பார் போற்றும் பாரதம்

– “பாரதம் நம் இனத்தின் தாயகம். சம்ஸ்க்ருத மொழி அனைத்து ஐரோப்பிய மொழிகளுக்கும் தாய். பாரதம் நம் தத்துவ ஞானத்தின் தாய்; மற்றும் அரேபியர் மூலமாக நாம் பெற்ற கணிதக் கலையின் அன்னை ; புத்தர் மூலமாக அவன் வெளியிட்ட லட்சியங்களை கிறிஸ்தவ சமயம் மேற்கொண்டுள்ளதால் அச்சமயத்திற்கும் அன்னை அவளே; பண்டு தொட்டுப் பழகிவரும் கிராம மரபினால் பாரதம் சுயாட்சி முறைக்கும் ஜனநாயகத்திற்குமே தாய். அன்னை பாரதம், பலவகையில் நம் அனைவருக்கும் தாய் (India, mother of us all.)”

வில் டுரண்ட் (அமெரிக்கா)
‘The Story of Civillisation’ என்ற நூலில்.

“இயற்கை வளங்கள் பலவும் நிறைந்து வலிவும் வனப்பும் ஒருங்கே கூடிய நாடு. சுருங்கக் கூறின் ‘பூலோக சுவர்க்கம்’ என்று அழைக்கக்கூடிய நாடு ஏதேனும் உலகில் உள்ளதோ என்று நான் தேடினால், அதற்கு உலகில் விடையாக பாரதமே என் கண்முன் தோன்றுகிறது.”

பேராசிரியர் மாக்ஸ்முல்லர்
‘Sacred Books as the East’ என்ற நூலில்.

“மனிதகுலம், தன் அறிவாற்றலை சிறந்த முறையில் பயன்படுத்தியுள்ள இடம், அதனால் மிகவும் சிக்கலான பிரச்சினைகளைப் பற்றிச் சிந்தித்து ஆராய்ந்து, அவற்றில் ஒரு சிலவற்றிற்குத் தீர்வும் கண்டுபிடித்துள்ள நாடு. பிளாட்டோ, காண்ட் போன்ற அறிஞர்களின் நூலை அறிந்தவர்களும் அக்கறையுடன் அறிந்து கொள்ள வேண்டிய நாடு உலகில் எங்கேனும் உளதோ எனின், பாரத நாட்டையே நான் சுட்டிக் காட்டுவேன்.”

பேராசிரியர் மார்க்ஸ்முல்லர்.

“ஐரோப்பாவில் வாழும் நாம், கிரேக்க, ரோமானிய யூத இனங்களின் சிந்தனையில் ஊறி வளர்ந்த நாம், நம்முடைய அகவாழ்வு இன்னும் பரந்ததாக அமைய, குறுகிய கோட்பாடுகள் இல்லாது விரிந்து வளர, உண்மையிலேயே மானுட வாழ்வு வாழ, இன்று மட்டும் அல்ல, என்றைக்கும் அழிவற்ற வாழ்வு பெற வகை செய்வதற்காக நம் வாழ்க்கைக் குறைகளை நீக்கி நிறை செய்வதற்கு, வழிகாட்டியான ஏதேனும் நாடு உளதா என்று என்னைக் கேட்டால், பாரத நாட்டையே நான் சுட்டிக்காட்டுவேன்.”

பேராசிரியர் மாக்ஸ்முல்லர்

“நெடிதுயர்ந்த இரானியப் பீடபூமியில், செரிந்தியா பாலைவனச் சோலையில், திபெத்தில், மங்கோலியா, மஞ்சூரியாவில், பண்டை நாடுகளாம் சீனாவில், ஜப்பானில், மான், கெமர் என்ற கூட்டத்தினர் வாழும் இந்தோனேஷியாவில் வாழும் மக்களின் வாழ்வில் பாரதம் உயர்ந்த தன் கலாசாரத்தின் பதிவுகளை, அவர்கள் சமயத்துறையில் மட்டிலும் அல்லாமல், கலை இலக்கியத் துறைகளிலும் ஏற்படுத்தியுள்ளது.சுருங்கக் கூறின் ஆத்மீக வெளிப்பாட்டில் எல்லாம் பாரதம் தன் பதிவை ஏற்படுத்தியுள்ளது.”

எம்.ரெனேக் ரௌசட் (பிரெஞ்சு அறிஞர்)

“கிறிஸ்து பிறப்பதற்குப் பல நூறு ஆண்டுகளுக்கு முன்னால், இங்கிலாந்து பகுதியில் வாழ்ந்த மக்கள் தோலுடையணிந்து, உடலில் சாயம்பூசி காடுகளில் திரிந்து கொண்டிருந்த அந்தப் பழைமையான காலத்திலேயே பாரதீயர்கள் தலைசிறந்த நாகரிக வாழ்க்கை நடத்தி வந்தனர்.”

லார்டு மெக்காலே (இங்கிலாந்து)

“1907 ஆம் ஆண்டு போகோஸ்கோல் என்ற இடத்தில் ஒரு கல்வெட்டினை, புதைபொருள் ஆராய்ச்சியாளர் ஹ்யூகோவின்கலர் என்னும் ஜெர்மானியர் கண்டுபிடித்தார். அதில் கி.மு. 1400 இல் மத்திய ஆசியாவில் போரிட்டுக் கொண்ட இரு கூட்டத்தினரிடையே ஏற்பட்ட சமாதான உடன்படிக்கை அக்கல்வெட்டில் பொறிக்கப்பட்டுள்ளது.

இதில் ஹிட்டைடிஸ் மற்றும் மிதானிஸ் என்ற இரண்டு கூட்டத்தினரும் மித்ரா, இந்திரா, வருணா, அசுவினி போன்ற தேவதைகளைப் போற்றி, இவ்விரு கூட்டத்தின் அரச குடும்பங்களிடையே ஏற்பட்டுள்ள திருமணத்திற்கு ஆசியளிக்க வேண்டுவதாக அக்கல்வெட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது.”

லின்யூடங்
‘பாரதத்தின் ஞானம்’ என்ற நூலில்.

“பாரதத்தில் வற்றாத பெருகி ஓடும் விஞ்ஞான அறிவென்னும் நதியின் ஒரு சிறு காட்சியினையே நாம் அறிந்துள்ளோம்.

உலகம் உய்வதற்கான அறிவு வளர்ச்சி ஞானத்தை அள்ளி வீசுவது பாரதம். புத்த பெருமான் தோன்றுவதற்கு முந்தைய காலத்திலேயே சாங்கிய தத்துவத்தையும் அணுக் கொள்கையையும் உலகிகு அளித்தது பாரதம். கி.பி. ஐந்தாம் நூற்றாண்டில் பாரதத்தின் கணிதக் கலையும், விண்வெளிக் கலையும் ஆர்யபட்டரின் ஆற்றலில் மலர்ச்சி கண்டது. ஏழாம் நூற்றாண்டில் பிரமகுப்தா அரிச்சுவடி கணிதத்தின் ஆழ்ந்த அறிவினால் சிறந்த வான ஆராய்ச்சி சாதனங்களை உருவாக்கினார். பன்னிரெண்டாம் நூற்றாண்டு பாஸ்கராச்சாரியர் மகளின் புகழ்மிக்க கணித ஞானத்தைக் கண்டு உலகமே வியந்தது.”

பேராசிரியர் ஒகஹுரா

”மனித குலம் தோன்றிய நாளிலிருந்து அவனது கற்பனைகள் எல்லாம் நனவாக்கப்பட்ட ஒரு இடம் உள்ளதென்றால் அது பாரத நாடாகும்.”

ரொமென் ரோலண்டு

“பருத்தி பாரத நாட்டுச் செடி. இங்கிருந்துதான் இச்செடியைப் பற்றிய ஞானமும், அதனைப் பயிராக்கும் முறையும் உலகின் பல பாகங்களுக்கும் சென்றன. இச்செடிக்கான பெயர் பாரத நாட்டிலிருந்து கடன் வாங்கி வைத்த பெயர்களேயாகும். சம்ஸ்க்ருதத்தில் பருத்திக்கு ‘கர்பஸா’ என்று பெயர். இது ஹீப்ருவில் ‘கபாஸ்’ என்றும் லத்தீன், கிரேக்க மொழிகளில் ‘கர்பசோஸ்’ அல்லது ‘கர்பாசோஸ்’ என்றும் அழைக்கப் படுகின்றன. இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு எகிப்திய மம்மிகளுக்குப் பாரத நாட்டின் பருத்தி ஆடை அணிந்திருந்தனர்.”

சமன்லால்

‘தன் நாட்டிலிருந்து ஒரு படைவீரனைக்கூட அனுப்பாமல் இருபது நூற்றாண்டுகளாக, பாரதம் கலாசாரத் துறையில், சீனாவை வெற்றி கண்டு ஆட்சி நடத்தி வந்துள்ளது. இந்தக் கலாசார வெற்றியைப் பாரதம் என்றும் சீனாவின்மீது திணிக்கவில்லை. இவையனைத்தும், சீனா தானாகவே விரைந்து தேடி, பாரதம் நாடி வந்து, கற்று, ஏற்றுக்கொண்ட அனுபவம் ஆகும்.”

ஹூசி
(அமெரிக்காவில் இருந்த சீன நாட்டுப் பிரதிநிதி)

“இந்தியர்களுக்கு நாம் மிகவும் கடமைப்பட்டுள்ளோம். அவர்கள்தான் எண்ணுவதற்குச் சொல்லிக் கொடுத்தார்கள். இந்த அறிவு இல்லாமல் எந்த விஞ்ஞானக் கண்டுபிடிப்பும் சாத்தியமாகியிருக்காது.”

ஆல்பர்ட் ஐன்ஸ்டீன்

“இந்தியா சமயங்களின் பூமி. மனித இனத்தின் தொட்டில். மனித மொழியின் பிறப்பிடம். வரலாற்றின் அன்னை . புராணங்களின் பாட்டி. மரபுகளின் கொள்ளுப் பாட்டி. வரலாற்றின் மிக மதிப்புவாய்ந்த அம்சங்கள் இந்தியாவில்தான் குவிந்திருக்கின்றன. உலகில் எல்லா மனிதர்களும் காண விரும்பும் இப்பூமியை ஒருமுறை பார்த்தவர்களை இதர உலகின் ஒட்டுமொத்த காட்சிக்கூட கவர முடியாது.”

மார்க் ட்வெய்ன்

இணையற்ற ஹிந்துத்துவம்

ஆர்தர் ஸ்கோபன் ஹீவர் : ”உபநிஷதங்கள் மிகவும் பயனுள்ளவை. மனித சிந்தனையை மேம்படுத்துபவை. உலகம் முழுவதிலும் இதற்கு இணையான நூல் எதுவும் இல்லை .

ஹென்றி டேவிட் தோரோ : “வேதத்திலிருந்து நான் படித்த பகுதிகள், மிகுந்த உயரத்திலிருந்து புனிதமான நதி என்மீது பாய்ந்த அனுபவத்தைத் தருகின்றது.”

கவர்னர் வாரன் ஹேஸ்டிங்ஸ் : “இந்தியாவில் பிரிட்டிஷ் அரசு அஸ்தமித்து வெகுகாலம் கழிந்த பிறகும், வளமையும் அதிகாரமும் தந்த பிற ஆதாரங்கள் மனித இனத்தின் நினைவிலிருந்தே அழிந்த பிறகும் பகவத்கீதை போன்ற எழுத்துக்கள் உயிர் வாழும்.”

ரால்ஃப் வால்டோ எமர்சன் :”எல்லா நாடுகளிலுமே பிரபஞ்சத்தின் அடிப்படை ஒற்றுமை பற்றிய சிந்தனைகள் உள்ளன. பிரார்த்தனையின் பேரின்பமும், பக்திப் பரவசமும் எல்லா உயிர்களையும் ஒரே உயிரோடு சங்கமிக்கச் செய்கிறது. வேதம், கீதை, விஷ்ணு புராணம் போன்ற ஹிந்துக்களின் புனித நூல்களில் இந்த மனநிலை பெரிய அளவில் வெளிப்படுகிறது.

கௌண்ட் ஜான்ஸ்டன் : ‘தி ஆரிஜின் ஆப் ஹிந்துயிஸம்’ என்ற நூலில் “ஹிந்துக்களுடைய சமயம், அவர்களுடைய நாகரிகம் இவற்றின் தொன்மையோடு போட்டி போட உலகில் வேறு ஒரு நாடும் கிடையாது” என்று கூறுகிறார்.

விக்டர் கஸின் : ‘ஹிஸ்டரி ஆப் மாடர்ன் பிலாஸபி’ என்ற நூலில், “பராதத்திலுள்ள அரசியல். தத்துவ நினைவுப் பட்டயங்களை நாம் உன்னிப்பாகக் கற்போமானால், எத்தனையோ உண்மைகள், ஆழ்ந்த உண்மைகள் நமக்குப் புலப்படும். ஐரோப்பிய சிந்தனை, அற்ப சொற்ப அளவிலேயே, முன்னேறச் செயலற்று நிற்கிற கோலத்துக்கு நேர்மாறாக பாரதீய சிந்தனையோட்டம் தருகிற சீர்மிகு காட்சி, நம்மை மண்டியிடச் செய்துவிடுகிறது. மானிட இனத்தின் தொட்டில் எனத் தகும் இந்த தேசமே மிக உன்னத தத்துவத்தின் தாய்நாடாக விளங்குவதையும் காணுகிறோம்” என கூறுகிறார்.

க்ரோஜர் (பிரான்ஸ்) : “தன்னை மானுட இனத்தின் தொட்டில் என்றோ அல்லது குறைந்த பட்சம், மனிதனின் புதுவாழ்வினைப் படிப்படியாக உருவாக்கிய ஆதிகால நாகரிகத்தின் களம் என்றோ உரிமை கொண்டாடிக் கொள்ள இந்த உலகில் நாடேனும் உண்டு என்றால் அது பாரதமேதான்.

லூயி ஜெகாலியட் (பிரான்ஸ்): “புராதன பாரத பூமியே! மானுடத்தின் தொட்டிலே! வெல்க! வெல்க! போற்றற்குரிய ஆற்றல்மிக்க அன்னையே! நூற்றாண்டுகள் பலவாக மிருகத்தனமான படையெடுப்புக்களும் துடைத்தழிக்க முடியாத தீரம் மிக்கவளே! நம்பிக்கை, அன்பு, கவிதை, அறிவியல் அனைத்துக்கும் பிறப்பளித்தவளே! எமது மேனாட்டு எதிர்காலத்தில் நினது மேலான இறந்தகாலம் புத்துயிர் பெற்றுப் பொலிவதாகுக!”

கர்னல் டாட் : “கிரேக்கத் தத்துவங்களுக்கெல்லாம் முன்மாதிரியாய் அமைந்த ஞானம் கொண்டு விளங்கிய இந்த மகான்களை உலகில் வேறெங்குதான் காண முடியும்? பிளேட்டோவும், டெல்ஸும், பிதாகோரஸும் அல்லவா இவரிடம் பாடங் கேட்டிருக்கிறார்கள்! இன்றும் ஐப்ராப்பியர் கண்டு வியக்கும் வகையில் கிரக நிலைகளை அறிந்து வைத்திருந்த வான சாஸ்திரங்களைத்தான் வேறெங்கேனும் காணமுடியுமா? நமது மெச்சுதலுக்குரிய கட்டடக் கலை வல்லுநரும் சிற்பிகளும்தான் இங்கு போல வேறெங்கு காண்போம்? கடுந் துயரிலிருந்து களிப்புக்கும், களிப்பிலிருந்து கடுந்துயருக்கும் மனதை அலைபாயச் செய்யவல்ல இசைவல்லார்தான் இவர்கள் போல வேறு எங்குள்ளனர்?

கௌண்ட் ஜான் ஸ்டன்ஸி : “ கிறிஸ்து பிறப்புக்கு 3000 ஆண்டுகள் முன்னரே ஹிந்துக்கள் வானசாஸ்திரத்திலும் புவியியலிலும் இத்துணை உயரிய அறிவை எய்தியிருக்கிறார்கள் என்றால், அதற்கும் முன் எத்தனை நூற்றாண்டுகளாக அவர்களது கலாசாரம் வளர்ந்து வந்திருக்கும்! ஏனெனில் அறிவியல் பாதையில் மனித மனம் படிப்படியாகத்தான் முன்னேறுகிறது.”

டாக்டர் அலெக்ஸாண்டர் : “ஐரோப்பிய தத்துவ முறைகள் அனைத்தின் வடிவங்களும் தன்னுள் பொதியப் பெற்று விளங்கும் அளவு ஹிந்து தத்துவ முறை விரிவானது. வியாபகமுள்ளது.”

கீதை பற்றி : ஒரு மகத்தான நாளில் பகவத்கீதையை நான் படித்தேன். எல்லா நூல்களையும்விட தலை சிறந்த நூல் அது. ஒரு பேரரசன் நம்மிடம் பேசுவது போல் உள்ளது. அருகதையற்ற எந்த விஷயத்தைப் பற்றியும் அது பேசவில்லை . மாறாக சாந்தமான, சீரான குரலில் வேறொரு யுகத்தின், வேறொரு சூழலின் ஞானத்தை வழங்குகிறது. இன்றும் நம்முன் இருக்கும் பல கேள்விகளுக்கு அந்தக் குரல் விடை அளிக்கிறது.

டாக்டர் அன்னி பெசன்ட் : “உலகின் மகத்தான மதங்களை எல்லாம் நாற்பது ஆண்டுகளாக ஆராய்ச்சி செய்த பிறகு சொல்கிறேன். ஹிந்துயிசத்தைக் காட்டிலும் முழுமையான, விஞ்ஞானப் பூர்வமான, தத்துவார்த்தமான, ஆன்மீகமான ஒரு மதம் வேறெதுவும் இல்லை. ஹிந்துயிசம் இல்லாமல் இந்தியாவில் எதிர்காலம் கிடையாது என்பதில் சந்தேகமில்லை. ஹிந்துயிசம் என்ற மண்ணில் இந்தியாவின் வேர்கள் ஆழமாகப் புதைந்திருக்கின்றன. அந்த வேர்கள் துண்டிக்கப்பட்டால் இந்தியா என்ற மரம் உதிர்ந்து, உயிரிழந்து போகும். ஹிந்துக்கள் ஹிந்துயிசத்தைக் காப்பாற்றாவிட்டால் வேறு யார் அதைக் காப்பாற்றுவார்கள்? இந்தியாவின் புதல்வர்கள் தனது தாயின் நம்பிக்கையைக் கைவிட்டால் வேறு யார் அதைப் பாதுகாப்பார்கள்? இந்தியா மட்டுமே இந்தியாவைக் காப்பாற்றும். இந்தியாவும் ஹிந்துயிசமும் வேறல்ல.”

அல்டஸ் ஹக்ஸ்லி : “உலக தத்துவங்களிலேயே கீதைதான் மிகத் தெளிவானதும், விரிவானதுமான தத்துவம். எனவே, அதில் நீடித்து நிற்கும் மதிப்பு ஹிந்துக்களுக்கு மட்டுமின்றி மனித இனம் முழுமைக்கும் பயன்படும்.”

வில்ஹம் வான் ஹம்போல்ட் : “பகவத் கீதை உலக மொழிகளில் மிக அழகான நூல். ஒருவேளை இதுதான் உலகிலுள்ள உண்மையான ஒரே தத்துவப் பாடலாகவும் இருக்கலாம். உலகின் மிக ஆழமான, கனமான நூலாகவும் இருக்கலாம்.”

பேராசிரியர் ப்ரெயின்டேவிட் ஜோசப்சன் (மிக இளம் வயதில் நோபல் பரிசு பெற்றவர்) :

“வேதாந்தமும் சாங்கிய தத்துவமும் மனம் மற்றும் சிந்தனை செயல்படும் முறையின் அடிப்படை விதிகளை விளக்குகின்றன. இந்த விதிகள் குவாண்டம் துறையோடு (அணு மற்றும் மூலக்கூறுகள் துகள்களின் செயல்பாடு மற்றும் இடமாற்றம் குறித்த துறை) தொடர்பு கொண்டவை.”

என்.ஏ. பால்கிவாலா: பிரம்மம் பற்றி நமது முன்னோர்கள் சொன்னதும் ஜடப்பொருள்களின் புதிரான தன்மை பற்றி இன்றைய மகத்தான விஞ்ஞானிகள் சொல்வதும் ஒத்துப்போகின்றன. விஞ்ஞானம் முன்னேற, முன்னேற அது வேதாந்தத்திற்கு அருகில் செல்கிறது. அப்படிப்பட்ட உன்னதமான பாரம்பரியம் நமக்கு இருக்கிறது. ஆயினும், நாம் அதைப் பார்க்காமல் அற்ப விஷயங்ககளில் கவனம் செலுத்துகிறோம்.”

யெஹுதி மெனுஹின் (உலகப் புகழ்பெற்ற வயலின் கலைஞர்) : “சராசரி மேற்கிந்தியரைவிட ஒரு ஹிந்து நூறு மடங்கு பண்பட்டவன், நேர்மையானவன், சமய உணர்வுள்ளவன். நிதானமான கண்ணோட்டம் கொண்டவன்.”

சுவாமி விவேகானந்தர் : “ஹிந்துயிசத்தில்தான் இந்தியாவின் ஜீவன் அடங்கியிருக்கிறது. தனது முன்னேற்றங்களிலிருந்து பெற்ற பாரம்பரிய செல்வத்தை ஹிந்துக்கள் மறக்காதிருக்கும் வரை உலகில் எந்த சக்தியாலும் அவர்களை அழிக்க முடியாது.”

காந்திஜி : “இடையறாமல் சத்தியத்தைத் தேடுவதுதான் ஹிந்துயிசம். இன்று நாம் சோர்ந்திருப்பதால் ஹிந்துயிசமும் தேங்கியிருக்கிறது. இந்தச் சோர்வு நம்மிடமிருந்து அகன்றால் ஹிந்துயிசம் இதுவரை இல்லாத அபாரமான திறமையுடன் பிரகாசமாக வெடித்துக் கிளம்பி முன்னோக்கிப் பாயும்.

ஜான் ஸ்டர்ஸன் : “தி விஸ்டம் ஆப் தி ஏன்ஷியண்ட் இண்டியா’ என்ற நூலில், “ஆத்மாவின் அமரத்தன்மை மற்றும் உடலை நீத்தபின் அதன் இருப்பு ஆகியவை ஹிந்துக்களின் புனித கிரந்தங்களில் துல்லியமாக வெளியிடப்பட்டுள்ளமை குறிப்பிடத் தக்கதாகும். அவை வெறும் தத்துவக் கோட்பாடுகளாக அல்லாமல் சமயச் சட்டங்களாகவே கொள்ளப்பட்டன. ஆத்மாவின் அமரத்தன்மை என்பது பிரச்சினைகள் மிகுந்த சிக்கலான விஷயம் என்று கருதிய கிரேக்க, ரேமானிய தத்துவ ஞானிகளைவிட ஹிந்துக்கள் எவ்வளவோ முன்னேறியிருந்தார்கள்.”

கால் ப்ரூக் : ” தத்துவத் துறையில் ஹிந்து போதிப்பவனாக விளங்குபவனாக விளங்குகிறான்; கற்றுக் கொள்ள வேண்டியவனாக அல்ல.”

Leave a comment