தன. அகிலபாரத அளவில் ஆர்ய சமாஜத் தலைவரான, சுவாமி சிரத்தானந்தர் இப்பணி செய்ததால் முஸ்லிமால் கொல்லப்பட்டார்.

சுவாமி விவேகானந்தரும் எச்சரிக்கை விடுத்துள்ளார் – “நினைவிருக்கட்டும், ஹிந்து தர்மத்தை விட்டு விட்டுச் செல்லும் ஒவ்வொருவராலும் ஹிந்து சமுதாயத்தின் ஒரு எண்ணிக்கை குறைவது மட்டுமல்ல; எதிரிகளின் எண்ணிக்கையில் ஒன்று அதிகரிக்கும்”

இப்போது மெல்ல மெல்ல இந்த கோரமான ஆபத்து பற்றிய விழிப்புணர்வு ஏற்பட்டு வருகிறது. பாரதத்தின் தலை சிறந்த மதத்தலைவர்கள் ஹிந்து தர்மத்தையும் ஹிந்து சமுதாயத்தையும் பாதுகாக்கும் நோக்கில் ஒரு முக்கியமான வழிகாட்டுதலையும் செய்துள்ளனர். ‘ந ஹிந்து பதிதோ பவேத்’ அதாவது ஹிந்துக்களில் எவரும் ஒருபோதும் தாழ்ந்தவராகிவிட முடியாது.

அதாவது எந்தவொரு ஹிந்துவும் முஸ்லிமாகவோ, கிறிஸ்தவராகவோ மாறிவிடுவதால் மட்டுமே ஒரேயடியாக விலக்கப்பட்டவனாகிவிட மாட்டான், அவனைக் கண்டிப்பாக ஹிந்து மதத்தில் திரும்ப ஏற்றுக்கொள்ள வேண்டும் என்பதே அதன் செய்தி. ஹிந்துக்களிடையே இத்தகைய விழிப்புணர்வின் காரனமாக, ஹிந்து மதத்தை விட்டுச் சென்ற சகோதர, சகோதரிகள், என்றும் மெல்ல மெல்ல நாய்மதம் திரும்புவது தொடங்கியுள்ளது.

பேரழிவுகளின்போது நிவாரணப் பணிகள்:

இயற்கையினாலோ, மனிதர்கள் காரணமாகவோ ஏற்படும் பேரழிவுகளின் போது ஸ்வயம்சேவகர்கள் செய்த பணிகளின் சில சிறப்பியல்புகளை இனி பார்ப்போம். தமிழ்நாட்டில் திருச்சியில் வெள்ளம், அஸ்ஸாம், உத்தரகாசி மற்றும் மகாராஷ்டிரத்தின் லாட்டூர் மாவட்ட நிலநடுக்கம், ஆந்திரப் புயல், கர்நாடகா, ஒரிசா, பீகார், குஜராத், ராஜஸ்தான் போன்ற பகுதிகளில் ஏற்பட்ட வறட்சி, ஹரியாணாவின் சர்க்கீ – தாத்ரீயிலும், பீகாரின் பாட்னாவிலும் நிகழ்ந்த விமான விபத்துக்கள் ஆகியவற்றில் நிவாரணப் பணிகளுக்காக அனைவருக்கும் முன்னால் உதவி செய்தவர்கள் சங்க ஸ்வயம்சேவகர்கள்தான்.

-அங்கு, துர்நாற்றம் நிறைந்த, அழுகிவிட்ட, சடலங்களை சரியான முறையில் எரித்தல் அல்லது புதைத்தல், இறந்த விலங்குகளின் சடலங்களையும் புதைத்தல் போன்ற பணிகளைச் செய்ய ஸ்வயம் சேவகர்களைத் தவிர வேறு எவருமே முன்வரவில்லை. இதுபோன்ற நெஞ்சை நெகிழவைக்கும் எல்லா நிகழ்ச்சிகள் பற்றியும் செய்தித்தாள்களில் காண முடிகிறது. சிலர் தொலைக்காட்சியிலும் இந்தக் காட்சிகளைக் கண்டிருக்கலாம்.

ஆந்திராவின் 1977- டிசம்பரில் வீசிய புயலின் போது முழுமையாக அழிக்கப்பட்ட அவனிகட்டா கிராமத்தை ஸ்வயம்சேவகர்கள் மிகுந்த ஈடுபாட்டுடன் புனரமைத்தனர். அங்கு புதிதாகக் கட்டப்பட்ட வீடுகளை அவ்வூர் மக்களுக்கு ஒப்படைக்கும் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ஆந்திர பிரதேசத்தின் முக்கியமான சர்வோதயத் தலைவர் ஸ்ரீ பிரபாகர்ராவ், இதைக் கண்டு “R.S.S. என்றால் Ready for Selfless Service” (தன்னலமற்ற தொண்டுக்கு தயார்) என்று விளக்கம் தந்தார்.

தொடரும் …

ஆர்.எஸ்.எஸ் வளர்ந்த வரலாறு 1

உங்களுக்கு சங்கத்தின் கதை சொல்லப் போகிறேன். இந்தக் கதை நிச்சயமாக உங்களுக்கு மிகவும் பிடிக்கும். ஏனெனில், நம் அனைவருடனும் தொடர்பு உள்ளது இந்தக் கதை.

ராஷ்ட்ரீய ஸ்வயம் சேவக சங்கம், உங்களுக்கு ஆர்.எஸ்.எஸ் என்றே அறிமுகம் ஆகியுள்ளது. 1925-ஆம் ஆண்டு விஜயதசமி நன்னாளில் நாகபுரியில் ஆரம்பிக்கப்பட்டது. ராஷ்ட்ரீய ஸ்வயம்சேவக சங்கம், இந்த மூன்று சொற்களின் பொருள் என்ன? புரிந்து கொள்வது மிக எளிது. நமது தேசத்துக்காக சுயநலமற்ற உணர்வுடன் தொண்டு செய்வதற்காகத் தானாக முன்வருபவர்கள் ஸ்வயம் சேவகர்கள். அவர்களது அமைப்பே சங்க ம்.

இதன் ஸ்தாபகர், டாக்டர் கேசவ பலிராம் ஹெட்கேவார். அவர் ‘டாக்டர்ஜி’ என்று எல்லோராலும் மரியாதையுடன் அழைக்கப்பட்டார். நாகபுரியில் 1889-இல் யுகாதித் திருநாளில் ஒரு நடுத்தரக் குடும்பத்தில் பிறந்தார். சிறுவனாக இருக்கும் போதே அவரது பெற்றோர் இருவரும், ஒரே நாளில் பிளேக் நோய்க்கு இரையானார்கள்.

விளையும் பயிர் முளையிலேயே…

அவர் முதல் வகுப்பில் படித்து வந்தபோது நடந்த நிகழ்ச்சி: 1897-இல் இங்கிலாந்து அரசி விக்டோரியா மகாராணி அரியணையேறி அறுபது ஆண்டுகள் நிறைந்ததையொட்டி பள்ளியில் வழங்கப்பட்ட இனிப்பைத் தூக்கியெறிந்தார். தாய்ப்பாலுடன் கூடவே அவர் தேசபக்தி அமுதத்தையும் அருந்தியிருப்பார் என்றே தோன்றுகிறது.

நடுநிலைப் பள்ளியில் சேர்ந்த பிறகு கேசவன் மற்ற மாணவர்கள் மத்தியிலும் சுதந்திர ஜோதியை ஒளிரச் செய்யும் வேலையைத் தொடங்கி விட்டார். 1905-இல் ‘வந்தே மாதரம்’ இயக்கத்தின் போது தனது பள்ளியிலும் இந்த வீர முழக்கம் ஒலிக்கக் காரணமாக இருந்தார். இதன் காரணமாக பள்ளியிலிருந்து நீக்கப்பட்டார்.

பிறகு நாகபுரிக்கு வெளியில் ஒரு பள்ளியில் சேர்ந்து மெட்ரிக் படிப்பை முடித்தார். தேசபக்தர்கள் சிலரது உதவி கிடைத்ததும் மருத்துவம் (டாக்டர் படிப்பு படிக்க அவர் கல்கத்தா சென்றார். படிப்பதற்காக கேசவன் அவ்வளவு தூரம் சென்றது ஏன்? அன்றையதினம் கல்கத்தா, தேசத்தின் விடுதலைக்காகப் போராடிய புரட்சியாளர்களின் முக்கிய பாசறையாக விளங்கியது. அதற்காகவே அவர் கல்கத்தா சென்றார்.

டாக்டர் படிப்பை முடித்துவிட்டு, அவர் 1916-இல் நாகபுரி திரும்பினாலும் டாக்டர் தொழிலைத் தொடங்கவில்லை. திருமணமும் செய்து கொள்ளவில்லை. பலரும் கேட்டார்கள் “உன் குடும்பம் ஏழ்மையில் வாடுகிற போது, இப்படி ஏன் செய்கிறாய்?” டாக்டர் ஹெட்கேவார் பதிலளித்தார்: “அதற்கெல்லாம் எனக்கு நேரமில்லை”. தேசத்தின் விடுதலைக்காக முழுமூச்சுடன் அவர் பாடுபட்டு வந்தார்.

நாகபுரியில் இருந்து கொண்டே மஹாராஷ்டிரம் முழுவதிலும் விதவிதமான மக்கள் விழிப்புணர்வுப் பணிகளை அவர் தொடங்கினார். 1920-லும் 1931-லும் காந்திஜியின் தலைமையில் நடந்த சத்தியாக்கிரகத்தில் ஈடுபட்டு சிறை சென்றார். பத்திரிகைகள் நடத்துவது, போராட்டங்களில் பங்கு கொள்வது போன்றவற்றில் ஈடுபட்டு வந்தார்.

சங்கம் நிறுவப்பட்டது ஏன்?

‘இத்தனை வகை தேசப் பணிகளில் மூழ்கியிருந்த டாக்டர் ஹெட்கேவாருக்கு ராஷ்ட்ரீய ஸ்வயம்சேவக சங்கம் என்ற வேறொரு அமைப்பைத் தொடங்கும் எண்ணம் ஏன் ஏற்பட்டது?’ என்று நீங்கள் கேட்கக்கூடும். வார்தாவில் டாக்டர்ஜியைச் சந்தித்த போது காந்திஜிகூட அவரிடம் கேட்டார்: “காங்கிரசிலேயே இதைப் போன்ற அமைப்பை உருவாக்கலாமே?”

அதற்கு, ‘ஸ்வயம்சேவகர்கள் பற்றிய எனது கருத்து வித்தியாசமானது. தானாக முன்வந்து, தன்னலத்தைக் கைவிட்டு, தாய் நாட்டுப்பணி செய்பவர்களை உருவாக்க நான் விரும்புகிறேன். ஆனால், அரசியல் கட்சியின் அங்கமாக இருந்து கொண்டு இதைச் செய்வது சாத்தியமில்லை. இப்படி சமர்ப்பண உணர்வுள்ள ஊழியர்களின் மூலம்தான் அனைத்துத் துறைகளிலும் தேசத்தின் முன்னேற்றம் ஏற்படமுடியும் என்பது எனது நம்பிக்கை’ என்று பதிலளித்தார் டாக்டர்ஜி.

சங்கம் நிறுவப்பட்ட பிறகு கிட்டத்தட்ட 15 ஆண்டுகள் டாக்டர்ஜி கிராமம் கிராமமாக சென்றார். சந்தனக்கட்டை தேய்ந்து நறுமணத்தைப் பரப்புவது போல சங்கத்தின் நறுமணத்தை எல்லா இடங்களிலும் பரப்புவதற்கு, தன்னையே வருத்திக் கொண்டு, இரவு பகல் பாராது நாடு முழுவதும் சுற்றுப் பயணம் செய்தார். தேசப் பணியாகிய வேள்வித் தீயில் தன்னையே அர்ப்பணித்த அவர் 1940-இல் காலமானார்.

ஷாகா ஸ்வயம்சேவகர்களை உருவாக்கும் மையம்

‘தனது இந்த புதுமையான கருத்தின்படி, ஸ்வயம்சேவககர்களை உருவாக்க டாக்டர்ஜி கையாண்ட முறை எது?’ என்று தெரிந்துக்கொள்ள உங்களுக்கு ஆவல் ஏற்படுகிறது அல்லவா? அதன் பெயர்தான் ஷாகா. உங்களில் பலர் அதைப் பார்த்து இருக்கக் கூடும். காவிக் கொடியின் முன்னே, சிறுவர்கள், இளைஞர்கள், பெரியவர்கள் கூடுகிறார்கள்.பலவிதமான நமது நாட்டு விளையாட்டுகளை விளையாடுகின்றனர். சூரிய நமஸ்காரம், யோகாசனம், பலவிதமான உடற்பயிற்சிகளை செய்கிறார்கள்.

தேசபக்திப் பாடல்கள் பாடுகிறார்கள். பெரியோர்களின் வாழ்க்கை வரலாறு, மகான்களின் கருத்துக்கள், சொற்பொழிவாக, கலந்துரையாடலாக அவர்களுக்கு சொல்லப்படுகிறது. முடிவில் கொடிக்கு முன்னால் வரிசையாக நின்று, ஸ்வயம்சேவகர்கள் பிரார்த்தனை செய்கிறார்கள். பிரார்த்தனையில் பாரதமாதாவை வணங்குகிறார்கள், பாரத அன்னைக்குத் தொண்டு புரிவதற்காக ஆற்றல், நல்லொழுக்கம், அறிவு ஆகிய நற்குணங்களை இறைவனிடம் வேண்டுகிறார்கள்.

இந்நிகழ்ச்சி தினமும் குறிப்பிட்ட நேரத்தில், குறிப்பிட்ட இடத்தில் நடைபெறுகிறது. பங்கு கொள்பவர்களின் வசதிக்கேற்ப காலை, மாலை அல்லது இரவில் ஷாகா நடைபெறும். ஷாகாவைப் பார்க்கும் எவரும் அங்கு நிலவும் கட்டுப்பாடு கண்டு மகிழ்வர். ஷாகா முடிந்தபிறகு ஸ்வயம் சேவகர்கள் தங்களுக்குள் ஒருவருக்கொருவர் அன்புடன் பேசிக் கொண்டே புதியவர்களைச் சந்திக்கச் செல்கிறார்கள்.

பாரதநாடு மட்டுமல்லாமல் அமெரிக்கா, இங்கிலாந்து, ஜெர்மனி, ஆஸ்திரேலியா, தென்னாப்பிரிக்கா உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்ட நாடுகளில் ஷாகா பரவியுள்ளது.

சங்கத்தின் ஆரம்பகாலத்தில் ஷாகாக்களில் சிறுவர் – இளைஞர் – மாணவர்கள் மட்டுமே வருவது வழக்கம். “இப்படிப்பட்ட நிகழ்ச்சிகள் நடத்துவதனால் நாட்டுப்பணி நிறைவேறுமா?” என்று பலரும் கேட்பார்கள். சிலர் கேலி செய்வதும் உண்டு. ஆனால் இன்று ‘ஷாகா’வின் மகிமை என்ன, அதில் பண்புப்பயிற்சி பெறும் ஸ்வயம் சேவகர்கள் எப்படிப்பட்டவர்கள், அவர்கள் எந்ததெந்த விதத்தில் எல்லாம் தேசப்பணி செய்துவருகிறார்கள் என்பது நன்றாக விளங்கி வருகிறது.

பல இடங்களில் நீங்களும் கூடப் பார்த்திருக்கலாம் – சங்க ஸ்வயம் சேவகர்கள், குடிசைப் பகுதிகளில் உள்ள குழந்தைகளுக்கு எழுத்தறிவும், உடலைத் தூய்மையாக வைத்திருக்கவும் கற்பிக்கின்றார்கள், வீட்டிலுள்ள பெரியவர்களை வணங்குவது, அவர்களுக்குப் பணிவிடை செய்வது, உண்மை பேசுவது, மரங்கள் – விலங்குகளை நேசிப்பது ஆகியவற்றைச் சொல்லிச் சொல்லி மனதில் பதிய வைக்கிறார்கள், அங்குள்ள சகோதரிகளுக்கு தையல் கற்றுத் தர ஏற்பாடு செய்கிறார்கள்,

சில இடங்களில் பெரிய அளவில் மருத்துவமனை நடத்தி வருகிறார்கள். தொலை தூர வனவாசி கிராமங்களில் 6000 ஓராசிரியர் பள்ளிகள் நடத்துகிறார்கள். மாணவர் விடுதிகளும் நடத்துகிறார்கள். நாடெங்கிலும் இதுபோன்ற 29,000 சேவைப்பணிகளை நடத்தி வருகிறார்கள்.

‘இது ஆத்ம சுத்திக்கான ஆன்மிக முயற்சி எனக் கருதிப் பணி செய்வோம்’ என்பார் ஸ்ரீ குருஜி கோல்வல்கர். இவர் டாக்டர்ஜிக்குப் பிறகு அகில பாரதத் தலைவராக ஆனவர். அவருக்குப் பிறகு தலைவரான ஸ்ரீ தேவரஸ், “தீண்டாமை ஒரு பாவம் இல்லையென்றால், உலகில் வேறு எதுவுமே பாவம் இல்லை ” என்று அறைகூவல் விடுத்தார்.

சேவைப் பணிகளின் சிறப்பு:

இந்த சேவைப் பணிகளின் சிறப்புதான் என்ன என்று நீங்கள் கேட்க விரும்புவீர்கள். ஆம். நிச்சயம் இவை வித்தியாசமானவை. முதலில் உங்கள் மனதில் எழக்கூடிய கேள்வி – இவ்வளவு பெரிய அளவில் நடைபெற்று வரும் சேவைப் பணிகளுக்காக கோடிக்கணக்கான ரூபாய் செலவாகுமே என்பதுதான். சங்க நலன் விரும்பும் செல்வந்தர்களிடம் இருந்தும், அரசிடம் இருந்தும்கூட ஓரளவு உதவி கிடைக்கிறது. ஆனால் இவை மொத்த செலவில் 5 சதவீதத்துக்கும் குறைவே. அப்படியென்றால் மீதி? சமுதாயத்திலுள்ள லட்சக்கணக்கான சாமானிய மக்களிடமிருந்தே இந்த செலவுக்கான பணம் முழுதும் கிடைக்கிறது. இப்போது ஒரு கேள்வி எழுகிறது. இந்தச் சேவைப்பணிகளை ஆதரிப்பது தங்கள் கடமை என்று சாமானியர்கள் ஏன் நினைக்கிறார்கள்?

முதல் விஷயம் இதுதான். ஸ்வயம் சேவகர்கள் “பாருங்க, நமது சொந்தக் குடும்பம் போலவே நமது சமுதாயமும் ஒரு பெரிய குடும்பம், ஏனெனில் நம் அனைவருக்கும் ஒரே தாய் – பாரத அன்னை. நாம் நமது குடும்பத்தில் உள்ள ஒவ்வொருவரையும் பற்றி அக்கறை கொள்வது போலவே நமது சமுதாயத்திலுள்ளவர்களைப் பற்றியும் கவலைப்படுவது நமது கடமை” என்று எடுத்துக்கூறி விளங்க வைக்கிறார்கள்.

மற்றொரு முக்கியமான விஷயம், ஸ்வயம்சேவகர்களின் நேர்மையில் மக்களுக்கு முழு நம்பிக்கை. இவர்கள் ஒவ்வொரு பைசாவையும் சரியான முறையில் தான் செலவிடுகின்றனர். அதற்குக் கணக்கும் வைத்திருக்கின்றனர். இதனால், சங்கத்தின் மீது சாமானிய மக்களுக்கு மட்டுமல்ல, பல்வேறு அமைப்புகளுக்கும் முழு நம்பிக்கை உண்டு.

சென்ற ஆண்டு கடும் புயல், ஒரிசாவின் கடற்கரை மாவட்டங்களை சின்னாபின்னம் ஆக்கியது. இதற்கு இரண்டு மூன்று ஆண்டுகள் முன்புதான் அங்கு பயங்கரமான பஞ்சம் நிலவியது. இவ்விரு சந்தர்ப்பங்களிலும் குஜராத் மாநிலத்தின் ‘பன்ஸாலி சேவா டிரஸ்ட்’ அங்கு நிவாரணம் மற்றும் புனரமைப்புப் பணிகளுக்காகப் பலகோடி ரூபாய் திட்டம் தயாரித்து அதனைச் செயல்படுத்தும் பொறுப்பினை ஸ்வயம் சேவகர்களிடம் ஒப்படைத்தது.

ஜெயப்பிரகாஷ் நாராயணன் மாறியது எப்படி?

இவ்விஷயமாக ஜெயப்பிரகாஷ் நாராயணன் அவர்களின் அனுபவம் சுவையானது. அவர் தீவிர சோஷலிஸ்ட். சங்கத்தைக் கடுமையாக எதிர்த்த வர். 1965-66 இல் பீகாரில் பஞ்சம் ஏற்பட்டது. நிவாரணப்பணி முழுமைக்கும் ஜெயப் பிரகாஷ் நாராயண்தான் தலைவர். சங்கத்துக் காரர்களை சேர்த்துக் கொள்ள அவருக்கு விருப்பம் இல்லை. ஆனால் சமய சிந்தனையாளர் அமரர் ஹனுமான் பிரஸாத் போத்தார் வற்புறுத்தியதால் ஒரு மாவட்டத்தில் மட்டும் பொறுப்பை சங்கத்திடம் ஒப்படைத்தார்.

ஒருமுறை மற்ற மாவட்டங்களில் நிவாரணப் பணிகளைப் பார்வையிடும் போது சங்க ஊழியர்களையும் அழைத்தார். அவர்களிடம் நிவாரணப்பணிகளுக்காக ஒப்படைக்கப்பட்ட பணத்துக்குக் கணக்குக் காட்டும்படி கூறினார். ஊழியர்கள் உடனே அதற்கு முதல் நாள் வரையிலான செலவுக் கணக்கை அவர் முன் வைத்தனர். அதைப்பார்த்து விட்டு அவர் சந்தேகத்துடன் கேட்டார் – மற்றதெல்லாம் சரியாகத்தான் இருக்கிறது, ஆனால் ஒன்று மட்டும் இதில் இல்லை. ஊழியர்கள் வியப்படைந்து, “அது என்ன?” என்று கேட்டனர். ஜெயப்பிரகாஷ் சொன்னார் – “உங்கள் சொந்தச் செலவுக்காகக் கொடுக்கப்பட்ட பணத்துக்கான செலவுக்கணக்கு எந்த இடத்திலும் குறிப்பிடப்படவில்லையே, ஏன்?”

ஊழியர்கள் சிரித்துக்கொண்டே சொன்னார்கள்: “சங்கத்தில் நாங்கள் கற்றது இதுதான் – வீட்டில் உணவருந்திவிட்டு நாட்டுக்கு சேவைசெய் – பாதிக்கப்பட்ட மக்களுக்காக சேர்க்கப்பட்ட பணத்திலிருந்து ஒரு பைசாகூட வேறெதற்கும் பயன்படுத்துவது பெரிய பாவம் என்று நாங்கள் கருதுகிறோம்”. இதைக் கேட்டு ஜெயப்பிரகாஷ் அடைந்த வியப்புக்கு எல்லையே இல்லை. இந்நிகழ்ச்சி, அவருக்கு சங்கத்தை சரிவரப் புரிந்து கொள்வதற்கு முதல் வாய்ப்பாக அமைந்தது.

ஸ்வயம்சேவகர்கள் மூலம் நடைபெறும் நலப்பணிகளுக்கு மேலும் பல சிறப்புகள் உண்டு. அவர்களது பார்வையில், சேவை என்பது உதவி செய்வது மாத்திரமல்ல. சேவையின் மூலம் பயனடைபவர்கள் தனது வாழ்க்கையைத் தன் சொந்த முயற்சியினாலேயே சீரமைத்துக் கொள்ளும் திறமை வளர வேண்டும். குடிப்பழக்கம், சூதாட்டம், சண்டை சச்சரவுகளிலிருந்து அவர்கள் விடுபட வேண்டும். தான் ஹிந்துவாக இருப்பது குறித்துப் பெருமிதம் அடைய வேண்டும்.

தன் பகுதியிலுள்ள கோயில்களை, பசுக்களை, பெண்களை அவர்கள் பாதுகாக்க வேண்டும். பிற ஹிந்துக்களிடம் சமத்துவ உணர்வு கொள்ள வேண்டும். இப்படிப்பட்ட பல்வேறு நல்ல மாற்றங்கள் அங்கே ஏற்பட வேண்டும் – என்பதுதான் தொண்டில் ஈடுபடும் சங்க ஊழியர்களின் முக்கிய குறிக்கோள். நாடு முழுவதிலும் பல்லாயிரம் குடிசைப் பகுதிகளில் குறைந்த அளவிலோ, அதிக அளவிலோ இந்த மாற்றங்கள் காணக் கிடைக்கின்றன.

தொடரும் …

ஆர்.எஸ்.எஸ் பற்றி…..

சுவாமி சித்பவானந்தர்: (1981, திருவேடகம் சங்க முகாமில்)

இளைஞர்களே! நீங்கள் பாக்யவான்கள். உடல், மனம், அறிவு ஆகிய மூன்று துறைகளிலும் பயிற்சி பெறுகிறீர்கள். எனவே இது மனிதர்களை உருவாக்கும் திட்டம். விவேகானந்தர் கண்ட கனவை நீங்கள்தான் நனவாக்குகின்றீர்கள். சங்கம் விவேகானந்தர் கொள்கையை நடைமுறைப் படுத்துகின்றது.

ஆர்.எஸ்.எஸ் பற்றி…..

டாக்டர் பி.ஆர். அம்பேத்கர் : (மே 1939 – புனே சங்க முகாமில்)

தன்னருகிலுள்ள ஸ்வயம் சேவகர்களின் ஜாதியைக் கூடத் தெரிந்து கொள்ளும் ஆர்வமின்றி பரிபூரண சமத்துவம் மற்றும் சகோதர உணர்வுடன் இங்கு பழகிவரும் ஸ்வயம்சேவகர்களைக் கண்டு எனக்கு வியப்பு ஏற்படுகிறது.

ஹிப்ஸன் ராய்: (காஸி பழங்குடி பிரமுகர் 1982 ஜஷ்பூரிலுள்ள (மத்திய பிரதேசம்) வனவாசி கல்யாண் ஆஸ்ரம முகாமில்)

இங்கு மட்டுமே எங்கள் மனமும் அறிவும் முழுமையாக மகிழ்ச்சியும் உயர்ந்த எண்ணங்களும் நிரம்பிய அனுபவங்கள் ஏற்படுகின்றன.

ஆர்.எஸ்.எஸ் பற்றி…..

மகாத்மா காந்தி: (16.9.1947, நகர சுத்தி தொழிலாளர் காலனி,டில்லி )

சில ஆண்டுகளுக்கு முன்பு, சங்க ஸ்தாபகர் வாழ்ந்த காலத்தில், உங்களது முகாமுக்குச் சென்றிருந்தேன். அங்கு உங்களது கட்டுப்பாடு , தீண்டாமை அறவே இல்லாத நிலை, கடினமான – எளிமை நிறைந்த வாழ்க்கையைக் கண்டு மிகவும் கவரப் பட்டேன். சேவையின், தியாகத்தின் உயர்ந்த லட்சியங்களால் தூண்டப்பட்ட எந்தவொரு அமைப்பும் நாளுக்கு (நாள் மேலும் மேலும் வலுவடையாமல் இருக்காது.

அன்னையின் அரும்பணியில்…ஜ.சுப்பாராவ்ஜி

நாம் போக வேண்டிய இடத்திற்கான விலாசத்தைப் பற்றி (அவ்விடத்தைப் பற்றி நன்கறிந்த) நபர்கள் படித்தவன், படிக்காதவன் என வித்யாசமில்லாமல் யாரிடம் கேட்டாலும் straightஆ போய் leftல் திரும்பி நேரா போனா ரெண்டாவ்து வீடு என்றோ அல்லது nearest landmark சொல்லி குத்துமதிப்பாக அனுப்புவோம். ஆனால் பஸ் அல்லது ரயிலில் இறங்கி பின் பக்கமாக 100தப்படி நடந்து சாலையைக் கடந்து 1பர்லாங் அதே திசையில் நடந்து இடப்புறமுள்ள 2வது சந்தில் திரும்பி 100கெஜம் நடந்தால் இடதுபுறமுள்ள வீடு என அவர் சொல்லும் அடையாளத்தில் கண்ணை மூடிக் கொண்டு சென்று அடையலாம். GPRS கருவி வருவதற்கு பல பத்தாண்டுகள் முன்பே GPRS போல் துல்லியமாக வழிகாட்டியவர் அவர்.

எப்படி வஞ்சனையில்லாமல் பேசுவரோ அதே போல ஆகாரத்தையும் ரசித்து, விரும்பி சாப்பிடும் விதமும் அலாதியானது அவருடையது.

ஜ.சுப்பாராவ் ஜி

அந்த அவர் தான் ஜ.சுப்பாராவ்ஜி

சென்னை சைதாப்பேட்டையில் 30.03.1933இல் அம்மா கல்லம்மாளுக்கும் அப்பா ஜகதீஷுக்கும்நான்காவது குழந்தையாகப் பிறந்தவர். அவரது குடும்பத்தில் மொத்தம் ஏழு குழ்ந்தைகள். தனது 9ஆவது வயதில் சங்க ஸ்வயம்சேவகரானார். 1945இல் தி.நகர் ராமகிருஷ்ணா பள்ளியில் ஸ்ரீகுருஜியின் பௌத்திக் கேட்டு சங்கத்தின் பால் மேலும் ஈர்க்கப்பட்டார்.

1954 தாம்பரம் மெட்ராஸ் கிறிஸ்தவ கல்லூரியில் பிஏ (தற்போது பிஎஸ்சி) கணிதம் முடித்தார். அதற்குப் பின் நுங்கம்பாக்கம் உயர்நிலைப் பள்ளியில் (சுதந்திர தினப் பூங்கா அருகில்) 6 மாதங்களும் காஞ்சிபுரம் அருகே வாலாஜாபாத்தில் 4 மாதங்களும், கடலூர் மாவட்டம் நெல்லிக்குப்பத்தில் ஒரு வருடமும் ஆசிரியராகப் பணிபுரிந்தார். பின்னர், சைதாப்பேட்டை ஆசிரியர் பயிற்சிப் பள்ளியில் பி.டி. (தற்போது பி.எட்.) படித்து முடித்தார். அதன் பிறகு, ஆரணியில் இரண்டு ஆண்டுகளும் செங்கல்பட்டில் ஓராண்டும் ஆசிரியராகப் பணியுரிந்தார்.

1948 சங்க தடைக்குப் பின்னர் மாநிலம் தழுவிய சங்க பத்திரிகை வெளிவராது இருந்தது. இந்த குறையை நிவர்த்தி செய்யும் பொருட்டு, தியாக பூமி தொடங்கப்பட்டது.

1964இல் பத்திரிகை நடத்த பணம் இல்லாத காரணத்தால், தமிழகம் முழுவதும் புதிய சந்தாதாரர்களை சேர்க்கப்பட்டு தியாகபூமியை மீண்டும் தொடக்கினார், சுப்பாராவ்.

1965இல் சங்கரன்கோவிலில் ஆசிரியராக சென்றார். அதுவரை ஷாகா பொறுப்பில் இருந்த அவர் தாலுகா கார்யவாஹ் பொறுப்பேற்றார்.

1967இல் சங்கத்தின் பிரசாரக் ஆனார். அதே சங்கரன்கோவில் தாலுகாவில் பிரசாரக்,

1968இல் நெல்லை, குமரி மாவட்ட பிரசாரக், 1970இல் சேலம், தருமபுரி மாவட்ட பிரசாரக்,

1974இல் சென்னை விபாக் பிரசாரக்,

1977 முதியோர் கல்வி அமைப்பின் (அப்போது முதியோர் கல்வி அவசியமாக இருந்தது) பொறுப்பாளர்,

1978இல் திருச்சி விபாக் பிரசாரக்,

1982 முதல் 1990 வரை தேசிய கல்விக் கழக (வித்யா பாரதி) மாநில அமைப்புச் செயலராக இருந்தார்.

1990 முதல் 1996 வரை குருஷேத்திரத்தில் (ஹரியாணா) இருந்து வித்யா பாரதி பணியாற்றினார். பின்னர் மீண்டும் தமிழகம் வந்த அவர்,

1997 முதல் 2000 வரை சம்ஸ்கார் பாரதியின் மாநில அமைப்பாளராக இருந்தார்.கோவா மாநில மீட்பு வரலாற்றில்தமிழக ஸ்வயம்சேவகர்களுக்கு தலமை தாங்கினார்.

1970களில்வேடசந்தூர் வெள்ள நிவாரணப் பணி குறிப்பிடத்தக்கது வ்யவஸ்தா துறை துவங்கும் முன்பேஅதன் அகராதியாய் திகழ்தார்.

சங்க வரலாற்றுகலைகளஞ்சியமாக இருந்தார்.மொத்த பாமாலை பாடல்களுக்கும்மாஸ்டர் காபியாக இருந்தார்புதிர் விளையாட்டுபுதிர் கதைபுதிர் கணக்கு……இவைகளில்இளம் துடிப்போடு கடைசி வரை இருந்தார்.அவரதுபோட்டோ அதிகமாய் கிடைக்காது ஆனால்அவரது கடிதங்கள் லட்சக்கணக்காய் கிடைக்கும் எடுத்து வைத்திருந்தால். போன்கள் அதிக பயன்பாட்டிற்கு வரும் முன் பலருடனும் கடிதம் மூலம் தொடர்பில் இருந்தார். இன்று அவரது உடல் மட்டுமே நம்மை விட்டு பிரிந்து விட்டது. அவரின் நினைவுகள் அவ்வளவு சீக்கிரம் அகலாது.

பாரத அன்னையின் பாதங்களில் அவர் ஆன்மா இளைப்பாறட்டும்.

நன்றி: Facebook Omampuliyur Jayaraman